பலிப்பொருள் என்பது கடவுளுக்குப் பலியாகச் செலுத்தப்படும் ஒரு காணிக்கை ஆகும். ஆனாலும் பலி என்னும் இந்த வார்த்தைக்கு வேறு ஓர் அர்த்தமும் உண்டு. அதாவது தீமை செய்கிற ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் என்பதுதான் அந்த அர்த்தம். சேசு இந்த இரு அர்த்தங்களின் படியும் நம் பாவங்களுக்கான பலிப்பொருளாக இருக்கிறார் - அவர் நம் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிறார், அவர் நம் பாவங்களால் காயப்படுத்தப்படுகிறார்.
பாவம் சேசுவின் திவ்ய இருதயத்தை எவ்வாறு காயப்படுத்த முடியும் என்பது ஒரு பரம இரகசியமாக இருக்கிறது. இருந்தாலும், பாவிகள் தங்கள் பாவங்களால் தம்மைக் காயப்படுத்துகிறார்கள் என்பதுதான் கடந்த நூற்றாண்டுகளில் பல அர்ச்சிஷ்டவர்களிடம் அவர் தெரிவித்த முறையீடாக இருக்கிறது. இவ்விஷயத்தில் அர்ச். சின்னப்பரின் வார்த்தைகளும் கூட இரகசியத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன. ஏனென்றால் பாவிகள் மனுமகனைப் புதிதாக சிலுவையில் அறைகிறார்கள் (எபி. 6:6) என்று அவர் சொல்கிறார். அது அவ்விதமே இருந்தாலும், நம்மேல் நம் இரட்சகர் கொண்ட நேசமே நிச்சயமாக, அவர் நம் பாவங்களால் இவ்வளவு துன்பப்படக் காரணமாயிருக்கிறது. ஒரு பயங்கர விபத்தில் சிக்கிக் கொண்ட தன் பிரியமுள்ள குழந்தையின் வேதனையான மரணத்தை முன்னுணர்கிற ஒரு நேசமுள்ள தாயைப் போல, நம் பாவங்களின் பயங்கரமுள்ள விளைவுகளை அவர் காண்கிறார். ஒரு நல்ல தாய் தானே அந்தக் காயங்களைக் கொண்டிருக்கும்போது அவதிப்படுவதை விட, தன் குழந்தையின் வேதனையைப் பற்றியே அதிகத் துன்பப்படுகிறாள். ஆகவே, நாம் பாவம் செய்து, நரகத்தின் வாதைகளை நம்மீது வருவித்துக் கொள்ளும்போது, நேசத்தின் காரணமாக, சேசு கசப்பான துன்பத்தை அனுபவிக்கிறார். ஆனால் அதற்குக் காரணம் சாவான பாவம் மட்டுமல்ல. சாவான பாவத்திற்கு இட்டுச் செல்கிற பல காரியங்கள் இருக்கின்றன. இவையும் கூட சேசுவின் திரு இருதயத்தைக் காயப்படுத்துகின்றன. ஞான அசமந்தம், சுய நேசம், வெதுவெதுப்பு ஆகிய இவையெல்லாம் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. ஆனாலும் மிகக் கூர்மையான கொடுக்கைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிற ஒரு பாவம் இருக்கிறது. பார்வைக்கு பக்தியுள்ளவர்களாகத் தோன்றுகிற பாவிகளால் அது கட்டிக் கொள்ளப்படுகிறது. குற்றவாளிகளால் கட்டிக் கொள்ளப்படுகிற பல அவமானச் செயல்களையும் விட அதிகமாக அது தம்மைக் காயப்படுத்துகிறது என்று நம் இரட்சகர் கூறினார். இருபது நூற்றாண்டுகளுக்கு முன் அவர் இங்கே இருந்தபோது செய்தது போலவே, காலகாலமாக பல அர்ச்சிஷ்டவர்களிடம் இதுபற்றி அவர் முறையிடுகிறார். அது நம்பிக்கையின்மையின் பாவம். ஓ, குறைவான நம்பிக்கை உள்ளவர்களே! அவருடைய நேச இருதயம் உங்கள் மீது பழிதீர்த்துக் கொள்வதற்காக சாட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. பிறகு ஏன் அவர் நம்மைக் காயப்படுத்திவிடுவார் என்பது போல நாம் நடந்து கொள்ள வேண்டும்? ஒரு பாவியை அணைத்துக் கொள்வதின் மகிழ்ச்சியை இரத்தம் சிந்தும் அவருடைய இருதயத்திற்கு நாம் ஏன் தரக் கூடாது? அவருடைய தெய்வீகப் பாதங்களை நெருங்கி வந்து அவற்றை முத்தமிட்டு, நேசத் துயரத்தின் கண்ணீரால் அவற்றைக் கழுவ நாம் ஏன் பயப்பட வேண்டும்? அவர் நம் கடந்த காலப் பாவங்களை முழுவதுமாக மன்னித்து