தியான ஆரம்பப் பிரசங்கம்

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் வேதத்தில் சொல்லும் வாக்கியமாவது: உலகமெல்லாம் பாழாய் அழிந்து கெட்டுப் போகின்றது. 

இதன் காரணம் ஏதெனில், மனிதருக்குள் எவனும் தன் மனதில் ஆழ்ந்து யோசித்து தியானிக்கிறதில்லை. ("Desolatione desolata est omnis terra; quia nullus est qui recogitet corde”-- ''நாடெல்லாம் பாழால் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது; ஏனெனில் இருதயத்தில் சிந்திப்பவன் ஒருவனுமில்லை .'' (ஜெரே.12:11).

இந்த தேவ வராக்கியத்தின் அர்த்தத்தை தியானம் துவக்குமுன் நன்றாய் நீங்கள் கண்டுபிடிப்பது அவசியம். ஆனால் நாம் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்.

மனிதர்கள் தங்கள் கண்முன் தோன்றும் உலக அநித்திய வாழ்வை நிலையானதென்று எண்ணி, அவற்றில் தங்கள் கருத் தையும் ஆசையையும் செலுத்தி, அவற்றைத் தேடி அநுபவிக்கும்படி தங்கள் வாழ்நாட்களையெல்லாம் வீண் நாளாக்குகிறார்கள். இதின் காரணமாக மனிதர்களுக்குள் தங்கள் ஆத்தும் இரட்சணிய அலுவலைக் கவனித்து யோசித்து, அதற்கு இசைந்த வழியில் நடப்பவர்கள் எவ்வளவோ கொஞ்சப்பேர் இப்படி யோசியாத குறையால்தான் அநேகர் தங்கள் இரட்சணியத்தை இழந்து, அர்ச். சவேரியார் சொல்வது போல, நரகத்தின் பயங்கரமான பாதாளத்தில் விழுந்து சேதமாயப் போகிறார்கள்.

யோசித்து நடப்பவன் முன் பின் பார்ப்பான்; ஆபத்து வருமுன் அதைத் தடுப்பான். யோசியாதவனோ குருடனைப் போல் ஒன்றும் கவனியாமல் நடந்து, ஆபத்தில் விழுந்த பின், ஐயோ விழுந்தேனே என்று தன் வாயில் அடித்துக் கொள்ளுவான்.

மனிதருடைய இந்த நிர்ப்பாக்கிய நிலையை, சேசு சபையை ஸ்தாபித்த நமது ஞானத் தந்தையான அர்ச். இஞ்ஞாசியார் பார்த்து, சர்வேசுரனுடைய விசேஷ ஏவுதலால், அற்புத ஞான புத்திப் போதகங்கள் அடங்கிய ஞானத் தியான முயற்சிகளைத் தாமே எழுதித் தந்திருக்கிறார். சேசுநாதர் ஸ்தானத்திலிருந்து திருச்சபையை ஆளும் பாப்பரசர்களும், வேதவல்லுனர்களும், இந்தத் தியான புத்தகத்தை ஆராய்ந்து பரிசோதித்த பின், இதை வெகுவாய்ப் புகழ்ந்து, இது உன்னத ஞானம் நிறைந்த புத்தகமென்னும் கிறீஸ்துவர்களுக்கு வெகு பயனுள்ளதென்றும் தீர்மானித்தார்கள்.

இந்தத் தியான முயற்சிகளைச் செய்வதால் வரும் பிரயோசனம் எம்மாத்திரமென்று இவைகளை ஒழுங்கோடு செய்து வரும் கிறிஸ்தவர்கள்தான் கண்கூடாக அறிவார்கள். இவைகளால் கிறீஸ்தவ சபையாருக்கு வந்த பொது நலம் எவ்வளவென்று உலகத் தின் கடைசி நாளில்தான் சர்வேசுரன் எல்லாருக்கும் அறிவிப்பார்.

அவிசுவாசமும் அஞ்ஞானமுமாகிற காரிருள் எங்கும் அடர்ந்து சூழ்ந்து பரவும் இக்காலத்தில், கிறீஸ்தவர்கள் சத்திய வேத ஒழுக்க நெறியில் தவறாமல் நடந்து, தங்கள் ஆத்துமத்தை இரட் சிப்பதற்குரிய உத்தம வழி ஏதென்றால், அர்ச். இஞ்ஞாசியாருடைய ஞானத் தியான முயற்சிகளை வருஷத்தில் எட்டு நாள், அல்லது குறைந்தது மூன்று நாளாவது தனியாயிருந்து மெளனங் காத்து செய்வதுதான். இதுவே ஆத்தும இரட்சணியத்துக்கு ஏற்ற வழி என்பது நாம் நாற்பது வருஷங்களுக்கு அதிகமாய் இந்தத் தியான முயற்சிகளை நாமே செய்தும், கிறிஸ்தவர்களுக்குப் பல ஊர்களில் பிரசங்கித்தும் வந்த போது அநுபவ வாயிலாய்க் கண்டு அறிந்த விஷயம்.

கிறீஸ்தவர்களுக்கு இதனால் உண்டாகும் இவ்வளவு அதிகமான சுகிர்த நன்மையைக் கண்டு சேசுநாதர் சுவாமியின் பிரதிநிதிகளான பாப்பரசர்கள், பல முறை தங்கள் மடல்களாலும், ஆலோசனை, அபிப்பிராயம், ஏவுதலாலும் கிறிஸ்தவர்கள் அர்ச். இஞ்ஞாசியாரின் தியான முயற்சிகளை வருஷந்தோறும் செய்யும்படி தங்களுடைய எண்ணத்தையும் ஆசையையும் காட்டியிருக்கிறார்கள்.

அப்படியே நீங்களும், கிறிஸ்தவர்களே, தியானஞ் செய்து உங்கள் ஆத்துமத்தை இரட்சிக்கும்படி, இதை நன்றாய்ச் செய்வதற்கு உதவியான புத்தி யோசனைகளையும், ஒழுங்கு விவரங்களையும் இங்கே விரிவாய் விவரித்துக் காட்டப் போகிறோம். கற்றோரும் கல்லாதவரும், ஆண், பெண், சிறுவர் பெரியவர், வயோதிகர் ஆகிய அனைவரும் பயன் பெறும்படியாய் இந்தத் தியானப் பிரசங்கங்களை விரிவாய் விவரித்தும், ஏற்ற இடங்களில் பற்பல விளக்கங்களும் சரித்திரங்களும் உதாரணங்களாகச் சேர்த்தும் வைத்திருக்கிறோம்.

பாவிகளுக்குத் தஞ்சமான தேவதாய் நம்மெல்லோரையும் ஆசீர்வதித்து, நாம் துவக்கும் ஞானத் தியான முயற்சிகள் சாதகமாக (முடிந்து, எல்லோருக்கும் பயன் தரும்படி கிருபை செய்வார்களாக!