நித்திய ஞானமானவரின் வசீகரிக்கும் அழகும், வாக்குக் கெட்டாத சாந்த குணமும்!

117. தேவ ஞானமானவர் தம்மை நேசித்து, தம்மைக் கண்டு பாவிக்கும்படி மனிதர்களின் இருதயங்களைத் தூண்டியெழுப்பு வதற்காக மட்டுமே மனிதனானார் என்பதால், அவர் தமது மனித சுபாவத்தை எந்தக் குறைபாடும், கறையும் இல்லாததாக, எல்லா நற்பண்புகளாலும், குறிப்பாக, இனிய சாந்தத்தாலும், கருணை யாலும் அலங்கரிப்பதில் மகிழ்ச்சி கொண்டார்.


ஞானமானவர் தமது தொடக்கத்தில் சாந்தமுள்ளவராக இருக்கிறார்

118. நித்திய ஞானமானவரின் மூல ஆதாரத்தில் அவரைப் பற்றி நாம் சிந்தித்தால், அவர் நன்மையானதும், சாந்தமுள்ளதுமாகிய அனைத்துமாக இருக்கிறார். அவர் நித்திய பிதாவின் நேசத்தால் அனுப்பப்பட்ட ஒரு கொடையாகவும், பரிசுத்த ஆவியானவரின் அன்பின் விளைபொருளாகவும் இருக்கிறார். அவர் அன்பின் காரணமாக நமக்குத் தரப்பட்டார், அன்பால் வடிவமைக்கப்பட் டார் (அரு. 3:16). ஆகவே அவர் முழு அன்பாக, அல்லது பிதா வினுடையவும், பரிசுத்த ஆவியானவருடையவும் சொந்த அன்பாக இருக்கிறார்.

சகல தாய்மாரிலும் அதிக இனிமையும், தயவும், அழகும் நிரம்பியவர்களும், தேவ வரப்பிரசாதத்தால் பூரணமாக நிரப்பப் பட்டவர்களுமான மகா பரிசுத்த மாமரியிடமிருந்து அவர் பிறந் தார். சேசுவின் கனிவுள்ள மென்மையை வியந்து பாராட்டுவதற்கு நாம் அவருடைய திருமாதாவாகிய மரியாயின் சாந்த குணத்தை முதலில் தியானிக்க வேண்டும். தமது இனிமை மிக்க மனித சுபாவத்தில் நமதாண்டவர் தமது திவ்விய அன்னையின் சாயலையே தம்மில் கொண்டிருக்கிறார். சேசுநாதர் மாமரியின் குழந்தை. இதன் காரணமாக, அவரில் ஆணவமோ, கடுமையோ, முரட்டுத்தனமோ அற்பமேனும் இல்லாதிருந்தன. அவர் நித்திய ஞானமானவராகவும், அதனால் தம்மிலேயே மாசற்ற மென்மை யாகவும், அழகாகவும் இருந்ததால், தமது மாசற்றதனத்தில் அவர் தம் தாயையும் விட மேலானவராக இருந்தார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். 


தீர்க்கதரிசிகளால் அவர் சாந்தமுள்ளவராக அறிக்கையிடப்படுகிறார்.

119. முன்கூட்டியே நித்திய ஞானமானவரின் காட்சியைப் பெற் றிருந்த தீர்க்கதரிசிகள், அவரது சாந்த குணத்தின் காரணமாக, அவரை ஒரு செம்மறியாடு என்றும் செம்மறிப் புருவை என்றும் குறித்துக் காட்டினார்கள். தமது கனிவுள்ள மென்மை காரணமாக, அவர் "ஒடிந்த நாணலை முறிக்கவுமாட்டார், புகையும் திரியை அணைக்கவும் மாட்டார்" என்று அவர்கள் அவரைப் பற்றி முன்னுரைத்தார்கள் (இசை. 42:3). அவர் எந்த அளவுக்குக் கருணையால் நிரம்பியிருக்கிறார் என்றால், ஒரு பரிதாபத்திற் குரிய பாவி தன் பாவத்தின் பாரத்தால் நசுக்கப்பட்டு, குருடாக்கப் பட்டு, ஒழுக்க ரீதியாக முழுவதும் கெட்டுப் போய், ஏற்கனவே நரகத்தில் ஒரு காலை வைத்துக் கொண்டு நிற்கிறான் என்றாலும், அவனாகவே தம்மைக் கட்டாயப்படுத்தாத வரைக்கும் அவர் அவனுக்குக் தண்டனைத் தீர்ப்பிட மாட்டார்.

