இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - ஒரு இளைஞனின் வரலாறு

பின்னொரு நாள், திருப்பலி பூசை நிறைவேற்றுவதற்காக, அவர் துணைவராகிய 'டீக்கன்' மேசையொன்றைத் தரையில் நிறுத்தி, அதன் மேல் வெண் துணி பரப்பி, அப்பத்தையும் இரசத்தையும் வைத்தார். அப்போஸ்தலர் பூசை நிறைவேற்றினார். விசுவாசிகளுக்குத் திவ்ய நன்மை கொடுக்கும் பொழுது ஒரு வாலிபன் தன் இரு கைகளை நீட்டினான். அவன் கையில் நன்மை வைக்கப்பட்டது.

அவ்விளைஞன் நற்கருணையைப் பெற்றதும் அவன் இரு கைகளும் மரத்து விரைத்துப்போக, வாயின் அருகில் அதைக் கொண்டுபோவதற்கு இயலாது போயிற்று இதைப் பார்த்த அப்போஸ்தலர் திகைத்துப்போய் "வாலிபா! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமும் இரத்தமும் ஒவ்வொருவருக்கும் சுகம் அளிக்கின்றது. உனக்கோ இத் துன்பம் வந்தது எப்படி? யாது காரணமும் இன்றி இப்படி நிகழாது. ஆகையால் இதன் காரணம் என்னவாயிருக்கலாம்?'' என்று வினவினார். 

அப்போது இளைஞன் உடல் நடுங்க, மனம்கலங்கக் கண்ணீர் விட்டு பயத்தோடும் மனக்கவலையோடும் அவையோர் முன்னிலையில், "இரு நாள்களுக்கு முன்னால் நான் வீட்டிற்குப் போனபோது, என் மனைவி எனக்குத் துரோகம் செய்து அயலான் ஒருவனுடன் தகாத முறையில் நடக்கக் கண்டேன்; கடுங்கோபம் கொண்டேன். இருவரையும் கொல்லத் துணிந்தேன். ஆனால் அந்தப் படுபாவி தப்பித்து ஓடிவிட்டான்; மனைவியைப் பிடித்தேன்; நையப் புடைத்தேன். இப்போது சாகுந் தறுவாயிலிருக்கிறாள்'' என்று தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டான்.

அப்போஸ்தலர் இளைஞனைக் தனிமையாக அழைத்துப் புத்தி புகட்டினார். அவன் அதன் பின் மிகவும் மனம் நொந்து துக்கப்பட்டான். தன் பாவங்களையெல்லாம் சொல்லி மன்னிப்புப் பெற்றான். தோமையார் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை மந்திரித்த பின்னர் வாலிபனை நோக்கி ''உன் கைகளைத் தண்ணீரில் விடு'' என்று சொன்னார். அவன் அப்படிச் செய்ததும், அவற்றைப் பற்றியிருந்த கடு நோய் சட்டென்று அகலக் கைகள் முன்போலாயின. அதற்கப்பால் அவர், "நீ இப்பாதகத்தைக் கட்டிக்கொண்ட இடத்திற்குப் போவோம் வா'' என்று அழைத்துக் கொண்டு வாலிபன் முன்னும், பெருந்திரளான மக்கள் பின்னுமாகப் போனார். 

இல்லம் வந்ததும், உட்புகுந்து பார்க்கப் பெண் இறந்து கிடந்தாள். அவள் சிறு வயதினள். அவளைப் பார்த்ததும் தோமையார் மனம் இளகிற்று. "அவளைத் தூக்கி வந்து தாழ்வாரத்தில் வையுங்கள்" என்றார். அவர் சொற்படி அவளைத் தூக்கிவந்து ஒரு கட்டிலின் மேல் கிடத்தினார்கள். அப்போஸ்தலர் அப்பிணத்தண்டை அணுகித் தம் இரு கைகளையும் உயரத் தூக்கி, வானத்தை அண்ணார்ந்து நோக்கி "எங்கள் எளிய வேண்டுதலைக் கேட்டருளும் என் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! இங்கிருக்கும் மக்கள் உமது திருப்பெயரைப் புகழவும், உம்மிடம் நம்பிக்கை வைத்து நித்திய வாழ்வு பெறும் பொருட்டும், மரித்துக் கிடக்கும் இப் பெண்ணுக்கு உயிர் அளித்தருள்வீராக'' என்று செபித்தார். 

