இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ பதிலாள்

கடந்த ஓர் ஆண்டாக அந்தப் பங்குக் கோவிலில் மக்கள் ஏராளமாக நாள்தோறும் திருப்பலி கண்டு வந்தார்கள், துணைப் பங்குக்குரு திருப்பலியைப்பற்றி நிகழ்த்தி வந்த பிரசங்கங்களே அதன் காரணம் என பங்குக்குரு நினைத்து, அவரை வாழ்த்தினார். “அதன் காரணம் நானல்ல. நான் வீடு வீடாய்ப் போய், விசு வாசிகளைச் சந்திக்கும்படி இந்தப் பங்கின் ஒரு பகுதியை எனக்குப் பிரித்துக் கொடுத்தீர்களல்லவா? அதிலிருந்து நான் ஒரு காரியத்தை கண்கூடாகப் பார்த்தேன். நாள்தோறும் பூசை காண மக்கள் திரளாக வருவதற்குக் காரணம் ஒரு பெண் என நான் பிரத்தியட்சமாகப் பார்த்தேன். அவள் கத்தோலிக்கு சேவா சங்கத்தைச் சேர்ந்தவள். பிறசிநேகம் நிறைந்தவள். ஏழைகள், நோயாளிகள், சாகுந்தறுவாயிலிருப்பவர்கள் ஆகியோர் வசிக்கும் வீடுகளுக்கு அவள் போகிறாள். யாராவது நோயுற்றிருந்தால், ஒவ்வொருநாளும் திவ்விய பூசை காணச் செல்லும்படி அந்தக் குடும்பத்தினரைத் தூண்டுகிறாள். நம் ஆண்டவர் நோயாளிக்குச் சுகம் கொடுப்பார் என அவள் உறுதி கூறுகிறாள் ஒருவனுக்கு வேலையில்லை, பசி பட்டினியால் வாடுகிறான். திவ்விய பூசை பெருந் திரவியம், நாள்தோறும் பூசைக்குப் போ என புத்தி சொல்கிறாள். குடும்பத்தில் ஒருவர் மனந்திரும்ப வேண்டும்; திவ்விய பூசை வழியாக கணக்கற்ற வரப்பிரசாதங்களைப் பெறலாம் என அவள் எடுத்துக் காட்டுகிறாள். இவ்விதம் அவள் திவ்விய பூசையின் மகத்துவத்தை மக்கள் அறியும்படிச் செய்து வருகிறாள். குடும்பத்துக்கு ஒருவராவது இப்பொழுது நாள் தோறும் பூசை காண்கிறார்'' என துணைக்குரு கூறினார். ''இதுவே உண்மையான கத்தோலிக்க சேவை. அவள் இந்தப் பங்குக்குப் பெரியதோர் ஆசீர்வாதம்'' என பங்குக் குரு மொழிந்தார்.

திவ்விய பூசையினால் அடையக்கூடிய ஆத்தும நலன்களை மக்கள் சரிவர உணராதிருக்கின்றனர்.

கடவுள் நமக்குச் செய்துள்ள கணக்கிடமுடியாத நன்மைகளை நாம் நினைத்துப் பார்க்கையில், கடவுளுக்கு என்ன பதில் செய்வது என்றறியாது திகைக்கிறோம். அவருக்கு தக்க பதில் செய்ய நாம் சக்தியற்றவர்கள். தரித்திரராகிய நாம் என்ன பதில் செய்ய முடியும்? ஆனால் நாம் தரித்திரர் எனினும் நாம் உதவியற்றவர்களல்ல. “என்னைப் பலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையும் செய்ய எனக்குச் சக்தியுண்டு'' என நமக்கு ஆறுதலாக புனித சின்னப்பர் எழுதி வைத்திருக்கிறார். (பிலி. 4/13). நம்மிடம் குறைபடுவதை யேசுவே நிரப்புகிறார். “நீரே எனக்குப் பதிலாள், என் தேவ பதிலாள்; உம் மூலமாக நான் கடவுளைப்போல் தனவந்தனாகிறேன். எனக்கு ஒன்றும் குறைபடாது'' என ஒரு பரிசுத்தவான் சொல்லியிருக்கிறார்.

யேசுவே நம் தேவ பதிலாள். அவர் நமக்குப் பதிலாக கடவுளை வணங்கி வந்திக்கிறார், நன்றி செலுத்துகிறார், பரிகாரம் செய்கிறார், நமக்குத் தேவையானவற்றைக் கேட்டு மன்றாடுகிறார்.

கடவுள் மேல் நாம் கொண்டுள்ள முதற் கடமை ஆராதனை வணக்கமே. அவரை வணங்கி வாழ்த்த நாம் கடமைப்பட்டவர்கள். பரலோகத்தில் நாம் சகல மோட்சவாசிகளுடனும் ஒன்றித்து கடவுளை, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என வாழ்த்தும் நாள் வரும் வரை, இவ்வுலகில் விடாது நாம் அவரைப் புகழ்ந்து வரவேண்டும். நாம் கடவுளை எவ்வளவு வாழ்த்திய போதிலும், நாம் பலவீனரான சிருஷ்டிகளே என மிகப் பரிசுத்தவான்களும் உணர்கிறார்கள்.

