இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் தாராளமுள்ள திரு இருதயம்

அனைவரையும், குறிப்பாக மிகுந்த துன்ப துயரத்தில் இருப்போரையும் மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்க ஆசைப்படுவது நல்ல மனமுள்ளவர்களின் தனிப்பட்ட குணமாகும். ஆனால் சேசுநாதரின் இருதயத்தைவிட அதிகக் கருணையுள்ள இருதயமுள்ள ஒருவனை யார் கண்டுபிடிக்க முடியும்? அவர் அளவற்ற நன்மைத் தனமாக இருக்கிறார், எனவே தமது செல்வங்களை நமக்கு வழங்க ஒரு இராஜரீக ஆசையுள்ளவராக அவர் இருக்கிறார்: ""என்னை நேசிக்கின்றவர்களை செல்வந்தராக்கவும், அவர்களுடைய பொக்கிஷங்களை நிறைக்கும்படியாகவும் ... ஆஸ்தியும், மகிமையும், மேலான செல்வமும், நீதியும் என்னோடிருக்கின்றன'' (பழ.8:21,18). அவர் இந்த நோக்கத்திற்காகத் தம்மையே ஏழையாக்கிக் கொண்டார். அப்போஸ்தலர் சொல்வது போல, நம்மைச் செல்வந்தர் ஆக்கும்படி அவர் ஏழையானார்: ""அவருடைய தரித்திரத்தால் நீங்கள் செல்வந்தராகும் பொருட்டு, அவர் உங்கள் நிமித்தம் தரித்திரரானார்'' (2 கொரி.8:9). இந்த நோக்கத்திற்காகவே அவர் பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தங்கியிருப்பதைத் தேர்ந்து கொண்டார். அங்கே அவர் தம்மைச் சந்திக்க வருபவர்களுக்குத் தரும்படியாக, சுவாமி பல்தசார் ஆல்வாரெஸ் கண்டது போல, தமது கரங்கள் நிறைய வரப்பிரசாதங்களோடு எப்போதும் தங்கியிருக்கிறார். இந்தக் காரணத்திற்காகவே அவர் திவ்ய நன்மையில் தம்மையே நம்மீது பொழிகிறார், அதன் மூலம், தம்மையே முழுமையாக நமக்குத் தருவதால், வேறு எந்த நல்ல கொடையையும் அவர் நமக்கு மறுக்க மாட்டார் என்று நாம் புரிந்து கொள்ளச் செய்கிறார்: ""அவர் தம்மோடு மற்ற எல்வற்றையும் தராதிருப்பது எப்படி?'' (உரோ.8:32). ஏனெனில் சேசுவின் திரு இருதயத்தில் நாம் ஆசிக்கும் ஒவ்வொரு நன்மையையும், ஒவ்வொரு ஆசையையும் நாம் பெற்றுக் கொள்கிறோம்: ""நீங்கள் அவரிடத்தில் எல்லாவற்றிலும் செல்வந்தராக்கப்பட்டிருக்கிறீர்கள். இவ்விதமாக, நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிற உங்களுக்கு எந்த வரப்பிரசாதத்திலும் யாதொரு குறைவுமில்லை'' (1 கொரி. 1:5,7).

ஆ என் சேசுவே, நீர் உம் திரு இரத்தத்தையும், உமது உயிரையும் எனக்குத் தர மறுக்கவில்லை. அப்படியிருக்க என் பரிதாபத்திற்குரிய இருதயத்தை உமக்குத் தர நான் மறுப்பேனா? இல்லை, எனக்கு மிகப் பிரியமுள்ள இரட்சகரே, நான் அதை முழுமையாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். நான் என் சித்தம் முழுவதையும் உமக்குத் தருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு, உமது விருப்பப்படி அதை நடத்தும். என்னால் எதுவும் செய்ய முடியாது, என்னிடம் எதுவுமில்லை. ஆனால் நீர் எனக்குத் தந்திருக்கிற இந்த இருதயம் என்னிடம் உள்ளது. அதை என்னிடமிருந்து அகற்றி விடக் கூடியவன் ஒருவனுமில்லை. என் பொருட்களையும், என் இரத்தத்தையும், என் உயிரையும் நான் இழக்கலாம், ஆனால் என் இருதயத்தை நான் இழக்க மாட்டேன். இந்த இருதயத்தைக் கொண்டு உம்மை நேசிக்க என்னால் முடியும். இந்த இருதயத்தைக் கொண்டு உம்மை நான் நேசிப்பேன்.

