ஜீவியத்திற்கும் அர்ச்சிஷ்டதனத்திற்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

“அந்த நாளில் இரட்சகரின் நீரூற்றுகளிலிருந்து சந்தோஷமாய் நீரை முகந்து கொள்வீர்கள்” என்று தமது நண்பர்களுக்கு ஜீவத் தண்ணீரைத் தருவதில் நம் இரட்சகரின் தாராளத்தைப் பற்றித் தீர்க்கதரிசியானவர் பேசினார்.

நம் இரட்சகர் யாக்கோபின் கிணற்றருகே சமாரியப் பெண்ணிடம் தமக்குக் குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டபோது, அவர் அதை அவருக்குத் தர மறுத்து விட்டாள். ஏனென்றால் அவர்தான் மெசையா என்பதை அவள் அறியவில்லை. ஒரு சாதாரண யூதர் என்று அவள் அவரை நினைத்துக் கொண்டாள். நம் இரட்சகர் அவளிடம்: “நீ சர்வேசுரனுடைய வரத்தையும், எனக்குத் தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னாரென்றும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் ஒருவேளை கேட்டிருப்பாய். அவரும் உனக்கு ஜீவ தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். நன்கு கவனியுங்கள்: அவர் ஜீவ தண்ணீர் என்று சொன்னார். பிற்பாடு அவர் இதே பெண்ணிடம்: “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு என்றென்றைக்கும் தாகமுண்டாகாது. ஆனால் நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவனிடத்தில் நித்திய ஜீவியத்துக்குப் பாய்கிற நீரூற்றாகும்” என்றார். என்றென்றைக்கும் தாகமுண்டாகாது - ஆ, இங்கே ஓர் ஆசீர்வாதம் உள்ளது. இந்த உலகத்தின் வெறுமைக்காக அவன் இனி தாகம் கொள்ள மாட்டான். அவனுடைய இருதயம் திருப்பதியடையும்; ஆம், அது கடவுளின் சிநேகமாகிய ஜீவ நீரூற்றில் நீந்தும். தேவ சிநேகமாகிய தேவ வரப்பிரசாதமே அந்த ஜீவ தண்ணீராக இருக்கிறது. ஜீவ தண்ணீர் பாயும் ஆற்றைப் போல, தேவ சிநேகம் இனிமையானது.

இந்த ஜீவ தண்ணீரை அந்த சமாரியப் பெண் எப்படிப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்? “நீ என்னிடம் கேட்டிருந்தால்” என்று நம் இரட்சகர் சொன்னார். நாம் உலகத்தைக் கடந்தவர்களாக இருந்தால், அதை நாம் அவரிடம் கேட்கலாம். அவருடைய தேவ சிநேகத்தின் பரலோக ஜீவ தண்ணீரை, உலகத் தன்மையான நேசங்களில் துர்நாற்றம் வீசுகிற, சேறான தண்ணீர்களோடு கலக்க நம்மால் முடியாது. இவற்றில் ஒன்றிலிருந்து நாம் முற்றிலுமாக விலகினால், மற்றொன்றை நாம் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை அதைப் பெற முடியாது. கடந்த கால, பாவமுள்ள வாழ்க்கை நம்மை அதைரியப்படுத்த அவசியமில்லை. ஏனென்றால் இந்த சமாரியப் பெண் புனிதமாயிருப்பதிலிருந்து வெகு தூரத்தில் இருந்தாள். ஏனெனில் அவளுக்கு ஆறு கணவர்கள் இருந்தனர். எனவே கடந்தகால தகுதியின்மை ஒரு தடையல்ல. மெய்யான மனஸ்தாபமும், தாராளத்தோடு கடவுளுக்கு ஊழியம் செய்வதாக ஓர் உறுதியான பிரதிக்கினை ஆகியவை இப்போது செய்யப்பட வேண்டும். அது போதும். மனஸ்தாபப்பட்ட கடந்த காலப் பாவங்களைத் தம் முதுகுக்குப் பின்னால் எறிந்து விடுவதாகக் கடவுள் கூறினார். அதாவது மனந்திரும்பிய அந்த ஆத்துமம் தாழ்ச்சியோடு கடவுளின் பெரும் ஆசீர்வாதங்களைக் கேட்டால் போதும். அவற்றை அவனுக்குத் தாம் தரும் காரியத்தில், அவனுடைய நிகழ்கால தாராளத்தில், அவனுடைய கடந்த கால பாவத் தன்மை தலையிட அவர் அனுமதிக்க மாட்டார்.

