இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியில் தேவ அப்பமாக சேசுவின் காட்சி!

 ஜூன் 23, 1943

மரியா வால்டோர்ட்டா கூறுகிறாள்:

இன்று காலையில் (ஜூன் 23, 1943) நான் நம் அன்னையைக் காண்கிறேன். அவர்கள் அன்போடும், அதே வேளையில் ஏக்கமுள்ள எதிர்பார்ப்போடும் புன்னகைத்தபடி தன் அரியணையில் வீற்றிருப் பதாகத் தோன்றுகிறார்கள். அவர்களுடைய மேலங்கி இருண்ட நிறமாயிருக்கிறது. அது அவர்களுடைய திருச்சிரசிலிருந்து கீழ் வரைக்கும் விழுகிறது. அது அவர்களுடைய உள்ளங்கியின்மீது திறப்பாயிருக்கிறது. உள்ளங்கியும் இருண்ட பழுப்பு நிறமாகத் தோன்றுகிறது. அவர்களுடைய இடையைச் சுற்றி ஓர் இருண்ட நிறமுள்ள இடைவார் இருக்கிறது. அவர்களுடைய மேலங்கியும், உள்ளங்கியும், இடைவாரும் மூன்று வித்தியாசமான பழுப்பு நிறங்களில் உள்ளதாகத் தோன்றுகின்றன. அவர்களுடைய சிரசின் மீது, மேலங்கியின் கீழ் அவர்கள் ஒரு வெண்ணிற முக்காட்டை அணிந்திருக்க வேண்டும், ஏனெனில் அதிலுள்ள ஒரு மெல்லிய நூலை என்னால் காண முடிகிறது.

அவர்களுடைய நெஞ்சின் மத்தியில் ஒரு மிகப் பெரிய, அழகிய திவ்விய அப்பம் ஒளிவீசுகிறது. மேலும் - இதுதான் இந்தக் காட்சியின் அற்புதமான பகுதி - இந்த அப்பத்தின் ஊடாக (அது மிக வசீகரமான பல வண்ணப் படிகக் கல்லால் ஆனது போல காட்சி யளிக்கிறது.) ஒரு மிக அழகான குழந்தை காட்சியளிப்பதாகத் தோன்றுகிறது. அது, மனிதனாக அவதரித்த தேவ குழந்தை யானவரே.

தன் மேலங்கி திறந்திருக்கும்படி தன் கரங்களை விரித் திருக்கிற நம் இராக்கினி, என்னைப் பார்க்கிறார்கள். அதன்பின் ஆராதனை நிரம்பிய தன் திருமுகத்தை சாய்த்து, தன் நெஞ்சினுள் சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற தேவ அப்பமானவரை உற்றுநோக்குகிறார்கள். அவர்களுடைய நெஞ்சில் அவர் இருக் கிறார், அதன்மீது அல்ல. ஞான ரீதியான எக்ஸ் கதிர்களின் வழியாக, மாமரியின் நெஞ்சுக்குள் என்னால் பார்க்க முடிவது போல இது இருக்கிறது. அல்லது அதைவிட, மாமரிக்குள் இருப்பது அவர் களுக்கு வெளியே தெரியும்படி இந்த ஞானக் கதிர்கள் செய்கின்றன. அவர்களுடைய திருச்சரீரம் ஒளி ஊடுருவக் கூடியது போல் இருக்கிறது. இதை என்னால் விளக்க முடியவில்லை.

சுருக்கத்தில், நான் இதைக் காண்கிறேன். நம் அன்னை பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் புன்னகை மட்டும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய புன்னகை, ஓராயிரம் வார்த்தைகளாக, அதற்கு மேலாகவும் கூட மிகுந்த வாய்ச்சாலகம் உள்ளதாக இருக்கிறது.

இதை அப்படியே ஒரு சித்திரமாக வரைந்து உங்களுக்குக் காட்ட நான் எவ்வளவு விரும்புகிறேன்! மேலும் இந்தப் பிரகாசத்தின் மூன்று வெவ்வேறு அளவுகளை உங்களுக்குக் காட்டவும் நான் மிகவும் விரும்புகிறேன். அவை மூன்று விதமானவை: முதலாவது, ஒரு மிக மென்மையான ஒளி, அது மரியாயின் திருச்சரீரத்திலிருந்து தோன்றுவது, இந்த ஒளியானது, இரண்டாவது ஒளிக்கு ஒரு வெளிப் புற, பாதுகாப்பான உறை போல இருக்கிறது. இந்த இரண்டாவது ஒளி, இன்னும் அதிகப் பிரகாசமான, உயிருள்ள ஒளியாக இருக்கிறது. பெரிய திவ்விய அப்பத்திலிருந்து இது வருகிறது. மனித வார்த்தை யில் சொல்வதானால், ஒரு வெற்றியின் ஒளி என்று நான் சொல்வேன். அது தெய்வீக ஆபரணத்திற்கான ஓர் உட்பக்க உறை போல செயல் படுகிறது. இந்த ஆபரணம் விவரிக்க முடியாத அழகுள்ள திரவ நெருப்பைப் போல சுடர்வீசுகிறது. இது, தனது அளவற்ற அழகில், அளவற்ற இனிமையுள்ளதாக இருக்கிறது. அது ஒளி பொருந்திய சின்ன சேசுதான். அவர் தமது மென்மையான, மாசற்ற சரீரத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், கடவுள் என்ற முறையில் தம் தேவ சுபாவத்தோடு இருக்கும் அவர், வயதில் ஒரு பச்சிளங்குழந்தை யாகவும் இருக்கிறார்.

இந்த மூன்றாவது மகிமைப் பேரொளியானது, மற்ற இரண்டு மூடுதுகில்களின் கீழ், எந்த வகையிலும் விவரிக்க முடியாத அளவுக்கு எல்லா உவமைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. சூரியனின் ஒளியையும், நிலவின் ஒளியையும், நட்சத்திரங்களின் ஒளியையும் நினைத்துப் பாருங்கள், சகல விண்கோள்களின் வெவ்வேறான ஒளிகளையும் மனதில் கொண்டு வாருங்கள், உருகிய பொன்னும், உருகிய வைரமும் போல் இருக்கிற ஓர் ஒற்றை ஒளித் திரளாக அவற்றை ஆக்குங்கள். இந்த ஒளித் திரள் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணத்தில் என் இருதயம் பார்த்துக் கொண்டிருக்கிற காரியத்தின் ஒரு வெளிறிய பிம்பமாக மட்டும் இருக்கிறது. இந்த அதிசய ஒளியால் சூழப்பட்டிருக்கிற பரலோகம் எப்படி இருக்கும்!

இதே போல, மாமரியின் புன்னகையின் இனிமையை எடுத்துரைக்கவும் எந்தத் தகுதியுள்ள ஒப்புமையும் இல்லை. அரச தன்மையுள்ள, கற்புள்ள, பரிசுத்தமான, நேசமுள்ள, ஏக்கமுள்ள, தன் குழந்தைகளை அழைக்கிற, ஆறுதலளிக்கிற - இந்த வார்த்தைகள் எல்லாம் அந்தக் கன்னிமையுள்ள, தாய்க்குரிய, பரலோகப் புன்னகை யின் ஒரு மிகச் சிறு பாகத்தை மட்டுமே எடுத்துரைக்கின்றன. ஓரளவுக்காவது இந்தப் புன்னகையின் அழகை விளக்கிக் கூறுவதற்கு, இந்த வார்த்தைகளும் தங்கள் அழகில் ஓராயிரம் மடங்கு அதிகரிக்க வேண்டும்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...