இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சமாதானத்தின் இராக்கினியே!

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த இரு உலக மகா யுத்தங்களின் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் உயிர்ச் சேதத்தோடு பொருட்சேதமும் அடைந்த துயர சம்பவங்கள் நாமறிந்ததே. அக்கொடிய யுத்தங்களின் பலாபலன்களை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். இரண்டாம் மகா யுத்தம் முடிந்து பல வருடங்கள் கடந்து விட்டன. எங்கு பார்க்கினும் “சமாதானம், சமாதானம்” என்னும் கூக்குரல் ஒலிக்கின்றது. 

உலக வல்லரசுகளின் மேதாவிகள் பற்பல இடங்களிலும் பல மகாநாடுகள் கூட்டி, நீடிய சமாதானத்தை நிலைநிறுத்த முயன்று வருகின்றனர். இதுவரை பல மகாநாடுகள் கூடிய போதிலும், அவற்றால் ஏற்பட்டுள்ள நலன் ஒன்றுமில்லை. உலக மேதாவிகள் எவ்வளவுக்கதிகமாய் முயலுகின்றனரோ, அதற்களவாய் சமாதானம் நம்மைவிட்டு அகன்று போவது போல் தோன்றுகிறது. சமாதானத்திற்கு மாறாய் யுத்த மேகங்கள் எங்கும் பரவி வருகின்றன. மூன்றாம் மகா யுத்தம் இன்றோ நாளையோ என மக்கள் பீதியடைகின்றனர்.

நிரந்தரமானதும், உண்மையானதுமான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின், உலகில் இன்று காணப்படும் சீர்கேடான நிலை மாற வேண்டும்; மக்களிடையே காணப்படும் ஊழல்கள் மறைய வேண்டும்; முதலாளி- தொழிலாளி பிணக்குகள் நீங்க வேண்டும்; மனிதரிடையே ஏற்பட்டுள்ள ஜாதி பேதங்களும் நிறத் துவேஷங்களும் அடியோடு அழிதல் வேண்டும். யாவரும் ஓர் குலம், யாவரும் ஓர் இனம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்; மக்களிடையே நீதியும் பிறர்சிநேகமும் நிலவ வேண்டும். இவை யாவும் சத்தியமாக வேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு வழி மட்டும் உண்டு. அதுதான் நமதாண்டவர் காட்டிய வழி. அவர் நமக்குப் போதித்த சத்தியங்களை அநுசரித்தாலன்றி உண்மைச் சமாதானம் உலகில் ஏற்படாதென்பது வெளிப்படை. உலகில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையே சான்றாகும். உலக இராஜதந்திரிகள் சமாதானத்திற்கான வழிகளைத் தேட முயலுகின்றனர். ஆனால் அதற்கென நமதாண்டவர் காட்டியுள்ள வழியைப் பின்பற்ற அவர்களுக்கு அக்கறையில்லை; திவ்விய சேசுவின் பிரதிநிதியின் சொல்லுக்கு செவிசாய்ப்பதில்லை.

