நித்திய ஞானமானவரைப் பற்றிய அறிவைப் பெறும் கருத்தின் வரையறையும், பிரிவும்!

13. ஞானம் என்ற வார்த்தையின் பொதுவான அர்த்தம், சுவைத்து மகிழத்தக்க அறிவு, சர்வேசுரனுக்காகவும், அவருடைய சத்தியத் திற்காகவும் நாம் கொள்ளும் சுவையுணர்வு என்பதாகும்.

ஞானத்தில் பலவகைகள் உள்ளன. 

முதலாவதாக, உண்மையானதும், பொய்யானதுமான ஞானம். உண்மையான ஞானம் என்பது பொய்மையோ, வஞ்சகமோ இல்லாத சத்தியத்தின் மீதான சுவையாகும். பொய் யான ஞானம் என்பது சத்தியத்தைப் போல மாறுவேடமிடும் பொய்மையின் மீதான சுவையாகும்.

இந்தப் பொய்யான ஞானம் உலக ஞானமாக அல்லது உலக விவேக மாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உலக ஞானம், புலன் சார்ந்த ஞானம், பேய்த்தனமுள்ள ஞானம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். 

உண்மையான ஞானத்தை சுபாவ ஞானம் என்றும், சுபாவத்திற்கு மேலான ஞானம் என்றும் பிரிக்கலாம்.

சுபாவ ஞானம் என்பது இயற்கையான காரியங்களின் அடிப் படை அம்சங்களில் அவற்றைப் பற்றிய, ஒரு மிகப் பெரிய அளவிலான அறிவு ஆகும். சுபாவத்திற்கு மேற்பட்ட அறிவு என்பது, சுபாவத்திற்கு மேலான, தெய்வீகமான காரியங்களின் மூலத்தில் அவற்றை அறியும் அறிவு ஆகும்.

சுபாவத்திற்கு மேலான ஞானம் அத்தியாவசியமான அல்லது படைக்கப்படாத ஞானம் என்றும், கீழ்நிலையான, படைக்கப் பட்ட ஞானம் என்றும் பிரிக்கப்படுகிறது. கீழ்நிலையான அல்லது படைக்கப்பட்ட ஞானம் என்பது, படைக்கப்படாத ஞான மானவர் மனுக்குலத்தோடு தம்மைத் தொடர்புபடுத்துவதாக இருக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது ஞானத்தின் கொடையாக இருக்கிறது. அத்தியாவசியமான, அல்லது படைக்கப்படாத ஞானம் மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனே. வேறு வார்த்தை களில் கூறுவதானால், அது நித்தியத்தில் நித்திய ஞானமாக, அல்லது காலத்தில், சேசுக்கிறீஸ்துநாதராக இருக்கிறது.

மிக நுட்பமாக இந்த நித்திய ஞானமானவரைப் பற்றியே நாம் பேசப் போகிறோம். 

14. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போது, நாம் அவரை, நித்தியத்திலிருந்தே தமது பிதாவின் உள்ளரங்கத்தில் வாசம் செய்பவரும், தமது பிதாவின் நேசத்திற்குரிய பொருளானவருமாகிய நித்திய ஞானமானவரைப் பற்றி நாம் சிந்திப்போம்.

அடுத்ததாக, காலத்தில், பிரபஞ்சத்தின் படைப்பில் சுடர் வீசுபவராக அவரைக் காண்போம்.

இறுதியாக, அவரை அடைந்து கொள்வதற்கும், அவரை எப்போதும் நம்முடையவராகக் கொண்டிருப்பதற்குமான வழி வகைகளை நாம் முன்வைப்போம்.

தத்துவவாதிகளின் பயனற்ற தத்துவவாத விவாதங்களை தத்துவவாதிகளுக்கும், விஞ்ஞானிகளின் உலக ஞானத்தின் இரகசியங்களை விஞ்ஞானிகளுக்குமே நான் விட்டு விடுகிறேன்.

இப்போது உண்மையான, நித்தியமான ஞானத்தின், படைக்கப்படாத, மனித அவதாரமான ஞானத்தின் உத்தமதானத்தைத் தேடும் தெரிந்து கொள்ளப்பட்ட ஆத்துமங்களிடம் (1கொரி. 2:6) நாம் பேசுவோம்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...