இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உம்மிடத்தில் மரிக்கிறவர்களுடைய நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

“ஆண்டவரில் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” ஆண்டவரின் மரிப்பது என்பதன் பொருள் என்ன? ஆண்டவருக்குள் மரிப்பது என்பது அதற்கு முன் ஒரு மனிதன் ஆண்டவருக்குள் வாழ்வதைக் குறிக்கிறது. சேசுவில் வாழ்வது அவருடைய ஞான சரீரமாகிய திருச்சபையில் ஓர் உறுப்பினராயிருப்பது என்று பொருள்படுகிறது. ஞானஸ்நானம் கிறீஸ்துநாதரோடு கொள்ளும் ஐக்கியத்தின் தொடக்கமாக இருக்கிறது. அர்ச். சின்னப்பர் சொல்வது போல, அது ஒட்டுப்போடுதலாக இருக்கிறது - நாம் மெய்யான ஒலிவமரமாயிருக்கிற கிறீஸ்துநாதரோடு ஒட்டுப்போடப் படுகிற காட்டு ஒலிவக் கிளைகளாக இருக்கிறோம். அதன்பிறகு நாம் அவரில் ஜீவிக்கிறோம். மெய்யான ஒலிவ மரத்திலிருந்து ஜீவியத்தின் உயிர்ச் சாற்றை நாம் பெற்றுக் கொள்கிறோம். அவருடைய உயிரைக் கொண்டு நாம் ஜீவிக்கிறோம். திவ்ய நன்மையில் அவரை உட்கொள்கிறவர்களிடம் பேசப்பட்ட அவருடைய சொன்த வார்த்தைகள் இவை: “நான் பிதாவினால் ஜீவிக்கிறது போல, என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன், என்னால் ஜீவிக்கிறான்.” நாம் அவரிலும், அவருடைய தெய்வீக உயிராலும் வாழ்கிறோம். இதை நாம் சுபாவத்திற்கு மேற்பட்ட ஜீவியம் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் அது கடவுளில் ஜீவிக்கும் ஜீவியமாக, ஒரு பகிர்தலாக, தெய்வீக ஜீவியத்தில் ஒரு பங்கெடுப்பாக இருக்கிறது. அதை மட்டும் நாம் உணர முடியுமானால்! வெறுமனே கடவுளின் பத்திராசனத்திற்கு அருகில் அல்லாமல், அவரிலும், அவராலும் வாழ்வது நமக்கு எத்தகைய மகத்துவமாக இருக்கிறது! நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் தம்மையே நம் தந்தை என்று அழைக்கிறார். இந்த ஒரு உண்மையை மட்டும் நாம் உணர்ந்து கொள்வோமென்றால், வரப்பிரசாத அந்தஸ்தை இழந்துபோகாதிருக்கும்படி நாம் மிகக் கவனமாயிருப்பது மட்டுமல்ல, மாறாக, ஜீவியத்தின் சகல பிரச்சினைகளிலும் நாம் மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருப்போம். கடவுளில் வாழ்வது மற்றும் அவருடைய பரிசுத்த ஜீவியத்தைப் பகிர்ந்து கொள்வது என்னும் பொக்கிஷத்தோடு ஒப்பிடும்போது இந்த உலகத் தீமைகளை அற்பமான, மதிப்பற்ற, அர்த்தமற்ற வெறுமைகள் என்று அவற்றை நாம் நிந்திப்போம். மரணம் கூட ஓர் அற்ப விஷயமாகக் கருதப்படும். ஏனென்றால் அது இப்படிக் கடவுளில் ஜீவிப்பதில் தலையிடுவதில்லை, தடைசெய்வதுமில்லை. உண்மையில், உலகத்தின் உண்மையான மதிப்பீடுகளைப் பற்றி முழுமனதோடு அக்கறை எடுத்துக் கொள்ளும் சில ஆத்துமங்கள், அதாவது, கடவுளோடு அதிக அந்நியோந்நியமான ஐக்கியம் கொள்வதையே தங்கள் ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கிறவர்கள் - இந்த மகிழ்ச்சி நிறைந்த ஆத்துமங்கள், மரணத்தின் பயங்கரங்களை இகழ்ந்து