நமது திவ்விய இரட்சகர் மெய்யாகவே சமாதான அரசர். அவர் பிறந்தவுடன் சம்மனசுக்கள் ஆகாயத்தில் தோன்றி, “உன்னத ஸ்தலங்களிலே சர்வேசுரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாகக் கடவது” (லூக். 3:14) என்று பாடினார்கள். அவர் மரிக்குமுன் “சமா தானத்தை உங்களுடன் விட்டுப் போகிறேன்” என்று தம் சீஷர்களுக்குத் திருவுளம் பற்றினார். உயிர்த்தபின் அவர் களுக்குப் பலமுறை காட்சியளித்து, “உங்களுக்குச் சமாதானம்” என்று பல முறை திருவாய் மலர்ந்தருளினார். “சமாதானம், சமாதானம்” என்று அவர் வாயினால் சொன்னது மாத்திரமல்ல, மெய்யாகவே மனுக்குலத்துக்கு சமாதானத்தை அடைந்து கொடுத்தார். எவ்வாறெனில், ஆதாம் ஏவாள் செய்த பாவத்தினிமித்தம் சர்வேசுரன் உலகத்தைச் சபித்து, நமது மோட்ச இராச்சியத்திற்குள் மனிதர் பிரவேசியாமல் அதன் கதவை அடைத்து விட்டார். தேவ சாபத்துக்குட்பட்டிருந்த மனுமக்களைத் தமது இரத்தத்தினாலும், சிலுவையின் கொடிய மரணத்தினாலும் இரட்சித்துத் தமது பரம பிதாவுடன் சமாதானம் பண்ணியவர் திவ்விய சேசு. சமாதானத்தின் அரசரை நமக்குப் பெற்றுத் தந்தவர்கள் பரிசுத்த கன்னி மாமரி. அத்துடன் நில்லாமல், மனுக்குல இரட்சணிய மாகிய பேரலுவலில் தன் திருக்குமாரனோடு ஒன்றித்து உழைத்தார்கள் நம் மாதா. இவ்வாறு அன்பின் தேவனைப் பகைத்து நின்ற உலகை, மீண்டும் அவரோடு சமாதானம் செய்து வைக்கும் அதியுன்னத அலுவலில் தன் திருக்குமாரனுடன் ஒத்துழைத்ததினிமித்தம் “சமாதானத் தின் இராக்கினி” என்னும் நாமம் பரிசுத்த கன்னிகைக்குப் பூரணமாய்ப் பொருந்தும்.

மேலும் உலக மேதாவிகள் சமாதானத்திற்காக உழைப்பதைவிட பன்மடங்கு அதிகமாய் உழைக்கிறார்கள் நம் மாதா. யுத்தத்தால் அல்லலுறும் உலகிற்காக தேவனிடம் பரிந்து பேசுகிறார்கள். சமாதானத்தை நிலை நாட்ட உதவும் எத்தனங்கள் ஜெபம், தவம், பரித்தியாகம் என்னும் கருவிகள் எனப் போதித்துள்ளார்கள். அன்று பாத்திமாவில் அவர்கள் கூறியதை மறுபடியும் ஞாபகப் படுத்திக் கொள்வோம்: “நான் சொல்வதை மனிதர் செய் தால் அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவார்கள். உலகிற்கு சமாதானம் உண்டாகும். யுத்தம் முடிவுக்கு வரும். ஆனால் கடவுளுக்கு விரோதமாய்ச் செய்யப்படும் பாவங்கள் நிற்காவிட்டால் இதைவிட இன்னுமொரு கொடிய யுத்தம் துவக்கும்... அதைத் தடுப்பதற்காகத்தான் ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்க வேண்டுமென்றும், ஐந்து முதல் சனிக் கிழமைகளில் பரிகார நன்மை வாங்கி ஒப்புக் கொடுக்க வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன். என் விருப்பத்திற்கு இசைந்தால் ரஷ்யா மனந்திரும்பும்; சமாதானம் நிலவும்...” 

இவை யாவும் கட்டுக் கதைகள் அன்று. இவை உண்மையென நாம் அறிவோம். முன்பு பாத்திமா மாதாவின் சுரூபம் நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, இவ்விஷயங்கள் நம் மனதில் ஆழமாய்ப் பதிந்தன. ஆயினும் எத்தனை விசை நமது அசதி அசட்டைத்தனத்தால் மாதா கொடுத்துள்ள ஜெபம், தவம், பரித்தியாகம் என்னும் இந்த ஆயுதங்களை உபயோகிக்காமலிருக்கிறோம்? மோசம் போக வேண்டாம். வெள்ளம் வருமுன் அணை போட வேண்டுமென்பதை நினைவுகூர்ந்து, மற்றொரு கொடிய யுத்தம் வராமல் தடுக்கவும், நீடிய சமாதானம் ஏற்படவும் வேண்டுவோம். நமது நடத்தையால் உலக சமாதானத்திற்கு அடிகோலு வோம். வர்மம், வைராக்கியம், பழி முதலியவற்றை நீக்கி நம் அயலாருடன் சமாதானமாய் வாழ்வோம். “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் எனப்படுவார்கள்” (மத். 5:9). சமாதான இராக்கினி நிச்சயம் உதவி புரிவார்கள்.

