இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - தாயும், சேயும்

மனத்திலே மரியாளை நினையுங்கள்
இதயத்திலே இயேசு வளர்வார்.
என வழிகாட்டினார் புனிதர் ஒருவர்.

மரியாள் வழியாக நாம் எல்லாவற்றையும்
அடைய வேண்டும் என்பது இறைவனின் திருவுளம். 
எனப் பகர்ந்தார் புனித பெர்னார்து.

அவள் வழியாகவே அனைத்து அருளையும்
மண்ணுலகம் அடைகிறது. 
என்றார் புனித அம்புரோசியார்.

வேளாங்கண்ணியில் விளங்கும் அன்னைமரி அருளின் வாய்க்காலாக, அனைவர்க்கும் அன்னையாக, துயர் துடைக்கும் ஆறுதலாக விளங்குகிறாள். மானிடர் விண்ண கம் ஏகிட இறைவன் தந்த தனிப்பெரும் ஏணியாக அமைந்துள்ளாள். மரியாள்,

அந்த மரியாள் யார்......?

சூரியனின் ஒளி வாங்கி உலகுக்குச் சோதி தரும் மதியினைப் போல, மேகம் தூறும் மழை கொண்டு உலகுக்கு உதவும் தெளி நீர்க் குளங்களைப் போல, அந்த அன்னை வற்றா வரங்களைச் சுதனிடம் வாங்கி வழங்கிக் கொண்டே இருக்கின்றாள். அவள் வாய்க்கால் என்றால், அதில் பாய்ந்து வரும் அருள் வெள்ளம் எது?

அவளுக்குச் சோதி தரும் சூரியப் பேரொளி எது?

அந்தப் பேரொளியும், அருள் வெள்ள மும்தாம் இயேசுகிறிஸ்து என்னும் இறைமகனார். அவரைப் பெற்றெடுக்கக் கன்னிமரியாள் இசைவு தெரிவித்த பொழுது, மனுக் குல ஈடேற்றம் தொடங்கியது.இயேசுவையும் இவ்வுலகையும் இணைக்கும் பாலமாக, வாய்க்காலாக அமைந்தாள் மரியாள். அவளை அனைத்துலகும் போற்றிப் புகழ்கின் றதென்றால் அதற்குக் காரணம்?

விற்பன்னர் வேதநாயகம் இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.

காவைத் துதிப்பது பூவைப் பற்றியல்லோ 
காரைத் துதிப்பது நீரைப் பற்றியல்லோ 
ஆவைத் துதிப்பது பாலைப் பற்றியல்லோ
ஆயைத் துதிப்பது சேயைப் பற்றியல்லோ.

மரியாளைப் போற்றிப் புகழ்வது அவள் பெற்றெடுத்த சேயாம் இயேசுவை முன்னிட்டுத்தான் என்றால் அந்த இயேசு யார்?

கி. மு. 16-ஆம் ஆண்டு - பாலஸ்தீனா நாட்டில் நாசரேத் என்னும் ஊர். யோவாக்கீம், அன்னம்மாள் ஆகிய பெற்றோர்க்குப் பிறந்தவளே மரியாள், மரியாள் என்றால் கடலின் விண்மீன் அதாவது 'பயணிகளுக்கு வழிகாட்டி!' அவருக்கு 15 வயது நடக்கும்போது, தாவீது அரச குல ஏழை மகன் சூசைக்கு அவள் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் மரியாளோ தன்னையும், தன் கன்னிமையையும் கடவுளுக்கே காணிக்கையாக்கி இருந்தாள். ஆயினும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருந்தது.

அப்பொழுது ஒருநாள் திடீரென ஒரு பேரொளி. அதன் பின் ஒரு காட்சி. கடவுளின் தூதர் அவளுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்முடனே," என்றார். இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருக்கையில் வான தூதர் அவளைப் பார்த்து, “மரியே, அஞ்சாதீர் ;... இதோ உமது வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்ன தரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது ” என்றார் 

மரியாள் தூதரிடம், “ இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே,'' என்றாள். 

