கொள்ளை நோய்கள் மரியாயின் மாசற்ற இருதய வெற்றிக்கான முந்தைய சுத்திகரத் தண்டனைக் கருவிகள்!

"இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்''  
(தனது மூன்றாம்  காட்சியில் பாத்திமா அன்னை - 13.7.1917 அறிவித்தது).

இன்றைய உலகின் அவல நிலை!

சிருஷ்டிக்கப்பட்டபோது, "எல்லாம் மெத்தவும் நன்றாக இருந்த'' (ஆதி.1:31) உலகமும், தேவ சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களும் (ஆதி.1:27) இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? தங்களைப் படைத்த கடவுளை மறந்து, மறுத்து, உலகாதாயத்தையே குறிக்கோளாகக் கொண்டு, பாவத்தில் திளைத்துச் சின்னா பின்னமாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த 21-ம் நூற்றாண்டில் தனது சந்ததியினரின் பாவாக்கிரமங்களால் தேவ கோபத்தையும் சாபத்தையும் தன் மீது வலிந்து பெற்றுக்கொண்டு நிற்கிறது மனுக்குலம்.

ஒரு சின்னஞ்சிறிய கிருமி - அபாயகரமான கொரோனா - கோவிட் 19 நோய்க் கிருமி - உலக மக்களின் வாழ்வாதாரங்களையே சிதைத்து, அவர்களின் எதிர்கால வாழ்வையே கேள்விக் குறியாக்கியுள்ளது! இன்று உலக நாடுகள் அனைத்துமே இந்த நோய்த் தொற்றினால் அஞ்சி, மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஸிலிஉவ dலிழஐ ஆகி முடங்கிக் கிடக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. வல்லரசுகள், அணு ஆயுத நாடுகள் என்று ஆங்காரத்தால் மார்தட்டி நிமிர்ந்திருந்த நாடுகள் இன்று கொரோனாவால் செயலிழந்து கிடக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், முடியாததால், பல மேதாவி நாடுகள் கதிகலங்கிப் போயுள்ளன.

உலகின் ஒளியாயிருந்து மனிதர்களை நித்திய வாழ்வுக்கு வழிநடத்த வேண்டிய சத்திய கத்தோலிக்கத் திருச்சபை 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு நவீன சங்கச் சபையாக உலகத் தோடு ஒத்துப்போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால் பாப்பரசர், ஆயர்கள், குருக்கள், துறவிகள், விசுவாசிகள் என அனைவரும் தனிமைப்பட்டு, ""தினகாலப் பலி நீக்கப்பட்டு விட,'' (தானி.12:11), தேவாலயங்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. உலக அரசுகளின் கட்டளைக் கும் ஆணைகளுக்கும் கட்டுப்பட்டு தனது தேவ வழிபாட்டை நிறுத்திக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை இன்று திருச்சபைக்கு வந்துள்ளது! நவீனத்தால் பழகிப்போன விசுவாசிகளோ தொலைக் காட்சிப் பெட்டிகளில், சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் (நாடகப்) பூசைகளைக் கண்டு திருப்திப்பட்டுக்கொள்ளும் அவலத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். திருச்சபையின், ஏன் உலக வரலாற்றிலேயே இது வரை இல்லாத ஓர் அவல நிகழ்வைக் கொரோனா கிருமி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எப்போதுதான் இந்த ஆபத்து நீங்குமோ, என்று விடுதலை அடைவோமோ என்று ஏங்கித் தவிக்கும் மக்கள் எதிர்காலம் பற்றிய அச்சத்தால் கலங்கிப் போயுள்ளனர். 


என் மாசற்ற இருதயம் வெற்றிபெறும் என்ற மாதாவின் வெற்றி அறிவிப்பு! 

இன்று உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு முன் - கொரோனாவுக்குப் பின் என்று தங்கள் சமூக, பொருளாதார நிலைகளைப் பிரித்துப் பார்க்க வேண்டிய பரிதாப நிலையில் கிடக்கின்றன. ஏற்கெனவே தனது ஆங்காரத்தால் கம்யூனிச, கடவுள் மறுப்பு, உலகாதாயக் கொள்கைகளால் கடவுளை மறந்து, மறுத்துப் பிரிந்துவிட்ட பெருவாரியான உலக மக்கள் தங்கள் சிருஷ்டிகரான கடவுளைத் தேடவோ, அவரை மன்றாடவோ முடியாது குளிர்ந்துவிட்டனர்.