“சேசுநாதர் ஜீவியத்தின் ஊற்றாக இருக்கிறார்.” நீ ஜீவிக்க விரும்பினால், இந்த ஜீவியத்தின் நீரூற்றிடம் போய், ஜீவ தண்ணீரை மகிழ்ச்சியோடு முகந்து கொள். எனவே திவ்ய நன்மை, ஜீவியத்தின் அவசியமான வழியாக இருக்கிறது. “என் மாம்சத்çப்புசித்து, என இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் நித்திய ஜீவியத்தைக கொண்டிருக்கிறான்.” நித்திய ஜீவியம், அல்லது முடிவில்லாத ஜீவியம் என்றால், “நான் ஜீவிக்கிறேன், ஆயினும் நானல்ல, கிறீஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்” என்று உண்மையோடு சொல்லக் கூடிய பிரமாணிக்கமுள்ள ஆத்துமத்தில் இருக்கும் நேச ஜீவியம் ஆகும். சேசுநாதரோடு நம் ஆத்துமம் கொள்ளும் அந்த ஐக்கியம், அந்த ஒன்றாக உருகிக் கலத்தல், அர்ச். சின்னப்பர் கூறுவது போல, அவருடைய மாம்சத்தின் மாம்சமாகவும், அவருடைய இரத்தத்தின் இரத்தமாகவும் மாறும் அந்தச் செயல், திவ்ய நன்மை உட்கொள்ளுதலில், தடைகள் அகற்றப்படும்போது நிகழ்கிறது. இனி, இந்தத் தடைகள் கடவுளால் அல்ல, நம் சுயாதீன சித்தத்தாலேயே அகற்றப்பட வேண்டும். நாம் கடுகளவு அதிக நல்லவர்களாகவோ, அல்லது அதிக தாராளமுள்ளவர்களாகவோ ஆக வேண்டும் என்று அவர் நம்மை வற்புறுத்த மாட்டார். அவர் நம் சுயாதீன சித்தத்தை மதிக்கிறார். சுதந்திரமாக நாம் அவரை நேசிக்கும்படி அவர் நமக்காகக் காத்திருக்கிறார். அல்லது குறைந்தபட்சம் அவரை நேசிக்கும்படி நாம் நம் மனங்களை மாற்றிக் கொள்வதற்காக அவர் காத்திருக்கிறார். நிஜமாக நேசித்தல் என்பது நம் பலத்துக்கு அப்பாற்பட்டது. நாம் நேசிக்கும்படி அவர் நமக்கு உதவுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் நாம் எடுக்கும் முடிவுக்காகக் காத்திருக்கிறார், அதன்பின் அந்த முடிவைச் செயல்படுத்த நமக்கு உதவி செய்கிறார். ஆகவே சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, “நான் அர்ச்சிஷ்டவனாக வேண்டுமென்று அவர் விரும்பினால், அவர் என்னை அப்படி ஆக்குவார்” என்று உனக்கு நீயே சொல்லிக் கொண்டு, அவர் உன்னை ஓர் அர்ச்சிஷ்டவன் ஆக்க வேண்டுமென்று அவருக்காகக் காத்திராதே. இல்லை. அவர் செய்ய மாட்டார். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் அர்ச்சிஷ்டவனாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆயினும் உங்கள் சுயாதீன சித்தத்தில் அவர் தலையிட மாட்டார். அர்ச்சிஷ்டவர்கள் செய்தது போல நீங்கள்தான் தீர்மானம் செய்ய வேண்டும். “ஓர் அர்ச்சிஷ்டவனாவதும், எனக்காக மரித்த சர்வேசுரன் நேசிக்கப்படத் தகுதியுள்ளவராக இருப்பதால், அவரை நேசிப்பதும் என் சலுகை மட்டுமல்ல, அது என் கடமையும் ஆகும் என்பதால், அர்ச்சிஷ்டதனத்தை என்ன விலை கொடுத்தாவது பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன்.” இக்காரியத்தில் திடமாயும், தீர்மானமாயும் இரு. மற்ற எல்லாக் காரியங்களைப் பற்றியும் குளிர்ந்தவனாகவும், அசட்டையுள்ளவனாகவும் இரு. தனிப்பட்ட சுய அர்ச்சிஷ்டதனத்தால் அன்றி நீ கடவுளை மகிமைப்படுத்த முடியாது. ஆனால் கடவுளின் மகிமை உன் கடமையாக இருக்கிறது. அந்தக் காரியத்திற்காகவே நீ உண்டாக்கப்பட்டிருக்கிறாய்! ஆகவே, நீ அர்ச்சிஷ்டவன் ஆவது உன்னுடைய ஏக, முதன்மையான, அனைத்திலும் முக்கியமான கடமையாக இருக்கிறது. இவ்விஷயத்தில் அசைவுறுவது அல்லது உறுதியான பிரதிக்கினை இன்றி இருப்பது தாழ்ச்சியின் அடையாளமோ, அல்லது வேறு எந்த ஒரு புண்ணியத்தின் அடையாளமோ இல்லை. தீர்மானத்தின் ஒவ்வொரு சிறு கொள்ளளவையும் இந்தப் பிரதிக்கினையில் வை: “நான் ஓர் அர்ச்சிஷ்டவனாக வேண்டும். எப்பாடு பட்டாவது அதை அடைய நான் விரும்புகிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அதைத் தேடிப் போகிறேன். மற்ற எல்லாக் காரியங்களையும், கடவுளின் சித்தத்திற்கு உட்பட்டது என்ற நிபந்தனையுடன் நான் ஆசிப்பேன் - ஆனால் இந்தக் காரியத்தில் எந்த நிபந்தனையும் இல்லை.” இப்படி அர்ச்சிஷ்டதனத்தை நீ தேடவில்லை என்றால், அதை நீ ஒருபோதும் பெற மாட்டாய் - எந்த ஓர் அர்ச்சிஷ்டவரும் அதைப் பெற்றிருக்க மாட்டார். இது கடவுளின் சித்தமல்ல என்று சொல்லாதே. நீங்கள் ஒவ்வொருவரும் அர்ச்சிஷ்டவராவது கடவுளின் சித்தமாக இருக்கிறது. ஆகவே அதைத் தேடிப் போ. ஆனால் ஜீவ தண்ணீரைத் தேடிக் கொண்டு, தேங்கி நிற்கிற ஒரு குட்டைக்குப் போகாதே. “சேசுவின் திவ்ய நற்கருணை இருதயமாகிய” ஜீவ தண்ணீரின் ஊற்றுக்குப் போ.


ஜீவியத்திற்கும், அர்ச்சிஷ்டதனத்திற்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!