இதனாலேதான், பெற்றோரே, நீங்கள் உத்தமராய் நடந்து பிள்ளைகளின் வாழ்வுக்கேற்க நன்மையை விரும்பி அவர்களை ஆசீர்வதித்தாலும் தின்மையை விரும்பிச் சபித்தாலும் உங்கள் அதிகாரத்தை விளக்கும் பொருட்டுச் சர்வேசுரன் அதையெல்லாம் அவர்களிடத்திற் பலிக்கச் செய்துவருகிறார் என்று வேதசரித்திர சம்பவங்களால் அறிகிறோம். இதனாலல்லவா வேதபாரகரும் பீலோ முதலாம் பெயர் படைத்த பிறசமயிகள் தாமும் பெற்றோரைக், கண்கண்ட தெய்வங்களென்றும், பூவுலக தேவர்களென்றும், இரண்டாம் சிருட்டிகர்களென்றும் சிருட்டிகரின் பிரதிமைகளென்றும் அழைக்கிறார்கள். (Raineri vol. 3, p. 85.)
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றது நம்முடைய தமிழ் ஒளவையார் வாக்கு. "தன் தந்தையைப் புறக்கணிக்கிறவன் எவ்வளவோ நிந்தைக்குரியவன்; தாயை மனம் நோகச் செய்கிறவன் சருவேசுரனாற் சபிக்கப்பட்டவன்.”' (சர்வபிர. 3;18)
நோவா என்னும் அதிபிதா சலப்பிரளயத்துக்குப்பின் புதியமுந்திரிகை ரசத்தின் சத்தைச் சிந்தியாமல் அதைக் குடித்து மயக்கமாய்த் தமது கூடாரத்துக்குள் வஸ்திர அலங்கோலமாய்ப் படுத்திருந்தார். அவர் புத்திரருள் ஒருவனாகிய காம் என்பவன் பிதாவின் அலங்கோலத்தைக்கண்டவுடன் அதை மறைத்துவிடாமல் வெளியேயிருந்த தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். இவர்கள் தந்தையின் நிர்வாணத்தைக் கண்ணாற்பாராமல், அவரை மூடிவிட்டார்கள். அவர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது இளைய மகனாகிய காம் தமக்குச் செய்ததை அறிந்தவுடன் அவனைச் சபித்து அவன் தன் சகோதரரின் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றார். தம்மைச் சங்கித்த மற்றிரு குமாரருமாகிய சேமுக்கும் யாப்பேத்துவுக்கும் தேவ ஆசியைவிரும்பி அவர்களை ஆசீர்வதித்து விட்டார். (ஆதியாகமம் 9) அவர் விரும்பிய நன்மை தின்மைகளின் பலிப்பு இன்றைக்கும் இவர்கள் சந்ததிகளில் தீர்க்கமாய் நிறைவேறிவருவது உலகம் அறிந்த விஷயம்.
மீளவும் அதிபிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, தொபியாஸ் முதலானோரும் மற்றும் நல்லோரும் தங்கள் புத்திரசந்தானத்துக்கு விரும்பிய நன்மைகளைச் சருவேசுரன் ஈந்துவந்தாரென்று வேதாகமத்திற் காண்கிறோம். "பிதாவின் ஆசீர்வாதம் பிள்ளைகளின் குடும்பங்களை ஸ்தாபிக்கும். தாயின் சாபமோ அவைகளின் அத்திவாரத்தை நிர்மூலமாக்கிவிடும்” (சர்வபிர சங்கி. 3;11) இந்த வேதவாக்கியத்தின் பொருளே "தாய் இடு சாபம் தனயரைச்சுடுந்தீ'' என்னும் தமிழ்க்கட்டுரையிலேயும் காணப்படுகின்றது.
கப்பதோசியாவில் ஒரு தாய்க்கு ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளுமிருந்தார்கள். அவர்களில் தலைச்சன் மகன், ஒருநாள் தாயை வெகுவாய் நிந்தித்ததுமன்றிக் கையோங்கியுமடித்தான். மற்றப்பிள்ளைகள் இதைக்கண்டும் தங்கள் கடமைப்படி தாயைப் பாதுகாக்கத் தெண்டியாமல் சும்மா நின்றுவிட்டார்கள். தாய் இதனால் மிகுந்த துக்கமுங் கோபமுங்கொண்டு கோவிலுக்குப் போய்த் தன் பிள்ளைகளெல்லாரையுஞ் சபித்து சருவேசுரன் அப்பிள்ளைகளை உலகம் முழுதும் அஞ்சி நடக்கத்தக்கதாய்த் தண்டிக்கவேண்டுமென்று மன்றாடிக்கொண்டாள்.