நாம் கவலைப்பட அவசியமில்லை, தேவ பதிலாள் ஒருவர் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் திவ்விய பூசை நேரத்தில், தேவ வசீகரமாக்கப்பட்ட அப்பத்தை குரு பாத்திரத்துக்கு மேல் உயர்த்தி (இது சிறிய எழுந்தேற்றம் என்று சொல்லப்படுகிறது) “அவர் வழியாக அவரோடு, அவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே" என்கிறார். அந்த வினாடியில், நம் ஆராதனைக் கடன் செலுத்தப்படுகிறது. தங்கத் தட்டில் இருக்கும் இறைவனின் செம்மறியின் வல்லமையினால் இந்த நலன் ஏற்படுகிறது. அறியாமையினாலோ அல்லது வேண்டுமென்றோ, தங்கள் கடவுளுக்கு உரிய மரியாதை வணக்கத்தைச் செலுத்த கோடிக்கணக்கான மக்கள் மறுக்கிறார்கள். திவ்விய பூசைப் பலியும் விடாது உலகில் நடைபெறுகிறது; ஒரு வினாடிக்கு நான்கு தேவ வசீகரங்கள். ஒவ்வொரு வினாடியும் ஒப்புக் கொடுக்கப்பட்டு வரும் பூசைப் பலிகளுடன் நாமும் ஒன்றித்து, “நித்திய பிதாவே, என் பேராலும், உம்மை ஆராதியாதிருப்போர் பேராலும், உம்மை ஆராதித்து மகிமைப் படுத்தும்படி, உம் நேச குமாரனான யேசுவை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்'' என நாம் அடிக்கடி சொல்லக் கூடுமானால் உண்மையாகவே நாம் பாக்கியசாலிகள். பரலோக பிதாவுக்கு யேசுவை நாம் ஒப்புக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நம்மையும் ஒப்புக்கொடுக்கிறோம். ஏனெனில் உயிருடனிருக்கும் உறுப்புகளான நாம் நம் சிரசாகிய யேசுவுடன் ஒன்றித்து வாழ்கிறோம்.

கடவுள் நமக்குச் செய்திருக்கும் சகல உபகாரங்களுக்கும் தக்க நன்றி செலுத்துவது நம்மால் கூடாத காரியம். நாம் நிர்ப்ப்பாக்கியர், கடவுளோ நன்மை மிறைந்த சமுத்திரம். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நாளையும் நாம் ஆராய்வோமானால், கடவுளது தாராள குணத்தைக் கண்டு நாம் அதிசயிப்போம். நம்மில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்துள்ள உபகாரங்களைத் தவிர, சிருஷ்டிப்பு, மீட்பு, திவ்விய நற்கருணை, மோட்ச சுதந்திரம் என்னும் நான்கு பெரும் உபகாரங்களையும் நம் யாவருக்கும் கடவுள் செய்திருக்கிறார். கடவுளின் இந்த நன்மைத் தனத்தை நினைத்துப் பார்ப்பவன், தாவீது அரசருடன் சேர்ந்து, “ஆண்டவர் எனக்குச் செய்தவைகளுக்கெல்லாம் நான் அவருக்கு எவற்றை ஈடாகத் தருவேன்?' எனக் கூவுவான். கடவுளுக்கு நன்றி செலுத்த சிறந்த தருணம் பூசை நேரம். 

ஆர்ஸ் நகரின் பரிசுத்த பங்குக் குருவுடன் சேர்ந்து, “நித்திய பிதாவே, உம் தேவ குமாரனது பேறு பலன்களிலிருந்து, நான் உமக்குச் செலுத்த வேண்டிய கடனையெல்லாம் எடுத்துக் கொண்டு மீதியை எனக்குக் கொடுத்தருள்வீராக'' எனக் கூறி நன்றி செலுத்த வேண்டும். கிறிஸ்து நாதரது பேறுபலன்கள் என்றும் வற்றாச்சுனையாகும். ஆதலின் நம் கடனை அவற்றிலிருந்து செலுத்திய பின் மீதி இருக்கிறது. கடவுளுக்கு நாம் செலுத்தக் கடமைப்பட்டுள்ள நன்றிக் கடனை நாள் தோறும், ஒவ்வொரு மணி நேரமும், செலுத்தி வரலாம்.

