இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - மிகப் பரிசுத்த கன்னிமாமரிக்கு சிறுவர்களின் பரிசுகள்

1865-ஆம் ஆண்டில், கிறீஸ்தவர்களின் சகாயமாதா தேவாலயக் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்த போது, டொன் போஸ்கோ தமது நான்கு குருக்களின் குணப்படுத்தப்பட முடியாத நோயைப் பற்றி மிகுந்த துயரப்பட்டுக் கொண்டிருந்தார். 

இந்தப் புனித குருக்களின் ஒருவர் சுவாமி ஆலாஸோனாட்டி ஆவார். இவர் சபையின் தொடக்க காலத்திலிருந்தே அவருடைய உடன் உழைப்பாளராக இருந்தார். ஆனால் பரிசுத்த அன்னை தனது மே மாதத்தில் தனது பக்தியுள்ள ஊழியருக்கு சிறிது ஆறுதல் தர வந்தார்கள். மே மாத வணக்க பக்தி ஆரட்டரியில் எல்லோராலும் மிகுந்த பக்தியார்வத்தோடு அனுசரிக்கப்பட்டு வந்தது.

இம்மாதத்தில் டொன்போஸ்கோ சபையினருக்கு ஆற்றிய உரைகளில் ஒன்று மட்டும் சபையின் காலக் கிரமப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது மே 30-ம் தேதிக்குரிய உரை யாகும். இது அனைத்திலும் அதிக மதிப்புள்ள ஓர் உரையாக இருக்கிறது. அதன் சுருக்கம் இதோ:

சிறுவர்களாகிய நீங்கள் ஓர் உயரமான, நன்கு அலங்கரிக்கப் பட்ட தேவ அன்னையின் ஒரு பீடத்தை நோக்கி பவனியாகச் செல்வதாக நான் கனவு கண்டேன். நீங்கள் எல்லோரும் அதே பாடல்களை மாதாவுக்குப் பாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் எல்லோரும் ஒரே விதமாகப் பாடவில்லை. 

பலர் அழகாகப் பாடினீர்கள், மற்றவர்கள் மோசமாகவும், சிலர் முற்றிலும் அபசுரத் திலும் பாடினீர்கள். சிலர் மௌனமாக இருந்ததையும், தங்களுக்குரிய இடத்திலிருந்து விலகிச் செல்வதையும், கொட்டாவி விட்டுக் கொண்டும், மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதையும் நான் கண்டேன்.

எல்லோரும் நம் அன்னைக்குப் பரிசுகள் வைத்திருந்தீர்கள், பெரும்பாலும் மலர்கள்தான். அந்தப் பூங்கொத்துகள் அளவிலும் வகையிலும் வேறுபட்டிருந்தன. ரோஜா, கார்னேஷன், வயலட் மற்றும் பல வகையான மலர்களாலான பூச்செண்டுகள் இருந்தன. சில சிறுவர்கள் பன்றித் தலைகள், பூனைகள், அசுத்த தேரைகள், முயல்கள், ஆட்டுக்குட்டிகள், இன்னும் இதுபோன்ற பல வகையான மிக வினோதமான பரிசுகளை வைத்திருந்தார்கள். 

ஒரு அழகான இளைஞர் பீடத்தின் அருகில் நின்றார். கூர்ந்து கவனித்த போது, அவருக்கு இறக்கைகள் இருந்ததைக் காண முடிந்தது. அவர் ஆரட்டரியின் காவல் தூதராக இருக்கலாம். சிறுவர்களாகிய நீங்கள் உங்கள் பரிசுகளை சமர்ப்பித்தபோது, அவர் அவை ஒவ்வொன் றையும் எடுத்து, பீடத்தின் மீது வைத்தார்.

