இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகா பரிசுத்த மாதாவே!

நம் தேவமாதா பாவ மாசற்றவர்கள். பாவத்தின் நிழல் முதலாய் அவர்களை அணுகியதில்லை. பரிசுத்தமே உருவானவர்கள். அவர்களது ஆன்மா பாவக்கறை எதுவுமின்றி என்றும் பரிசுத்தமாயிருந்தது. இதுவே “மகா பரிசுத்த மாதா” என்னும் புகழின் பொருளாகும்.

இருள்--ஒளி, வெண்மை--கருமை, இனிமை--கசப்பு, இப்பதங்கள் ஒன்றுக்கொன்று நேர்விரோதமான பொருளைக் குறிக்கின்றன. அவைகளுக்குள் ஒற்றுமை என்பது ஒரு சிறிதுமில்லை. அவ்விதமே கடவுள்--பாவம் என்னும் சொற்களும் முற்றும் முரணான சொற்கள். கடவுளுக்கும் பாவத்துக்குமுள்ள வேறுபாட்டை வரையறுத்துக் கூறுதல் கடினம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு பாவ வழியினின்று விலகி நடக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பரிசுத்தமே உருவான கடவுளை நெருங்கிச் செல்லுகிறோம். எனவே ஓர் ஆத்துமம் தேவனோடு எவ்வளவு ஐக்கியப்பட்டுள்ளதோ, அவ்வளவு அவ்வாத்துமத்தின் தூய்மையும் பரிசுத்தமும் பிரகாசிக்கின்றது. பரிசுத்த கன்னி மரியாயோவெனில் ஏனைய சிருஷ்டிகள் யாவற்றையும்விட அதிகமாய் சர்வேசுரனோடு ஒன்றித்திருந்தார்கள். அது மட்டுமன்றி பரிசுத்தரிலும் பரிசுத்தரான தேவனையே தனது உதரத்தில் சுமந்து தேவமனித னான சேசுவை நமக்குப் பெற்றுத் தந்தார்கள்.

நெருப்பிலிடப்பட்ட தங்கக் கட்டி எவ்வளவுக் கெவ்வளவு நெருப்போடு நெருப்பாகின்றதோ, அவ்வள வுக்கவ்வளவு தூய்மையடைகிறது, ஒளிவீசுகின்றது. அது போன்றே நமது அன்னையும் சர்வேசுரனோடு மிகவும் நெருங்கி ஒன்றித்திருந்ததால், மிகவும் பரிசுத்தவதியாய் விளங்கினார்கள்; பரிசுத்ததனம் அவர்களிடம் தகதகவென ஒளிவீசியது.

பரிசுத்தமானதென்றால் மிகவும் சுத்தமானதென அர்த்தப்படும். மாசுமறுவு ஒன்றுமில்லாது, கறை குறை காணப்படாத ஒரு பொருள் இருப்பின் அது மிகப் பரிசுத்தமாக இருக்கிறதென்கிறோம். ஒரு வீட்டிலிருக்கும் ஒட்டடைகள் யாவும் நீக்கப்பட்டு, வீடு நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருந்தால், அவ்வீடு மிகவும் சுத்தமான வீடு என்கிறோம். நம் ஆடைகள் வெண்மையாக சலவை செய்யப்பட்டிருப்பின் அவைகள் சுத்தமாக இருக்கின்றன என்கிறோம். அவ்வாறே சர்வேசுரனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டு, ஞானஸ்நானத்தால் ஜென்மப் பாவக் கறை நீக்கப்பட்ட ஆத்துமமும் மிகவும் தூய்மையாக இருக்கிறது. பாவக் கறை அவ்வாத்துமத்தில் பதிந்தவுடன் அதன் தூய்மை அகன்று விடுகின்றது, ஒளி குன்றி விடுகிறது, செளந்தரியம் மங்கிவிடுகிறது. 

