இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியம்மாள் தன் வார்த்தைப்பாட்டை கடவுள் தனக்குக் கொடுக்கப் போகும் மணாளனிடம் கூற முடிவெடுக்கிறார்கள்.

3 செப்டம்பர்  1944.
என்ன பயங்கர இரவு!  பசாசுக்கள் உலகத்தின் மேல் படையெடுத்தது போலிருந்தது.  வெடி ஓசைகள், இடி மின்னல்கள், ஆபத்துக்கள், அச்சங்கள்.  நான் என்னுடையதல்லாத வேறு ஒரு படுக்கையில் படுத்திருந்ததனால் வேதனை.  இவற்றின் நடுவே மரியாவைக் கண்டேன்.  நெருப்புக்கும் குழப்பங்களுக்குமிடையே ஓர் இனிய வெண்மலரைப் போல அவர்கள் காணப்பட்டார்கள்.  நேற்றைய காட்சியில் காணப்பட்டதைவிட சற்று மூப்பாக இருந்தார்கள்.  ஆயினும் இளநங்கைதான்.  அவர்களின் அழகிய சடைகள் தோள்களில் படிந்திருந்தன.  வெண்மையான உடை.  மெல்லிய கூச்சம் கலந்த புன்னகை.  தன் இருதயத்திற்குள் மூடப்பட்டிருந்த மகிமையான மறைபொருளால் ஏற்பட்ட அந்யோந்ய புன்னகை.  நான் மரியாயின் சாந்த உருவத்தை உலகத்தினுடைய மூர்க்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும், நேற்று காலையில் அவர்கள் பேசிய வார்த்தைகளை, உயிருள்ள அன்பின் கீதமான அவ்வார்த்தைகளை, மனிதனின் கொடிய பகையுடன் ஒப்பிட்டுத்  தியானித்தபடியும் இரவைக் கழித்தேன்...

இன்று காலையில் என் அறையின் அமைதியில் பின்வரும் காட்சியைக் கண்டேன்.  மரியா இன்னும் தேவாலயத்தில்தான் இருக்கிறார்கள்.  ஆலயத்தின் உட்பாகத்திலிருந்து மற்ற கன்னிகைகளுடன் இதோ வெளியே வருகிறார்கள்.

அங்கு ஏதோ திருச்சடங்கு நடைபெற்றிருக்க வேண்டும்.  ஏனென்றால் சாம்பிராணி வாசனை அம்மாலை நேர சிவந்த சூரிய அஸ்தமனத்தில் வீசுகிறது.  அது அக்டோபர் மாதத்தின் பிந்திய பகுதியாக இருக்க வேண்டும்.  ஏனென்றால், அம்மாதத்தில் வழக்கமாக இருப்பது போல் ஆகாயம் தெளிவான அமைதியுடன் ஜெருசலேமின் தோட்டங்கள் மேல் கவிழ்ந்து காணப்படுகிறது.  உதிரப் போகும் இலைகளின் இள மஞ்சள் நிறம் பிரகாசமான பச்சை நிற ஒலிவ மரங்களுக்கு பொன் பொட்டுக்கள் வைத்தது போலிருக்கிறது.

வெண்ணுடை தரித்த கன்னிகைகளின் கூட்டம் - இல்லை அணி, வருகிறது.  பின்புற மைதானத்தைக் கடந்து, படிக்கட்டில் ஏறி, ஒரு மண்டப வளைவு வழியே அவ்வளவு சிறப்பில்லாத, அதற்கு இட்டுச் செல்லும் கதவு தவிர வேறு கதவு இல்லாத இன்னொரு சதுர முற்றத்தை அடைகிறது.  அதுதான் ஆலயக் கன்னிகைகளின் சிறிய உறைவிடங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடமாயிருக்க வேண்டும்.  ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தன் தன் சிற்றில்லத்தை நோக்கி சின்னப் புறாக்கள் தங்கள் கூடுகளுக்குச் செல்வது போல் செல்கின்றனர் - கூட்டமாகக் கூடிய பின் தனித் தனியே பிரிந்து போகிற புறாக்களைப் போல அவர்கள் பிரிந்து செல்லுமுன் எல்லோரும் மெதுவான குரலில் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள்.  மரியா மவுனமாயிருக்கிறார்கள்.  மற்றப் பிள்ளைகளை விட்டுப் பிரியுமுன், அவர்களுக்கு அன்பாக மங்களம் கூறி விட்டு வலது ஓரத்திலிருக்கும் தன் சிறிய அறைக்குச் செல்கின்றார்கள்.