பாவத்தால் நாம் கடவுளுக்கு வருவித்த நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம் செய்தாக வேண்டும். இதிலும் குறைபடுவதை யேசு நிரப்புகிறார். மனிதன் சிருஷ்டி, மனிதன் பாவி, பரிகாரக்கடனை முழுவதும் தீர்க்க அவன் சக்தியற்றவன். தூய, பரிசுத்த, மாசு மறுவற்ற பரிகாரப்பலி கடவுளுக்குச் செலுத்தப்பட வேண்டும். கல்வாரியில் உயிர் விட்ட யேசு ஒருவரே இந்தப் பலியைச் செலுத்தக் கூடியவர். திவ்விய பூசை என்னும் பரிசுத்த பலியில் பெரிய வெள்ளிக் கிழமையின் பரிகாரப் பலி தொடர்ந்து, அர்ச்சியசிஷ்டர்கள் சகல நீதிமான்கள் ஆகியோரது பலதரப்பட்ட நற்கிரிகைகளாலும், அவற்றினால் ஏற்படும் பலன்களாலும், பேறு பலன்கள் என்னும் பொதுக் களஞ்சியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த விலையேறப் பெற்ற களஞ்சியத்திலிருந்து நாமும் பயனடையலாம். “நித்திய பிதாவே, என் பாவங்களுக்கும் அகில உலகின் பாவங்களுக்கும் பரி காரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப் படும் ஆத்துமங்களுக்கு ஆறுதலாகவும் யேசுக் கிறிஸ்து நாதருடைய விலை மதிக்கப்படாத இரத் தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்" என்னும் மிக வல்லமையுள்ள காணிக்கையை அடிக்கடி சமர்ப்பித்து அந்தப் பொதுக் களஞ்சியத்தில் பங்கு பற்றலாம்.

திவ்விய பூசை நேரத்தில் நாம் கடவுள் பாதத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை கிறிஸ்துநாதரே தம் பிதாவின் முன் எடுத்துச்சென்று நமக்காகப் பரிந்து பேசுகிறார். புனித ஜாண் வியான்னி, ஆர்ஸ் நகரில் செய்த பிரசங்கத்தில் இதை விவரிக்கிறார்: “இறந்து போன தம் நண்பன் ஒருவனுக்காக ஒரு பரிசுத்த குரு ஜெபித்துக் கொண்டிருந்தார். அவனது ஆன்மா இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்ததாக கடவுள் அவருக்குத் தெளிவாகக் காண்பித்திருந்தார். இறந்து போனவனுக்காக பூசைப்பலி ஒப்புக்கொடுப் பதைப்போல் சிறந்த உதவி வேறில்லை என அவர் அறிந்திருந்தார். தேவவசீகர வார்த்தைகளைச் சொல்லியதும், திரு அப்பத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, 'பரிசுத்தரும் நித்தியருமான பிதாவே, நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். என் நண்பனை நீர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வைத்திருக்கிறீர். உம் திருமகனை நான் இப்பொழுது என் கரங்களில் வைத்திருக்கிறேன். நீர் என் நண்பனை விடுவித் தருளும்; பதிலாக உமது திருக்குமாரனை, அவரது பாடுகள் மரணம் இவற்றின் சகல பேறுபலன்களோடும், உமக்கு நான் ஒப்புக்கொடுப்பேன்'' என்றார். திரு அப்பத்தை அவர் எழுந்தேற்றம் செய்கையில், நம் நண்பன் மகிமையுடன் மோட்சம் செல்வதை அவர் பார்த்தார்.''

கடவுளிடமிருந்து நாம் ஏதாவது உதவி பெற விரும்பும் போதெல்லாம் இவ்விதமே செய்வோமாக. திரு அப்பத்தை, குருவானவர் தேவ வசீகர வார்த்தைகளைச் சொன்ன பின்னும், பகலிலும் இரவிலும், நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், உலகில் அச்சமயம் நடைபெறும் பூசைப் பலியில் ஒப்புக் கொடுக்கப்படும் யேசுவை பிதாவுக்கு ஒப்புக் கொடுப்போமாக; நம் ஆத்தும ஈடேற்றத்துக்காக நாம் கேட்பதெல்லாம் கிடைக்கும்.

நாம் ஜெபமாலை செய்கையில் "பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் தோத்திரம் உண்டாவதாக; ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்'' என்னும் திரித்துவ ஆராதனையை அடிக்கடி சொல்கிறோம். இந்தச் சிறு ஜெபத்தில் பரிசுத்த தம திரித்துவத்தை வாழ்த்துகிறோம், நன்றி செலுத்துகிறோம். பாவப்பரிகாரம் செய்கிறோம். நித்தியத்திலிருந்து இருந்த சர்வ மகிமையையும், இன்னும் நித்திய காலமும் இருக்கும் சர்வமகிமையையும் கடவுளுக்குக் கொடுக்க விரும்புவதாக இந்த சிறு ஜெபத்தினால் தெரிவிக்கிறோம். இந்த ஜெபத்தைச் சொல்கையில் அதே வினாடியில் நடைபெறும் பூசைப் பலியின் திரு அப்பத்தையும் விலை மதிக்கப்படாத திரு இரத்தத் தையும் பிதாவுக்கு ஒப்புக்கொடுப்போமானால் இந்த நம் விருப்பம் நிறைவேறியதாகும். திவ்விய நற்கருணை வழியாக மிகப் பரிசுத்த திரித்துவமானது ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும்' இருக்கும் சர்வ மகிமையும் பெறுகிறது.

நித்திய பிதாவே, உம் நேச குமாரன் இயேசு சிலுவையில் ஒப்புக் கொடுத்து, கணக்கிட முடியாத பீடங்களில் இப்பொழுது அவர் புதுப்பித்து, வரும் பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.