நாம் சாவான பாவம் செய்தாலும் சரி, அற்பப் பாவம் செய்தாலும் சரி, நமது பாவத்திற்கேற்ப ஆத்துமத்தின் பரிசுத்தம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அர்ச். மரியாயின் ஆத்துமம் எப்பொழுதும் மிகத் தூய்மையுற்று விளங்கியது. தேவ அன்னையின் பரிசுத்ததனம் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்த தெனில், “அவர்களிடம் ஜென்மப் பாவ, கர்மப் பாவ நிழல் முதலாய் இருந்ததில்லை” என்று அர்ச். அக்குவினாஸ் தோமையார் கூறுகிறார். அவர்கள் தன் தாயின் உதரத்தில் கர்ப்பந் தரிக்கப் பட்டது முதல், உயிர்விடும் வரை எவ்விதமான பாவத்துக்கும் அடிமையாகவில்லை. பசாசின் தலையை நசுக்கப் பிறந்த அவர்கள், பாவம் கட்டிக் கொண்டு அதே பசாசுக்கு அடிமையாதல் எங்ஙனம்?

கடவுளின் தாய் என்ற முறையில் கடவுளுக்கு அடுத்தாற் போல புண்ணிய சாங்கோபாங்கத்தில் எல்லா மனிதரையும்விட அவர்கள் சிறந்து விளங்குதல் பொருத்தமுடையதே. இம்மேலான வரத்தை சர்வேசுரன் அர்ச். மாமரிக்கு அளித்திராவிடில், கடவுளின் தாய் என்ற மேலான மகிமையைப் பெறப் போகிறவர்களைத் தகுந்த அந்தஸ்தில் படைக்கவில்லை என்ற பழி நேரிட்டிருக்கும்.

கண்ணீர்க் கணவாயாகிய இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஜென்மப் பாவத்துடன் பிறந்து புத்தி விவரமறிந்த பின் பல பாவங்களைச் செய்து கர்மப் பாவமும் கட்டிக் கொள்ளுகின்றது. நமதன்னை மட்டும் இதற்குத் தப்பினார்கள். இதைப் பற்றித்தான் பரிசுத்த வேதாகமம்: “முட்கள் நடுவில் லீலி” (உந். சங். 2:2) என அவர்களைப் புகழ்ந்து கூறியுள்ளது. 

முட்செடிகள் நிறைந்த ஒரு தோட்டத்தின் நடுவில் ஒரு லீலி மலர் தோன்றினால் அதற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. முட்கள் நிறைந்த ரோஜாச் செடியில் மலரும் ரோஜா மலர் நமது கண்ணைக் கவருதல் இயற்கை. இரு கருமேகக் கூட்டங்களுக்கு நடுவே அகப்பட்ட சந்திரனின் தண்ணொளி நமக்கு இன்பமூட்டுகிறது. அதுபோன்றே பாவ இருள் சூழ்ந்த இவ்வுலகில் பாவ நிழல் முதலாய்த் தீண்டாத தூய்மையுடன் கன்னிமாமரி துலங்குகிறார்கள்.

முன்னரெல்லாம் மனிதர்கள் பாவம் கட்டிக் கொண்டார்களென்பது உண்மை; ஆயினும் அந்நாட்களில் பாவிகள் தாங்கள் பாவிகள் என்று உணர்ந்தனர். நவநாகரீகம் முற்றியிருக்கும் இந்நாட்களிலோ பாவம் ஒரு தகாத காரியம், அடாத செயல் என்பதையே மறந்து விடுகின்றனர். பாவச்சேற்றில் சிக்கிப் புரளும் படுபாவியும் பாவமே இன்னதென்று அறியாத புண்ணிய சீலனாகத் தன்னைக் கருதுகிறான். 

