இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இந்தப் பக்தி முயற்சியின் அமைப்பின் நான்கு பகுதிகள்

1. மரியாயுடன் 

45. இப்பக்தி முயற்சியின் கருப்பொருளான பயிற்சி என்னவென்றால் நம் எல்லா செயல்களையும் மரியாயுடன் செய்தலேயாம். இதன் பொருள் என்னவென்றால் நாம் செய்கிற எல்லாவற்றிலும் உத்தம மாதிரிகையாக மாதாவை நாம் கொள்ள வேண்டும்.

46. எதையும் செய்யுமுன் நம்மையும் நம்முடைய கருத்துக்களையும் நாம் விட்டுவிட வேண்டும். கடவுள் முன்பாக நாம் ஒன்றுமே இல்லை எனவும், நம் மீட்புக்கு ஏதுவான சுபாவத்துக்கு மேற்பட்ட எதையுமே நாம் செய்ய இயலாதவர்கள் எனவும் கொள்ள வேண்டும். நம்மை மாதாவுடனும் மாதாவின் கருத்துக்களுடனும் ஒன்றித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கருத்துக்கள் நமக்குத் தெரியாமலே இருக்கலாம். 

அப்படியே மரியாயின் வழியாக சேசு கிறீஸ்துவின் கருத்துக்களுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் மரியாயின் கரங்களில் நம்மைக் கருவிகளாக வைத்துவிட வேண்டும். அப்படியானால் அவர்கள் தன் குமாரனின் அதிக மகிமைக்காகவும் அவர் வழியாக பிதாவின் மகிமைக்காகவும் நம்மில் செயல்படவும் தான் விரும்பியபடி நம்மை நடத்தவும் முடியும். 

அதனால் நம்முடைய அந்தரங்க வாழ்வும் ஆன்மீக உத்தமதனமும் மரியாயின் மீது நாம் கொள்ளும் ஊன்றுதலினால் மட்டுமே நடைபெறுவதாயிருக்கும்.

2. மரியாயிடத்தில் 

47. நாம் எல்லாக் காரியங்களையும் மரியாயிடத்தில் செய்ய வேண்டும். அதாவது, நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தரங்கமாக ஒருமுகப்பட்டுப் பழக வேண்டும். அவ்விதமாக நமக்குள் மாதாவைப் பற்றிய ஒரு கருத்தை அல்லது மனோ உருவத்தைக் கொள்ள வேண்டும், மாதாவே நம் ஆன்மாவின் செபக்கூடம் போல் இருப்பார்கள். 

அங்கே நாம் நம் செபங்களையெல்லாம் அவை கேட்கப்படாமல் போய்விடக் கூடும் என்ற பயமில்லாமல் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அவர்கள் தாவீதின் கோட்டையைப் போலிருப்பார்கள். அதிலே நம் சகல எதிரிகளிடமிருந்தும் தப்ப தஞ்சம் புகுந்து கொள்ளலாம். அவர்கள் ஒரு எரியும் விளக்குப் போலிருப்பார்கள். நம் உள்ளரங்க ஆன்மாவை ஒளிபெறச் செய்யவும், தேவ சிநேகத்தால் நம்மைப் பற்றி எரியவும் செய்வார்கள். 

அவர்கள் ஒரு இளைப்பாற்றியின் புனித பீடமாயிருப்பார்கள். அதிலே அவர்களுடன் சேர்ந்து நாம் கடவுளைத் தியானிக்கலாம். சுருக்கத்தில் கடவுளுடன் நாம் கொள்ளும் உறவில் மாதா மட்டுமே நம் ஆன்மா உபயோகிக்கும் கருவியாயிருப்பார்கள். அவர்களே சகலத்திலும் நம் அடைக்கலமாயிருப்பார்கள். நாம் ஜெபித்தால் மாதாவில் தான் ஜெபிப்போம். 

நற்கருணையில் சேசுவைப் பெற்றால் அவர் மரியாயிடம் மகிழும்படியாக அவரை மாதாவிடமே கொடுப்போம். நாம் என்ன செய்தாலுமே அதை மாதாவிலேயே செய்வோம். எல்லா இடத்திலும் எல்லாக் காரியத்திலும் நாம் நம்மை மறுத்துவிடுவோம்.