அதற்கு வான தூதர், '' பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்ன தரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும், இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள், மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை,” என்றார். மரியாளோ , '' இதோ, ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்,” என்றாள். அத்தருணமே கடவுள் மகன் இயேசு கன்னி மரியாளின் மகனானார். (லூக். 1:25- 38] மரியாள் கடவுளின் தாயானாள். மனிதராகிய நாம் அனைவரும் இயேசுவில் இறைமக்களாகும் பேறுபெற்றோம். மரியாள் நம் தாயாகும் பேறும் பெற்றோம்.

மரியாளுக்குப் பேறுகாலம் நெருங்கியபொழுது பேரரசனின் கட்டளை பிறந்தது, ஒவ்வொருவரும் தத்தம் பிறப்பகம் சென்று குடிக்கணக்குக் கொடுக்க வேண்டுமென்று. சூசை தாவீதின் ஊர் பெத்லகெமைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு செல்ல வேண்டி இருந்தது', மரியாளும் உடன் சென்றாள், அப்பொழுது அங்கு வீடு கிடைக்காமல் மாடுகள் அடையும் குடிலில் அவர்கள் தங்கியிருக்க, அங்கு மரியாளுக்கு இயேசு பிறந்தார். அவர் தான் வரலாற்றையே வகுத்தவர் - வரலாற்றின் மையம். கிறிஸ்துவுக்கு முன் (கி. மு.), கிறிஸ்துவுக்குப் பின் (கி. பி] என வரலாறு அனைத்துக்கும் நடுநாயகமாகத் திகழ்வது அவருடைய பிறப்புத்தான்.

அவர் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் ஆபிரகாம் மரபில் தோன்றுவார் என்றும், 1000 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தாவீதின் குலத்தில் பிறப்பார் என்றும், 700 ஆண்டுகளுக்கு முன்பே பெத்லகெம் ஊரில் பிறப்பார் என்றும் முன்னறிவிக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன் இசையாசு எனும் இறைவாக்கினர்,

அவர் கன்னிப் பெண்ணிடம் பிறப்பார் . நம்முடைய 
பாவங்களுக்காக அவர் காயப்பட்டார். நம்முடைய
அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார்.

என்று எழுதி வைத்துள்ளார். இயேசுவின் வருகையும், அவரது வாழ்வும், அவரது வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் முன்னறிவிக்கப் பட்டிருந்தன. அறிவிக்கப்பட்ட அனைத்தும் இயேசுகிறிஸ்துவில் நிறைவேறிற்று.

இயேசுவின் வரலாற்றை அறிந்த தமிழ்த் தென்றல் திருவாரூர் வி. கலியாண சுந்தரனார் உள்ளம் உருகிப் பாடுகின்றார். 

அன்புநெறி சிறந்ததென அகிலமுணர்ந் துய்ய
ஆண்டவனே என் செய்தாய், அதை நினைந்தால் அந்தோ 
என்புருகும் உயிருருகும் எண்ணமெல்லாம் உருகும்,
எம்மொழியால் இயம்பவல்லேன் ஏழைமகன் அப்பா! 
மண்ணுலகில் அவதரித்தாய் மக்களிடை வதிந்தாய்
மறைமொழிந்தாய் அவ்வளவில் மனம் நிறைய விலையோ? 
பொன்னுடலை வதைக்கவிட்டாய் பொன் உயிரை நீத்தாய் 
பொறை அன்பு நீயென்றும் பொருண்மை தெளிந் தேனே.
[திரு. வி. க.]

இயேசுவின் வரலாற்றைச் சுருக்கமாக, ஆனால் நறுக்கென அவருடைய சீடர் நால்வர் எழுதியுள்ளனர். அந்நூலுக்கு "நற்செய்தி" என்று பெயர். மத்தேயு, மாற்கு. லூக்காசு, அருளப்பர் ஆகிய நால்வரும் நற்செய்தியைத் தனித்தனியே எழுதியுள்ளனர். நற்செய்தி நூல் பைபிளின் ஒரு சிறப்பான பகுதிதான். அது நம் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்ட நூல்.

