இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய நன்மையில் அனைவரும் தம்மை உட்கொள்ள வேண்டுமென சேசுநாதர் ஆசிக்கிறார்!

நாம் திவ்விய நற்கருணையில் தம்மை உட்கொள்ள வேண்டும் என்பதில் சேசுகிறீஸ்துநாதர் கொண்டுள்ள தாகத்தைப் பற்றி நாம் தியானிப்போம்: சேசுநாதர், தமது நேரம் வந்ததென்று அறிந்திருந்தார் (அரு.13:1). அவரது கசப்பான திருப்பாடுகள் தொடங்க இருந்த அந்த நேரத்தைத் "தமது நேரம்'' என்று அழைக்க அவரால் எப்படி முடிந்தது? அவர் ஏன் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்றால், உத்தமமான விதத்தில் தமது நேசத்திற்குரிய ஆன்மாக்களோடு தம்மை ஒன்றிக்கும்படியாக, அந்த இரவில் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் அவர் தம்மையே விட்டுச் செல்ல இருந்தார். "இந்தப் பாஸ்காவை உங்களோடு கூட உண்ணும்படி நான் ஆசை மேல் ஆசையாயிருந்தேன்'' (லூக்.22:15). இந்த வார்த்தைகளின் மூலம் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் நம் ஒவ்வொருவரோடும் தம்மை ஒன்றித்துக் கொள்ளத் தமக்கிருந்த ஆவலை நம் மீட்பர் விளக்குகிறார். நம் மீது அவர் கொண்டுள்ள அன்பின் பாதாளம் அவரை இப்படிப் பேசச் செய்கிறது. "மிக உக்கிரமாகப் பற்றியெரியும் நேசத்தின் வெளிப்பாடு'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார். அனைவரும் தம்மைப் பெற்றுக் கொள்ள இயலும்படியாக, அப்ப வடிவத்தின் கீழ் தம்மை மறைத்துக் கொள்வதில் இன்பம் காண்பவராக அவர் இருந்து வந்திருக்கிறார். வேறு ஏதாவது ஒரு விலைமதிப்புள்ள உணவின் தோற்றத்தினுள் அவர் தம்மை மறைத்து வைத்திருப்பார் என்றால், ""ஏழைகள் அவரை அடைந்து கொள்ள இயலாதவர்களாக இருந்திருப்பார்ககள்; வேறு ஏதாவது விலைகுறைந்த உணவு வகையை அவர் தேர்ந்து கொண்டிருந்தார் என்றாலும் கூட, அது உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படாததாக இருந்திருக்கலாம். அப்பத்தின் வடிவத்தின் கீழ் தங்கி வசிப்பதில் சேசுநாதர் பிரியம் கொண்டது ஏனெனில், அப்பத்தின் விலை மிகக் குறைவு என்பதோடு அது எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கிறது என்பதால்தான்; எனவே எல்லா இடங்களிலும் அவரை நாம் காணவும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

நம்மால் உட்கொள்ளப்பட நம் மீட்பருக்குள்ள மாபெரும் ஆசை, ""வாருங்கள், என் அப்பத்தைச் சாப்பிட்டு, நான் உங்களுக்காகக் கலந்து வைத்திருக்கும் இரசத்தைக் குடியுங்கள்''; ""சிநேகிதரே புசியுங்கள், பிரியமானவர்களே, குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்'' என்று, தம்மிடம் வரும்படியாகப் பல வழிகளில் நமக்கு அறிவுறுத்துவதோடு மட்டும் நிற்கவில்லை. மாறாக அதை ஒரு கட்டளையாக நம்மீது சுமத்தவும் செய்கிறார்: ""இதை வாங்கிப் புசியுங்கள்; இது என் சரீரமாயிருக்கிறது'' (மத்.26:26). நாம் அவரை அணுகிச் செல்லும்படியாக, நித்திய ஜீவியத்தின் வாக்குறுதியால் நம்மை அவர் கவர்ந்திழுக்கிறார்: ""என் மாம்சத்தைப் புசிப்பவன் . . . நித்திய ஜீவியத்தைக் கொண்டிருப்பான்; இந்த அப்பத்தைப் புசிப்பவன் என்றென்றும் ஜீவிப்பான்'' (அரு.6:55-59). இதை நாம் செய்யவில்லை என்றால், மோட்சம் நமக்கு அடைபட்டதாக இருக்கும் என்று அவர் மிரட்டவும் செய்கிறார்! ""மனுமகனுடைய மாம்சத்தை நீங்கள் புசிக்காவிடில். . . உங்களுக்குள் ஜீவன் இராது'' (அரு.6:54). இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் நம்மோடு தம்மை ஒன்றித்துக் கொள்ள வேண்டுமென்ற சேசுநாதரின் தாகத்திலிருந்தே இந்த எல்லா அழைப்புகளும், வாக்குறுதிகளும், மிரட்டல்களும் நமக்கு வருகின்றன. இனி, இந்த ஆசை அவர் நம்மீது கொண்டுள்ள மாபெரும் நேசத்திலிருந்து எழுகிறது; ஏனெனில் அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுவது போல, நேசத்தின் நோக்கம் நேசிக்கப்படும் காரியத்தோடு தன்னை இணைத்துக் கொள்வது மட்டுமே. ஆகவே இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் சேசுநாதர் தம்மையே முழுமையாக நம்மோடு ஒன்றிக்கிறார். ""என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்'' (அரு.6:57). இக்காரணத்தாலேயே நாம் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் ஏங்குகிறார். நம் ஆண்டவர் ஒருநாள் அர்ச். மெட்டில்டம்மாளிடம்: ""என்னை ஆசிக்கிற ஆன்மாக்களிடம் நான் வருவது போல, எந்தத் தேனீயும் மலர்களின் தேனை உறிஞ்சுமாறு மிகுந்த ஆவலோடும், ஏக்கத்தோடும் அவற்றின் மீது வந்து விழுவதில்லை'' என்றார்!

