இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே!

சற்று முன்னர், “வியாதிக்காரர்களுக்கு ஆரோக்கியமே” எனத் திருச்சபை நமதன்னையைப் புகழ்ந்தது. ஆதித் தாய் தந்தையரின் கீழ்ப்படியாமையால் மானிட சந்ததிக்கு உண்டாகும் கேடுகளில் வியாதி ஒரு சிறு பகுதியேயென்க; வியாதியைத் தவிர்த்து, வேறு அநேக இக்கட்டு இடையூறுகளும் மனிதரைத் துன்புறுத்துகின்றன. ஆரம்பித்த தொழிலில் தோல்வி -- தொடங்கிய காரியத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் விக்கினங்கள் – தரித்திரம் -- மரணத்தால் நாம் அருமையாக நேசித்தோரின் பிரிவு -- நிந்தை அவமானம் – மனச்சஞ்சலம் -- “நாளை எதை உண்போம்; எதை உடுப்போம்” என்ற கவலைகள் இவை மனிதருக்கு ஏற்படும் கஸ்திகளில் ஒரு சில.

நேற்று வரை நம்முடன் அந்நியோன்னியமாய்ப் பழகி நம்மை நேசித்து வந்த சிநேகிதர்கள் திடீரென சிறிதொரு அற்ப மனத்தாங்கல் காரணமாக நம் விரோதிகளாய் மாறிவிடுகின்றனர். நாம் தொடங்கிய காரியங்களில் வெற்றி பெற்றால், நம்மீது காய்மகாரமடைந்து நம்மை வீழ்த்த விரோதிகள் அநேகர் கிளம்புகின்றனர். நம் அயலாரின் கெட்ட நடத்தைகளினால் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்குத்தான் கணக்குண்டோ?

இக்கஸ்தி துன்பங்கள் ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கத்தில் உலகம், பசாசு, சரீரம் என்னும் மூவகைச் சத்துருக்கள் ஓயாது ஒழியாது நம்மைப் பாவத்தில் விழத்தாட்ட முயலுகின்றன. நன்மை தீமை என்னும் இரு காரியங்களுக்கு நடுவில் தள்ளாடுகிறோம். எது நன்மை என்று அறிந்திருப்பினும், அர்ச். சின்னப்பர் கூறுவது போல், ஜென்மப்பாவத்தால் கெட்ட நமது மனித சுபாவம் தீமையையே நாடித் தேடுகின்றது (ரோமர் 7-ம் அதிகாரம்). பாவச் சோதனைகளின் கொடுமை நமது மன அமைதியை அநேகம் விசை குலைக்கின்றது. சிற்சில சமயங்களில் நமக்குத்தானே நாம் பெரிய பாரச் சுமையாக மாறுகின்றோம். சோதனைகளை வென்று ஞான சீவியத்தில் வளர நம்மால் கூடாத காரியமென சில தடவைகளில் மனத் தளர்ச்சியடைகின்றோம். சகலமும் கசப்பாக மாறுகின்றன.

மகாத்மா யோபு கூறுவது போன்று, ஸ்திரீயிட மாய்ப் பிறந்த மனிதன் இவ்வுலகில் சொற்ப நாள் ஜீவிக் கிறான்; அநேக துயரங்களால் பீடிக்கப்படுகிறான் (யோபு 14:1). சுருங்கக் கூறின் யோபுவே சொல்லுவது போல இவ் வுலகில் மனித ஜீவியம் ஒரு யுத்த களமாக இருக்கின்றது.

பல்வேறு கஸ்திகளும், துன்பங்களும் மானிடரைப் பீடிப்பது உண்மைதான். ஆயினும், இத்துன்பங்களை நாம் எடுத்துக் கூற அவற்றைப் பொறுமையுடன் கேட்டு நமக்கு ஆறுதல் தரக் கூடிய உறவினரோ, அல்லது நண்பரோ நமக்குக் கிடைப்பின் அதுவே நமது பெரும் பாக்கிய மெனலாம். நமக்குச் செவிசாய்த்து, ஆறுதல் தரக்கூடியவர் ஒருவர் உண்டென்கில், நமது கஸ்திகளும், துன்பங்களும் அவ்வளவு பளுவாகத் தோன்றுவதில்லை. ஆனால், அப்படிப்பட்ட பேருபகாரி நமக்கில்லையெனில் நம்மைப் போன்ற நிர்ப்பாக்கியர் இல்லை எனலாம். 

