இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - ஆபத்தான சுருக்குக் கண்ணிகள்

என் அறையை விட்டு வெளியே நடந்து செல்வதாக நான் கனவு கண்டேன். திடீரென நான் கோவிலில் இருக்கக் கண்டேன். அது ஆரட்டரியின் பல சிறுவர்களால் முழுவதுமாக நிறைந்திருந்தது. 

லான்ஸோ , மிராபெல்லோ , மற்றும் நான் அறிந்திராத இன்னும் பல சிறுவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சத்தமாக ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவர்கள் பாவசங்கீர்த்தனத்திற்குத் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

ஒரு மிகப் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் போதக மேடைக்குக் கீழே இருந்த என் பாவசங்கீர்த்தனத் தொட்டியைச் சுற்றி கூட்டமாகக் கூடுவதை நான் கவனித்தேன். இவர்கள் எல்லோருடைய பாவசங்கீர்த்தனங்களையும் கேட்பது சாத்தியமா என்று நான் கவலைப்படத் தொடங்கினேன். நான் கனவு கண்டு கொண்டிருக்கலாம் என்று சந்தேகப் பட்டேன். 

நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி, என கரங்களைத் தட்டினேன். அந்தக் கைதட்டல் ஒலியை மிகத் தெளிவாக நான் கேட்டேன். எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுமாறு, நான் என் கரங்களை நீட்டி, என் பாவசங்கீர்த்தனத் தொட்டியின் பின்னால் உள்ள சுவரில் அவை படுவதை உணர்ந்தேன். 

இவ்வாறு, சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லாமல் போகவே, “நான் பாவசங்கீர்த்தனம் கேட்கத் தொடங்கலாம்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆகவே நான் பாவசங்கீர்த்தனம் கேட்கத் தொடங்கினேன். விரைவில், சிறுவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய கவலையுடன், நான் எழுந்து, பாவசங்கீர்த்தன குருக்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். ஆனால் யாருமில்லை. 

ஆகவே நான் சாக்றிஸ்திக்குச் சென்று அங்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்த்தேன். அப்போதுதான் சில சிறுவர்களின் கழுத்துகளைச் சுற்றி ஒரு சுருக்குக் கயிறு இருப்பதை நான் கண்டேன். அந்தக் கயிறு ஏறக்குறைய அவர்களுடைய கழுத்தை நெறித்து, அவர்களை மூச்சுத் திணறச் செய்து கொண்டிருந்தது.

“இந்தக் கயிறு எதற்காக? அதை அகற்றி விடுங்கள்” என்று நான் சொன்னேன். பதிலுக்கு, அவர்கள் என்னை வெறுமனே உற்றுப் பார்க்க மட்டும் செய்தார்கள்.

நான் ஒரு சிறுவனிடம், “நீ அந்தச் சிறுவனிடம் போய், அவனுடைய கழுத்திலிருந்து அந்தச் சுருக்குக் கயிற்றை அகற்று” என்று சொன்னேன்.

அந்தச் சிறுவனும் போனான். ஆனால் திரும்பி வந்து, “என்னால் அதை அகற்ற முடியவில்லை. யாரோ அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வந்து பாருங்கள்” என்றான்.

அசங்கியமான பூனைகள்

நான் அந்தப் பெருங்கூட்டமான சிறுவர்களை இன்னும் அதிகக் கூர்மையாக ஆராய்ந்தபோது, அவர்களில் பலருக்குப் பின்னால் இரு மிக நீண்ட கொம்புகள் நீட்டிக் கொண்டிருந்ததை நான் பார்த்ததாக எனக்குத் தோன்றியது. ஆகவே நான் எனக்கு மிக அருகில் இரந்த ஒரு சிறுவனுக்கு இன்னும் நெருக்கமாகச் சென்று, அவனுக்குப் பின்பக்கமாகப் போனபோது, அந்தச் சுருக்குக் கயிறை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்த அருவருப்பான தோற்ற முள்ள ஒரு பூனையைப் பார்த்தேன். 

