இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவின் மீதான மரியாயின் நேசம் எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அவ்வளவுக்கு அவர்களுடைய வியாகுலங்கள் பெரிதாயிருந்தன!

தியெஸ் என்பவர் குறிப்பிடுவது போல, மற்ற எல்லா வேதசாட்சிகளும் தங்கள் வேதசாட்சியத்தின் கருவியோடு சித்தரிக்கப்படுகிறார்கள். அர்ச். சின்னப்பர் ஒரு வாளோடும், அர்ச். பெலவேந்திரர் எக்ஸ் வடிவ சிலுவையோடும், அர்ச். லாரென்ஸ் இரும்புக் கட்டிலோடும் சித்தரிக்கப்படுகிறார்கள் ஆனால் மாமரி இறந்த தன் திருமகனைத் தன் திருக்கரங்களில் தாங்கியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஏனெனில் சேசுவே, அவர் மட்டுமே அவர்களுடைய வேதசாட்சியத்தின் கருவியாக இருக்கிறார். அவர் மீது அவர்கள் கொண்டுள்ள நேசமே அதற்குக் காரணம். நான் இப்போது சொன்ன அனைத்தையும் அர்ச். விக்டரின் ரிச்சர்ட் என்பவர் ஒரு சில வார்த்தைகளில் உறுதிப்படுத்துகிறார். "மற்ற வேதசாட்சிகளில் அவர்களது அன்பின் மிகுதி அவர்களது வேதசாட்சியத்தின் வேதனைகளைத் தணியச் செய்தது. ஆனால் பரிசுத்த கன்னிகையில், அவர்களுடைய அன்பு எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அந்த அளவுக்கு அவர்களுடைய துன்பம் பெரிதாயிருந்தது, அவர்களுடைய வேதசாட்சியம் அதிகக் கொடூரமானதாக இருந்தது'' என்று அவர் கூறுகிறார்.

நாம் ஒரு காரியத்தை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதை இழக்கும்போது நாம் அதிக வேதனைப் படுகிறோம். ஒரு பொதி மிருகத்தை இழக்கும்போது நாம் துக்கப் படுவதை விட ஒரு சகோதரன் இறக்கும்போது அதிக துக்கப்படுகிறோம். ஒரு நண்பனின் மரணத்தை விட ஒரு மகனின் மரணம் ஒருவனுக்கு அதிகத் துயரம் தருகிறது. இனி, "மாமரியின் திருமகனின் மரணத்தில் அவர்களது துக்கத்தின் மிகுதியை நாம் புரிந்து கொள்வதற்கு, அவர்கள் அவர் மீது கொண்டுள்ள நேசத்தின் மிகுதியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று கொர்னேலியுஸ் ஆ லாப்பிதே கூறுகிறார். ஆனால் அந்த அன்பை யாரால் அளவிட முடியும்? ""மரியாயின் இருதயத்தில் சேசுவின் மீது இரண்டு வகையான நேசங்கள் இணைந்திருந்தன. அவை: சுபாவத்திற்கு மேலான நேசம்: இதைக் கொண்டு அவர்கள் அவரைத் தன் கடவுளாக நேசித்தார்கள்; இரண்டாவது, சுபாவமான நேசம்: இதைக் கொண்டு மாமரி அவரைத் தன் மகனாக நேசித்தார்கள்'' என்று முத். அமதேயுஸ் கூறுகிறார். இந்த இரண்டு நேசங்களும் மாமரியில் இணைந்து ஒன்றாயின. ஆனால் அது எப்பேர்ப்பட்ட மிகப் பெரும் நேசமாக இருந்தது என்றால், ஒரு மாசற்ற சிருஷ்டிக்கு எவ்வளவு அதிகமாக சாத்தியப்படுமோ, அந்த அளவுக்கு திவ்விய கன்னிகை அவரை நேசித்தார்கள் என்று பாரிஸின் வில்லியம் என்பவர் கூறுகிறார். இதன் காரணமாக, அர்ச். விக்டரின் ரிச்சர்ட் என்பவர், "மாமரியின் அன்புக்கு ஒப்பான வேறு அன்பு இல்லை என்பது போலவே, அவர்களுடைய வியாகுலத்திற்கு ஒப்பான வேறு வியாகுலமும் இல்லை'' என்கிறார். தன் மகன் மீது மாமரி கொண்டுள்ள அன்பு இவ்வளவு பிரமாண்டமானதாக இருக்கிறது என்றால், மரணத்தால் அவரை இழந்து போனதில் அவர்கள் அனுபவித்த துக்கமும் பிரமாண்டமானதாகவே இருந்தது. ""எங்கே அனைத்திலும் பெரிதான அன்பு உள்ளதோ, அங்கே அனைத்திலும் பெரிதான துயரமும் உள்ளது'' என்கிறார் அர்ச். பெரிய ஆல்பெர்ட்.