முதலில் பீடத்தை அடைந்தவர்கள் மிக அழகிய பூங்கொத்து களைக் காணிக்கை செலுத்த, தேவதூதர் அதை மௌனமாக வாங்கி பீடத்தின்மேல் வைத்தார். ஆனால் மற்ற பூங்கொத்துகளிலிருந்து அவர் அழுகிய அல்லது வாசனையற்ற டாலியாக்கள், கேமல்லியாக்கள், இன்னும் இவை போன்ற மலர்களை அகற்ற வேண்டியிருந்தது. ஏனெனில் மாமரி வெறும் தோற்றத்தைக் கொண்டு திருப்தியடைவதில்லை. 

சில பூங்கொத்துகளில் முட்கள் அல்லது ஆணிகள் கூட இருந்தன. இவை துரிதமாகப் பிடுங்கப் பட்டு, வெளியே வீசப்பட்டன... ஒரு பன்றியின் தலையை வைத்திருந்த ஒரு சிறுவன் மேலேறி வந்தபோது, சம்மனசானவர் அவனிடம்: “இதை நம் இராக்கினிக்குக் காணிக்கையாக செலுத்த உனக்கு என்ன துணிச்சல்? இந்த மிருகம் அசுத்ததனம் என்னும் அருவருப்பான பாவத்தின் அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? மகா பரிசுத்த மாமரி அத்தகைய ஒரு பாவத்தை சகித்துக் கொள்ள முடியாது. ஒதுங்கி நில். நீ அவர்களுடைய பிரசன்னத்தில் நிற்கத் தகுதியற்றவன்” என்றார்.

பூனைகளை ஒப்புக்கொடுத்தவர்களிடம், தேவதூதர், “உங்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியாதா? பூனை திருட்டைக் குறிக்கிறது. அதை மாமரிக்குப் பரிசளிக்கத் துணிகிறீர்களா? தங்களுக்குச் சொந்தமில்லாததை எடுப்பவர்களும், வீட்டிலிருந்து உணவைத் திருடுபவர்களும், பகையின் காரணமாக மற்றவர்களின் ஆடைகளைக் கிழிப்பவர்களும், தாங்கள் கடமைப்பட்டபடி ஒழுங்காகப் படிக்காமல் இருப்பதன் மூலம், தங்கள் பெற்றோரின் பணத்தை வீணாக்குபவர்களும் திருடர்களேயன்றி வேறில்லை” என்றார். 

இவர்களையும் விலகிச் செல்லும்படி சம்மனசானவர் உத்தரவிட்டார். தேரைகளை சமர்ப்பித்த சிறுவர்களையும் இப்படியே அவர் கோபித்துக் கொண்டார். “தேரைகள் இடறல் என்னும் அவமானமுள்ள பாவத்தின் அடையாளமாக இருக்கின்றன. அதை நம் இராக்கினிக்குக் காணிக்கையாக்கத் துணிகிறீர்களா? விலகிப் போங்கள். அந்தத் தகுதியற்றவர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.” இந்தச் சிறுவர்களும் அவமானத்தோடு விலகிப் போனார்கள்.

சில சிறுவர்கள் தங்கள் இருதயங்களில் குத்தப்பட்ட ஒரு கத்தியோடு மேலேறி வந்தார்கள். அது தேவதுரோகத்தின் அடையாளம். “உங்கள் ஆன்மாவில் மரணம் இருப்பதை நீங்கள் உணரவில்லையா?” என்று தேவதூதர் அவர்களிடம் கேட்டார். "கடவுளின் இரக்கம் மட்டும் இல்லாதிருந்தால், நீங்கள் நித்தியத் திற்கும் இழக்கப்படுவீர்கள். மோட்சத்தின் நிமித்தமாக, அந்தக் கத்தி உங்கள் இருதயத்தினின்று அகற்றப்படச் செய்யுங்கள்” என்றார் அவர்.