என் இந்தச் செயலைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்த மிருகம், தாழ்வாகப் பதுங்கிக் கொள்ளவும், தன் பாதங்களுக்கு நடுவில் தன் மூக்கை மறைத்துக் கொள்ளவும் முயன்றது. நான் இந்தச் சிறுவனிடமும், மற்றவர்களிடமும் அவர்களுடைய பெயர்களைக் கேட்டேன். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் அந்த அச்சமூட்டும் விலங்கிடம் கேள்விகள் கேட்டேன். ஆனால் அது இன்னும் தாழ்வாகப் பதுங்க மட்டுமே செய்தது.

“சாக்றிஸ்திக்குப் போய் சுவாமி மெர்லோனிடம் பரிசுத்த தீர்த்தம் வாங்கி வா” என்று நான் ஒரு சிறுவனைப் பணித்தேன்.

அவன் விரைவில் பரிசுத்த தீர்த்தத்தோடு திரும்பி வந்தான். ஆனால் இதனிடையே, ஒவ்வொரு சிறுவனுக்கும் பின்னால், முதல் பூனையைப் போலவே அருவருப்பான தோற்றமுள்ளதாயிருந்த ஒரு பூனை பதுங்கியிருந்ததை நான் கண்டேன். இது ஒரு கனவுதான் என்று நான் தொடர்ந்து நம்பினேன். தீர்த்தம் தெளிப்பானைப் பிடித்துக் கொண்டு, அந்தப் பெரிய பூனைகளில் ஒன்றை நோக்கி நான் திரும்பினேன்.

“நீ யாரென்று சொல்” என்று நான் உத்தரவிட்டேன்.

அடுத்தடுத்து சில தடவைகள் தன் வாயைத் திறந்து மூடிய அந்த அருவருப்பான மிருகம் திடீரென உறுமத் தொடங்கியது. பாய ஆயத்தமானது.

“பதில் சொல்!” என்று நான் வற்புறுத்தினேன். “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் கோபவெறியைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். இந்தப் பரிசுத்த தீர்த்தத்தைப் பார்த்தாயா? இதைக் கொண்டு நான் உன்னை முழுமையாக நனைத்து விடுவேன்.”

என்ன செய்வதென்று அறியாமல் அந்த அரக்க மிருகம் நம்ப முடியாத வலிப்புகளோடு தன்னையே முறுக்கிக் கொள்ளத் தொடங் கியது. அதன்பின் மீண்டும் என்மீது பாயத் தயாரானது. நான் அதன் மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை . அது தன் பாதத்தில் பல சுருக்குக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.

பரிசுத்த தீர்த்தத்தைக் கொண்டு அதை அச்சுறுத்திய அதே வேளையில், “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று நான் மீண்டும் கேட்டேன். அதன்பின் அந்த அரக்க விலங்கு தன் இறுக்க நிலையிலிருந்து விடுபட்டு, ஓடி விடத் தயாரானது.

“நில்!” என்று நான் உத்தரவிட்டேன். “அங்கேயே அசையாமல் இரு!”

“அப்படியானால் இதைப் பாரும்” என்று அது உறுமியபடி தன்னிடமிருந்த சுருக்குக் கயிறுகளை எனக்குக் காட்டியது.

“அவை என்ன? நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று நான் கேட்டேன்.

“உமக்குப் புரியவில்லையா? இந்தச் சிறுவர்கள் கள்ளப் பாவசங்கீர்த்தனம் செய்யும்படி நான் அவர்களை இந்தக் கயிறுகளால் கட்டுகிறேன். இந்தச் சுருக்குக் கயிறுகளைக் கொண்டு, மனித குலத்தில் பத்தில் ஒன்பது பங்கினரை நான் நரகத்திற்குள் இழுத்துச் செல்கிறேன்.”

“சேசுக்கிறீஸ்துவின் திருப்பெயரால், பேசு!”

அருவருப்பான முறையில் தன்னை முறுக்கிக் கொண்டபடி அந்த அரக்க மிருகம் பதில் கூறியது: “முதல் சுருக்கைக் கொண்டு, சிறுவர்கள் பாவசங்கீர்த்தனத்தில் தங்கள் பாவங்களை மறைக்கும்படி நான் செய்கிறேன்.”