நமது கஸ்திகள் தாங்க முடியாத சிலுவைகளாக மாறுகின்றன. தன்னைத் தடுக்கப் போடப்பட்ட அணையை வெள்ளம் எவ்விதம் அடித்துக் கொண்டு போக முயலுகிறதோ, அதைப் போன்றே கஸ்திகள் நம் ஆத்துமத்தைத் துளைக்கின்றன. இவ்விதம் அல்லல்படும்போது நம்மைத் தேற்றக் கூடிய ஒருவரைத் தேடி அலைகின்றோம். இது அனுபவ வாயிலாக ஒவ்வொருவரும் அறிந்த உண்மை. அவ்விதம் ஆறுதல் தரக்கூடியவர் ஒருவருமில்லையென ஏங்கி, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் எத்துணைபேர்! நமக்குத் தெரிந்தவர்களில் சிலர் நிர்ப்பாக்கியமாய்த் தற்கொலை செய்துகொண்டு இறக்க நேரிட்டிருப்பின், அவர்களுடைய அவ்வித மரணத்திற்குக் காரணம் யாதென ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும். துன்பங்களும், அவநம்பிக்கைகளும் நேரிடும் காலத்தில் அவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியவர் ஒருவருமில்லை.

இவ்விதம் துன்புற்று கஸ்திப்படும் மானிடரைத் தேற்றுவிக்க இரக்கம், அன்பு இவற்றின் அவதாரமான நமதாண்டவர் அல்லும் பகலும் ஓயாது ஒழியாது உலகி லுள்ள சகல தேவாலயங்களிலும் பரிசுத்த பரம திவ்விய நற்கருணையில் எழுந்தருளியுள்ளார்; “வருந்தி சுமை சுமக் கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களைத் தேற்றுவிப்பேன்” என அன்புடன் நம்மில் ஒவ்வொருவரை யும் அழைக்கின்றார். நமது துன்ப துயரங்களுக்குச் செவி சாய்த்து நமக்கு ஆறுதல் தரக்கூடியவர் அவரே. எனினும் துன்புற்ற மனிதருக்கு ஆறுதல் வருவிக்க, பெற்ற தாய்மார் களின் உள்ளம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென அவர் அறி வார். இதனால்தான் நம்மைத் தேற்றுவிக்க தம் தாயையே நமக்குத் தேற்றரவு கொடுக்கும் தாயாகக் கொடுத்துள்ளார்.

“கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே” என்று திருச்சபை மரியாயைப் புகழ்தல் முற்றிலும் தகுதியே. இந்நாள் வரை இக்கண்ணீர்க் கணவாயில் அழுகையால் பெருமூச்சு விட்டு அவர்களை நோக்கிக் கூக்குரலிட்ட எத்தனையோ பேர் ஆறுதல் அடைந்துள்ளனர். அடைந்து வருகின்றனர். யாவரும் கஸ்தியுற்றோரைத் தேற்ற முடியுமெனினும், அக்கஸ்திகளைத் தானே அனுபவித்த ஒருவரால்தான் உண்மையான ஆறுதல் வருவிக்க முடியுமென்பது மறுக்கப்படாத உண்மை.

இவ்விதம் சிந்தித்தால் மற்ற யாவரையும்விட நம்மைத் தேற்றுவிக்கக் கூடியவர் நம் அன்னை என்பது தெளிவாகப் புலப்படும். துன்பங்களின் கசப்பான பாத்திரத்தை அவர்கள் அருந்தியுள்ளார்கள். (இதைப்பற்றி விரிவாக “வேதசாட்சிகளின் இராக்கினியே” என்ற தலைப்பின் கீழ் காண்க). துன்பம் அனுபவிப்பதென்றால் என்ன என்பதை அவர்கள் நன்கறிவார்கள். மேலும் “துன்பம் நிறைந்த மனிதன்” (Man of sorrows) என்றழைக்கப்படும் நமதாண்டவரின் இவ்வுலக ஜீவியத்தில், அவருடைய துயரங்களில் அவருக்கு ஆறுதல் வருவித்தவர்கள் அவர்களே. 