"மரியாயிடத்தில் என்பது தங்கி வாழ்தலை, ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு அன்னியோன்னிய ஐக்கியத்தைக் குறிப்பிடுகிறது. அர்ச். லூயிஸ் மோன்போர்ட் கூறுவது போல், நாம் மரியாயின் உள்ளத்துட் சென்று அங்கு தங்கியிருந்து அவர்களுடைய கருத்துக்களையும் உணர்தல்களையும் கொள்ள வேண்டும். நாம் வாழும் இடம் போலவும் ஆகாயம் போலவும் மாதா நமக்கு ஆக வேண்டும்.'' அவர்களுடைய செயல்பாடு நம்மை ஊடுருவ வேண்டும். நம் ஆன்மாவின் இந்த மனப் பான்மை நம்மிடம் வழக்கமாகிவிடுமானால் அப்போது நாம் மரியா யிடத்தில் வாழ்வதாகக் கூறலாம். இவ்வாறு மாதாவுடன் ஒரே தார்மீக ஆள் தன்மையைக் கொள்வதனால் நாம் மாதாவிலும் மாதா நம்மிலும் உறைகின்றோம்.

3. மரியாயின் வழியாக 

48. நாம் மாதா வழியல்லாது ஒருபோதும் சேசுவிடம் செல்லக்கூடாது -- மாதாவின் மன்றாட்டின் வழியாகவும் அவருடன் மாதாவுக்கு இருக்கிற செல்வாக்கின் வழியாகவும் மட்டுமே செல்ல வேண்டும். சேசுவிடம் ஜெபிக்கும் போது ஒருபோதும் மாதா இல்லாமல் இருக்கக் கூடாது.

மாதாவின் மன்றாட்டின் வழியாக என்றால், நம் வாழ்க்கையை மாதாவின் மன்றட்டுக்கும் அவர்களுடைய விருப்பங்களுக்கும் ஒத்ததாக அமைத்துக் கொள்வதையும் குறிக்கும். மேலும் மோன்போர்ட் கூறுவது போல் அவர்களுக்கு சகலத்திலும் கீழ்ப்படிவதையும் குறிக்கும்.

மாதா வழியாக அல்லாது சேசுவிடம் நாம் போகக் கூடாது என்பது சுவிசேஷத்தில் சேசு மரியாயின் திரு நிகழ்ச்சிகளில் காட்டப்பட்டுள்ள மார்க்கமேயாகும். அப்படிச் செய்வது தேவதிட்டப்படி செய்வதாகும். இத்திட்டத்தை நாம் மதிக்க வேண்டும்.

4. மரியாயிக்காக 

49. நம் செயல்கள் அனைத்தையும் நாம் மரியாயிக்காக செய்ய வேண்டும். அதாவது இம்மகத்வமுள்ள அரசியின் அடிமைகள் என்ற முறையில் நாம் அவர்களுக்காக மட்டுமே உழைக்க வேண்டும். அவர்களுடைய காரியங்களுக்காகவும் அவர்களுடைய மகிமைக்காகவுமே செயல்பட்டு நம் எல்லாக் செயல்களின் உடனடியான நோக்கமாக அதைக் கொண்டு நம் இறுதி நோக்கமாக சர்வேசுரனின் மகிமையைக் கொண்டிருக்க வேண்டும். 

நாம் செய்கிற அனைத்திலும் நம் சுய பற்றைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால் மிக அடிக்கடி நம் சுயநலம் காணப்படாத முறையில் நம் செயல்களின் நோக்கமாக மேலெழுந்து வந்து விடுகிறது. அடிக்கடி நம் இருதய அடி ஆழத்திலிருந்து இதைக் கூற வேண்டும்: 

"ஓ என் எஜமானியே! உங்களுக்காகவே நான் இங்கோ அங்கோ செல்கிறேன், உங்களுக்காகவே இதையோ அதையோ செய்கிறேன், உங்களுக்காகவே இந்த வேதனையையோ அந்த நோவையோ தாங்குகிறேன்."