மனிதரிடையே சமாதானம் நிலவுவதற்கு முன் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் சமாதானம் ஏற்பட வேண்டும். இந்த இருதய சமாதானம் உலகில் நாம் அடையக் கூடிய மாபெரும் திரவியமாகும். சர்வேசுர னுடைய கற்பனைகளை அனுசரித்து அவருடைய சித்தத் திற்கு அமைந்து புண்ணிய வழியில் நடந்தாலன்றி நமக்கு இச்சமாதானம் கிட்டாது. புண்ணிய சாங்கோபாங் கத்தில் வளர்ச்சியுற இச்சமாதானம் இன்றியமையாதது. இச்சமாதானத்தையும் நமக்குப் பெற்றுத் தருமாறு சமாதான இராக்கினியை மன்றாடுவோம்.

பரிசுத்த தந்தை 12-ம் பத்திநாதர் இயற்றிய ஜெபம்

“மகா பரிசுத்த ஜெபமாலை இராக்கினியே, மனுக் குலத்தின் அடைக்கலமே, கடவுளுக்கான சண்டைகளி லெல்லாம் ஜெயசீலியே, உமது சிம்மாசனத்துக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து எங்கள் சொந்தப் பேறுபலன் களாலல்ல, தயைக்குரிய உமது இருதயத்தின் சிறந்த நன்மைத்தனத்தால் எங்களுக்குத் தற்கால நெருக்கடியில், இரக்கமும், வரமும், தாராளமான உதவியும், ஆதரவும் கிடைக்குமென்று நம்பியிருக்கிறோம்.

மனுக்குலத்துக்கு ஆபத்தான இவ்வேளையில் எங்களை உமக்கும் உமது மாசற்ற இருதயத்துக்கும் ஒப்புக் கொடுத்துக் கையளிக்கிறோம். இப்போது பல இடங்களில் இத்தனை துன்பம் துயரம் அனுபவித்துப் பலவகையில் குரூரமாய் அலைக்கழிக்கப்படுகிற உமது திருக்குமார னுடைய ஞான சரீரமாகிய பரிசுத்த தாயாகிய திருச்சபையோடு மாத்திரமல்லாமல் பயங்கரமான சண்டையால் சின்னாபின்னமாகி குரோதத்தீயில் வெந்து தனது பலவீனத்தின் பலியாய் விழுந்து கிடக்கிற உலக முழுவ தோடும் ஒன்றித்து இந்த ஒப்புக்கொடுத்தல் முயற்சி செய்கிறோம்.

உலகளாவிய பொருட்சேதம், நன்னெறிச் சேதம், கணக்கற்ற தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரர் சகோதரிகள், இளம் பிராயத்தில் உயிரை இழந்த பெருந் தொகையினர், அருவருப்புக்குரிய விதமாய் கண்டதுண்ட மாக்கப்பட்ட உடல்கள், சித்திரவதையால் அவஸ்தைக் குள்ளாகி நித்தியத்துக்கும் கெட்டழிந்து போகும் ஆபத்திலிருப்பவர்கள் இவையெல்லாம் கண்ணோக்கி இரக்கம் காண்பித்தருளும்.

இரக்கத்தின் தாயே, கடவுளிடமிருந்து எங்களுக் குச் சமாதானம் அடைந்தருளும். முக்கியமாய் சமாதானத் திட்டம் பண்ணி, நிலைநாட்டித் திடப்படுத்துவதற்கான வரங்களை எங்களுக்கு அடைந்து கொடும்.

