இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடலில் தோன்றிய இரு தூண்கள்!

1862 மே 14 அன்று, அப்போதுதான் நிறுவப்பட்டிருந்த சலேசிய சபையின் இருபத்தாறு உறுப்பினர்களின் முதல் துறவற வார்த்தைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் மகிழ்ச்சி டொன் போஸ்கோவுக்குக் கிடைத்தது.

அதன்பின் மீதமுள்ளவர்கள் மத்தியில் புதிதாய் வார்த்தைப் பாடுகள் கொடுத்தவர்களிடம் அவர், கடவுளின் சித்தத்தால் சலேசிய சபை செழித்து வளரும் என்பதற்கான மிக நிச்சயமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார். அவர்களிடம் பேசிய போது, அவர் ஓர் அசாதாரணமான திருப்தியை வெளிப்படுத்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு, மே 30 அன்று, அவர் பின்வரும் கனவை விவரித்தார். அது பல எதிரிகளுக்கு எதிராக திருச்சபை நடத்தும் போர்களையும், பாப்பரசரின் துன்பங்களையும், திவ்விய நற்கருணை பக்தியின் வழியாகவும், கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் மீதான பக்தியின் வழியாகவும் வரும் இறுதி வெற்றியையும் பற்றியதாக இருக்கிறது.

நான் உங்களுக்கு ஒரு கனவைக் கூற விரும்புகிறேன். கனவு காண்பவன் அதில் தன் அறிவைப் பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். எப்படியிருந்தாலும், என் பாவங்கள் உங்கள் அனைவரையும் விலகியோடச் செய்யும் என்றும், இந்த இல்லம் இடிந்து விழுந்து விடும் என்றும் நான் பயப்படவில்லை என்றால், என் பாவங்களையும் கூட உங்களிடம் சொல்ல நான் பயப்பட மாட்டேன். அப்படிப்பட்ட நான், இதை உங்கள் ஆன்ம ஆதாயத் திற்காகச்சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் நான் இந்தக் கனவைக் கண்டேன்.

நீங்கள் என்னோடு கடற்கரையில் அல்லது அதை விட மேலாக, தனிமையான ஒரு பாறையின் மீது இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பாதங்களுக்குக் கீழ் உள்ள பாறையைத் தவிர வேறு நிலப்பகுதி எதுவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை . அந்தப் பரந்த நீர்ப்பரப்பு முழுவதன் மேலும் நீங்கள் போருக்குத் தயாராக இருக்கிற எண்ணற்ற கப்பல் படைகளைக் காண்கிறீர்கள். கப்பல்களின் முன்னணியங்கள் கூர்மையான, ஈட்டி போன்ற முனைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் அவை எதன் மீது இடித்தாலும் அவற்றைக் குத்தித் துளைத்து, முற்றிலுமாக நாசம் செய்து விடக்கூடியவையாக இருந்தன. இந்தக் கப்பல்களில் பீரங்கிகளும், ஏராளமான துப்பாக்கிகளும், வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களும், எல்லா விதமான வேறு படைக்கலன்களும் இருந்ததோடு புத்தகங்களும் இருந்தன. அவை தங்களை விட மிகப் பெரியதும், மிக உயரமானதுமாகிய ஒரு கப்பலுக்கு எதிராக முன்னேறிச்சென்று, தங்கள் முன்னணியத்தைக் கொண்டு அதை மோத, அல்லது அதை எரித்து விட, அல்லது ஏதாவது ஒரு வழியில் தன்னால் முடிந்த எல்லாத் தீங்கையும் அந்தக் கப்பலுக்குச் செய்து விட முயல்கின்றன. 


திருச்சபையாகிய கப்பல்

அந்த கம்பீரமானதும், முழுமையான ஆயுதங்களைக் கொண்டிருப்பதுமான கப்பலுக்குப் பாதுகாப்பாக, பல சிறிய கப்பல்கள் இருக்கின்றன. இவை அந்தப் பெரிய கப்பலிலிருந்து சமிக்ஞை மூலம் கட்டளைகளைப் பெற்று, தங்களை எதிர்த்துப் போரிடும் கப்பற்படையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன. 


