விபச்சாரப் பெண்

ஒரு நாள், சேசுநாதர் தேவாலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, சட்ட வல்லுனர்களும், பரிசேயர் களும் வெறுப்புக்குரிய விபச்சாரத்தில் பிடிபட்ட பரிதாபத் திற்குரிய ஒரு பெண்ணை அவருடைய திருச்சமூகத்திற்கு முன்பாக இழுத்து வந்தார்கள்.

யூதர்களிடையே இந்தப் பாவம், குற்றங்களில் எல்லாம் மிகவும் அவமானமுள்ளதாகக் கருதப்பட்டது. அது இரக்கமற்ற கொடூரத்தோடு தண்டிக்கப்பட்டது. குற்றவாளியான பெண்ணின் மிக நெருங்கிய உற்றார், உறவினரும் கூட அவளைக் கைவிட்டு விடுவார்கள். அதன்பின் அவள், பாவத்தில் தனக்கு உடந்தையாய் இருந் தவனுடன் கல்லாலெறிந்து கொல்லப்படுவாள்.

பரிசேயர்களால் இழுத்து வரப்பட்ட இந்தப் பரிதாபத்திற்குரிய பெண், தனக்காகக் காத்திருந்த அச்சத்திற்குரிய முடிவைப் பற்றி அஞ்சி நடுங்கிக் கொண்டிருந் தாள், அவமானத்தில் தன் தலையைக் குனிந்து கொண்டு, மரணத்தைப் போல வெளிறியிருந்த தன் முகத்தை மறைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மிருகத் தனமாக அவளைப் பிடித்து வந்தவர்கள் சேசுவின் முன் அவளை முரட்டுத்தனமாகத் தரையில் விழத்தாட்டி, அவளுடைய குற்றத்தை எடுத்துச் சொல்லி, அவளுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர் இரக்கமின்றி அவளைத் தண்டனைத் தீர்ப்பிட்டால் அவர் இரக்கமற்றவர் என்றும், அவளை விடுவிக்க விரும்பினால், மோயீசனின் வேதப் பிரமாணத்தை அவர் மீறுகிறார் என்றும் குற்றஞ் சாட்ட தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அவள் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் துணியவில்லை; அவள் குற்றமுள்ளவளாயிருந்தாள், தான் மன்னிக்கப்படுவது பற்றிய நம்பிக்கை அவளுக்கு இருக்க வில்லை. அதை விட, தன்னைத் தீர்ப்பிட இருந்தவரின் திருமுகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் அவள் அஞ்சி னாள்.

அவமானத்தாலும், பயங்கர உணர்வாலும் பீடிக்கப் பட்டு, தமக்கு முன்பாக நின்று கொண்டிருந்த அந்தப் பாவியை நமது இனிய ஆண்டவர் அளவற்ற தயாளத்தோடு நோக்கினார். எந்த விதமான இழிவுணர்ச்சியும், கோபமும் கூட அவரிடம் வெளிப்படவில்லை. அவர் பின்னோக்கி நகரவுமில்லை, தாம் அவசங்கைப்படுத்தப்பட்டு விடுவது பற்றி அவர் அஞ்சவுமில்லை.

கிருபை தயாளம் நிறைந்த தமது திருக்கண்களை அவர் அந்தப் பெண்ணிடமிருந்து திருப்பி, தேவ மகத்துவ கம்பீரத்தோடு அந்தக் கோபவெறியுள்ள கூட்டத்தைப் பார்த்து அதைத் திணறடிக்கிறார். உடனே இருபது குரல்கள் இடியென எழுந்து, அந்தப் பெண் சாவுக்குத் தீர்வை யிடப்பட வேண்டும் என்று அலறுகின்றன. இரத்த தாகம் கொண்ட மனிதப் புலிகளின் இருபது குரல்கள்!

சேசுநாதர் சற்றும் அசைவுறாதவராக அவர்களை உற்றுநோக்குகிறார். அவர்களுடைய கண்களில் பற்றி யெரிந்த இரக்கமற்ற வெறுப்பை அவர் கவனிக்கிறார். அவர்களுடைய இருதயத்தின் துர்க்குணத்தின் மறைவான உள்ளாழங்களை அவர் காண்கிறார். அவை பக்தி யார்வத்தின் முகமூடியை அணிந்தபடி அங்கே நின்று கொண்டிருக்கின்றன.