பின்னர் அவரே சொன்னது போல, “நரிகளுக்கு வளைகளும், ஆகாயப் பறவைகளுக்குக் கூடுகளுமுண்டு; மனுமகனுக்கோ தலைசாய்க்க இட மில்லை” (மத். 8:20). அப்பேர்ப்பட்ட நமதாண் டவருக்கு முதன்முதல் தன் உதரத்தில் தங்க இடம் ஈந்தவர்கள் அவர்களே. மானிடரை மீட்க சுதன் இவ்வுல கில் பிறக்கும் காலம் அடுத்துவர, அவருடைய நீசச் சிருஷ்டிகள் அவருக்கு இடம் கொடுக்க மறுக்கின்றனர். மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு பெத்லகேம் ஊரில் மாடடைக் குடிலில் பிறக்கிறார். அவ்வேளையில் அவருக்கு ஆறுதல் அளித்தவர்கள் மாமரி அன்னையே. ஏரோது அரசன் சேசுவைக் கொலை செய்யத் தேடுகின்றான். அதற்குத் தப்பித்துக் கொள்ள எஜிப்து தேசம் ஓட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அத்தருணத்தில் அவரின் ஆறுதல் அவர்களே. 

கடைசியாக அவருடைய கல்வாரிமலைப் பயணத்தில் அவரைப் பின்தொடர்ந்து செல்பவர்களும் அவர்களே. சகலராலும் கைவிடப்பட்டு, கல்வாரி மலையில் கள்ளர் நடுவில் வேதனைகளால் நொறுங்குண்டு, சிலுவையில் தொங்கும் நமதாண்டவர் “பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரைக்கும் போது அவருக்கு ஆறுதல் தர, சிலுவையடியில் நிற்பவர்கள் அவர்களே. இவ்விதம் கஸ்திப்பட்ட தேவ சுதனுக்கே தேற்றரவு கொடுத்தவர்கள் அவர்கள். எனவே கஸ்திப்படும் நம்மையும் அவர்கள் தேற்ற வல்லவர்கள் என்பது நிச்சயம்.

நாம் கிறீஸ்தவர்கள்; “கிறீஸ்துவன்” என்னும் சொல் சேசு கிறீஸ்துநாதரைப் பின்செல்வோன் எனப் பொருள்படும். நாம் உண்மையில் அவரைப் பின்பற்றிச் செல்லுவோமாயின் சிலுவையாகிய துன்ப துரிதங்களைச் சுமந்து செல்லுதல் அவசியம். “என் பிறகே வர மனதுள் ளவன், தன்னைத்தானே மறுதலித்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்லக்கடவான்” என்று அவரே திருவுளம்பற்றியிருக்கிறார். எனவே, அவரைப் பின்செல்லுவதற்கு சிலுவை சுமத்தல் ஓர் நிபந்தனை. ஆனால் இதனால் நாம் பயந்து கலங்கக் காரணமில்லை. சேசுவைத் தேற்றிய அவருடைய மாதா, சிலுவை சுமந்து சென்ற நமதாண்டவரைப் பின்தொடர்ந்து சென்ற தாய், நம்மையும் பின்தொடர்ந்து வரத் தயாராக இருக்கிறார்கள். நமக்கு நிச்சயம் தேற்றரவு அளிப்பார்கள். நமதாண்டவர் தம் சிலுவையைச் சுமந்துகொண்டு நம்முன் செல்லுகிறார். நமது பின் நம் மோட்ச அன்னை வருகிறார்கள். எனவே தைரியத்துடன் நம் சிலுவைகளைச் சுமந்து செல்லுவோம்.

“பரிசுத்த மாமரியே! மானிட உருவெடுத்த தேவ சுதனின் சகல துயரங்களிலும் நீர் அவருக்கு ஆறுதலாயிருந்தீர். அவருடைய சிலுவைப் பாதைச் சுவடுகளைப் பின்பற்றி கல்வாரி சென்றடைந்தீர். சிலுவையில் தொங்கிய அவருக்கு ஆறுதல் தந்தீர். அதே சமயத்தில் விசேஷ விதமாய் எங்களை உமது பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டீர். அக்கணத்திலிருந்து கஸ்திப்படுகிறவர்களுக்கு நீர் தேற்றரவாக இருந்திருக்கிறீர். துன்புறும் எங்களையும் தேற்றத் தீவரித்து வாரும் அம்மா! துன்பங்கள் வேண்டாமென நாங்கள் வேண்டவில்லை. ஆனால் துன்பங்களைப் பொறுமையுடனும் தைரியத்துடனும் சுமக்க வேண்டிய உதவி பெற்றுத் தர வேண்டுமென்றே நாங்கள் வேண்டுகின்றோம். இவற்றை எங்களுக்குப் பெற்றுத் தந்து, தேற்றரவு அளித்திடும் அம்மா.” 


கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!