கத்தோலிக்க மக்களும் கூட நவீன உலகத்தால் ஈர்க்கப்பட்டு விசுவாசம், நம்பிக்கை தளர்ந்து தேவசிநேகம் குளிர்ந்து, அதைரியப்பட்டு விட்டனர். கடவுளிடம் ஜெபிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ளும் நவீன சங்கச் சபை அதிகாரிகள், கொரோனா நோய் உலகினுடைய, நம்முடைய பாவங்களுக்கான தேவ தண்டனை, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுப் பாவப் பரிகாரம் செய்வோம் என்ற போதகத்தை வசதியாக மறைத்து, மறந்து விட்டுத்  தங்கள் அவிசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சமயத்தில் கடவுளின் விசுவாசமிக்க கத்தோலிக்க மக்கள் தாங்களும் உலகத்தோடு இழுபட்டு விடாமல் விசுவாசத்தில் உறுதியடைந்து சர்வேசுரனிடம் திரும்ப வேண்டும். நம்மை நேசிக்கும் வல்லமையுள்ள பரலோகத் தாய் நமக்கு இருக்கிறார்கள் என்பதையும், ""இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்'' என்று அவர்கள் முன்னறிவித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். மாதாவிடம் திரும்ப வேண்டும். நமக்காகவே அன்பால் துடித்துக் கொண் டிருக்கும் சேசு மரிய இருதயங்களிடம் அடைக்கலம் புக வேண்டும். சர்வ வல்லபர் இந்தத் தாய்க் குத் தமது சகல வல்லமைகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்கியுள்ளார் என்பதை உணர்ந்து அவர்களிடம் தஞ்சமடைய வேண்டும். இந்தத் தாய் கத்தோலிக்க மக்களாகிய நமக்கு மட்டு மின்றி மனுக்குலம் முழுவதற்குமே தாயாகையால், அந்தத் தாயின் அன்பை உணர்ந்திருக்கிற அவர்களது மக்களாகிய நாம் உலக மக்களுக்காகவும் அந்தத் தாயிடம் மன்றாட வேண்டும்.  


கொரோனா நோய்ப் பாதிப்புகள் சுத்திகரத் தண்டனைக் கருவிகள்!

நமதாண்டவர் அர்ச். மத்தேயு சுவிசேஷம் 24-ம் அதிகாரத்தில் தமது இரண்டாம் வருகை யைப் பற்றியும், அதற்கு முன் வரும் தண்டனைகளைப் பற்றியும் கூறியதை நினைவில் கொள்வோம். இப்போது உலகில் நடப்பவை அவற்றின் முன்னோடிகளோ என்ற அச்சம் நமக்கு எழுகிறது. ஆண்டவரின் கடைசி வருகைக்காக அறிவிக்கப்பட்ட அழிவுகள், அதன் தயாரிப்புக்கான சுத்தி கரிப்புத் தண்டனைகளாக அமையும்! அதுபோலவே நமதன்னை பாத்திமாவில் வாக்களித்துள்ள "வெற்றிக்கான'' தயாரிப்பாக, சுத்திகரிப்புத் தண்டனையாக இந்தக் கொரோனா பாதிப்புகளையும், துன்பங்களையும், இடையூறுகளையும் பாவிக்க வேண்டும். மக்களின் பாவங்களுக்கான தண்டனைகளாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலக முடிவு மாமரியின் வெற்றிக்குப் பிறகே வரும் என்ற உண்மையை உணர்ந்து, அந்த வெற்றியைத் துரிதப்படுத்த மாதாவின் மக்களாகிய நாம் இந்தக் கொரோனா துன்ப நாட்களில் நாம் அனுபவிக்கும் வேதனை, இடையூறுகளை அமைந்த மனதோடு ஏற்று, கடவுளின் அன்பின் மேலான நீதிக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இந்தக் கொரோனா அபாயம் உலகமெங்கும் பரவியுள்ளதால், இதை உலக சுத்திகரிப்பிற் கான தண்டனையாகக் கருத வேண்டும். சுத்திகரிப்பு என்பது ஒன்றில் கட்டாயமாகவோ, சுயமாக தாமே மேற்கொள்வதாகவோ இருக்கிறது. ஒருவரைத் திருத்த, சுத்திகரிக்க, கட்டாயமான ஒன்று; அந்தத் தண்டனைகளை மக்கள் தாமே அமைந்த மனதுடன் ஏற்று அனுபவித்தால் அது சுயமான சுத்திகரிப்பாகும். நம் பாவங்களின் காரணமாக கடவுள் அனுப்பும் துன்பங்களை முழு மனதோடு ஏற்று பரிகாரமாக  ஒப்புக்கொடுக்கும்  சுயமான  சுத்திகரிப்பே  கடவுளின்  மனதைக்  குளிரச்  செய்து   மன்னிப்பைப் பெற்றுத் தருவதாக அமையும். இங்கே யோனாஸ் தீர்க்கதரிசியின் அறிவிப்பைக் கேட்ட நினிவே மக்கள் செய்த பரிகாரங்களை நினைவில் கொள்வோம்.