அவள் வீட்டுக்குத் திரும்பியபோது, பிள்ளைகள் சர்வாங்கமும் நடுடுநங்கிப் பெரும் உபத்திரவப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பின் இந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் வீட்டை விட்டுத் தாயின் சாபத்தோடு ஊரூராயலைந்து திரிந்தார்கள். தாயும் தன் யோசனையில்லாத செய்கையினால் பிள்ளைகளுக்கு நேரிட்ட நிர்ப்பாக்கியத்தைச் சகிக்கமாட்டாமல் அவநம்பிக்கையாகிக் கழுத்தைத் திருகித் தற்கொலை செய்துகொண்டாள். பிள்ளைகள் எல்லோரும் தேசாந்தரிகளாய்த் திரிகையில் அவர்களில் இருவர் கிப்போ நகரியில் அர்ச். முடியப்பரின் கல்லறையிருந்த கோவிலுக்குப் போனார்கள். அச்சமயம் அங்கு கூடியிருந்த விசுவாசிகள் இவர்களுடைய நடுநடுக்கத்தையும் பரிதாப கோலத்தையுங்கண்டு ஏங்கிப் பிரமித்திருக்க, இருவரும் அர்ச். முடியப்பரையிரந்து மன்றாடி அவருடைய சலுகையால் புதுமையாய்ப் பூரண ஆரோக்கியம் அடைந்தார்கள்.
அப்புதுமை நடந்தபோது அங்கிருந்தவரான அர்ச். அகுஸ்தீன் எனும் வேதபாரகர் இச்சம்பவத்தை எழுதி வைத்திருக்கிறார். இத்தாய் செய்தது படுபாதகமென்று சொல்லவேண்டியிருந்தாலும், தாய்மாரின் அதிகாரம் எவ்வளவு என்றதைக்காட்டுதற்குச் சருவேசுரன் இவள்மூலமாய்ச் செய்தருளிய புதுமையைக்கண்டு அதிசயிக்கக் கடவோம்.
அர்ச். பிராஞ்சிஸ் றேஜிஸ் தமது குடும்பத்தில் நடந்த ஓர் சம்பவத்தைப் பின்வருமாறு அறிவித்திருக்கிறார்: இவருடைய மாமனாரின் குமாரரெல்லாரும் அந்நாட்களில் நடந்த ஒரு யுத்தத்துக்குப்போகத் தகப்பனாரிடம் உத்தரவு கேட்டார்கள். அவர் தம் தலைச்சன்மகன் தமக்குத் துணையாகத் தம்மோடிருக்கவேண்டுமென்றும் மற்றவர்கள் போகலாமென்றும் மனரமமியமாய் விடைகொடுத்தார். ஆனால் தலைச்சன் மகன் தானும் கட்டாயம்போக வேண்டுமென்று பிடிவாதமாய்நின்றான். அதனால் தகப்பன் கோபங்கொண்டு நீ எனக்குக் கீழ்ப்படியாதபடியால் போகலாம், நான் திரும்ப ஒருபோதும் உன்முகத்தைக் காணாமலிருப்பேனாக என்றார்.
மகன் தன்னெண்ணப்படிபோய் யுத்தத்தில் மாண்டுபோக, அவனுடைய பிரேதததைப் போர்க்களத்தில் அடக்கஞ்செய்துவிட்டார்கள். யுத்தம் முடிந்தபின் அவ்விடத்தில் ஓர் இடைப்பெண் தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கையில் ஒருநாட் சடுதியாய் இரத்தக்கறையால் மூடப்பட்ட ஒரு போர்ச் சேவகன் அவளுக்கு முன்பாக எழுந்து நின்று, தான் இன்னாரென்றும் ஆசீர்வதிக்கப்படாத அவ்விடத்தில் அடக்கப் பட்டிருக்கும் தன்மேனியைக்கிளப்பித் தன் முன்னோரின் பிரதிஷ்டையான கல்லறையில் அடக்கஞ்செய்யும்படி தான் கேட்டுக்கொள்வதாகத் தன் பெற்றோருக்கு அறிவிக்க வேண்டுமென்றும் சொல்ல அவள் அப்படிச்செய்தாள்.
அப்போது றேஜிஸ் வமிசத்தாரும் குருப்பிரசாதிகளும் சவக்குழிக்குப் போய்ச் சவத்தையெடுத்துக் குறித்த கல்லறைக்குக் கொண்டுபோனார்கள். கல்லறையைக் கிட்டினபோது சவத்தைச் கொண்டுபோனவர்கள் முன்னேறி நடக்கமுடியாமல் பிரேதம் மிகப்பாரமாய்ப்போயிற்று. இதைக்கண்ட எல்லாரும் அதிசயித்துத் திகிலடைந்து நிற்க தகப்பன்மாத்திரம் காரியத்தை விளங்கிக்கொண்டார்.
ஐயையோ! என்மகனின் அமைச்சலீனத்துக்காக நான் அவனைச் சபித்திருந்தேனே. அதனாலல்லவோ இன்று இப்படி நேரிட்டிருக்கிறது என்றெண்ணி வானத்தைப்பார்த்து: நீதியும் பரிசுத்தமுமுள்ள ஆண்டவரே! என் பையனின் குற்றத்தை நான் முழுமனதோடு மன்னிக்கிறதுபோல தேவரீரும் என்பாவத்தை மன்னித்தருளும் என்று மன்றாடினார். உடனே பிரேதம் முன் போல் இலேசாகவே, அதைக் கல்லறைக்குக் கொண்டு போய்த் திருச்சபை முறையின்படி அடக்கஞ்செய்தார்கள்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