ஓ என் சர்வேசுரா, என்னை நான் முழுவதுமாக மறந்து போக எனக்குக் கற்பித்தருளும்; உமது உத்தம நேசத்தின் மீது உமது நன்மைத்தனத்தில் நீரே என்னில் ஆவலைத் தூண்டியிருக்கிறீர் என்பதால், அந்த நேசத்திடம் வந்து சேர நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்பியும். உம்மை மகிழ்விப்பதற்கான ஒரு தீர்மானத்தை நான் என்னில் உணர்கிறேன். ஆனால் இந்த என் தீர்மானத்தைச் செயற்படுத்த உம்மிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறேன், அதற்காக உம்மை மன்றாடுகிறேன். ஓ சேசுவின் நேசமுள்ள திரு இருதயமே, இது வரை நன்றியற்றதாக இருந்துள்ளதும், என் சொந்தத் தவறால் உமது அன்பிலிருந்து இது வரை விலக்கப்பட்டிருந்ததுமான என் எளிய இருதயத்தை முற்றிலும் உம்முடையதாக்கிக் கொள்வது உம்மைப் பொறுத்தது. ஓ, உம்முடைய திரு இருதயம் என்மீதுள்ள நேசத்தால் பற்றியெரிவது போல, என் இருதயமும் உம்மீதுள்ள நேசத்தால் முழுவதுமாகப் பற்றியெரியும் வரத்தை எனக்குத் தந்தருளும். நீர் சித்தங்கொள்வதை மட்டுமே நான் சித்தங்கொள்ளும்படியாகவும், இன்று முதல் உமது திருச்சித்தமே என் செயல்கள், என் சிந்தனைகள் மற்றும் என் ஆசைகள் அனைத்தின் விதியாக இருக்கும்படியாகவும், என் சித்தம் உம்முடைய திருச்சித்தத்தோடு முழுமையாக ஐக்கியமாகும் வரத்தை எனக்குத் தந்தருளும். ஓ என் இரட்சகரே, நீர் எனக்கு நியமித்திருக்கிற எதையும் அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும்படி, இப்போது உம் திருப்பாதங்களில் விழுந்து நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற உமது வரப்பிரசாதத்தை நீர் எனக்கு மறுக்க மாட்டீர் என்று நான் நம்பியிருக்கிறேன். ஓ மாசற்ற மரியாயே, நீங்கள் எப்போதும் சேசுவின் திரு இருதயத்தோடு உங்களது மாசற்ற இருதயத்தை முற்றிலும் ஐக்கியப்படுத்தியிருந்தீர்களே; ஓ என் தாயாரே, எதிர்காலத்தில் சேசுநாதரும், நீங்களும் சித்தங் கொள்வதையே நானும் விரும்பி ஆசிக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்.

நாம் பெற்றுக்கொண்டுள்ள எல்லா வரப்பிரசாதங்களுக்காகவும், அதாவது, இரட்சணியம், தேவ அழைத்தல், ஒளி, மன்னிப்பு, சோதனைகளை எதிர்த்து நிற்பதற்கான வரப்பிரசாதம், முரண்பாடுகளையும், எதிர்ப்புகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளும் வரம் என்பது போன்ற எல்லா வரப்பிரசாதங்களுக்காகவும் சேசுவின் திரு இருதயத்திற்கு நாம் கடன்பட்டவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவருடைய உதவி இல்லாமல், நல்லது எதையும் நம்மால் செய்ய முடியாது: ""என்னாலன்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது'' (அரு.15:5). இதுவரை நீ அதிக வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அதைப் பற்றி என்னிடம் முறையிடாதே, மாறாக, என்னிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள எந்த முயற்சியும் செய்யாதிருந்த உன்னையே நீ குற்றஞ்சாட்டிக் கொள்; ""இது வரையிலும் நீங்கள் எதையும் கேட்டதில்லை. . . கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்'' (அரு.16:24). ஓ, தம்மிடம் அடைக்கலம் புகும் அனைவரிடமும் சேசுவின் திரு இருதயம் எவ்வளவு செல்வமுள்ளதாகவும், தாராள மிக்கதாகவும் இருக்கிறது! ""தம்மைக் கூவியழைக்கும் அனைவருக்கும் அவர் செல்வந்தராயிருக்கிறார்'' (உரோ.10:12). ஓ, ஏக்கத்தோடு சேசுநாதரின் உதவியைக் கேட்கும் ஆத்துமங்கள் எத்தகைய மேலான இரக்கங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்! ""ஏனெனில், ஆண்டவரே! நீர் மதுரமும், தயவும், உம்மை மன்றாடுகிற யாவருக்கும் மிகுந்த கிருபாகடாட்சமும் உள்ளவராயிருக்கிறீர்'' (சங். 85:5). ஆகவே, நாம் அனைவரும் இந்தத் திரு இருதயத்திடம் போய், நம்பிக்கையோடு கேட்போமாக, அப்போது நமக்குத் தேவையானதெல்லாம் பெற்றுக்கொள்வோம்.