ஓ, திவ்விய நன்மை தங்கள் ஆன்மாக்களுக்குக் கொண்டு வருகிற மாபெரும் நன்மையை மட்டும் விசுவாசிகள் அறிவார்களானால்! சேசுநாதர் தமது பிதா தம் கரங்களில் எல்லாவற்றையும் ஒப்புவித் திருக்கிறார் (அரு.13:3) என்று அறிந்திருக்கிறார் என்பதால், அவரே எல்லா செல்வங்களையும் உடையவராக இருக்கிறார். மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானம் ""மனிதனின் ஆத்துமத்தை அர்ச்சிக்க ஒரு விசேஷ வல்லமை கொண்டதாக இருக்கிறது'' என்று அர்ச். தியோனிசியஸ் கூறுகிறார். ஓர் ஆன்மா ஒரு வார காலம் அப்பமும் தண்ணீரும் மட்டும் அருந்தி அடையும் ஆதாயத்தை விட, ஒரே ஒரு திவ்விய நன்மை மூலம் அதிக ஆதாயம் பெறுகிறது என்று அர்ச். வின்சென்ட் ஃபெரர் எழுதுகிறார். திவ்விய நன்மை ""அன்றாடப் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, சாவான பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்'' ஒரு மாபெரும் அருமருந்தாக இருக்கிறது என்று திரிதெந்தீன் பொதுச்சங்கம் கற்பிக்கிறது. இதனாலேயே வேதசாட்சியான அர்ச். அந்தியோக் இஞ்ஞாசியார் ஆசீர்வதிக்கப் பட்ட தேவத்திரவிய அனுமானத்தை ""அழியாமையின் மருந்து'' என்று அழைக்கிறார். சேசுநாதர் ""சிலுவையின் பரம இரகசியத்தால் பாவத்திற்குரிய தண்டனையில் இருந்து நம்மை விடுவித்தார்; ஆனால் திவ்விய நற்கருணையாகிய தேவத்திரவிய அனுமானத்தாலோ, நம்மைப் பாவத்திலிருந்தே விடுவிக்கிறார்'' என்று மூன்றாம் இன்னோசென்ட் பாப்பரசர் கூறுகிறார்.

ஓ என் சேசுவே, ஆத்துமங்களின் நேசரே, தேவரீர் எங்களை நேசிக்கிறீர் என்று எங்களுக்குக் காட்ட இதை விட மேலான அன்பின் சாட்சியம் உம்மிடம் இல்லை. நாங்கள் உம்மை நேசிக்கச் செய்வதற்கு இதை விட அதிகமாக நீர் வேறு எதைத்தான் தர முடியும்? ஓ அளவற்ற நன்மைத்தனமே, இன்று முதல் சாத்தியமான முழு ஏக்கத்தோடும், ஆசை ஆவலோடும் நான் உம்மை நேசிக்க வரமருளும்படி உம்மை மன்றாடுகிறேன். எனக்காக உமது உயிரைக் யைளித்த பிறகு, இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் உம்மை முழுவதுமே எனக்குத் தந்தருளுகிற என் இரட்சகரே, உம்மை விட அதிகமாக என் ஆன்மா வேறு யாரைக் கனிவுள்ள அன்போடு நேசிக்க முடியும்?

என் அன்புள்ள ஆண்டவரே, அடியேன் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு, எந்த இடையூறும், ஒதுக்கமுமின்றி உம்மை மாத்திரமே நேசிக்கும்படியாக, நான் உமது அன்பை எப்போதும் தியானிப்பேனாக.