விட்டாரா, இல்லையா என்ற இவ்வளவு கவலைகள் எதற்காக? அந்தக் கவலைகள் அவரை நோகச் செய்கின்றன! அவரது இரக்கத்தில் நீ நம்பிக்கை கொள்ளவில்லை என்று அவை அவருக்குக் காட்டுகின்றன. ஓர் இரக்கமுள்ள கடவுள் மன்னிப்பது மாத்திரமல்ல, மாறாக, பாவியானவன் மீண்டும் நம்பிக்கை கொள்ள அவனுக்கு உதவும்படி, இப்போது முன்னை விட அதிக தயவோடு இருக்கிறார். ஓ, இவ்வளவு இரக்கமும் தயவும் உள்ளவராயிருந்தும் நம்பப்படாதிருக்கிற சேசுவே! நம் அளவற்ற நம்பிக்கையை சம்பாதிக்கும்படி அவர் இன்னும் அதிகமாக என்னதான் செய்துவிட முடியும்? ஓ சேசுவே, எங்களைக் கொண்டே உம்மைப் பற்றியும் நாங்கள் தீர்மானம் செய்கிறோம். மனிதப் பிறவிகள் எங்கள் கடந்த காலக் குற்றங்களை எப்படி ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள், தங்கள் குளிர்ந்ததன்மையால் அவற்றை எப்படி எங்களுக்கு நினைவூட்டுகிறார்கள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனாலும், இவ்வளவு அரைகுறையாக நீர் மன்னிக்கிறீர் என்று நினைப்பது அநீதியும், அநேகமாக தேவ நிந்தையுமாயிருக்கிறது. எங்கள் வழிகளின் தப்பிதத்தை நாங்கள் கண்டுபிடித்து, உம் இரக்கமுள்ள இருதயத்தில் அளவற்ற நம்பிக்கை கொள்வதன் மூலம் உமக்கு மகிழ்ச்சியளிக்க எங்களுக்கு உதவுவீராக.
பாவங்களின் பலி - அது எனக்காக கல்வாரியின் மீது ஒப்புக்கொடுக்கப்பட்டது, இன்று எனக்காக பலிபீடத்தின மீது ஒப்புக்கொடுக்கப்படுகிறது! என் பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு நான் ஒப்புக்கொடுக்கக் கூடிய இத்தகைய ஒரு கொடையைக் கொண்டிருப்பது எத்தகையது என்பதை நான் எப்போதாவது புரிந்துகொள்ள முடியுமா? சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையானவரை என் பாவங்களுக்கான பலிப்பொருளாக நான் கொண்டிருக்கவில்லை என்றால், பரலோகத்திற்கான என் நம்பிக்கை என்னவாக இருக்கும்? அவரே என் பாவங்களுக்குரிய இரத்தப் பலியாக இருந்தார். என் அயலானின் பாவங்களுக்கான மகிழ்ச்சியுள்ள பலியாக இருக்கும்படி அவர் என்னிடம் கேட்கிறார். அவர் நமக்காகத் துன்பப்பட்டதை விட அதிகமாக நாம் மற்றவர்களுக்காகத் துன்பப்பட வேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கவில்லை. பாவத்தைப் பரிகரிக்கும்படி நம்மால் எதையாவது, எந்த ஒரு சிறிய காரியத்தையாவது செய்ய முடியாதா? தெய்வீக நேசராகிய அவர் இரந்து மன்றாடியபடி போகிறார். நம் கதவுகளை அவர் தட்டுகிறார். காய்ந்து வெடித்திருக்கிற தம் உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ள, நேசத்தின் ஒரு சில துளிகளை அவர் கேட்கிறார். நம் நேசத்திற்காக அவர் தாகம் கொள்கிறார். இத்தகைய ஒரு தெய்வீக நேசரை நாம் மறுக்க முடியுமா? ஆனால் கடந்த காலத்தில் நாம் கொடூரமானவர்களாக இருந்திருக்கிறோம். நாம் அவரை மறுதலித்திருக்கிறோம். ஒரு சர்வேசுரனாக இருக்கிறவர் பிச்சைக்காரராகி, நேசத்திற்காகக் கெஞ்சி மன்றாடும் அளவுக்குத் தம்மையே தாழ்த்திக் கொள்ளும்போது, நேசத்திற்கான அந்த வேண்டுகோளைக் கேட்க மறுக்கும் அளவுக்கு நாம் இவ்வளவு கல்லான இருதயம் உள்ளவர்களாகவும், இவ்வளவு கொடூரமானவர்களாகவும், இவ்வளவு உணர்வற்றவர்களாகவும் இருக்கலாமா? வாருங்கள், நம் நிமித்தமாக ஒரு மூடராக ஆகும் அளவுக்கு நம்மை நேசிக்கிற சர்வேசுரனுக்கு நம் முழு நேசத்தையும் தருவோமாக.
பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!