இறுதியாக மீதமுள்ள சிறுவர்கள் பீடத்தை அடைந்து செம்மறிக் குட்டிகள், முயல்கள், மீன்கள், திராட்சைகள் இன்னும் சில பொருட்களைத் தங்கள் பரிசுகளாக சமர்ப்பித்தார்கள். சம்மனசானவர் அவற்றை எடுத்து நம் அன்னைக்கு முன்பாக அவற்றை வைத்தார். அதன்பின் யார் யாருடைய பரிசுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவோ, அந்த எல்லாச் சிறுவர்களையும் அவர் பீடத்திற்கு முன்பாக வரிசையாக நிறுத்தினார். ஒதுங்கி நிற்கும்படி விலக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை நான் நினைத்ததை விட மிகவும் அதிகமாயிருப்பதைக் கவனித்து, நான் மனம் வருந்தினேன். ரோஜா மலர்க்கிரீடங்கள்

இப்போது வேறு இரண்டு சம்மனசுக்கள் பீடத்தின் இரு புறமும் தோன்றினார்கள். அவர்கள் கலையழகுள்ள அலங்காரமான கூடைகள் வைத்திருந்தார்கள். அவை மிகக் கவர்ச்சியான, அதீத அழகுள்ள ரோஜா மலர்க் கிரீடங்களால் நிறைந்திருந்தன. அவை இவ்வுலகைச் சேர்ந்த ரோஜாக்கள் அல்ல, மாறாக மோட்சத்தில் வளர்க்கப்பட்டவை, அழியாமையைக் குறிப்பவை. 

இவற்றைக் காவல் தூதர் நம் அன்னையின் பீடத்திற்கு முன் வரிசையாக நின்ற எல்லாச் சிறுவர்களுக்கும் முடியாகச் சூட்டினார். அவர்களில் பலரை இதற்குமுன் நான் பார்த்ததேயில்லை என்பதைக் கவனித்தேன். குறிப்பிடத்தக்க இன்னொரு காரியமும் இங்கே இருந்தது: அந்த மிக அழகிய மலர்க் கிரீடங்களில் சில, மிக அருவருப்புக்குரியவர்களாய்த் தோன்றிய பார்க்க அசங்கியமான சிறுவர்கள் சிலருக்குச் சென்றன. 

அவர்கள் வெகு தாராளமாகக் கொண்டிருந்த மாசற்றதனமாகிய புண்ணியம் அவர்களுடைய கவர்ச்சியற்ற தோற்றத்திற்கு வெகுவாக ஈடு செய்தது. வேறு பல சிறுவர்களும் இந்தப் புண்ணியத்தைச் சொந்தமாகக் கொண்டிருந்தார்கள், என்றாலும் இதே அளவில் அல்ல. கீழ்ப்படிதலிலும், தாழ்ச்சியிலும், தேவசிநேகத்திலும் சிறந்து விளங்கிய சிறுவர்களும் தத்தம் தகுதிகளுக்கேற்ப முடிசூட்டப் பட்டனர்.

சம்மனசானவர் அதன்பின் எல்லாச் சிறுவர்களுக்கும் பின்வருமாறு உரையாற்றினார்: “இந்த அழகிய ரோஜா மலர்களால் இன்று நீங்கள் முடிசூட்டப்பட வேண்டும் என்பது நம் இராக்கினியின் ஆசையாக இருந்தது. இவை உங்களிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும், கற்பும் இவற்றை உங்களுக்காகப் பாதுகாக்கும். இந்த மூன்று புண்ணியங்களைக் கொண்டு, நீங்கள் எப்போதும் மரியாயின் இரக்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். இன்று நீங்கள் அணிந்திருக்கிற இந்தக் கிரீடங்களையும் விட அளவற்ற விதமாய் அதிக அழகாயிருக்கிற வேறொரு கிரீடத்தை ஒரு நாள் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.”

