முதற் பாகம்.

1 "செய்வன திருந்தச் செய்தால் தேடிய பலன் கைகூடும்'' என்ற நீதிமொழிப்படி ஞானத் தியானம் செய்வதால் உண்டாகும் பேலான பலனை நாம் அடையும்படி இந்தத் தியான முயற்சிகளை நாம் நன்றாய்ச் செய்வது அவசியம். இப்படி நன்றாய்ச் செய்ய மனதுள்ள கிறிஸ்துவர்கள் பின்வரும் மூன்று விஷயங்களை முக்கியமாய்க் கவனித்து யோசிப்பார்களாக. தியானம் செய்யும்படி இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவனும் தன்னைப் பார்த்து சொல்ல வேண்டியது ஏதெனில், முதலாவது நான் ஞானத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்வது எனக்கு மகா அவசியம். இரண்டாவது, ஞானத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய என்னால் முடியும். மூன்றாவது, ஞானத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்ய எனக்கு மனது இருக்கின்றது. இங்கே சொன்ன இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து விவரித்துக் காட்டுவோம். நீங்களும் கருத்தாய்க் கேளுங்கள்.

ஆதி முதலில் ஞானத் தியான முயற்சிகளை நன்றாய்ச் செய்வது சகல கிறிஸ்துவர்களுக்கும் மகா அவசியம். ஏனென்றால் கிறீஸ்தவர்கள் அனைவரும் தங்கள் ஆத்துமத்தை எப்படியாவது இரட்சிக்கப் பாடுபட வேண்டும். கிறீஸ்தவன் தன் ஆத்துமத்தை இரட்சித்து காப்பாற்றும்படி திருச்சபையில் பயன்படுத்தப்பட்டு வரும் பற்பல வழி வகை ஏற்பாடுகளுக்குள் ஞானத் தியான முயற்சிகள் முதல்தரமானவை என்பது எல்லாராலும் அங்கீகரிக்கப் பட்ட விஷயம். எப்படியெனில் : இந்தத் தியான முயற்சிகளினாலே தான் கிறிஸ்தவர்கள் தங்களைச் சார்ந்த பற்பல கடமைகள் இன்னவை யென்றும், அந்தக் கடமைகளை எவ்வித ஜாக்கிரதை பிரமாணிக்கத் தோடு அநுசரித்து வருகிறார்கள் என்றும், சர்வேசுரனுடைய கற்பனைகளின் பாதையில் நேரே நடக்கிறார்களா அல்லது வழிதப்பி பிச்கிப் போனார்களா என்றும் தெளிவாய் அறியலாம். அன்றியும் ஒவ்வொரு கிறீஸ்துவனும், தனக்கு சர்வேசுரன் குறித்த அந்தஸ்து எது என்றும், அல்லது தான் இருக்கும் அந்தஸ்திலே எப்படி நடப்பது சர்வேசுரன் சித்தம் என்றும், தியான காலத்தில் தனிமையாயிருக்கும் போது, சர்வேசுரன் அவன் மனதில் பேசுவதால் அறிவான். இதுவும் மன்றி நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது ஆத்தும் விரோதிகள் யார், எவர் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களுடைய கபட நாடக, தந்திர மாய்கை நிறைந்த செய்கைகள் இன்னதென்றும், இவர்களோடு நாம் யுத்தம் செய்யும் வகையும், இதற்கு ஏற்ற ஞான ஆயுதங்களும், இவை களைக் கையாளும் வகையும், எல்லாம் தியான முயற்சிகளைச் செய் யும்போது நாம் தெளிவாய்க் கண்டு அறிவோம். அன்றியும் நமது நடத்தையை நன்றாய்ச் சீர்ப்படுத்த வேண்டுமானால், இதுவரை நாம் நடந்த வகையும், இனிமேல் நடக்க வேண்டிய விதமும் கவனித்து, விதிவிலக்குகள் இன்னவையென்று யோசித்து அறிய வேண்டுமல் லவா? உலக கவலை எல்லாம் நீங்கி தனிமையாயிருந்து, சர்வேசுரன் முன் தியானித்து யோசிக்கும்போதுதான் இந்தத் தெளிந்த அறிவு வரும் என்பதில் சந்தேகமுண்டோ ? வேதாகமத்தில் சொல்லியிருக் கிறபடி, சர்வேசுரன் ஆத்துமத்தை தனிமையான இடத்துக்கு அழைத்துப் போய் அங்கே இருதயத்தில் பேசுவார் (ஓசே.2:14).
வர்த்தகம் செய்யும் வியாபாரி வருஷத்தில் அநேக தடவை தன் வரவு செலவுகளைக் கணக்கிட்டு, இலாபமோ நஷ்டமோ வென்று தன் கணக்குகளைக் கவனமாய்ச் சோதித்துப் பார்த்து வியாபாரத்தை நடத்தாமல் போனால், கண்ணை மூடி காட்டில் அலையும் மனிதன் கல்லில் இடறி, முள்ளில் விழுந்து, காயம்பட்டு வருந்துவது போல, இவனும் பெருந்துன்பமும் நஷ்டமும் பட்டு, போட்ட முதலும் போக, அடுப்பு நெருப்பும் வாய்த் தவிடும் இழந்த கிழவியைப்போல், ஆறாத் துன்பப்படுவான். இதுபோலவே ஆத்தும் இரட்சணிய அலுவலாகிற ஞான வர்த்தகம் செய்யும் நீ, வருஷத்தில் ஒரு தடவையாவது உன் ஆத்துமத்தின் இயல்பான நிலையைப் பரிசோதித்து, புண்ணியமாகிற இலாபமோ, பாவமாகிற நஷ்டமோ, தனக்கு வந்ததென்று கவனியாமல், கண் இல்லா குருடன் போல் நீ நந்தால், பெரும் ஆபத்துக்குள்ளாகி ஆத்தும் நஷ்டம் தப்பாமல் அடைவாய் என்பதற்கு எதிர்ப்புண்டோ ?

ஆத்தும இரட்சணியத்திற்கு அவசியமான ஞானத்தியான முயற்சிகள், கிறிஸ்தவர்களாகிற சகலருக்கும், அவர்கள் எவ்வித அந்தஸ்திலிருந்தாலும், தேவையானவைகள். மேலான உத்தியோகத் திலிருப்பவர்களும், கூலி வேலை செய்து பிழைப்புக்குத் தேவை யானதைத் தேடுகிறவர்களும், செல்வந்தரும், பரம ஏழைகளும், கல்வி, கலை தொடர்பான நூல் கற்றுத் தேர்ந்த அறிஞர்களும், கல்வி கற்றறியாத அறிவிலிகளும், வயதில் முதிர்ந்த பெரியோரும், வாலிபரும், சிறுவரும் எவ்வித அந்தஸ்தில் உள்ளவர்களும், எல்லாரும் தங்கள் சொந்த ஆத்துமத்தை இரட்சிப்பது அவரவர் களைப் பொறுத்த கடமையாதலால், ஆத்தும் இரட்சணியத்துக்கு வெகு அநுகூலமான ஞானத் தியான முயற்சிகளைச் செய்வது அவர்களுக்குப் பயனுள்ளதும் சில சமயங்களில் கடமையுமாகும். இப்படியானால் தியானம் செய்யும் பாக்கியம் உங்களுக்கு இப்போது வந்திருக்கும்போது, ஒவ்வொருவனும் நான் தியானம் நன்றாய்ச் செய்வது எனக்கு மகா அவசியமென்று மனதில் உறுதி யாய் எண்ணி அந்த எண்ணத்தோடு தியானத்தைத் துவக்குவானாக.