நமது கடமை!

மாமரியின் அன்புப் பிள்ளைகளாகிய நாம் இன்று உலகின் சுத்திகரிப்புத் தண்டனைகளின் அவசியத்தை உணர்ந்து, இன்றைய அசாதாரணமான இன்னல்களான தினசரி பலி பூசைகள், நின்று போய், தேவாலயங்களும் அடைபட்டு, பங்குக் குருக்களின் ஆதர வும், தேவத்திரவிய அனுமானங்களின் அனுசரணையும் கிடைக் காத இந்தத் துயரங்களை அமைந்த மனதோடு சுத்திகரிப்புத் தண்டனைக் கருவிகளாக ஏற்றுக்கொள்வோமாக. இந்தத் துன்பங் களால் மனந்தளர்ந்து விடாமல் விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகியவற்றை அதிகரிக்க தேவ உதவியை மன்றாடுவோமாக.

இருள்சூழ்ந்த பெரும் சமுத்திரத்தில் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கும் படகிற்கு ஆதவனின் வருகையை முன்னறி விக்கும் உதய தாரகையைப் போல, சேசுகிறீஸ்துவின் வரப்பிர சாத ஒளி துலங்கிப் பிரகாசிக்கும் நமதன்னை கன்னிமாமரியை நோக்குவோம். கலங்கித் தவிக்கும் படகின் பயணிகளுக்கு எப்படி அந்த விடியற்காலத்தின் நட்சத்திரம் விடியல் வரும் என்ற சந்தோஷத்தையும், உற்சாகத்தையும், நிம்மதியையும் தருமோ, அதுபோல இந்தக் கொரோனா அபாயத்தில் சிக்கி எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்ட இந்தச் சூழ்நிலையில் உலக மக்களாகிய நமக்கு ""மாமரி'' என்ற வல்லமையுள்ள கேடயம் இருக்கிறது. அதை பக்தி யோடு நாவால் உச்சரித்தவர்களாய் அர்ச். பெர்னார்து அறிவுறுத்தியது போல,

"நட்சத்திரத்தைப் பார், மரியாயே என்று கூப்பிடு''

" Respice Stellam, voca Mariam!''

நம்பிக்கை நட்சத்திரமான மாமரித் தாயை நோக்கிப் பார்ப்போம்! நமது இந்த இருள் சூழ்ந்த காலத்தில் அவர்களை ""மரியாயே, எங்களைக் காப்பாற்றும்!'' என்று கூப்பிடுவோமாக!

நமக்கு வரும் துன்பங்களை மாமரியின் வெற்றிக்கான சுத்திகரத் தண்டனைக்கான கருவி களாக ஏற்பதோடு, இந்த அபாய நாட்களின் தீவிரம் குறைக்கப்படும்படியாக நம் பரலோகப் பிதாவாகிய சர்வேசுரனை இறைஞ்சுவோமாக! இந்த நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டுத் துயருறும் நமது சகோதரர்கள் விரைவில் குணம் பெறவும், இதனால் மரித்தவர்களின் ஆன்மாக்கள் கடவுளில் இளைப்பாறவும் மன்றாடுவோமாக! அதோடு அரசு அறிவிக்கும் தவிர்ப்பு நடவடிக்கைகளை (முகக் கவசம், தனித்திருத்தல் போன்றவை) விவேகத்தோடு கடைப் பிடித்து, இந்த அபாயத்திலிருந்து தப்பிப்போமாக. ஒருவருக்கொருவர் பிறரன்போடு உதவி செய்யவும் முன்வருவோமாக.

வல்லமையுள்ள கன்னிகையான மாமரியின் மாசற்ற இருதயத்திடம் தஞ்சம் புகுவோம்!


மரியாயின் மாசற்ற இருதயமே! 
எங்கள் இரட்சணியமாயிரும்!