ஒரு வயதான ஆசிரியை, ஆனால் அன்னாளைப் போல் அவ்வளவு வயதில்லாத மாது மரியாயுடன் சேர்ந்து சென்று: “மரியா, பெரிய குரு உன்னைப் பார்க்க விரும்புகிறார்” என்று கூறுகிறாள்.

மரியா கொஞ்சம் ஆச்சரியத்தோடு அவளைப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.  “உடனே போகிறேன்” என்று மட்டும் பதில் சொல்கிறார்கள்.

மரியா நுழைகிற பெரிய சாலை போன்ற அறை பெரிய குருவின் இல்லமா, அல்லது ஆலயத்திற்குக் குறிக்கப்பட்ட ஸ்திரீகளின் வீடுகளா என்று தெரியவில்லை.  அது அகன்ற இடம், வெளிச்சமாயிருக்கிறது.  நன்றாக ரசனையோடு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.  அங்கே பெரிய குரு கம்பீரமான தோற்றத்துடன், தமது சிறப்பு உடைகளுடன் இருக்கிறார்.  அவருடன் சக்கரியாசும், பானுவேலின் குமாரத்தி அன்னாளும் இருக்கிறார்கள்.

வாசல் வரை வந்த மரியா தலை வணங்குகிறார்கள்.  ஆனால் உள்ளே செல்லவில்லை.  “மரியா, உள்ளே வா.  பயப்படாதே” என்கிறார் பெரிய குரு.  மரியா தலை நிமிர்ந்து மெல்ல உள்ளே செல்கிறார்கள்.  உள்ளே போக மனமில்லாததினால் அல்ல.  ஒருவிதமான, அவர்கள் நினையாத பாரம் அவர்களை ஒரு ஸ்திரீயாகக் காட்டுகிறது.  அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக அன்னாள் புன்னகை செய்கிறாள்.  சக்கரியாஸ்: “உனக்கு சமாதானம் பிள்ளாய்!” என்கிறார்.

பெரிய குரு மரியம்மாளை நுணுக்கமாகக் கவனித்து, பின் சக்கரியாஸைப் பார்த்து:  “இவள் தாவீதினுடையவும், ஆரோனுடையவும் வம்சத்தைச் சேர்ந்தவள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார்.  பின் மரியாயைப் பார்த்து:

“குழந்தாய், உன்னுடைய சீலத்தையும், நற்குணத்தையும் நானறிவேன்.  நீ கடவுளுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் தினமும் வரப்பிரசாதத்திலும், அறிவிலும் வளர்ந்து வருகிறாய் என அறிந்திருக்கிறேன்.  கடவுளின் குரல் உன் இருதயத்தில் அவருடைய  மிக மதுரமான வார்த்தைகளைக் கூறுவதும் எனக்குத் தெரிகிறது.  நீ தேவனுடைய ஆலயத்தின் மலர்.  நீ இங்கு வந்ததிலிருந்து,  சாட்சியக் கூடாரத்தின் முன்பாக ஒரு மூன்றாம் கெரூபின் தூதன் இருப்பதாக  நான் அறிகிறேன்.  உன்னுடைய நறுமண வாசனை, ஒவ்வொரு நாளும் தூபப்புகையுடன் மேலே தொடர்ந்து எழ வேண்டுமென்று விரும்புகிறேன்.  ஆனால் வேதப் பிரமாணம் வேறு வகையாகக் கூறுகிறது:  நீ இப்பொழுது சிறுமியல்ல.  ஸ்திரீ.  இஸ்ராயேலில் ஒவ்வொரு ஸ்திரீயும் ஒரு குமாரனைப் பெற்று ஆண்டவருக்கு அளிக்கும்படியாக, அவள் ஒரு மனைவியாக வேண்டும்.  நீயும் தேவ சட்டப்படி நடக்க வேண்டும்.  நீ பயப்படாதே.  வெட்கப்படாதே.  நீ அரச குலத்தவள் என்பது எனக்குத் தெரியும்.  ஒவ்வொரு ஆண் மகனுக்கும் அவன் கோத்திரத்திலிருந்தே ஒரு ஸ்திரீ கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உன்னைப் பாதுகாக்கும்.  சட்டம் அப்படிக் கூறாவிட்டாலும் கூட, உயர்தன்மையான உன் இரத்தம் கெடாதபடி நானே அப்படிச் செய்வேன்.  மரியா, உன் கோத்திரத்தாருள் உன் கணவனாயிருக்கக் கூடிய யாரையாவது உனக்குத் தெரியாதா?” என்று கேட்கிறார்.