அவர் ஓர் அதிகாரமுள்ள சைகையின் மூலம் அவர்கள் மவுனமாயிருக்கும்படி உத்தரவிடுகிறார். தீர்ப்பின் வார்த்தைகளைக் கேட்க அங்குள்ள ஒவ்வொரு செவியும் ஆவல் கொள்கிறது!

இரட்சகரும், ஆண்டவருமானவரின் தெய்வீகக் குரல் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒலிக்கிறது: “உங்களுக்குள் பாவம் இல்லாவன் அவள் மீது முதல் கல்லை எறிவானாக!''

பரிசேயர்களும், அவர்களுடைய அடிவருடிகளும் திகைப்புக்கும், பெருங்குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். அந்தத் தீர்ப்பு அவர்களை மெதுவாகக் கலைந்து போகச் செய்கிறது. அது அவர்களை மறைமுகமாகக் குற்றஞ்சாட்டு கிறது, கண்டனம் செய்கிறது. இப்போது சேசு மட்டும் அந்தப் பாவியான ஸ்திரீயோடு தனித்திருக்கிறார்.

அப்போது சேசு அவளிடம்: “ஸ்திரீயே, உன்னைக் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? யாரும் உனக்குத் தண்டனைத் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்கிறார்.

“யாருமில்லை, ஆண்டவரே'' என்று அவள் பதிலளிக்கிறாள்.

அப்போது சேசுநாதர் அவளிடம்: “நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை. போ, இனி பாவம் செய்யாதே'' என்கிறார் (அரு.8:11).

இதை விட அதிக பக்திக்குரிய ஒரு சித்திரத்தை யாரால் வரைய முடியும், அல்லது தனது இரக்கத்தில் அதிக தெய்வீகமானதும், அதிக மனிதத் தன்மையுள்ளதும், தனது நேச தயாளத்தில் அதிக ஆறுதல் தருவதுமான ஒரு காட்சியை யாரால் கற்பனை செய்ய முடியும்?

இப்போது நடுக்கம் முழுவதுமாகக் குறைந்திருக்கிற அந்தப் பாவியான பெண் மட்டற்ற நன்றியறிதலோடும், அன்போடும் ஆண்டவரின் திருமுகத்தை உற்றுநோக்கு கிறாள்.

நன்றியைக் காட்டும் வார்த்தை எதவும் அவள் பேச வில்லை. அவளால் என்னதான் சொல்ல முடியும்? இருதயம் நிறைந்திருக்கும்போது, வார்த்தைகள் நம் உணர்வுகளை எடுத்துரைக்கத் தவறி விடுகின்றன. மவுனமே சிறந்தது. ஆயினும் கண்கள் பேசுகின்றன. சேசுநாதர் அந்தப் பெண்ணின் கண்களில், ஒரு பக்திச்சுவாலகரும் கண்டு பொறாமைப்படும் நேசத்தைக் கண்டார்.

உண்மையான விடுதலையின் ஒரு பிரமாண்டமான அலை அவளுடைய ஆன்மாவுக்கு மேலாகக் கடந்து போகிறது. அவள் பாதுகாப்பாக இருந்தாள், ஒரு சில கணங்களுக்கு முன் தான் எதனிடமிருந்து தப்பவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, அந்த பயங்கரத் துக்குரிய மரணத்திலிருந்து அவள் இப்போது காப்பாற்றப் பட்டு விட்டாள். ஆயினும், இப்போது அந்த எண்ணம் கூட அவளுடைய மனதின் மேல்மட்டத்தில் இல்லை.

தனது எதிரிகளுக்கு எதிராகத் தன்னை ஆதரித்துப் பாதுகாத்த தெய்வீக ராபியின் அளவற்ற தயாளத்தையும், இரக்கத்தையும் பற்றி மட்டுமே அவள் நினைத்துக் கொண் டிருந்தாள்.

அவருடைய அன்பு நிறைந்த அந்தக் கட்டளை இன்னமும் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண் டிருந்தது. அவை அங்கே எக்காலமும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

”போ, இனி பாவம் செய்யாதே.''

இல்லையில்லை, இனி ஒருபோதும் அவள் பாவம் செய்ய மாட்டாள். தன் அன்பையும், தன் பிரமாணிக்கத் தையும் அவள் இந்த ஆண்டவருக்குத் தந்து விட்டாள். அந்த அன்பு இனி ஒருபோதும் அவளிடமிருந்து விலகாது.