சிலுவையிலும், சிலுவையின் வழியாகவும் நித்திய ஞானமானவர் பெற்ற வெற்றி!

167. நான் நம்புகிறபடி சிலுவையானது, "அரசரின் மாபெரும் இரகசிய "மாக, நித்திய ஞானமானவரின் அனைத்திலும் பெரிய பரம் இரகசியமாக இருக்கிறது.


ஞானமானவரும் சிலுவையும்

ஓ. நித்திய ஞானமானவரின் சிந்தனைகளும், வழிகளும், அனைவரிலும் பெரிய ஞானியாயிருக்கக் கூடிய ஒரு மனிதனின் சிந்தனைகளையும், வழிகளையும் விட எவ்வளவு வேறுபட்டதாக இருக்கிறது! இந்த மாபெரும் சர்வேசுரன் உலகத்தை இரட்சிக்க வும், பசாசுக்களை நரகத்தில் தள்ளி, அவற்றை விலங்கிட்டு முடக்கி விடவும், மனிதனுக்கு நரகத்தை அடைத்து, மோட்சத் தைத் திறக்கவும், தமது நித்திய பிதாவுக்கு அளவற்ற மகிமை செலுத்தவும் விரும்புகிறார். இதுவே அவருடைய நோக்கமாகவும் அவருடைய கடின உழைப்பின் காரணமாகவும், அவருடைய மாபெரும் அலுவலாகவும் இருக்கிறது. தமது அறிவைக் கொண்டு "பூமியின் ஒரு கோடி முனை முதல் மறு கோடி முனை வரைக்கும் துரிதமாய்ச் சென்று, சகலத்தையும் இனிதாய் ஒழுங்குபடுத்துகிற" தெய்வீக ஞானமானவரால் எந்த வழி தேர்ந்து கொள்ளப்படும்? அவருடைய திருப்புயம் சர்வ வல்லமை படைத்தது. ஒரே கணத்தில் தம்மை எதிர்க்கிற சகலரையும் அழித்தொழிக்க அவரால் முடியும், தாம் விரும்புகிற எதையும் சிருஷ்டிக்க அவரால் முடியும். தமது திருவாயின் ஒரே ஒரு வார்த்தையால் எதையும் அழிக்கவும், சிருஷ்டிக்கவும் அவரால் கூடும். இன்னும் அதிகமாக நான் என்ன சொல்லக் கூடும் ? எதையும் செய்வதற்கு அவர் அதைச்சித்தம் கொள்வதே போதும்.

