இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புதிய மறை மாவட்டத்தில் வேளாங்கண்ணி

1949-ஆம் ஆண்டில் மைலாப்பூர் மறை மாவட்ட நிர்வாகம் 'பத்ருவாதோ' என்று அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய அரசு கண்காணிப்பிலிருந்து, 'நற்செய்திப் பணி பரிசுத்த சங்கத்தின்' பார்வையின் கீழ் மாற்றப்பட்டது.

1952-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் தஞ்சாவூர் தனி மறை மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அவ்வமையம் சென்னை - மயிலை பேராயராக இருந்த மேதகு லூயிஸ் மத்தியாஸ், S. D. B , அவர்கள் தஞ்சாவூர் மறை மாவட்ட 'அப்போஸ்தலிக்க ஆளுநராக' நியமனம் பெற்றார்.

1953-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 19-ஆம் நாள் தஞ்சாவூர் புதிய மறை மாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு R. ஆரோக்கியசாமி சுந்தரம் D. D, L.C. L., M. A., அவர்க ள் திருநிலை பெற்றுப் பொறுப்பேற்றார். “இயேசு மரியின் இதயங்களே எனது நம்பிக்கை" என்பது இவர் ஏற்ற விருது வாக்கு. பரிசுத்த தந்தை 12-ஆம் பத்திநாதரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட புதிய தஞ்சாவூர் மறை மாவட்டத்தை, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு ஒப்புக் கொடுத்தார். வேளை நகர் அன்னையே இம்மறை மாவட்டத்தின் இரண்டாம் பாதுகாவலியாக விளங்குகின்றாள்.

1954-ஆம் ஆண்டு மரியன்னையின் ஆண்டு. திருத்தலம் விழாக்கோலம் பூண்டது. தமிழகத்தின் மேதகு பேராயர்களும், ஆயர்களும் ஆலயம் சென்று மறையுரை ஆற்றித் திருப்பலி நிறைவேற்றிச் சிறப்பித்தார்கள், பல்லாயிரக் கணக்கில் மக்கள் சூழ்ந்து வந்து அன்னையின் புகழ் பாடி மகிழ்ந்தனர்.