அதன்பின் நீங்கள் எல்லோரும் சேர்ந்து “ஆவே மாரிஸ் ஸ்தெல்லா - சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க” என்ற பாடலின் பல்லவியைப் பாடினீர்கள். அதன் பின் நீங்கள் லாவ்தாத்தே மரியா - “மரியாயைப் புகழுங்கள்” என்ற பாடலைப் பாடியபடி வந்த வழியே திரும்பிச் சென்றீர்கள். எவ்வளவு முழு இருதயத்தோடு நீங்கள் அந்த கீதத்தைப் பாடினீர்கள் என்றால், நான் உண்மையாகவே பிரமித்துப் போனேன். சற்று நேரத்திற்கு நான் உங்களைப் பின்தொடர்ந்தேன். அதன்பின் சம்மனசானவரால் ஒதுக்கித் தள்ளப்பட்ட சிறுவர்களைக் காணச்சென்றேன். ஆனால் அவர்கள் அங்கே இருக்கவில்லை.

என் பிரியமுள்ள குழந்தைகளே, யார் முடி சூட்டப் பட்டார்கள், யார் விலக்கப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன். விலக்கப்பட்டவர்கள் நம் அன்னைக்குப் பிரியமான பரிசுகளைக் கொண்டு வரப் பாடுபடுமாறு, நான் அவர்களைத் தனியே சந்தித்து எச்சரிப்பேன்.

நாம் சில காரியங்களைக் கவனிக்கலாம்:

1. நீங்கள் எல்லோரும் பல வகையான மலர்களை வைத்திருந்தீர்கள். ஆனால் ஒவ்வொரு பூங்கொத்தும் தவறாமல் தனக்குரிய முட்களைக் கொண்டிருந்தது. சிலவற்றில் முட்கள் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் இருந்தன. நிறைய சிந்தனைக்குப் பின், இந்த முட்கள் கீழ்ப்படியாமையின் செயல்களைக் குறிக்கின்றன என்ற முடிவுக்கு நான் வந்தேன், 

அதாவது, அதிபர் சுவாமியிடம் பணத்தைக் கொடுத்து வைப்பதற்குப் பதிலாக தானே வைத்துக் கொள்ளுதல், ஒரு இடத்திற்குப் போவதாகச் சொல்லி அனுமதி பெற்று, வேறோர் இடத்திற்குச் செல்லுதல், பள்ளிக்குத் தாமதமாக வருதல், இரகசியமாக எதையாவது சாப்பிடுதல், மற்ற சிறுவர்களின் உறங்கும் அறைகளுக்குப் போவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்திருந்தும் அங்கே செல்லுதல், விழித்தெழ வேண்டிய நேரத்திற்குப் பிறகும், படுக்கையில் புரண்டு கொண்டிருத்தல், குறிக்கப்பட்ட பக்தி முயற்சிகளை அலட்சியம் செய்தல், மௌனமாயிருக்க வேண்டிய நேரங்களில் பேசிக் கொண்டிருத்தல், புத்தகங்களை வாங்கினாலும், அனுமதிக்காக அவற்றை சமர்ப்பிக்காமல் இருத்தல், இரகசியமாகக் கடிதங்கள் அனுப்புதல் அல்லது பெறுதல், உங்களிடையே பொருட்களை விற்றல், வாங்குதல் போன்ற கீழ்ப்படியாமையின் செயல்களை இந்த முட்கள் குறிக்கின்றன.

“இல்லத்தின் விதிகளை மீறுவது ஒரு பாவமா?” என்று பலர் கேட்கலாம். இந்தக் கேள்வி பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு, என் பதில் ஓர் உறுதியான “ஆம்” என்பதுதான். அது சாவான பாவமா, அற்பப் பாவமா என்று நான் சொல்ல மாட்டேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் அதைத் தீர்மானிக்கும். ஆனால் நிச்சயமாக அது ஒரு பாவம்தான்.