இயேசு கிறிஸ்து தாம் யார் என்பதைப் படிப்படியாக, ஆனால் ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார். அவர் தலைவர், ஆசிரியர் குரு, இறைவாக்கினர், இறைவனால் அனுப்பப்பட்டவர் மெசியா, இறைமகன், இறைவனே அதாவது கடவுளே அவர்.

நானே உலகின் ஒளி; என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான். (அரு. 8:12)

நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை (அரு. 14 : 6) 

கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால் நான் கடவுளிட மிருந்து புறப்பட்டு வந்துள்ளேன். (அரு. 8: 42] 

ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான். என் தந்தையும் அவன் மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம். (அரு. 14 : 23)

முடிவில்லா வாழ்வு என்பது உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே. (அரு. 17:3)

பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பது போல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, உமது பெயரால் அவர்களைக் காத்தருளும். (அரு. 17:116)

இவ்வாறு நற்செய்தி நூலைப் படிக்கப் படிக்க அவர் தம்மை யாரென்று வெளிப்படுத்தியதைப் படிப்படியாக அறிய வருவோம்.

இயேசுகிறிஸ்து ஆண்டவர் (பிலிப். 2:11)

இயேசுகிறிஸ்து இறைவன் ; நமக்காக மனிதனானவர். எனவே இறைவனும், மனிதனும் அவர். அவரில் இறைத் தன்மையும், மனிதத் தன்மையும் ஒருங்கிணைந்துள்ளன. அதனால் அவரை மனிதனாகப் பெற்றெடுத்த மரியாளை, “கடவுளின் தாய்'' என்று கூறுவது பொருத்தமே.

இயேசுவை ஏற்றுக்கொள்பவர். அவரை அன்பு செய்பவர் அனைவரும் அவரோடு இணைந்து. அவரில் இறைவனோடும் அன்பினால் இணைகின் றனர். இறைவனும் மனிதனுமான கிறிஸ்துவில், கிறிஸ்து வழியாகவே அனைவரும் இறைவனை அடைகின்றனர்.அதனால்தான் இயேசு, கிறிஸ்தவத்தின் இன்றியமையாத் தலைவர், அன்பு அதன் தனிப்பெரும் பண்பு. மனிதன் ஒவ்வொருவனும் இயேசுகிறிஸ்துவை அன்பு செய்து இறைவனை அடைகின்றான் என்றால், மனிதன் மனிதனைக் கிறிஸ்துவில், கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவுக்காக அன்பு செய்வது அதற்கு இன்றியமையாத் தேவை. மனிதன் மனிதனை வெறுத்து. இறைவனை அன்பு செய்வான் என்பது இயலாத ஒன்று.

கண்ணால் கண்ட சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது. (அரு. 4 : 206) 

