இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - இரு சிறுவர்கள் ஓர் இராட்சத மிருகத்தால் தாக்கப்படுதல் பற்றிய கனவு

கடுமையான ஒரு நோய்க்குப் பின் டொன்போஸ்கோ தம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் இந்தக் கனவைக் கண்டார். அச்சமயத்தில் ஆரட்டரி சிறுவர்களின் எண்ணிக்கை 629-ஆக இருந்தது. அவர் ஆரட்டரியில் இல்லாதிருந்த காலத்தில் சுவாமி போரெல் என்பவரும், மற்ற உதவியாளர்களும் ஆரட்டரியைக் கவனித்துக் கொண்டார்கள்.

இரண்டே நிகழ்வுகளின் போதுதான் டொன் போஸ்கோ வால் கலக்கமடையாமல் இருக்க முடியவில்லை: ஒன்று , ஆத்துமங்கள் ஆபத்தில் இருக்கும்போது, அல்லது இழக்கப்படும் போது; இரண்டாவது, கடவுள் நோகச் செய்யப்படும்போது.

இக்காலகட்டத்தில் டொன் போஸ்கோ தம்மை மிகவும் கலங்கச் செய்த ஒரு கனவு கண்டார் என்று ஜோசப் புஸெட்டி நம்மிடம் கூறினார். இரு சிறுவர்கள் தம்மை வந்து சந்திக்குமாறு ட்யூரினிலிருந்து புறப்படுவதை அவர் கண்டார். அவர்களை அவர் அடையாளம் கண்டு கொண்டார். 

ஆனால் அவர்கள் போ ஆற்றின் பாலத்திற்கு வந்த போது, ஒரு பயங்கரமான, அருவருப்பான மிருகம் அவர்களைத் தாக்கியது. அது தன் எச்சிலால் அவர்களுடைய உடல் முழுவதையும் அசுத்தப்படுத்தியபின், அவர்களைத் தரையில் தள்ளி, சேற்றில் அவர்களை சற்று தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் அவர்கள் தலைமுதல் கால் வரை அசுத்தத்தால் மூடப்பட்டார்கள். 

டொன்போஸ்கோ தம்மோடு தங்கியிருந்த பல சிறுவர்களிடம் இந்தக் கனவைப் பற்றிச் சொன்னார். தாம் கனவில் கண்ட சிறுவர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். 

அடுத்து வந்த நாட்களில் நிகழ்ந்த காரியங்கள், அவருடைய கனவு வெறும் கற்பனை அல்ல, அதற்கும் மேலானது என்பதை நிரூபித்தன. ஏனெனில் அந்த இரு பரிதாபத்திற்குரிய சிறுவர்களும் ஆரட்டரியை விட்டு விலகி, ஒரு தாறுமாறான வாழ்வுக்குத் தங்களைக் கையளித்து விட்டார்கள்.