இப்போது சிலுவையின் மீது இறந்து கொண்டிருக்கும் தன் திருமகனுக்கு அருகில் தேவதாயார் நின்று கொண்டிருப்பதாகவும், எரேமியாஸின் வார்த்தைகளைத் தனக்குப் பொருத்தி, நம்மை நோக்கி, "வீதி கடக்கும் நீங்களெல்லோரும் நின்று, என் உபாதைக்குச் சமமான உபாதையுண்டோ என்று பாருங்கள்'' என்று சொல்வதாகவும் நாம் கற்பனை செய்வோமாக. ஓ, பூமியில் உங்கள் வாழ்நாட்களைச் செலவிடுபவர்களே, என் மீது பரிதாபப் படாதீர்கள். ஒரு கணம் நின்று என்னை நோக்கிப் பாருங்கள், ஏனெனனில் இப்போது என் கண்களுக்கு முன்பாக இறந்து கொண்டிருக்கிற என் நேச மகனை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; அதன்பின் கஸ்திப்படுபவர்கள் மற்றும் வாதிக்கப்படுபவர்கள் அனைவரிலும், என் துயரத்திற்கு இணையான துயரம் எங்காவது உண்டா என்று பாருங்கள். அர்ச். பொனவெந்தூர் தம் அன்னைக்குப் பதில் மொழியாக, ""இல்லை, ஓ அனைத்துத் தாய்மாரிலும் அதிகமாகத் துன்பப்பட்ட தாயாரே, உங்களுடையதை விட அதிகக் கசப்பான துயரத்தை வேறு எங்கும் காண முடியாது'' என்கிறார். ஆ, "சேசுவை விட அதிகம் இனிமையுள்ள மகன் உலகில் ஒருபோதும் இருந்ததில்லை. அவ்வாறே மாமரியை விட அதிகக் கனிவோடு தன் மகனை நேசித்த தாயும் உலகில் ஒருபோதும் இருந்ததில்லை! ஆனால் மாமரியின் அன்புக்கு ஈடான அன்பு எதுவும் உலகில் ஒருபோதும் இருந்ததில்லை என்பதால், மாமரியின் துயரத்திற்கு இணையான ஒரு துயரத்தை இவ்வுலகில் எப்படிக் காண முடியும்?'' என்று அர்ச். லாரென்ஸின் ரிச்சர்ட் கூறுகிறார்.

ஆகவே, "மாமரியின் வியாகுலங்கள் ஒன்றிணைந்த சகல வேதசாட்சிகளின் வாதைகளையும் விட அதிகப் பெரிதாயிருந்தன என்று சொல்வது மிகக் குறைவாக மட்டுமே இது பற்றிச் சொல்வதாக இருக்கிறது'' என்று அர்ச். இல்டஃபோன்ஸ் உறுதிப்படுத்த சற்றும் தயங்கவில்லை. அர்ச். ஆன்செல்ம் இதன் தொடர்ச்சியாக, ""பரிசுத்த வேதசாட்சிகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கொடிய வாதைகள், மரியாயின் வேதசாட்சியத்தோடு ஒப்பிடப்படும்போது, அவை மிக அற்பமானவையாக அல்லது வெறும் ஒன்றுமில்லாமையாக இருக்கின்றன'' என்கிறார். மேலும், ""ஏர யன் தனது ஒளியில் மற்ற எல்லாக் கிரகங்களையும் விஞ்சியிருப்பதுபோல, மரியாயின் துன்பங்கள் மற்ற எல்லா வேதசாட்சிகளின் எல்லாத் துன்பங்களுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன'' என்று அர்ச். செலூசியா பேசில் எழுதுகிறார். தாந்தை பினாமோன்ட்டி என்பவர் ஓர் அழகிய உணர்வோடு இதை முடித்து வைக்கிறார். இந்த மகா மென்மையும், அன்புமுள்ள தாயார் சேசுவின் திருப்பாடுகளில் கொண்டிருந்த வியாகுலம் எவ்வளவு பெரிதாயிருந்தது என்றால், மனிதனாக அவதரித்த கடவுளின் சாவுக்கு அவர்கள் மட்டுமே போதுமான அளவு தயவிரக்கம் கொள்ள முடிந்தது என்று அவர் எழுதுகிறார்.