168. ஆனாலும், அவருடைய சிநேகம் அவருடைய வல்லமைக் குக் கட்டளை தருகிறது. மனிதனுக்குத் தம் தெய்வீக நட்பை எண்பிக்கும்படி அவர் மனுவுருவாக விரும்புகிறார். மனிதனை மோட்சத்திற்கு ஏறிச் செல்ல வல்லவனாக்கும்படி அவர் பூமியின் மீது இறங்கி வர விரும்புகிறார். அப்படியே ஆகக்கடவது! மனுவுருவாகும் நித்திய ஞானமானவர் மகிமையுள்ளவராகவும், வெற்றி வீரராகவும், கோடிக்கணக்கான சம்மனசுக்கள், அல்லது குறைந்தபட்சம் இலட்சக்கணக்கான தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்கள் புடைசூழ வருவார் என்று மனிதர்களுக்குத் தோன்றி யிருக்கலாம். அவர் ஏழையாகவோ, அவமதிக்கப்படக் கூடியவ ராகவோ, தாழ்ந்தவராகவோ, பலவீனராகவோ அல்லாமல், மகத் துவத்தால் ஒளிவீசிப் பிரகாசிக்கிறவராக இந்தச் சேனைகளோடு இறங்கி வந்து, தம் எதிரிகள் அனைவரையும் நசுக்கி விடுவார் என்றும், தமது வசீகரத்தாலும், தமது உபகாரங்களைக் கொண்டும், தமது மகிமைகள், செல்வங்களைக் கொண்டும் மனிதர்களுடைய இருதயங்களைத் தம் வசப்படுத்திக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். தேவஞானமானவ ருடைய மனித அவதாரத்தில் இதெல்லாம் சிறிதும் குறைவுபட முடியாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், ஓ தேவ அதிசயமே ! இதோ அவர் யூதர்களுக்கு இடறுகல்லாகவும், புறஜாதியாருக்கு மடமையாகவும் தோன்றுகிற ஒன்றைக் கண்டு பிடிக்கிறாரே மனிதர்களில் மிகக் கொடியவர்களையும், மிகப் பரிதாபமானவர்களையும் அவமானப்படுத்துவதற்கும், சித்திர வதை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிற ஓர் அருவருப்பான இழிவான மரத்துண்டை அவர் காண்கிறார். அது கழுமரம் என்றும், தூக்குமரம் என்றும், சிலுவை என்றும் அழைக்கப் படுகிறது. இந்தச் சிலுவையின் மீது அவர் தம் பார்வையை வீசு கிறார். அதில் இன்பம் காண்கிறார். அவர் அதை நேசித்து, பரலோகத்திலும், பூலோகத்திலும் மேலானவையாகவும், ஒளி வீசித் துலங்குபவையாகவும் இருக்கிற சகலத்திற்கும் முன்பாக அதைத் தெரிந்து கொள்கிறார். அவர் அதைத் தம் வெற்றிகளின் கருவியாகவும், தமது மகத்துவத்தின் அலங்கரிப்பாகவும், தமது இராச்சியத்தின் செல்வமாகவும், இன்பமாகவும், தம் இருதயத்தின் சிநேகிதியாகவும், மணவாளியாகவும் தெரிந்து கொள்கிறார். ஓ ஞானத்தினுடையவும், தேவ அறிவினுடையவும் ஆழங்காண முடியாத பாதாளமே! அவருடைய தேர்வு எத்துணை வியப்புக் குரியது! அவர் செயல்படும் முறையும், தீர்மானிக்கும் முறையும் எவ்வளவு ஆழமுள்ளதாகவும், எவ்வளவு மனித புத்திக்கு எட்டாத தாகவும் இருக்கிறது. அவருடைய சிலுவையின் நேசம் எவ்வளவு வாக்குக் கெட்டாததாக இருக்கிறது. (உரோ. 11 33 காண்க). 

169. அவதரித்த வார்த்தையானவர் தம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சிலுவையை நேசித்தார் (ஞான. 8 2). தாம் உலகிற்கு வந்த வேளையில் அவர்தம் திருமாதாவின் திருவுதரத்திலிருந்து கொண்டு, தம் நித்திய பிதாவின் திருக்கரங்களிலிருந்து அதை வாங்கிக் கொண் டார். அது தம் திரு இருதயத்தின் மத்தியிலிருந்து அரசாளும்படி, அதை அங்கே வைத்துக் கொண்டார் அப்போது அவர் சங்கீத ஆசிரியரின் வார்த்தைகளை விரிவாக்கி, இப்படிப் பெருங்குர லெடுத்துக் கூவியதாவது. "என் தேவனே. என் பிதாவே, நான் உம் திருமடியில் இருந்தபோதே, இந்தச் சிலுவையைத் தேர்ந்து கொண்டேன் (சங்.399 காண்க). இப்போது என் திருமாதாவின் திருவுதரத்தில் இருந்தபடி அதை நான் தேர்ந்து கொள்கிறேன். இதை என் முழு பலத்தையும் கொண்டு நான் சிநேகிக்கிறேன். இது என் பத்தினியாகவும், என் எஜமானியாகவும் இருக்கும்படி என் இருதயத் தின் மத்தியில் இதை நான் வைக்கிறேன்! "ஞான. 8: 2). 