கிறிஸ்தவத்தின் உயிர் நாடி அன்பு - இறையன்பும், பிறரன்பும், தன்னைப் புறக்கணிப்பவரையும், பகைப்பவரையும் கிறிஸ்தவர் அன்பு செய்ய வேண்டும். இயேசுகிறிஸ்துவே முதலில் நம்மை அன்பு செய்து வழிகாட்டியுள்ளார். நம் பாவங்களைப் போக்கி, நம்மை இறைவனுக்கு ஏற்புடையவராக்குவதற்காக, அவர் தம்மையே கல்வாரிக் குன்றில் சிலுவை என்னும் கழுமரத்தில் தகனப் பலியாக்கினார். இவ்விதம் தாம் ஒப்புக்கொடுத்த சிலுவைப் பலிக்கு முன் இரவில் இறுதியாகத் தம் சீடர்களோடு உணவு அருந்துகையில், ' இயேசு அப்பத்தை எடுத்து இறை புகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, "இதை வாங்கி உண்ணுங்கள், இஃது என் உடல்,'' என்றார். பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றி கூறி, அவர்களுக்கு அளித்து, “ இதிலே அனைவரும் பருகுங்கள். ஏனெனில் உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது ; பாவ மன்னிப்புக்கென்று எல்லோருக்காகவும் சிந்தப்படும் இரத்தம்'' (மத். 26 : 26 - 29] என்று கூறியபொழுது, தமது உடலையும் இரத்தத்தையும், உணவாகவும் பானமாகவும் கொடுத்தார். மேலும், “இதை என் நினைவாகச் செய்யுங்கள்," என்று சொன்னார். இதனால் சீடர்களைக் குருக்களாக உயர்த்தி அதே பலியை அவர்கள் செய்திடுமாறு பணித்தார். அவர்களைப் பின்பற்றித்தான் இன்று கத்தோலிக்க குரு நாள்தோறும் பீடத்தில் திருப்பலி நிறைவேற்றுகின்றார். கடவுள் ஒருவரே, மனித இனமும் ஒன்றே, இருவரையும் இணைக்கும் பாலமாகிய கிறிஸ்துவும் ஒருவரே, அவர் நிறைவேற்றும் பலியும் ஒன்றே. மனுக்குலத் தாயும் ஒருவரே - அவளே அன்னை கன்னி மரியாள்.

இயேசு சிலுவைப் பலியை நிறைவேற்றிய அதே தருணத்தில் இன்னொரு பெரிய அன்பு நிறை தியாகச் செயலையும் செய்திருக்கின்றார். இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, ''அம்மா, இதோ உம் மகன்,” என்றார். பின்பு சீடரை நோக்கி, "இதோ, உன் தாய்,'' என்றார். இதனால் இயேசு தம் சீடர்கள் அனைவர்க்கும் தம் தாயையே கொடுத்துவிட்டார். சீடர்கள் அனைவரையும் அவள் தம் அடைக்கலத்தில் ஒப்படைத்துவிட்டார். அன்று முதல் இறைவனின் தாய், மனுக்குலத்தின் தாயானாள். “இயேசுவின் தாய், என் தாய்," என்று ஒவ்வொருவரும் சொல்ல முடியும்.

இயேசு இவ்வுலகம் வந்ததே மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக. அம்மீட்புப் பணியைச் செய்ய கனிவுள்ள தாய் அவசியம். விவிலியம் கூறுவது போல

அரசர்க்கழகு ஆட்சி செய்வது, 
அரசிக்கழகு இரக்கம் காட்டுவது.

இரக்கம் காட்டும் இயல்புடைய தாய் - அதுவும் இரக்கப் பெருக்கம் நிறைந்த இயேசு இறைவனின் தாயே நமது தாயாகிவிட்டால், அனை வருக்காகவும் அவள் எப்பொழுதும் பரிந்து பேசி, இறைவனின் இரக்கப் பெருக்கத்தை எப்படியும் பெற்றுத் தந்திடுவாள். அவளின் வன்மை மிக்க பரிந்துரையை நாம் நற்செய்தியில் படிக்கின்றோம். தாய் சொல்லிவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக இயேசு, தம் காலம் வராதிருந்தும், தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றித் தந்தார். (அரு. 2: 1-10)

அதுபோலவே இன்றும், கன்னிமரியாள் - புனித ஆரோக்கிய அன்னை நமக்காகப் பரிந்து பேசுகின்றாள். தம் திருமகன் இயேசு, தாய் கேட்பதைத்தட்டாமல் தந்துவிடுகின்றார். அதனால் அவளிடம் நம்பிக்கையுடனும், முழு மனத்துடனும் அண்டி வரும் அனைவரும், கேட்பதை அடையாமல் போவதில்லை, என்பது ஆணித்தரமான உண்மை .

மிகவும் இரக்கமுள்ள தாயே என்பது இந்த உண்மையிலிருந்து எழுந்த செபமாகும்.