இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜீவிய மரம்

1. அன்பின் புனித அடிமைத்தனமே உண்மையான உயிர் தரும் மரம் 

70. முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே! முந்திய பக்கங் களிலே நான் விளக்க முயற்சித்துள்ள விஷயத்தை பரிசுத்த ஆவியின் வரப்பிரசாதத்தினால் நீ கண்டுபிடித்தாயா? கண்டுபிடித்தாயானால் கடவுளுக்கு நன்றி செலுத்து. அது, கொஞ்சப் பேர் மாத்திரம் அறிந்து கண்டுபிடிக்கிற இரகசியமாகும். மாமரி என்னும் நிலத்தில் மறைந்திருக்கிற, சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள விலையேறப் பெற்ற முத்தாகிய பொக்கிஷத்தை நீ கண்டுகொண்டா யானால், அதை வாங்கிக் கொள்வதற்காக உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்றுவிடு. உன்னையே நீ பரித்தியாகமாக மரியாயின் கையில் கொடுக்க வேண்டும். கடவுளை மட்டுமே நீ கண்டடையும்படியாக மகிழ்ச்சி யுடன் உன்னையே மாமரியிடம் இழந்து விட வேண்டும்.

உனக்கு இப்பொழுது நான் விளக்கிக் கூறியுள்ள பக்தி முயற்சியாகிய உண்மையான ஜீவிய மரத்தை, பரிசுத்த ஆவி உன் ஆன்மாவில் நட்டிருப்பாரானால், அது தகுந்த காலத்தில் தன் பலனை அளிக்கும்படியாக அதைப் பயிரிடுவதில் உன் முழு கவனத்தையும் செலுத்து. இப்பக்தி முயற்சியானது சுவிசேஷத்தில் கூறப்படும் கடுகு மணிக்கு ஒப்பாயிருக்கிறது. "அது சகல வித்துக்களிலும் மிகவும் சிறியதாயிருந்தாலும் வளரும் போது சகல பூண்டுகளிலும் அதிகப் பெரிதாகி ஆகாயத்தின் பறவைகள் (அதாவது முன்குறிக்கப்பட்டவர்கள்) அதன் கிளைகளிலே வந்து வசிக்கத்தக்க மரமாகிறது'' (மத். 13:32). அப்பறவைகள் சூரிய வெப்பத்தில் அதன் நிழலில் ஓய்வு கொள்கின்றன. பிடித்துண்ணும் விலங்கு களிடமிருந்து அதிலே பத்திரமாய் ஒளிந்து கொள்கின்றன.

2. அதைப் பயிரிடுவது எங்ஙனம்? முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே, அதைப் பயிரிடும் முறை இதுவே:

(1) மனித ஆதரவு ஆகாது. 

71. இம்மரம் பிரமாணிக்கமுள்ள ஒரு இருதயத்தில் நடப்பட்டால் அதற்கு திறந்த காற்றும் மனித ஆதர விலிருந்து விடுதலையும் தேவை. அது மோட்ச மரமானதினாலே, அது தன்னையே கடவுளிடம் எழுப்பிக் கொள்வதைத் தடுக்கக் கூடிய எந்த சிருஷ்டியிடமிருந்தும் தூரமாய் வைக்கப்பட வேண்டும். ஆதலால் நீ உன் சொந்த சாமர்த்தியத்தையாவது அல்லது உன் இயல்பின் திறமைகளிலாவது, உன் மதிப்பிலோ அல்லது மனிதர்களின் பாதுகாப்பிலாவது நம்பிக்கை வைக்கக் கூடாது. மரியாயிடமே அண்டிச் சென்று அவ்வன்னை யின் உதவியில் மட்டுமே நம்பியிருக்க வேண்டும். 

(2)இடைவிடாமல் ஆன்மாவைக் கவனித்து வர வேண்டும்

72. இம்மரம் யாருடைய ஆன்மாவில் ஊன்றப்படு கிறதோ, அம்மனிதன், ஒரு நல்ல தோட்டக்காரனைப் போல், அதை இடைவிடாமல் கவனித்துப் பராமரித்து வர வேண்டும். ஏனென்றால் அது ஜீவிய கனியை உற்பத்தி செய்யக் கூடிய உயிருள்ள மரமாக இருக்கிறது. எனவே, ஆன்மாவின் ஸ்திரமான கவனிப்புடனும் முயற்சியுடனும் அது பயிரிடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். உத்தமதனம் அடையும் ஆன்மா இதையே தன் முக்கிய நோக்கமாகவும் அலுவலாகவும் கொண்டிருக்கும்

(3) தனக்குத்தானே பலவந்தம் செய்தல். 

73. இம்மரத்தை அமுக்கி விடக் கூடிய எதையும் அல்லது நாளடைவில் அது பலனளிப்பதை தடை செய்யக் கூடிய முள்ளும் புதரும் போன்றவற்றை வெட்டியெறிந்து வேரோடு பிடுங்கிவிட வேண்டும். அதாவது, பரித்தியா கங்களின் வழியாகவும், தனக்குத் தானே பலவந்தம் செய்வதன் மூலமாகவும், நீ பயனற்ற எல்லா சுகங்களையும், சிருஷ்டிகளுடன் வீணான உறவாடல்களையும் அடக்கி நீக்கி விட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் நீ மாமிசத்தை சிலுவையில் அறைந்து, மவுனம் காத்து, உன் புலன்களை ஒறுத்தல் செய்ய வேண்டும்.

