“கவனமாகக் கேளும்: நீர் இங்கே காணும் சிறுவர்கள் கீழ்ப் படியாமல் இருப்பதன் மூலம் தங்களுக்கென்று ஒரு துயரமான முடிவை ஆயத்தம் செய்பவர்கள் ஆவர். உறங்கச் சென்று விட்டார்கள் என்று நீர் நினைக்கிற இன்னின்ன சிறுவர்கள், இரவில் தாமதமாக தங்கள் உறங்கும் அறைகளை விட்டு வெளியேறி, விளையாட்டு மைதானத்தில் சுற்றித் திரிகிறார்கள். மற்றவர்களிட மிருந்து முரண்பட்ட விதத்தில், இவர்கள் ஆபத்தான பகுதிகளிலும் சுற்றித் திரிகிறார்கள். கட்டடச் சாரங்களில் ஏறுகிறார்கள், இவ்வாறு தங்கள் உயிர்களையும் கூட ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள். மற்றவர்கள் கோவிலுக்குச் சொல்கிறார்கள், ஆனால் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளவற்றை மறந்து, அங்கே மோசமாக நடந்து கொள்கிறார்கள்; ஜெபிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பகல்கனவு காண்கிறார்கள், அல்லது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக் கிறார்கள். சுகமாகத் தூங்குவதற்காக தேவ வழிபாட்டு நிகழ்ச்சி களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறுவர்களும் இருக்கிறார்கள். ஜெபத்தை அலட்சியம் செய்பவர்களுக்கு ஐயோ கேடு!
ஜெபிக்காதவன் தன்னை அழிவுக்கு இட்டுச் செல்கிறான். பாடல்கள் பாடுவதற்குப் பதிலாக, அல்லது திவ்விய கன்னிகையின் சிறிய மந்திரமாலையைச் சொல்வதற்குப் பதிலாக, அற்பமான, அல்லது தடை செய்யப்பட்ட புத்தகங்களையும் கூட தாங்கள் வாசித்ததால், இப்போது சில சிறுவர்கள் இங்கே இருக்கிறார்கள்.”அவர் அதன்பின் தொடர்ந்து, சிறுவர்களின் மற்ற, மோசமான ஒழுக்க மீறுதல்களை எனக்குக் குறித்துக் காட்டினார்.
இவற்றை அவர் சொல்லி முடித்தபோது, நான் ஆழமாக நெகிழ்ச்சி அடைந்திருந்தேன்.
நான் நேராக அவருடைய கண்களைப் பார்த்தபடி, “என் சிறுவர்களுக்கு இந்த எல்லாக் காரியங்களையும் நான் சொல்ல லாமா?” என்று கேட்டேன்.
“ஆம், உமக்கு நினைவில் இருக்கும் எல்லாவற்றையும் நீர் சொல்லலாம்.”
“இப்படிப்பட்ட ஒரு துக்கமான முடிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற நான் அவர்களுக்கு என்ன அறிவுரை தருவது?”
"கடவுளுக்கும், திருச்சபைக்கும், தங்கள் பெற்றோருக்கும், மேலதிகாரிகளுக்கும், சிறு காரியங்களிலும் கூட கீழ்ப்படிவதன் மூலம், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிரும்.”
“வேறு ஏதாவது?"
“வேலையின்றி சோம்பியிருப்பதற்கு எதிராக அவர்களை எச்சரியும். எதுவும் செய்யாமல் சோம்பலாக இருந்ததால்தான் தாவீது பாவத்தில் விழுந்தார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்குமாறு அவர்களிடம் சொல்லும். ஏனெனில் அப்போது அவர்களைச் சோதிக்க பசாசுக்கு வாய்ப்புக்கிடைக்காது.”
நான் தலைவணங்கி, அப்படியே செய்வதாக வாக்களித்தேன். கடும் அச்சத்தாலும், திகைப்பாலும் சோர்ந்து விட்ட என்னால், “என்னிடம் இவ்வளவு நல்லவராக இருந்ததற்காக உமக்கு நன்றி. இப்போது என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச் செல்லும்” என்று முணுமுணுப்பாகச் சொல்ல மட்டுமே முடிந்தது.
“அப்படியானால் சரி, என்னுடன் வாரும்.” என்னை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர் என் கையைப் பிடித்து, என்னைத் தாங்கிக் கொண்டார். ஏனெனில் என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. அந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு, நாங்கள் மிக வேகமாக அந்த பயங்கரமுள்ள முற்றத்தையும், நீண்ட நடைபாதை யையும் கண நேரத்தில் கடந்தோம். ஆனால் கடைசி வெண்கலக் கதவைத் தாண்டி நாங்கள் வெளியே காலெடுத்து வைத்ததும், அவர் என்னிடம் திரும்பி, “இப்போது, மற்றவர்கள் என்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நீர் கண்டு விட்டதால், நீரும் நரகத்தைத் தொட்டு உணர வேண்டும்” என்றார்!
“இல்லையில்லை!” என்று நான் கடும் அச்சத்தோடு அலறினேன்.