மிக நாணமடைந்த மரியா தன் தலையை நிமிர்த்துகிறார்கள்.  அவர்களின் கண்களில் கண்ணீர் வந்து நிரம்புகிறது.  நடுங்கும் குரலில்:  “எனக்கு யாரையும் தெரியாது” என்கிறார்கள்.

அப்போது சக்கரியாஸ் குறுக்கிட்டு: “அவளுக்கு யாரையும் தெரிந்திருக்க முடியாது.  ஏனென்றால் அவள் சிறு வயதிலேயே இங்கு வந்து விட்டாள்.  மேலும் தாவீதின் கோத்திரம் பலமாக அடிபட்டு, மிகப் பரவலாக சிதறடிக்கப்பட்டு விட்டது.  அதனால் அதன் கிளைகள், அரச தால மரத்தைச் சுற்றி இலை சூழ்ந்திருப்பது போல் சேர்ந்திருக்க இயலவில்லை” என்கிறார்.

“அப்படியானால் தெரிந்தெடுக்கும் அலுவலை நாம் கடவுளுக்கே விட்டு விடுவோம்” என்கிறார் பெரிய குரு.

இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த மரியாயின் கண்ணீர்கள் குபீரென்று பாய்ந்து, நடுங்கிக் கொண்டிருந்த அவர்களின் வாயில் விழுகின்றன.  அவர்கள் உதவி தேடி தன் ஆசிரியையைப் பார்க்கிறார்கள்.

அப்போது அன்னா: “ஆண்டவருடைய மகிமைக்காகவும், இஸ்ராயேலின் இரட்சிப்பிற்காகவும் மரியா தன்னையே ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறாள்.  அவள் எழுத, வாசிக்கக் கற்றுக்கொள்ளும் சிறு வயதிலேயே தன் வார்த்தைப்பாட்டைச் செய்து விட்டாள்” என்று பரிந்து கூறுகிறாள்.

“அதற்குத்தான் நீ அழுகிறாயா?  நீ வேத சட்டத்தை மீற விரும்பவில்லையே” என்று கேட்கிறார் பெரிய குரு.

“அதற்குத்தான்... வேறு எதற்குமில்லை.  கடவுளின் குருவே! உமக்கு நான் கீழ்ப்படிவேன்” என்று மரியா பதிலளிக்கிறார்கள்.

“உன்னைப் பற்றி நான் எப்போதும் கேள்விப்பட்டு வருவதை இது உறுதிப்படுத்துகிறது.  நீ ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணித்து எவ்வளவு காலமாகிறது?” 

“எப்போதுமே நான் அப்படியிருந்திருப்பதாகவே நினைக்கிறேன்.  இந்த ஆலயத்திற்கு வருமுன்பே என்னை ஆண்டவருக்குக் கொடுத்திருந்தேன்.” 

“பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஆலயத்தில்   சேருவதற்கு என்னிடம் அனுமதி கேட்ட சிறுமி நீதானே?” 

“ஆம்.”

“அப்படியானால், நீ ஏற்கெனவே ஆண்டவருக்குச் சொந்தமாயிருந்ததாக எப்படிச் சொல்கிறாய்?” 