(4) சுய பாசம் கூடாது. 

74. வண்டுகள் இம்மரத்துக்குத் தீங்கு செய்யாமல் நீ காத்துக் கொள்ள வேண்டும். சுயபற்றும் சௌகரிய சொகுசை விரும்புதலுமே இவ்வண்டுகள். அவை இம்மரத்தின் கிளைகளைத் தின்று கனி தரக் கூடிய நம்பிக்கையை அழித்து விடுகின்றன. ஏனென்றால் சுய சிநேகம் மரியாயின் சிநேகத்திற்கு எதிராயிருக்கிறது.

(5) பாவத்துக்குப் பயந்து வெறுத்தல். 

75. அழிவு செய்யும் மிருகங்கள் இம்மரத்தை அணுக விடக் கூடாது. மிருகங்கள் என்பவை எல்லாப் பாவங்களுமே. இம்மரத்தை அவை தொடுவதினாலேயே அதைக் கொன்றுவிடக் கூடும். அவைகளின் வெறும் சுவாசம் கூட (= அற்பப் பாவங்கள்) அம்மரத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். ஏனென்றால் இவ்வற்பப் பாவங் கள் சிந்தனையில்லாமலும், மனஸ்தாபமின்றியும் கட்டிக் கொள்ளப்பட்டால், அவை மிகவும் ஆபத்தாகி விடும். 

(6) வேத அனுசாரங்களுக்குப் பிரமாணிக்கமாயிருத்தல்.

76. இந்தத் தெய்வீக மரத்திற்கு நற்கருணை உட்கொள்வதாலும், உன் பலி பூசைகளாலும் பொதுவும் தனியானதுமான மற்றச் செபங்களைச் சொல்வதாலும், ஒழுங்காகத் தண்ணீர் பாய்ச்சுவதும் அவசியமாகும். இல்லாவிட்டால் அது தொடர்ந்து கனி தராது. 

(7) துன்ப சோதனைகளின் மத்தியில் அமைதி.

77. ஆயினும் இம்மரம் காற்றினால் அசைத்துக் குலுக்கப்படும் பொழுது நீ கலங்கிவிட வேண்டாம். ஏனென் றால் இம்மரத்தை சோதனையின் புயல்கள் வேரோடு பிடுங்கி விடுவதாக அச்சுறுத்துவதும், மூடுபனியும், பனிக்கட்டியும் அதை அழித்துவிடுவதாக மூடிக்கொள்வதும் அவசியமே. இதன் பொருள் என்னவென்றால், இப்பக்தி முயற்சியானது கண்டிப்பாகத் தாக்கப்படும், எதிர்க்கவும்படும். ஆனால் நாம் நம் ஆத்துமத்தில் இதைப் பயிரிடுவதில் தளராமலிருந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.

3. இந்த ஜீவிய மரத்தின் கனியாயிருப்பவர் இனிய, ஆராதனைக்குரிய சேசுவே.

78. முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே! புதிதாய் பரிசுத்த ஆவியால் உன்னில் நடப்பட்டுள்ள ஜீவிய மரத்தை இவ் வாறு நீ பயிரிடுவாயானால், சொற்பக் காலத்தில் ஆகாயத் துப் பறவைகள் அதில் வந்து தங்கும் அளவுக்கு அது வளர்ந்து விடும் என உனக்கு நான் உறுதி கூறுகிறேன். அது உரிய காலத்தில் மகிமையும் வரப்பிரசாதமுமான கனியைத் தரும் நல்ல மரமாக இருக்கும். இனியவரும், ஆராதனைக்குரியவருமான சேசுவே அக்கனியாவார். அவரே எப்பொழுதும் மரியாயின் ஒரே கனியாயிருந்தவர், இருப்பார்.

மரியாயென்னும் ஜீவிய மரம் நடப்பட்டுள்ள ஆன்மா - பாக்கியம் பெற்றது!

அம்மரம் வளர்ந்து மலர்களைத் தரக் கூடியதா யிருக்கும் ஆன்மா அதிக பாக்கியம் பெற்றது!!

மாமரி அன்னை தன் கனியை விளைவிக்கக் கூடியதா யிருக்கும் ஆன்மா இன்னும் அதிக பாக்கியம் பெற்றது!!!

ஆயினும் இவர்கள் அனைவரையும் விட சிறந்த பாக்கியம் பெற்ற ஆன்மா யாரென்றால், மரியாயின் கனியை சுவைத்து மரணம் வரையிலும், என்றென்றைக்கும் அவரைக் கொண்டிருக்கிற ஆன்மாவேயாம். ஆமென்.

இதைப் பற்றிக் கொண்டவன் பற்றுக்கொள்வானாக!