“இரண்டாவது சுருக்கைக் கொண்டு?”

“உத்தம மனஸ்தாபம் இல்லாமல் அவர்கள் பாவசங்கீர்த் தனம் செய்யும்படி நான் செய்கிறேன்.”

“மூன்றாவதைக் கொண்டு?" “நான் சொல்ல மாட்டேன்.”

“சொல்லி விடுவது உனக்கு நல்லது, இல்லையேல் இந்தப் பரிசுத்த தீர்த்தத்தில் நீ மூழ்கடிக்கப்படுவாய்!”

“இல்லையில்லை, நான் பேச மாட்டேன்! நான் ஏற்கெனவே அளவுக்கு அதிகமாகப் பேசி விட்டேன்” என்ற அந்தப் பூனை கடுங்கோபத்தோடு உறுமியது.

“எங்கள் பள்ளிகளின் இயக்குனர்களுக்கு நான் அறிவிக்கும்படி என்னிடம் சொல்” என்று நான் வற்புறுத்தினேன், தீர்த்தம் தெளிப்பானை உயர்த்தியபடி.

அந்த மிருகத்தின் கண்களிலிருந்து தீச்சுவாலைகளும், ஒரு சில இரத்தத் துளிகளும் கூட பாய்ந்து வர, அது மிகுந்த வன்மத்தோடு முணுமுணுப்பான, “மூன்றாவது சுருக்குக் கயிறைக் கொண்டு, அவர்கள் உறுதியான பிரதிக்கினை செய்யாமலும், தங்கள் பாவசங் கீர்த்தன குருவின் அறிவுரைப்படி நடக்காமலும் நான் அவர்களைத் தடுக்கிறேன்.”

“அருவருப்பான மிருகமே” என்று நான் வியந்தபடி கூறினேன். அந்த அரக்க ஜந்துவிடம் மேலும் கேள்விகள் கேட்கவும், இந்தப் பெருந்தீமைக்கு நான் எப்படித் தீர்வு காண முடியும் என்றும், அதன் பேய்த்தனமுள்ள முயற்சிகளை எப்படி எதிர்த்து வெல்ல முடியும் என்றும் சொல்லும்படி அதை வற்புறுத்தவும் நான் விரும்பினேன். 

ஆனால் இப்போது வரைக்கும் மறைந்து கொண்டிருக்கத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த அந்த அருவருப்பான பூனைகள் முணுமுணுக்கவும், என்னோடு பேசிய பூனைக்கு எதிரான பலத்த கூக்குரல்களை எழுப்பவும் தொடங்கின. அந்தப் பொது அமளிக்கு மத்தியில், இதற்கு மேல் அந்த இராட்சத மிருகத்திடமிருந்து என்னால் எதையும் அறிந்துகொள்ள முடியாது என்பதை நான் உணர்ந்தேன். 

ஆகவே தீர்த்தம் தெளிப்பானை உயர்த்தி, என்னோடு பேசிய பூனையின்மீது பரிசுத்த தீர்த்தத்தைத் தெளித்து, “போய்விடு” என்று நான் ஆணையிட்டேன், அது உடனே மறைந்து விட்டது. அதன்பின் நான் சுற்றிலும் பரிசுத்த தீர்த்தத்தைத் தெளித்தேன். அதைத் தொடர்ந்து எழுந்த முழுமையான குழப்ப நிலையில், அந்த எல்லாப் பூனைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடிப் போயின. அந்த இரைச்சல் சத்தம் என்னை எழுப்பியது. நான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தேன். 

நேர்மை துயரம் தீர்மானம்

என் அன்புச் சிறுவர்களே, உங்களில் இத்தனை பேர் உங்கள் கழுத்துகளைச் சுற்றி சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருப்பீர்கள் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அவை எதைக் குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். 