170. தமது வாழ்வு முழுவதும் அவர் சிலுவையை ஆர்வத்தோடு தேடியலைந்தார். தாகமுள்ள கலைமானைப் போல கல்வாரியை நோக்கி நீண்ட எட்டுகள் எடுத்து வைத்துச் செல்ல அவர் விரும்பி னார் என்றால், தம் அப்போஸ்தலர்களிடமும், சீடர்களிடமும், தமது மறுரூபத்தின் போது தமது தீர்க்கதரிசிகளிடமும் கூட அவர் தம் துன்பங்களையும், மரணத்தையும் பற்றி அடிக்கடி பேசினார் என்றால், "நான் ஆசைமேல் ஆசையாயிருக்கிறேன்" என்று அடிக்கடி உணர்வுபூர்வமாகக் கூறி வந்தார் என்றால், அதற்குக் காரணம், அவருடைய எல்லாப் பயணங்களும், அவருடைய ஆர்வம் முழுவதும், அவருடைய சகல தேடுதல்களும், அவரது சகல ஆசைகளும் சிலுவையை நோக்கியே திருப்பப்பட்டிருந்தன என்பதுதான். அதன் அரவணைப்பில் மரணமடைவது அவருக்கு மகிமையின் சிகரமாகவும், வெற்றியின் சிகரமாகவும் இருந்தது என்பதுதான் அவற்றிற்கான காரணம்.

தம் மனிதாவதாரத்தின் போது, அவர் வாக்குக் கெட்டாத சந்தோஷத்தோடு சிலுவையை மணம் முடித்துக் கொண்டார். உரைக்க இயலாத மகிழ்ச்சியோடு அவர் அதைக் கண்ணோக்கி, தம் ஜீவியகாலம் முழுவதும் அதைச் சுமந்து கொண்டார். அவருடைய ஜீவியம் ஒரு தொடர்ச்சியான சிலுவையாக மட்டுமே இருந்தது. அதை அரவணைத்துக் கொள்ளவும், கல்வாரி யில் அந்தச் சிலுவையின் மீது மரிக்கவும் எவ்வளவோ அதிக ஏக்கத்தோடு ஆசித்தவராக, "நான் பெற வேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு. அது நிறைவேறுமளவும் எவ்வளவோ நெருக்கிடைப் படுகிறேன்" என்றார் 

171. இறுதியாக அவருடைய விருப்பங்கள் முழுமையாக நிரப்பப்பட்டன. அவர் அவமானத்தால் நிரப்பப்பட்டு, தமது சிலுவையோடு பிணைக்கப்பட்டார். அதனிடமிருந்து பிரிக்க முடியாதபடி ஆணிகளால் இணைக்கப்பட்டு, மகிமையுள்ள வெற்றிச் சிம்மாசனத்தின் மீது வீற்றிருப்பவரைப் போல, தம் இனிய சிநேகிதியும், மணவாளியுமானவளின் அரவணைப்பில் அவர் மகிழ்ச்சியோடு மரித்தார்! 

172. அதிக வெற்றியுள்ளவராகத் தோன்றும்படி தமது மரணத் திற்குப் பிறகு அவர் தம் சிலுவையை வெறுத்துப் புறக்கணித் திருப்பார் என்று எண்ணி விடாதீர்கள். இதற்கு நேர்மாறானதை அவர் செய்தார். எந்த அளவுக்கு அவர் அதனோடு தம்மை நெருக்கமாக இணைத்துக் கொண்டு. அதைத் தம் திருச்சரீரத்தின் ஒரு பகுதியைப் போல் ஆக்கிக் கொண்டார் என்றால், எந்த ஒரு தேவதூதராலும், மனிதனாலும் மோட்சத்திலோ, பூமியிலோ உள்ள எந்த சிருஷ்டியாலும் அதை அவரிடமிருந்து பிரிக்கவே முடியவில்லை. அவர்களுக்கு இடையில் இருந்த பந்தம் கரைந்து போக முடியாததாயிருக்கிறது. அவர்களுடைய ஐக்கியம் நித்தியமானதாக இருக்கிறது. சேசு இல்லாமல் சிலுவை இல்லை, சிலுவை இல்லாமல் சேசுவும் இல்லை.