சமாதான இராக்கினியே, எங்களுக்காக மன்றாடி, இப்போது போராட்டத்தில் தவிக்கிற உலகிற்கு சகல ஜனங்களும் விரும்புகிற சமாதானத்தை, கிறீஸ்துநாதரின் உண்மை, நீதி, அன்பு நிறைந்த சமாதானத்தைக் கொடுத் தருளும். ஒழுக்கத்தின் அமைதியில் சர்வேசுரனுடைய இராச்சியம் துலங்கும்படி சண்டையிடும் ஜனங்களுக்கும், மானிட ஆத்துமங்களுக்கும் சமாதானத்தைக் கொடும்.

அவிசுவாசிகளுக்கும் இன்னும் மரண நிழலில் கிடக்கிறவர்களுக்கும் உமது ஆதரவு விளங்குவதாக; அவர்களுக்குச் சமாதானத்தைத் தந்து, அவர்கள் பேரிலும் உண்மையின் சூரியன் பிரகாசித்து, அவர்களும் எங்க ளோடு ஒன்றித்து உலகத்தின் ஏக இரட்சகர் முன்னிலை யில் “உன்னதங்களில் சர்வேசுரனுக்கு ஸ்துதியும், நல்ல மனதுள்ளோர்க்குச் சமாதானமும்” என்று ஆர்ப்பரிக்கும் படி செய்தருளும்.

தப்பறையாலும், போதகத்தாலும் பிரிந்து கிடக்கிற ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்; முக்கியமாய், உமது மட்டில் விசேஷ பக்தியுள்ளவர்களுக்கும் வணக்கத் துக்குரிய உமது திருச் சுரூபத்தை எப்போதாவது தங்கள் இல்லங்களில் வைத்து மரியாதை செய்தவர்களுக்கும் சமாதானத்தைத் தாரும். அவர்களை, ஒரே மெய்யான மேய்ப்பனின் கீழ், கிறீஸ்துநாதருடைய ஏக மந்தையில் கொண்டு வந்து சேர்த்தருளும்.

சர்வேசுரனுடைய திருச்சபைக்குச் சமாதானத்தை யும், பூரண சுயாதீனத்தையும் அடைந்து கொடுத்தருளும். தற்கால அஞ்ஞான வெள்ளம் பெருகாமல் தடுத்தருளும்--விசுவாசிகள் உள்ளத்தில் பரிசுத்ததனத்தின் மட்டில் அன்பையும், கிறீஸ்தவ நடத்தையையும், அப்போஸ்தலிக்க ஆவலையும் எழுப்பிவிடும். தேவ ஊழியர் குணத்திலும், தொகையிலும் அதிகரிப்பார்களாக!

கடைசியாய் திருச்சபையும், மனுக்குலம் முழுவதும் சேசுவிடம் நம்பிக்கை கொண்டு அவர் அவர்களுக்கு வெற்றியும், இரட்சணியமும் தரும் அடையாளமும் அச்சாரமுமாகும்படி, அவருடைய திரு இருதயத்துக்குத் தங்களை ஒப்புக் கொடுத்தது போல், நாங்களும் எங்கள் தாயும், இராக்கினியுமான உமக்கும் மாசற்ற உமது திரு இருதயத்துக்கும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். இதன் வழியாய் உமது அன்பும் ஆதரவும் சர்வேசுரனுடைய இராச்சியம் சீக்கிரம் வெற்றியடையச் செய்வதாக! சகல ஜனங்கள் ஒருவர் ஒருவரோடும், கடவுளோடும் சமாதானமாயிருந்து, உம்மைப் பாக்கியவதி என்று அறைகூவி, உம்மோடு தங்கள் குரலையும் ஒன்றித்து, ஒருகோடி முனை முதல் மறுகோடி முனை மட்டும் உண்மைக்கும், சமாதானத்திற்கும் ஏக இருப்பிடமான சேசுவின் திரு இருதயத்துக்குத் துதியும், அன்பும், நன்றியும் உண்டாவதாக என்று நித்திய கீதம் பாடுவார்களாக! ஆமென் சேசு.” 

(ஒவ்வொரு தடவையும் 300 நாட் பலன்; மாதம் ஒரு முறை பரிபூரணப் பலன்.)


சமாதானத்தின் இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!