முதல் சுருக்கு ஒரு சிறுவனை வெட்கப்படுத்தி, அவன் தன் பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில் மறைக்கச் செய்கிறது, அல்லது எத்தனை தடவை பாவம் செய்தான் என்பது பற்றி அவன் பொய் சொல்லும்படி செய்கிறது. உதாரணமாக, அவன் உண்மையில் சரியாக நான்கு தடவைகள் பாவம் செய்திருக்க, பாவசங்கீர்த்தனத்தில் மூன்று அல்லது நான்கு தடவைகள் பாவம் செய்ததாகச் சொல்கிறான். இதுவும் பாவங்களை மறைப்பது போலவே நேர்மையற்ற காரியம்தான். 

இரண்டாவது சுருக்கு, மனஸ்தாபமின்மையையும், மூன்றாவது, உறுதியான தீர்மானம் (பிரதிக்கினை) இல்லாததையும் குறிக்கின்றன. நாம் இந்தச் சுருக்குகளிலிருந்து விடுபடவும், பசாசின் பிடியிலிருந்து அவற்றைப் பிடுங்கி விடவும் வேண்டுமானால், நம் எல்லாப் பாவங்களையும் உத்தம மனஸ்தாபத்தோடு பாவசங்கீர்த்தனத்தில் சொல்வோம்.

கடுங்கோப வெறிக்கு உள்ளாவதற்கு சற்று முன்பாக, அந்த இராட்சத விலங்கு என்னிடம்: “பாவசங்கீர்த்தனத்தில் இருந்து எவ்வளவு நன்மையை சிறுவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்று பார்த்தீரா? நான் அவர்களை சுருக்குகளைக் கொண்டு கட்டுப் படுத்துகிறேனா இல்லையா என்பதை நீர் அறிய விரும்புவீர் என்றால், அவர்கள் நாளுக்கு நாள் அதிக நல்லவர்களாகி வருகிறார்களா என்று பாரும்” என்றது.

பசாசு ஏன் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டிருந்தது என்று எனக்குச் சொல்லும்படியும் நான் அதை வற்புறுத்தினேன். “நான் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக” என்று அது பதில் கூறியது. “இந்த முறையில் அவர்களை நரகத்திற்குள் இழுத்துச் செல்வது எனக்கு அதிக எளிதாக இருக்கிறது.” உங்களில் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் அந்த அரக்க மிருகங்களைக் கொண்டிருந்தவர்கள், நான் நம்பிக் கொண்டிருந்ததை விட அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

இந்தக் கனவை உங்கள் விருப்பம் போல் அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனாலும் நான் இந்தக் காரியங்களைப் பரிசோதித்து, நான் கனவில் கண்டவை எல்லாம் முற்றிலும் உண்மை என்று கண்டுகொண்டேன் என்பது உண்மை. ஆகவே, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை உட்கொண்டு ஒரு பரிபூரண பலனை சம்பாதிக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம். பசாசின் சுருக்குகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

தமது குருத்துவ அபிஷேகத்தின் பொன்விழா ஆண்டில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 11 அன்று, தேவத்திரவிய அனுமானங்களைப் (பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை) பெற்ற பின்பு, தமது கருத்துகளுக்காக ஜெபிக்கும் அனைவருக்கும் பரிசுத்த பாப்பரசர் ஒரு பரிபூரண பலனை வழங்கியுள்ளார். 

வரும் சனியன்று, செவாலியே ஓரேக்ளியா தனிப்பட்ட முறையில் பரிசுத்த பிதாவை சந்தித்து, உங்கள் கையெழுத்துகளும், நம் பள்ளிகள் மற்றும் விடுதிகளிலுள்ள சிறுவர்களின் கையெழுத்துகளும் அடங்கியுள்ள ஒரு பதிவுப் புத்தகத்தை அவருக்கு சமர்ப்பிப்பார். 

இதற்கிடையே உங்கள் கடந்த கால பாவசங்கீர்த்தனங்களை நல்ல முறையில் செய்தீர்களா என்று பாருங்கள். அடுத்து ஞாயிற்றுக்கிழமை உங்கள் எல்லோரையும் என் பூசையில் நான் நினைவுகூர்வேன்.