இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலை ஒரு ரோஜா மொட்டு - சிறுவர்களுக்காக

அன்புள்ள சிறிய நண்பர்களே, இந்த அழகிய ரோஜா மொட்டு உங்களுக்கு அது என்ன? உங்கள் ஜெபமாலையில் ஒவ்வொரு மணியும் ஒரு ரோஜா மொட்டுதான். அது உங்களுக்கு மிகவும் சிறிய பொருளாகக் காணப்படலாம். ஆனால் இந்த ஜெபமாலை மணி எவ்வளவு அருமை வாய்ந்தது! நீங்கள் அருள் நிறை மந்திரத்தை நன்றாகச் சொல்வீர்களானால், இந்த அதிசய மொட்டு ஒரு அழகிய ரோஜாவாக விரியும்.

ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களை தினமும் நீங்கள் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பது கடினம்தான். ஆனால் நீங்கள் அன்புடனும், பக்தியுடனும், ஐந்து தேவ இரகசியங்களை நன்றாக ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் ஜெபமாலைதான் நீங்கள் சேசுவுக்கும் மாதாவுக்கும் சூட்டும் ரோஜா மலர் மாலையாகும். அன்புக் குழந்தைகளே, நான் மேலே கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கவனியுங்கள். அத்தோடு உங்களுக்கு நான் இப்போது சொல்ல விரும்புகிற உண்மைக் கதையை கவனமுடன் கேளுங்கள். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இரு சின்ன சகோதரிகள் தங்கள் வீட்டின் முன்னாலிருந்து பக்தியாக, மிக நன்றாக ஜெபமாலை சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகிய பெண் அங்கு தோன்றினாள். அச்சிறுமிகளில் இளையவளின் பக்கம் சென்றாள். சிறுமிக்கு வயது ஆறு அல்லது ஏழுதான் இருக்கும். அந்தப் பெண் அச்சிறுமியின் கரத்தைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டாள். மூத்த சிறுமி திகிலடைந்தாள். தன் தங்கையை எல்லா இடத்திலும் தேடினாள். எங்கும் அவளைக் காணாததால் மனம் உடைந்து வீட்டிலுள்ள தன் பெற்றோரிடம் சென்று தங்கையை யாரோ பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்று கூறினாள். பாவம் அவள் பெற்றோர்கள். மூன்று நாளாக பிள்ளையைத் தேடினார்கள் காணவில்லை!

மூன்றாம் நாள் மாலையில் காணாமல் போன பிள்ளை, வீட்டின் தலை வாசலில் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்து நிற்பதைக் கண்டார்கள். உடனே, 'நீ எங்கேயம்மா போயிருந்தாய்? என்று ஆவலுடன் கேட்டார்கள். நான் ஜெபமாலை சொன்னேனே அந்த அம்மா அங்கு வந்து என்னை ஒரு அழகான இடத்திற்குக் கூட்டிச் சென்று அங்கே இனிமையான பண்டங்களெல்லாம் எனக்கு உண்ணக் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, மிகவும் அழகிய ஒரு குழந்தைப் பாலனை என் கையில் தந்தார்கள். அப்பாலகனை திரும்பவும் திரும்பவும் நான் முத்தமிட்டேன்' என்று கூறினாள் அச்சிறுமி.

இச்சிறுமியின் பெற்றோர்கள் சமீபத்தில்தான் கத்தோலிக்கராகியிருந்தனர். தங்களுக்கு ஞான உபதேசம் கற்பித்து, பரிசுத்த ஜெபமாலையைப் பற்றியும் சொல்லிக் கொடுத்த சேசு சபைக்குருவை உடனே வரவழைத்தனர். நடந்ததையெல்லாம் அக்குருவிடம் கூறினர். அந்தக் குருவே இந்நிகழ்ச்சியை என்னிடம் நேரில் கூறினார். இது நடந்தது பராகுவே நாட்டில்.

அன்பான சிறுவர்களே, இந்தக் குழந்தைகள் செய்தது போல் நீங்களும் ஒவ்வொரு நாளும் ஜெபமாலையைச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் மோட்சம் சென்று அங்கே சேசுவையும் மாதாவையும் காண்பீர்கள். இந்த உலகிலேயே அவர்களை நீங்கள் காண முடியாவிட்டாலும், இறந்த பின் நிச்சயம் அவர்களை எக்காலமும் காண்பீர்கள். ஆமென், அப்படியே ஆகட்டும்.

ஆதலால் கற்றவரும் கல்லாதாரும், நீதிமான்களும் பாவிகளும், பெரியோர் சிறியோரும், எல்லா மாந்தரும் இரவும் பகலும் ஜெபமாலை ஜெபித்து சேசுவையும் மரியாயையும் வாழ்த்திப் போற்றுவார்களாக! "உங்களுக்காக அதிகம் உழைத்த மரியாயிக்கு மங்கள் சொல்லுங்கள்" (ரோ . 16:6).