பின்னும் வாலிபனை நோக்கி, "உன் இருதயத்தைக் கடவுள் பக்கம் திருப்பி, அவரிடத்தில் நம்பிக்கை வைத்து, உன் மனைவியிடம் போய் 'நான் உன்னைக் கொன்றேன். ஆனால் தேவனாகிய இயேசு என் விசுவாசத்தைப் பார்த்து உன்னை உயிர்ப்பிக்கிறார். பெண்ணே எழுந்திரு' என்று சொல்வாயாக” எனக்கற்பித்தார். வாலிபனும் அவ்வண்ணமே பிணத்தருகே போய், "என் ஆண்டவராகிய இயேசுவே! மெய்யாகவே நான் உம்மை நம்பியுள்ளேன்'' தோமையாரைப் பார்த்து, "அப்போஸ்தலரே! எனக்காக மன்றாடும் " என்று வேண்டிக் கொண்டு பெண்ணின் கைகளைப் பற்றினான். 

ஆ! ஆச்சரியம், மரித்திருந்த பெண் நித்திரையிலிருந்து எழுவது போல் படுக்கையை விட்டு எழுந்து நின்றாள். நாலா பக்கமும் பார்த்தாள். கும்பலைக் கண்டு வியந்தாள். அப்போஸ்தலரைக் கண்டதும் விரைந்தோடி அவரது பாதங்களில் தெண்டனிட்டாள். அப்போஸ்தலர் இருவரையும் மந்திரித்து, "பிரிய மக்களே! கடவுள் உங்கள் மட்டில் பெருங்கருணை காட்டியுள்ளார். மகிழ்ச்சியாயிருங்கள். இனிமேல் பாவங் கட்டிக்கொள்ளாதேயுங்கள்'' என்று அறியவுரை கூறினார். இதைக் கண்ணுற்ற மக்கள் கிறிஸ்துவை நம்பினர் என்று சொல்லவும் வேண்டுமோ? எல்லாரும் ஞான தீட்சை பெற்றார்கள். ஏழைகட்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படியாக ஏராளமான காணிக்கைகளைத் தோமையாரிடம் கொடுத்தார்கள்.

தோமையாரோ, சத்திய வேதத்தைப் போதிப்பதில் சலிப்படையவில்லை. இளைப்புக்கும், களைப்புக்கும் அஞ்சவில்லை. வேதாகமங்களில் குறித்துப் பேசப்பட்டுள்ள மெசியாஸ் இயேசுவே என்று எப்பொழுதும் பிரசங்கித்து வந்தார். இப் புனிதரின் போதகமும், தருமச் செயல்களும் அற்புதங்களும், எங்கும் பரவின. அவரிடம் கொண்டு வரப்பட்ட பற்பல நோயாளிகளின் தொகைக்குக் கணக்கில்லை. அவர் செல்லும் வழிகளிலே முதலாய் நோயாளிகளைப் படுக்கையுடன் கொண்டு வந்து வைப்பார்கள் அவரும் அவர்களை இயேசுவின் வல்லபத்தைக் கொண்டு அவரது பரிசுத்த சிலுவை அடையாளத்தினால் குணப்படுத்துவார். இவ்வாறு குணம் அடைந்தவர்கள் கடவுளைப்போற்றித் துதி பாடிக் கொண்டு போவார்கள்.

எண்ணிறந்த மக்களைத் தோமையார் மனந்திருப்பவே. இராயப்பனென்னும் கொந்தபோரஸ் அரசன் ஏராளமான செல்வத்தைச் செலவிட்டுக் கோவில்களைக் கட்டினான் பேயின் மாயவலையினின்று இயேசுவின் மந்தைக்குக் கொண்டு வரப்பட்டவர்களுடைய நன்மைக்காக, தேவ ஊழியம் புரிவதற்கு அத்தியாவசியமாகிய பல குருக்களையும், டீக்கன்மார்களையும் ஏற்படுத்தி சிந்து மாகாணத்தில் திருச்சபையை நிலை நிறுத்தினார். அரசனின் சகோதரராகிய காத் என்னும் சின்னப்பரை அவ்விடத்திற்குப் பெரிய குருவாக அபிஷேகஞ் செய்து நியமித்துவிட்டு, மெய்ம் மறையை வேறிடங்களில் போதிக்க நாராங்கோட்டையை விட்டுப் புறப்பட்டார்.