இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாம்பும், பரிசுத்த ஜெபமாலையும்!

இப்போது நாம் பிரான்சிஸ் ப்ரோவேராவின் குறிப்புகளில் இருந்து சில காரியங்களைப் பார்ப்போம்: “பூமியின்மீது மனித னுடைய வாழ்வு ஒரு போராட்டமே” (யோபு.7:1).

இந்நாட்களில், ஆத்துமங்களுக்கு எதிரான பசாசின் இடைவிடாத, கடும் நாசம் விளைவிக்கிற தாக்குதல்கள் மற்றும், அவனை இடைவிடாமல் எதிர்ப்பது, அவனுடைய தாக்குதல் களுக்கு உள்ளானவர்களை விடுவிப்பது ஆகியவற்றின் தேவையை நிரூபிக்கிற மேலும் ஒரு சாட்சியத்தை டொன்போஸ்கோ பெற்றுக் கொண்டார். ஆகஸ்ட் மாத மத்தியில், 100 மாணவர்கள் கோடை கால வகுப்புகளுக்காக ஆரட்டரிக்குத் திரும்பி வந்திருந்தார்கள். 1862, ஆகஸ்ட் 20 அன்று தாம் ஆற்றிய “நல்லிரவு” வாழ்த்துரையில், டொன் போஸ்கோ, சில நல்லொழுக்கம் சார்ந்த காரியங்களை நினைவுபடுத்தியபின், பின்வருமாறு அவர்களுக்கு உரையாற்றினார்:

சில இரவுகளுக்கு முன், அநேகமாக தேவ அன்னையின் விண்ணேற்புத் திருநாளுக்கு முந்திய இரவில் நான் கண்ட ஒரு கனவை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் என் எல்லாச் சிறுவர்களோடும் காஸ்டெல்நுவோவோ தாஸ்தியிலுள்ள என் சகோதரன் வீட்டில் இருப்பதாகக் கனவு கண்டேன். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, முற்றிலும் அந்நியரான ஒரு மனிதர் என்னிடம் வந்து, தம்முடன் நான் வர முடியுமா என்று கேட்டார். அவர் என்னை மைதானத்தை ஒட்டிய ஒரு புல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கே இருந்த ஒரு மிகப் பெரிய அசிங்கமான பாம்பைக் காட்டினார். இருபது அடி நீளமுள்ள அந்தப் பாம்பு புல்லில் சுருண்டு படுத்திருந்தது. பயந்து போனவனாக, நான் அங்கிருந்து ஓடிவிட நினைத்தேன். ஆனால் அந்த அந்நியர் என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். “இன்னும் அருகில் சென்று அதை நன்றாகப் பாரும்” என்று அவர் கூறினார்.

“என்ன?” என்றேன் நான் திகைத்தபடி. “அந்த இராட்சதப் பாம்பு என் மீது பாய்ந்து ஒரு கண நேரத்திற்குள் என்னை சத்தமில் லாமல் விழுங்கி விட முடியும் என்பது உமக்குத் தெரியவில்லையா?”

“பயப்படாதீர்! அந்த மாதிரி எதுவும் நிகழாது; சும்மா என்னோடு வாரும்.”

“வாய்ப்பேயில்லை! எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்க வில்லை !”

“அப்படியானால் நீர் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ளும்” என்று பதிலளித்த அந்த அந்நியர், போய் ஒரு கயிறு எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார்.

அவர் என்னிடம்: “கயிற்றின் இந்த முனையைப் பிடித்துக் கொள்ளும். இரண்டு கைகளாலும் அதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். நான் மறு முனையைப் பிடித்துக் கொள்கிறேன். நாம் பாம்பின் மீது இந்தக் கயிற்றை அங்குமிங்குமாக ஆட்டுவோம்.”

“அதற்குப் பிறகு?”

“அதன்பின் நாம் அதைக் கொண்டு பாம்பின் முதுகில் அடிப்போம்.”

“உமக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. அந்தப் பாம்பு நம்மீது பாய்ந்து நம்மைத் துண்டு துண்டாகக் கிழித்து விடும்.”

“இல்லை. அது அப்படிச் செய்யாது. அதை என்னிடம் விட்டு விடும்.”

“என்னை விட்டு விடும். இந்த மாதிரியான ஒரு சிலிர்ப் பூட்டும் உணர்வுக்காக என் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை !”