“நான் பின்னோக்கிப் பார்க்கும்போது, நான் அர்ப்பணிக்கப்பட்டிருந்ததாகக் காண்கிறேன்.  நான் எப்போது பிறந்தேன் என்று நினைவில்லை.  என் தாயை எப்படி நேசிக்கத் தொடங்கினேன், என் தந்தையிடம் “நான் உங்கள் மகள்” என்று எப்போது சொன்னேன் என்றும் எனக்கு ஞாபகமில்லை.  ஆனால் என் இருதயத்தைக் கடவுளுக்கு நான் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.  அது எப்போதிருந்து என்று தெரியவில்லை.  அது ஒருவேளை நான் முதல் முத்தம் கொடுக்க முடிந்த போது, அல்லது முதல் வார்த்தையைப் பேசக் கற்றுக் கொண்டபோது, அல்லது நான் முதல் அடியெடுத்து வைத்த போதாக இருக்கலாம்... ஆமாம், நான் முதல் தடவையாக திடமாக அடியெடுத்து வைத்தபோதுதான் நான் நேசித்ததாக நினைவிருக்கிறது... எங்கள் வீடு... அவ்வீட்டின் பக்கத்தில் மலர்கள் நிறைந்த தோட்டம்... ஒரு பழ மரத் தோட்டம், சில வயல்கள்... பின்பகுதியில் ஒரு நீர்ச்சுனை, அது ஒரு குன்றுக்கடியில் இருந்தது.  ஒரு கெபி போன்ற குடைவான பாறையிலிருந்து தண்ணீர் ஓடி வந்தது... அதில் முழுவதும் பச்சை நீர்வீழ்ச்சி போல் நீண்ட ஒல்லியான புற்கள் கவிந்திருந்தன.  அந்த புல் இலைகளின் மேல் நீர்த்துளிகள் பட்டு அவை பூ வேலை செய்த துணி போலவும்,  அவை அழுவது போலவும் காணப்பட்டன.  அந்தத் துளிகள் விழுந்தபோது சின்ன மணிகள் போல் ஒலித்தன.  அந்தச் சுனையும் பாடுவது போலிருந்தது.  அச்சுனைக்கு மேலே நின்ற ஒலிவ, ஆப்பிள் மரங்களில் பறவைகள் இருந்தன.  வெள்ளைப் புறாக்கள் அந்தச் சுனையின் தெளிந்த நீரில் வந்து குளிக்கும்... இதையெல்லாம் பற்றி நான் நினைப்பதில்லை.  ஏனென்றால் என் முழு உள்ளத்தையும் கடவுளிடம் கொடுத்திருந்தேன்.  இதற்கு ஒரே விதிவிலக்கு என் பெற்றோர் மட்டுமே.  அவர்களை வாழ்விலும், மரணத்திலும் நேசித்தேன்.  மற்றெல்லா உலகப் பொருள்களும் என் இருதயத்திலிருந்து மறைந்து விட்டன... இப்பொழுது நீங்கள் அவைகளை நினைக்க வைத்து விட்டீர்கள்... நான்  எப்பொழுது கடவுளுக்கு என்னைக் கொடுத்தேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதனால் என் வாழ்வின் முதல் ஆண்டுகள் என் நினைவிற்கு வருகின்றன... அந்தக் கெபியை நான் ஏன் விரும்பினேனென்றால், அந்த நீர்ச் சுனையின் பாடலை விட, பறவைகளின் மென் குரலோசையையும்விட, அதிக இனிமையான குரல் ஒன்று என்னிடம்: “என் நேசமே வா!” என்று சொல்லக் கேட்டேன்.  மணியயாலியெழுப்பி பிரகாசித்த வைரத் துளிகளால் நிரம்பிய பூண்டுகளை நான் விரும்பினேன்.  ஏனென்றால் அவற்றில் என் ஆண்டவருடைய அடையாளத்தை நான் கண்டேன்.  நான் எனக்குள்ளே சொல்லிக் கொள்வேன்: “ஓ என் ஆன்மாவே!  உன் கடவுள் எவ்வளவு பெரியவராயிருக்கிறார் என்று பார்.   லீபானின் கேதுரு மரங்களை கழுகுகளுக்கெனப் படைத்தவர், ஒரு சின்னக் கொசுவின் பாரத்தால் வளையும் இச்சிறிய இலைகளையும் படைத்தாரே!  அவர் இவைகளை உன் கண்களுக்கு மகிழ்ச்சியாகவும், உன் சிறு பாதங்களுக்கு பாதுகாப்பாகவும் படைத்திருக்கிறார்!” தூய்மையான பொருள்களின் அமைதியை நான் விரும்பினேன்.  