இரண்டு தூண்கள்

கடலின் மிக விஸ்தாரமான பரப்பின் மத்தியில் மிக உயரமானவையும், மிகப் பலமானவையுமான இரண்டு தூண்கள் எழுகின்றன. இவை ஒன்றுக்கொன்று சற்று தூரத்தில் இருக்கின்றன. ஒரு தூணின் மீது அமலோற்பவக் கன்னிகையின் திருச்சுரூபம் ஒன்று இருக்கிறது. அந்தச் சுரூபத்தின் பாதங்களிலிருந்து ஒரு பெரிய அறிவிப்புப் பலகை தொங்குகிறது. அதில் “ஆவ்க்ஸிலியும் க்றீஸ்தியானோரும் - கிறீஸ்தவர்களின் சகாயம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தூணை விட மிக உயரமாகவும், பெரியதாகவும் இருக்கும் மற்றொரு தூணின் மீது அந்தத் தூணின் அளவுக்குப் பொருத்தமான பெரிய அளவுள்ள ஒரு தேவ அப்பம் நிற்கிறது. அதன்கீழே மற்றொரு அறிவிப்புப் பலகை தொங்குகிறது. அதன்மீது “ஸாலுஸ் க்ரெதெந்த்ஸியும் - விசுவாசிகளின் மீட்பு” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 


பரிசுத்த பிதா பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசரே அந்தப் பெரிய கப்பலின் தலைமை மாலுமியாக இருக்கிறார். அவர் எதிரிகளின் கோபவெறியையும், தமது விசுவாசிகள் தாங்கள் இருக்கக் காணும் தீமைகளையும் கண்டு, ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும்படியாகவும், என்ன செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்வதற்காகவும், சிறிய கப்பல்களின் தலைமை மாலுமிகளைத் தம்மிடம் அழைக்க முடிவு செய்கிறார். 


ஆலோசனைக் கூட்டத்தில்

எல்லாக் கப்பல் தலைவர்களும் பெரிய கப்பலில் ஏறி பாப்பரசரைச் சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். அவர்கள் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதனிடையே காற்றும், அலைகளும் ஒரு புயலாக உருவெடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்கள் சொந்தக் கப்பல்களைக் கட்டுப்படுத்தும்படி திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

அதன்பின் சற்று நேரம் அமைதி திரும்புகிறது. பாப்பரசர் இரண்டாவது முறையாக கப்பல் தலைவர்களைத் தம்மைச் சுற்றி ஒன்றுகூட்டுகிறார். தலைமைக் கப்பலோ தனது தடத்தில் முன்னேறிச் செல்கிறது. ஆனால் அந்த அச்சத்திற்குரிய புயல் மீண்டும் தாக்குகிறது.

பாப்பரசர் கப்பலின் சுக்கான் அருகில் நிற்கிறார், அந்த இரண்டு தூண்களை நோக்கித் தம் கப்பலைச் செலுத்த அவர் தம் ஆற்றல்களையெல்லாம் செலவழிக்கிறார். அந்தத் தூண்களின் உச்சி களிலிருந்தும், அவற்றின் ஒவ்வொரு புறத்திலிருந்தும் சங்கிலிகளால் கட்டப்பட்ட எண்ணற்ற நங்கூரங்களும், பெரிய கொளுவிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.


போர்

எதிரிக் கப்பல்கள் அனைத்தும் அதைத் தாக்க வருகின்றன. அவை அதைத் தடுத்து நிறுத்தவும், அதை மூழ்கடித்து விடவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. சில கப்பல்கள் தங்களில் நிறைந்திருக்கிற எழுத்துக்களை அல்லது புத்தகங்களை அல்லது எரியக்கூடிய பொருட்களைக் கொண்டு தாக்குகின்றன. மற்றவை பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும், தங்கள் கூர்மையான முகப்புகளையும் கொண்டு தாக்குகின்றன. போர் ஈவிரக்கமின்றி முன் எப்போதையும் விட அதிக தீவிரமாக நடக்கிறது. எதிரிக் கப்பல்களின் கூரான முன்னணியங்கள் வன்மையாக வந்து மோது கின்றன. ஆனால் அவற்றின் முயற்சிகளும், மோதலும் பயனற்றுப் போகின்றன. அவை வீணாக முயற்சி செய்கின்றன, தங்கள் உழைப்பு மற்றும் போர்த் தளவாடங்கள் முழுவதையும் அவை வீணாக்கு கின்றன. பெரிய கப்பலோ பாதுகாப்பாகவும், அலுங்காமலும் தன் வழியில் முன்னேறிச் செல்கிறது. சில சமயங்களில் மிகக் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி, அதன் பக்கவாட்டப் பகுதிகளில் பெரிய, ஆழ்ந்த பிளவுகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தத் தீங்கு நடந்தவுடன் ஒரு மென்மையான தென்றல் காற்று இந்த இரண்டு தூண்களிலிருந்தும் வீச, உடைவுகள் மூடிக் கொள்கின்றன, பிளவுகள் உடனடியாக மறைந்து போகின்றன. 


