ஆறாவது நூற்றாண்டில் கொன்ஸ்தாந்தி நோப்பிள் பட்டணத்தில் இது நடந்தது. அந்நாட்களில் இருந்த வழக்கப் பிரகாரம், பூசை நேரத்தில் புது அப்பங்கள் மீது தேவ வசீகர வார்த்தைகளைச் சொல்லி அவற்றை நற்கருணைப் பாத்திரத்தில் பத்திரப்படுத்துகையில், முந்தியிருந்த சற்பிரசாத அப்பங்களை மாசற்ற குழந்தைகளுக்குக் கொடுப்பது வழக்கம். பாவம் செய்யக் கூடாத சிறுவர் சிறுமியர் சர்வ பரிசுத்தரான கடவுளை உட்கொள்வார்கள்.
ஒரு நாள் யூத சிறுவன் ஒருவனும் ஏனைய சிறுவர்களுடன் கோவிலில் இருந்தான். அவனும் திவ்விய நற்கருணையை உட்கொண்டான். ஆதலின் அவன் வீட்டுக்குத் திரும்புகையில் நேரமாகி விட்டது பிந்தி. வந்ததன் காரணத்தை அவனுடைய தகப்பன் கேட்டான். தான் ஒன்றும் தவறு செய்யவில்லை என்று நினைத்து உள்ளதை உள்ளபடியே சொல்லி விட்டான் சிறுவன்.
அவனுடைய தகப்பனுக்கு கிறிஸ்தவர்கள் மேல் பெரும் பகை. பையன் செய்ததைக் கேள்விப்பட்டதும் அவனைப் பிடித்து கண்ணாடி கொதித்துக் கொண்டிருந்த சூளையில் இரக்கமின்றி எறிந்தான். அவனது வேலை கண்ணாடி செய்வதே.
தன் நேச மகனுக்கு நேர்ந்ததைக் கேள்விப்பட்ட தும் தாய் துயரப்பட்டு அழுதாள். அழுது புலம்பிக் கொண்டே வீட்டைச் சுற்றி வந்தாள். மூன்றாம் நாள் அவள் சூளையருகே செல்கையில், “அம்மா, அம்மா" என சிறுவன் கூப்பிட்ட குரல் கேட்டது. ஓடிப் போய் அவள் சூளையின் கதவைத் திறந்தாள். அவளுடைய மகன் நெருப்பின் மத்தியில் உட்கார்ந்திருந்தான். நெருப்பு அவனைத் தொடவில்லை. “கண்ணே , நெருப்பில் நீ சுட்டெரிக்கப்படாதிருந்தது எங்ஙனம்?'' என அவள் கேட்டாள். “இந்த மூன்று நாட்களாக நீல உடை அணிந்த ஒரு பெண் என்னிடம் அடிக்கடி வந்தார்கள். என்னைச் சுற்லுமிருந்த நெருப்பை அணைக்கும்படி தண்ணீர் ஊற்றினார்கள். சாப்பிட இனிமையான பொருட்களையும் எனக்குக் கொடுத்தார்கள்'' என சிறுவன் பகர்ந்தான்.
யூதனுடைய வீட்டில் நடந்த புதுமையைப் பற்றிய செய்தி நகரெங்கும் பரவியது. தாயும் மகனும் கிறிஸ்தவர்களானார்கள். தகப்பனுக்குச் சரியான தண்டனை கிடைத்தது, ஜஸ்டீனியன் சக்கரவர்த்தி, நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.
சிறுவனைச் சந்தித்த அந்தப் பெண் யார்?