இல்லத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படிவது பற்றி பத்துக் கட்டளைகள் எதுவும் சொல்லவில்லை என்று சிலர் எதிர்த்து வாதிடலாம். நல்லது, “பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப் பாயாக” என்று நான்காம் கட்டளை கூறுகிறது. பிதா, மாதா என்ற வார்த்தைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? பெற்றோரை மட்டுமல்ல, மாறாக, அவர்களுடைய இடத்தை வகிப்பவர்களையும் அவை குறிக்கின்றன. 

மேலும் “உங்கள் மேலதிகாரிகளுக்குப் பணிந்திருங்கள்” (எபி.13:17) என்று பரிசுத்த வேதாகமம் கூறவில்லையா? அவர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றால், கட்டளையிட அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்பது இதிலிருந்து விளங்குகிறது. இதனால்தான் நாம் விதிகளைக் கொண்டிருக்கிறோம். அவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிவது அவசியம்.

2. சில பூச்செண்டுகளில் மலர்களிடையே ஆணிகள், சேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணிகள் இருந்தன. இது எப்படி நிகழ முடியும்? வழக்கம் போல ஒருவன் சிறிய காரியங்களில் தொடங்கி, போகப் போக அதிக கனமான காரியங்களைச் செய்கிறான்... அவன் முறையற்ற சுதந்திரங்களைத் தனக்குத்தானே அனுமதித்துக் கொண்டு சாவான பாவத்தில் விழுகிறான். இவ்வாறு தான் அந்தப் பூங்கொத்துகளுக்குள் வர ஆணிகள் எப்படியோ வழி கண்டுபிடித்துக் கொண்டன. “நீங்கள் தேவசுதனை மீண்டும் சிலுவையில் அறைகிறீர்கள்” (எபி.6:6) என்று அர்ச். சின்னப்பர் கூறுவது போல, இப்படித்தான் அவை மீண்டும் இயேசுவைச் சிலுவையில் அறைகின்றன.

3. பல பூங்கொத்துகளில் அழுகிய அல்லது வாசனையற்ற மலர்கள் இருந்தன. இவை சாவான பாவ அந்தஸ்தில் செய்யப் படுபவையும், அதனால் பேறுபலன்களைப் பெற்றுத்தர முடியாதவையுமான நற்செயல்களை, அல்லது பேராசை போன்ற மனித நோக்கங்களுக்காகச் செய்யப்படும் நற்செயல்களை, அல்லது வெறுமனே ஆசிரியர்களையும், மேலதிகாரிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் செய்யப்படும் நற்செயல்களைக் குறிக்கின்றன. 

அதனால்தான் சம்மனசானவர் நம் அன்னைக்கு இத்தகைய காரியங்களைப் பரிசளிக்கத் துணிந்ததற்காக அந்தச் சிறுவர்களை கடிந்து கொண்ட பிறகு, தங்கள் பூங்கொத்துகளில் உள்ள அத்தகைய மலர்களை அகற்றும்படி அவர் அவர்களைத் திருப்பி அனுப்பினார். இதை அவர்கள் செய்த பிறகே, அவர் அவற்றை ஏற்றுக் கொண்டு, பீடத்தின் மீது வைத்தார்... பீடத்திற்குத் திரும்பி வந்தபோது, இந்தச் சிறுவர்கள் எந்த ஒரு வரிசையையும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் தங்கள் பூச்செண்டுகளை சீர்ப்படுத்திய உடனேயே தேவதூதரிடம் ஏறிச் சென்றார்கள், அதன்பின் முடிசூட்டப்பட இருந்தவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

இந்தக் கனவில் நான் உங்கள் கடந்த காலமும், உங்கள் எதிர் காலமுமாகிய இரண்டு காலங்களையும் கண்டேன். உங்களில் பலரிடம் நான் ஏற்கனவே அது பற்றிப் பேசி விட்டேன். அதே போல மீதமுள்ளவர்களிடமும் நான் பேசுவேன். இதற்கிடையே, என் குழந்தைகளே, தான் மறுக்க வேண்டியிராத பரிசுகளையே மாசற்ற கன்னிகை எப்போதும் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.