நான் மீண்டும் ஓட முயன்றேன். ஆனால் அந்தப் பாம்எ எனக்குத் தீமை எதுவும் செய்யாது என்பதால், நான் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று அந்த அந்நியர் எனக்கு மீண்டும் உறுதி தந்தார். அவர் எவ்வளவு வற்புறுத்திப் பேசினார் என்றால், நான் அங்கேயிருக்க சம்மதித்ததோடு, அவருடைய திட்டப்படி செய்யவும் ஒப்புக்கொண்டேன். அவர் அந்த அரக்கப் பிராணியின் மறுபுறம் சென்றார். நாங்கள் கயிற்றை நீட்டி, அதன்பின் அதைக் கொண்டு பாம்பின் பின்புறத்தை அடித்தோம். அந்த அரக்க ஜந்து உடனே சீறியெழுந்து, கயிற்றைத் தாக்கியது. ஆனால் அப்படிச் செய்த போது, ஒரு சுருக்கில் சிக்கிக் கொள்வது போல, அது கயிற்றில் சிக்கிக் கொண்டது.

“விட்டு விடாதேயும்” என்று அந்த அந்நியர் கத்தினார். “அதைத் தப்பிக்க விட்டு விடாதீர்!” அவர் உடனே அருகிலிருந்த ஒரு பியர் மரத்திற்கு ஓடிச் சென்று, தம் கையிலிருந்த கயிற்றின் முனையை அதில் கட்டினார். அதன்பின் அவர் என்னிடம் வந்து, என்னிட மிருந்த கயிற்று முனையை, இல்லத்திலுள்ள ஒரு ஜன்னலின் இரும்புக் கம்பியில் கட்டினார். அந்தப் பாம்பு தன்னை விடுவித்துக் கொள்வதற்காக முறுக்கிக் கொண்டும், வாலால் அடித்தும் கடுங் கோபத்தோடு போராடியது. தனது கோபவெறியில் அது தன்னையே துண்டு துண்டாகக் கிழித்தது. அதன் சதை அந்தப் பகுதி முழுவதும் சிதறியது. கடைசியில் அது வெறும் எலும்புக்கூடாகி விட்டது.

அதன்பின் அந்த அந்நியர் கயிற்றை அவிழ்த்து, அதைச் சுருட்டி வைத்தார். “இப்போது நன்கு ஊன்றிக் கவனியும்!” என்று அவர் சொல்லிக் கொண்டே கயிற்றை ஒரு பெட்டியில் வைத்து அதை மூடினார். இந்நேரத்தில் சிறுவர்கள் என்னைச் சுற்றி ஒன்றாகக் கூடினர். ஒரு சில நிமிடங்களுக்குள் அவர் பெட்டியைத் திறந்தார். நாங்கள் உள்ளே உற்றுப் பார்த்தபோது, அந்தக் கயிறு, “ஆவே மரியா - மரியாயே வாழ்க” என்ற வார்த்தைகளை உருவாக்கியிருந்ததைக் கண்டு அதிசயித்தப் போனோம்.

“இது எப்படி நிகழ்ந்தது?” என்று நான் கேட்டேன்.

அந்த மனிதர் பதிலளித்தார்: “அந்தப் பாம்பு பசாசின் அடையாளம். அந்தக் கயிறோ, ஆவே மரியாவுக்கு, அல்லது, நாம் அடுத்தடுத்து அருள்நிறை மந்திரங்களைச் சொல்லும் ஜெப மாலைக்கு அடையாளம். இந்தத் தொடர்ச்சியான அருள் நிறை மந்திரங்களைக் கொண்டு, நாம் அனைத்து நரகப் பசாசுகளையும் வென்று, அழித்து விட முடியும்.”

இதைத் தொடர்ந்து நடந்ததோ இன்னும் அதிக விசித்திர மாகவும், அதிசயிக்கத்தக்கதாகவும் இருந்தது. ஆனாலும் அதை இப்போது சொல்ல முடியாத அளவுக்கு மிகத் தாமதமாகி விட்டது. நான் நாளைக்கு இதைச் சொல்கிறேன். இதற்கிடையே அருள் நிறை மந்திரத்தைப் பற்றியும், ஜெபமாலையைப் பற்றியும் அந்த அந்நியர் சொன்ன காரியத்தைப் பற்றி நாம் சிந்திப்போம். சோதனை வரும் ஒவ்வொரு தடவையும் ஒரு அருள்நிறை மந்திரம் சொல்வோம். அப்போது, வெற்றி கொள்வோம் என்ற உறுதி நமக்குக் கிடைக்கும். நல்லிரவு வாழ்த்துக்கள்!