நிந்திப்பது மட்டுமல்ல, மாறாக அவற்றை கடவுளோடு கொள்ளும் ஒரு புதிய, அற்புதமான ஐக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதி அவற்றை வரவேற்கவும் செய்கிறார்கள். “ஆண்டவரில் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” அவர்கள் மரணத்தைக் கண்டு கடும் அச்சப்படுவதில்லை என்பதால் அவர்கள் பாக்கியவான்கள். மேலும், தாங்கள் நேசப்பற்றுதலோடு நேசிக்கிற தங்கள் கடவுளாகிய சேசுநாதரிடமிருந்து தங்களைப் பிரிக்கிற மூடுதிரையை மரணம் அகற்றி விடுகிறது என்று அறிந்திருப்பதாலும் அவர்கள் பாக்கியவான்கள். “ஆண்டவரில் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” பரிசுத்த வேதாகமத்தின் இந்த வார்த்தைகள் நம் நாளில் பல தடவைகள் நிறைவேறுகின்றன. ஒரு மருத்துவமனையில் ஒரு பெரிய குடும்பத்தின் தாய் தன் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். அவள் சேசுநாதருக்காக வாழ்ந்திருக்கிறாள். ஒரு வரப்பிரசாத ஜீவியத்தினால் அவள் சேசுநாதரில் வாழ்ந்திருக்கிறாள். அவரை அவள் நேசிக்கிறாள். கடைசிப் போருக்காக அவள் எண்ணெய் பூசப்படுகிறாள். அவஸ்தை நன்மையில் தன் மறைந்திருக்கிற சேசுவை அவள் பெற்றுக் கொள்கிறாள். சில கணங்கள் நன்றியறிதலுக்குப் பிறகு அவள் தன் கண்களைத் திறக்கிறாள், இலேசாகப் புன்னகைக்கிறாள், அதன்பின் ஒரு மென்மையான, தணிந்த குலில்: “நான் தயார். சேசுவுக்கு நான் வேண்டுமென்றால், அவர் என்னை எடுத்துக் கொள்ளட்டும்” என்கிறாள். ஒரு சில கணங்களுக்குப் பிறகு சேசு தன் குழந்தையாகிய அவளைத் தமக்குச் சொந்தமாக எடுத்துக் கொள்கிறார். சேசுநாதரும் அந்த ஆத்துமமும் மறு பக்கத்தில் சந்திக்கும்போது, அவர்கள் இருவருடைய மகிழ்ச்சியையும், நேசத்தையும் விளக்க யாரால் முடியும்? “ஆண்டவரில் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” இப்போது சாகும்போது அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள், அதன்பின் என்றென்றைக்கும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். இனி துயரமோ, வேதனையோ, கவலையோ, ஒருபோதுமில்லை. சேசுநாதரில் நாம் ஜீவித்தால், அவரில் நாம் மரிப்போம். நீ எப்படி ஜீவிக்கிறாயோ, அப்படியே மரிக்கிறாய். மரம் எந்தத் திசையில் சாய்ந்திருக்குமோ, அந்தத் திசையிலேயே விழும். சுய-தேடுதல் எல்லாவற்றின் மீதும் நம் பிடியை நாம் தளர்த்திவிட்டோம் என்றால் சேசுவில் ஜீவிப்பது எவ்வளவு எளிதாயிருக்கும்! விடைபெறுகிறேன் சரீரமே, உலகமே, பசாசே! என்னை விட்டு அகன்று போங்கள், ஏனென்றால் உங்களையும், கடவுளையும் நேசிக்க என்னால் முடியாது. உலகத்தையும், மோட்சத்தையும் நேசிக்க என்னால் முடியாது. சுயத்திற்கும் கடவுளுக்கும் ஊழியம் செய்ய என்னால் முடியாது. ஒரே ஒரு எஜமானர் என் இருதயத்தின் மீது அரசாளுவார், அவரே நம் இருதயங்களின் அரசராகிய சேசுநாதர்.


உம்மிடத்தில் மரிக்கிறவர்களுடைய நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!