கண்டதே காட்சி, கொண்டதே கோலமென தங்கள் மனம்போன போக்கில் சென்று கண்ணிருந்தும் குருடரைப் போல் பாவப் படுகுழியில் விழுகின்றனர்; உண்மையை உதாசீனம் செய்து, பொய்யே பேசி நல்வழி விலக்கி, தீவழியேகி, தங்களது அழியா ஆத்துமத்தைக் கறைப்படுத்தி, நித்திய கேட்டிற்குத் தங்களைத் தானே இழுத்துச் செல்கின்றனர். இவ்விருளின் மக்கள் தூய ஒளி வீசும் நம் அன்னையின் பரிசுத்தத்தைச் சற்று சிந்திப்பார்களா?

பாவிகள் சர்வேசுரனுடைய அளவில்லாத நன்மைத் தனத்தை அவமதிக்கின்றனர். அதனால் அவர்களை வெறுக்க வேண்டிய நிலை சர்வேசுரனுக்கு ஏற்படுகின்றது. பாவம் நீதிநெறிக்கு நேர் விரோதமானது. பாவநிலை அலங்கோலமான தொரு நிலை. சர்வேசுரன் அருவருக்கும் நிலை. சர்வேசுரன் ஒழுங்கே உருவானவர். நீதிநெறி தவறாதவர். பாவம் ஒன்றே அவருக்கு எதிரான புரட்சி. அவர் பாவத்தை வெறுக்கிறார். தமக்கு எதிராகக் கிளம்பும் புரட்சியைத் தண்டித்து அடக்காவிடில் அவருடைய நீதிக்குப் பங்கம் விளையும், களங்கம் ஏற்படும்.

நம்மைப் படைத்தவர் கடவுள். நம்மைக் காப்பாற்றி வருபவர் அவர். நாம் அவரை மறந்தாலும் நம்மைக் கணமும் மறவாதவர் அவர். நமது உயிருக்கு ஆதாரமானது அவரது அன்புக்கரம். அக்கரம் நம்மை விட்டு நீங்கிவிடில் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம். நம் மூச்சு நின்று விடும், உயிர் பிரிந்து விடும். இத்தகைய கடவுளின் மனதைத்தான் நாம் பாவம் செய்யும்போது நோகப் பண்ணுகிறோம்; அவரது அன்பைத்தான் அவமதிக்கிறோம். அவரது அன்புக் கொடைகளைக் கொண்டே அவருக்கு விரோதமாகப் போராடுகிறோம். 

அந்தோ! என்ன அற்பத்தனம்! என்ன நன்றிகெட்ட செயல்! இனியாகிலும் பாவச் செயலின் நீசத்தனத்தை உணர்ந்து அதை முழுதும் வெறுப்போம். பரிசுத்ததனத்தின் இருப்பிடமும், பிறப்பிடமுமான தேவனுக்கு பரிசுத்ததனம் எவ்வளவு பிரியமானது என்று உணர்ந்து தீயன அகற்றி நல்லன செய்வோம். நமது ஆத்துமத்தின் தூய்மையைக் கறைப் படுத்தும் பாவத்தை வெறுத்து புண்ணியத்தை நேசிப்போம்.

“ஓ மரியாயே, உம்மைப் போற்றித் துதிக்க எம்மாலாகுமோ? அற்ப மாசினாலும் கறைபடாத கன்னிகையே வாழ்க! எல்லாப் பரிசுத்தவான் களையும்விட அதிகப் பரிசுத்தமானவர்களே, நீர் என்றும் வாழ்க! உமது ஆத்தும சரீர பரிசுத்தத்தினால், நீர் சர்வேசுரனுடைய அழகு மிகுந்த சிங்காரத் தோட்டமும், பரிசுத்த ஆலயமும் உன்னத இராஜனின் அரண்மனையுமானீரே! உமது மாதிரிகை யைப் பின்பற்றி எங்கள் ஆத்துமத்தைக் கறைப்படுத்தும் சகலத்தையும் விலக்கி நடக்கவும், அதன் தூய்மையை நாளுக்கு நாள் வளர்க்கவும் வேண்டிய வரங்களைப் பெற்றுத் தந்தருளும் தாயே.”


மகா பரிசுத்த மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!