அவரது மரணத்தினால் எந்த அளவுக்குச் சிலுவையின் அவமானங்கள் மிகுந்த மகிமையுள்ளவையாகவும், அதன் தரித் தரிமும் வெறுமையும் அபரிமிதமான செல்வமாகவும், அதன் வேதனைகள் இனிமையானவையாகவும், அதன் கடினத் தன்மை மிகுந்த கவர்ச்சியுள்ளதாகவும் மாற்றப்பட்டன என்றால், அது தெய்வீகத் தன்மையுள்ளதாக்கப்பட்டு, சம்மனசுக்கள் மற்றும் மனிதர்களுடைய ஆராதனைக்குரிய பொருளாகி விட்டது போல் இருக்கிறது. தம் பிரஜைகள் அனைவரும் தம்மோடு சேர்த்து, தம் சிலுவையையும் ஆராதிக்க வேண்டும் என்று சேசுநாதர் இப்போது எதிர்பார்க்கிறார். வேறு எந்த ஒரு சிருஷ்டிக்கும், அது அவருடைய மகா பரிசுத்த தாயாரைப் போல் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும், திருச்சிலுவைக்குச் சமமான ஒரு வழிபாடு அதற்குச் செலுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய விருப்பமல்ல, மாறாக, இந்த வழிபாடு அவருடைய பிரியத்துக்குரிய சிலுவைக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் உரியதாயிருக்க வேண்டு மென்று அவர் விரும்புகிறார். (திருச்சபை வேறு எந்த சிருஷ்டிக்கு மின்றி, கிறீஸ்துநாதர் மரித்த உண்மையான சிலுவைக்குச் செலுத்துகிற ஆராதனை வழிபாட்டைப் பற்றியே அர்ச் லூயிஸ் இங்கு பேசுகிறார் என்பதை வாசகர்கள் கவனமாக மனதில் குறித்துக் கொள்ள வேண்டும்.)

பொதுத் தீர்வையின் நாளில் அவர் புனிதர்களின் சகல அருளிக்கங்களுக்கும், உத்தம மரியாதைக்குரிய திருப்பண்டங் களுக்கும் கூட ஒரு முடிவைக் கொண்டு வருவார். ஆனால் அவருடைய உண்மையான திருச்சிலுவையின் சிறு சிறு துண்டு களையோ உலகம் முழுவதிலுமிருந்து ஒன்று திரட்டும்படி அவர் பிரதான பக்திச்சுவாலகர்களுக்கும், ஞானாதிக்கர்களுக்கும் கட்டளை தருவார். அவை எவ்வளவு நன்றாக அவருடைய நேச முள்ள சர்வ வல்லபத்தால் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படும் என்றால், அவை ஒரேசிலுவையாக, அவர் எதன் மீது மரித்தாரோ, அதே சிலுவையாக உருவாகும். அவர் வெற்றியின் அடையாள மாக, தம் சிலுவையை சம்மனசுக்கள் சுமந்து வரும்படி செய்வார். அவர்கள் அதன் மகிழ்ச்சியுள்ள ஸ்துதி புகழ்ச்சிகளைப் பாடு வார்கள். அவருடைய சிலுவை இது வரை தோன்றியுள்ள எந்த ஓர் ஒளியுள்ள மேகத்தையும் விட அதிகப் பிரகாசமுள்ள மேகத்தின் மீது வைக்கப்பட்டு, அவருக்கு முன்பாகச் செல்லும். அவர் தம் சிலுவையைக் கொண்டும், சிலுவையாலும் உலகத்தைத் தீர்ப்பிடு வார். அப்போது அதைக் காண்பது அதன் நண்பர்களுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கும்! அதே காட்சி அதன் எதிரிகளுக்கு எப்பேர்ப்பட்ட தாங்க முடியாத அவநம்பிக்கையை அளிக்கும். அவர்கள் அதன் மகிமையொளி வீசும் காட்சியைத் தாங்க மாட்டாமல், மலைகள் தங்கள் மேல் விழுந்து தங்களை மூடிக் கொள்ளும்படியாகவும், நரகத்தின் குடல்களை நோக்கி, தங்களை விழுங்கி விடும்படியாகவும் கதறுவார்கள்!