எதிரியின் அழிவு

இதனிடையே, தாக்குபவர்களின் பீரங்கிகள் வெடித்துச் சிதறுகின்றன, துப்பாக்கிகளும், மற்ற போர்க் கருவிகளும், கூரான முன்னணியங்களும் உடைக்கப்படுகின்றன. பல கப்பல்கள் சிதறுண்டு, கடலில் மூழ்குகின்றன. அதன்பின் கொடிய வெறி கொண்ட எதிரிகள் கைக்குக் கை போராட முயல்கிறார்கள், தங்கள் முஷ்டிகளையும், கைத் தாக்குதல்களையும், தேவதூஷணங்களையும், சாபங்களையும் கொண்டு போராடுகிறார்கள்.

திடீரென பாப்பரசர் உயிருக்கு ஆபத்தான முறையில் காயம் பட்டு விழுகிறார். உடனடியாக, அவரோடு இருப்பவர்கள் ஓடிப் போய் அவருக்கு உதவுகிறார்கள், அவரைத் தூக்குகிறார்கள். பாப்பரசர் இரண்டாம் முறை தாக்கப்படுகிறார். அவர் கீழே விழுந்து இறக்கிறார். உடனே எதிரிகளின் மத்தியில் வெற்றிக் கூச்சலும், சந்தோஷக் கொக்கரிப்பும் கேட்கின்றன. அவர்களுடைய கப்பல்களிலிருந்து உரைக்க இயலாத ஏளன வார்த்தைகள் எழுகின்றன. 


ஒரு புதிய பாப்பரசர்

ஆனால் பாப்பரசர் இறந்த மாத்திரத்தில் மற்றொரு பாப்பரசர் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்கிறார். துணைக் கப்பல்களின் தலைவர்கள் ஒன்றாகக் கூடி எவ்வளவு துரிதமாகப் புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றால், முந்திய பாப்பரசரின் இறப்புச் செய்தியுடன் அவருடைய ஸ்தானாதிபதியின் தேர்தல் செய்தியும் வரகிறது. எதிரிகள் தைரியமிழக்கத் தொடங்கு கிறார்கள். 


இளைப்பாற்றியின் துறைமுகம்

புதிய பாப்பரசர் எதிரியைத் தோற்று ஓடச் செய்கிறார், ஒவ்வொரு தடையையும் வென்று, தம் கப்பலை இரண்டு தூண்களுக் கிடையில் செலுத்தி, அவற்றின் நடுவில் தம் கப்பலை நிறுத்துகிறார். அவர் கப்பலின் முன்னணியத்திலிருந்து தொங்குகிற ஒரு இலேசான சங்கிலியை, திவ்விய அப்பம் நிற்கும் தூணிலிருந்து தொங்கும் ஒரு நங்கூரத்தோடு பிணைக்கச் செய்கிறார். அதன்பின் பின்னணியத் திலிருந்து தொங்கும் மற்றொரு மெல்லிய சங்கிலியை, அமலோற்பவக் கன்னிகை நிற்கும் மற்றொரு தூணிலிருந்து தொங்குகிற மற்றொரு நங்கூரத்தோடு பிணைத்து, இவ்வாறு கப்பலை இருபுறத்திலும் அந்தத் தூண்களோடு இணைத்துக் கட்டுகிறார். 