மெல்லிய காற்று, வெள்ளி போன்ற தண்ணீர், புறாக்களின் தூய்மை... அந்தச் சிறு கெபியின் மீது அசைவாடி, ஆப்பிள், ஒலிவ மரங்களிலிருந்து இறங்கிய அமைதியை நான் விரும்பினேன்.  அவை இப்போது பூவால் நிறைந்திருக்கின்றன.  அப்போது அவை அழகிய கனிகளுடன் விளங்கின... எனக்கு அது என்னவென்று தெரியவில்லை... அந்தக் குரல் என்னைப் பார்த்து - ஆம், என்னிடம் மட்டும்தான் சொல்வது போலிருந்தது:  “உயர்வகை ஒலிவ மரமே வா!  இனிய ஆப்பிளே வா! முத்திரையிடப்பட்ட சுனையே வா!  என் புறாவே வா!...”  ஒரு தகப்பனின் அன்பு இனியது, ஒரு தாயின் பாசமும் இனியது... என்னைக் கூப்பிடும் அவர்களின் குரல்கள் இனியன... ஆனால் இந்தக் குரல்! இது ஓ! சிங்காரத் தோட்டத்தில் குற்றஞ் செய்தவள் இந்தக் குரலைக் கேட்டிருப்பாள் என நினைக்கிறேன்.  அவள் இந்த அன்பின் குரலை விட பாம்பின் சீறலை எப்படித் தெரிவு செய்தாள் என்பது எனக்கு விளங்கவில்லை.  கடவுள் அல்லாத மற்ற எந்த அறிவையும் அவளால் எப்படி விரும்ப முடிந்ததோ... பால் மணம் மாறாத என் உதடுகளைக் கொண்டும், பரலோகத் தேன் நிரம்பிய இருதயத்துடனும் நான் இவ்வாறு கூறினேன்:  “இதோ நான் வருகிறேன்.  நான் உம்முடையவள்.  என் சரீரத்தை, ஆண்டவரே, உம்மையன்றி வேறு யாரும் கொள்ள மாட்டார்கள்.  என் ஆன்மாவிலும் வேறு யாருடைய அன்பும் இராது...”  இப்படி நான் கூறியபோது, ஏற்கெனவே நான் கூறியவற்றையே கூறுவதாகத் தெரிந்தது.  ஏற்கெனவே செய்து முடித்த சடங்கையே நான் செய்வதாகத் தெரிந்தது.  நான் தெரிந்து கொண்ட மணாளன் எனக்கு அந்நியரல்லவென்று தெரிந்தது.  காரணம், அவருடைய ஆர்வம் எனக்கு ஏற்கெனவே தெரியும்.  என் பார்வை அவருடைய ஒளியிலே உருவாக்கப்பட்டது.  நேசிப்பதற்கு என்னிடமிருந்த ஆற்றல் அவருடைய அரவணைப்பில் நிறைவு பெற்றது...எப்பொழுது?  அது எனக்குத் தெரியவில்லை.  வாழ்க்கையைக் கடந்த நிலையில் என்று கூறுவேன்.  ஏனெனில் அவரை நான் எப்போதும் கொண்டி ருந்ததாகவும்,  அவரும் என்னை எப்போதும் கொண்டி ருந்தாரென்றும், அவருடையவும் என்னுடையவும் இஸ்பிரீத்துவின் மகிழ்ச்சிக்காக என்னை அவர் விரும்பிய காரணத்தால் நான் இருப்பதாக உணருகிறேன்... ஓ!  கடவுளின் குருவே, இப்பொழுது உமக்கு நான் கீழ்ப்படிகிறேன்.  ஆனால் தயவு செய்து நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்குச் சொல்லும்... எனக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை. தயவுசெய்து நீரே என் வழிகாட்டியாயிரும்.”

“கடவுள் உனக்கு உன் கணவனைத் தருவார்.  அவனும் புனிதனாக இருப்பான்.  ஏனென்றால் நீ என்னை இறைவனிடமே ஒப்படைத்திருக்கிறாய்.  உன் கணவனிடத்தில் உன் வார்த்தைப்பாட்டைப் பற்றி நீ பேசு.” 

“அவர் சம்மதிப்பாரா?” 

“ஆம் என்றே நினைக்கிறேன்.  அவன் உன் உள்ளத்தைக் கண்டுபிடிக்கும்படியாக வேண்டிக்கொள் மகளே. இனி  நீ செல்லலாம்.  கடவுள் எப்போதும் உன் துணையாக வருவாராக.” 

மரியா அன்னாளுடன் திரும்பிச் செல்கிறார்கள்.  சக்கரியாஸ் பெரிய குருவுடன் இருக்கிறார்.

காட்சி முடிகிறது.