எதிரியின் பேரழிவு

அதன்பின் ஒரு பெரும் அதிர்வு நிகழ்கிறது. அது வரை பாப்பரசரின் கப்பலுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்த எல்லாக் கப்பல்களும் சிதறடிக்கப்படுகின்றன. அவை தப்பியோடு கின்றன, ஒன்றின்மீது மற்றொன்று மோதி, துண்டுதுண்டாக உடைகின்றன. சில கப்பல்கள் மூழ்குகின்றன, வேறு சில, மற்றவற்றை மூழ்கடிக்க முயல்கின்றன. பாப்பரசருக்காக மிகுந்த வீரத்தோடு போரிட்ட பல சிறிய கப்பல்கள் அந்த இரண்டு தூண்களோடு தாங்கள் முதலாவதாகக் கட்டப்படுவதற்காகத் தங்களுக்குள் போட்டி போடுகின்றன.

போர் பயம் காரணமாக பின்வாங்கியிருந்த வேறு பல கப்பல்கள் தொலைவிலிருந்து எச்சரிக்கையோடு கவனிக்கின்றன. உடைந்த கப்பல்களின் சிதைவுகள் கடலின் சுழல்களில் சிதறுண்டு மிதக்க, இந்தக் கப்பல்களும் தங்கள் பங்கிற்கு நல்ல ஆர்வத்தோடு அந்த இரு தூண்களையும் நோக்கி விரைகின்றன. அவற்றை அடைந்தவுடன், அவற்றிலிருந்து தொங்கும் கொளுவிகளில் தங்களைப் பிணைத்துக் கொள்கின்றன. அங்கே அவை பாப்பரசர் இருக்கும் முதன்மையான கப்பலோடு சேர்ந்து, பாதுகாப்பாக நிலைபெறுகின்றன. கடலின் மீது இப்போது பெரும் அமைதி ஆட்சி செய்கிறது. 


டொன் போஸ்கோ விளக்குகிறார்

இந்த இடத்தில் டொன் போஸ்கோ டொன் ருவாவிடம்: “இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

டொன் ருவா பதிலளிக்கிறார்: “பாப்பரசரின் கப்பல் திருச்சபையைக் குறிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதற்கு அவரே தலைவராயிருக்கிறார். மற்ற கப்பல்கள்: மனிதர்கள், கடல்: உலகம். பெரிய கப்பலைப் பாதுகாப்பவர்கள், பாப்பரசரின் பரிசுத்த ஸ்தானத்துடன் அன்போடு இணைந்திருக்கிற நல்லவர்கள்; மற்றவர்கள் திருச்சபையின் எதிரிகள், அவர்கள் எல்லா விதமான ஆயுதங்களையும் கொண்டு அதை அழிக்க முயல்கிறார்கள். மீட்பின் இரண்டு தூண்கள் மகா பரிசுத்த மாமரி பக்தி மற்றும் திவ்விய நற்கருணை பக்தி என்று தோன்றுகிறது.”

டொன் ருவா கீழே விழுந்து இறந்த பாப்பரசரைப் பற்றிப் பேசவில்லை. டொன் போஸ்கோவும் அவரைப் பற்றி மவுனம் சாதித்து விட்டார். அவர் வெறுமனே, “நீங்கள் சொல்வது சரிதான்! ஒன்றை மட்டும் நான் திருத்த விரும்புகிறேன்: எதிரிக் கப்பல்கள் வேதகலாபனைகள் ஆகும். திருச்சபைக்கு எதிரான மிகக் கடுமை யான துன்பங்கள் மிக அண்மையில் உள்ளன. இனி நேரிடப் போவதற்கு முன்னால், இது வரை நேரிட்டுள்ளவை எல்லாம் ஏறத்தாழ ஒன்றுமேயில்லை என்று சொல்லி விடலாம். அதன் எதிரிகள், தங்களால் முடிந்தால் முதன்மையான கப்பலை மூழ்கடித்து விட முயன்ற கப்பல்களால் குறிக்கப்படுகிறார்கள். இவ்வளவு அதிகமான குழப்பத்தின் நடுவே, இரண்டே வழிகள்தான் விடப்பட்டுள்ளன: மகா பரிசுத்த மாமரியின் மீதான பக்தி, மற்றும் அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது. இவற்றைக் கடைப்பிடிக்க நம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும், இந்த பக்தி முயற்சிகள் எல்லா இடங்களிலும், எல்லோராலும் அனுசரிக்கப்பட வேண்டும்.”

(டொன் போஸ்கோ வேறு எந்த விளக்கங்களும் தரவில்லை.)