அர்ச். ஸ்நாபக அருளப்பர் மனுவுருவான ஞானத்தைப் பற்றிய அறிவையும், அவர் மீதான அன்பையும் சம்பாதித்துக் கொள்ளுமாறு முப்பது வருடங்கள் வனாந்தரத்தில் கடுந்தவ வாழ்வு நடத்தி வந்தார். சேசுநாதர் தம்மை நெருங்கி வருவதை அவர் கண்ட மாத்திரத்தில், அவர் தம் சீடர்களுக்கு அவரைச் சுட்டிக் காட்டி, "இதோ, சர்வேசுரனுடைய செம்மறிப்புருவை யானவர்; இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குகிறவர்" என்று அறிவித்தார் (அரு.1: 29). அவர் சொல்லியிருக்க வேண்டியதாகத் தோன்றுகிறபடி "இதோ மகா உன்னதர், இதோ மகிமையின் அரசர், இதோ சர்வ வல்லபக் கடவுள்" என்று அவர் சொல்லவில்லை. ஆனால் எக்காலத்தையும் சேர்ந்த எந்த ஒரு மனிதனை யும் விட அதிக முழுமையாக அவரைப் பற்றி அறிந்து கொண்டவ ராக, இதோ சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையானவர், இதோ, நம் இருதயங்களை வசீகரித்துச் சிறைப்படுத்தி, நம் பாவங்களைப் போக்கும்படி, கடவுளிலும், மனிதனிலும், மோட் சத்திலும், பூமியிலும் சாந்தமுள்ளதாக இருக்கும் அனைத்தையும் தமது ஆளுமைக்குள் ஒன்றாகக் கூட்டிச் சேர்த்திருக்கிற நித்திய ஞானமானவர் என்றே அவர் கூறினார்.


அவரது திருப்பெயரில் அவர் சாந்தமுள்ளவராக இருக்கிறார்.

120. ஆனால் மனிதனாக அவதரித்த ஞானமானவருக்குப் பொருத்த மான பெயராகிய சேசு என்னும் திருநாமம் தேவசிநேகப் பற்று தலையும், அளவற்ற நேசத்தையும், சாந்த குணத்தையுமன்றி வேறு எதை நமக்குக் குறித்துக் காட்டுகிறது? நேசிப்பதும், மனிதனை இரட்சிப்பதுமே சேசுநாதருடைய தனிப்பட்ட குணாதிசயமாக இருக்கிறது. ''தேவ சுதனாகிய சேசுநாதர் என்பதைவிட வேறு எந்தப் பாடலும் அதிக இனிமையானதல்ல, எந்தக் குரலும் அதிக இன்பமானதல்ல, எந்த எண்ணமும் அதிக வசீகரமுள்ளதல்ல." தெரிந்துகொள்ளப்பட்ட ஓர் ஆத்துமத்தின் செவிக்கும், இருதயத் திற்கும் சேசு என்னும் திருப்பெயர் எவ்வளவு இனிமையானதாக ஒலிக்கிறது! உதடுகளுக்குத் தேனைப் போலும், செவிகளுக்கு மிக இன்பமான ஒரு பாடலைப் போலும், இருதயத்திற்கு சிலிர்ப் பூட்டுவதாகவும் அது இருக்கிறது.


தம் பார்வைகளில் அவர் சாந்தமுள்ளவராக இருக்கிறார்

121. "தமது பார்வைகளிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் சேசுநாதர் சாந்தமுள்ளவராக இருக்கிறார். "நம் அன்புள்ள இரட் சகரின் திருமுகம் எவ்வளவு பேரமைதியும், சாந்தமும் உள்ளதாக இருக்கிறது என்றால், அதைக் கண்டவர்களின் கண்களையும் இருதயங்களையும் அது வசீகரித்தது. அவரைக் காணத் தொழுவத் திற்கு வந்த இடையர்கள் அவரது திருமுகத்தின் பேரமைதியையும் அழகையும் கண்டு எந்த அளவுக்கு வாயடைத்துப் போனார்கள் என்றால், அதன் பின் பலநாட்களாக அவர்கள் அது தந்த பரவசத் தில் ஆழ்ந்திருந்தார்கள். மூன்று அரசர்கள், தாங்கள் பெருமை யுள்ளவர்களாக இருந்தாலும், இந்த அழகிய குழந்தையின் சாந்தமுள்ள அம்சங்களைக் கண்ட மாத்திரத்தில் அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்தார்கள், அவர்கள் தங்கள் அரச மகத்துவத்தை மறந்து போனார்கள். அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "நண்பரே, இங்கே இருப்பது எவ்வளவு நல்லது. இங்கே இந்த மகா பிரியத்திற்குரிய இந்த தேவ பாலனைப் பார்த்துக் கொண்டிருப்பதில், இந்தத் தொழுவத்தில் நாம் அனுபவிக்கும் பேரின்பங்களுக்கு முன் அரண்மனைகளில் நாம் அனுபவிக்கும் உல்லாசங்கள் ஒப்பிடவும் தகுதியற்றவை யாக இருக்கிறதே " என்று வியந்து பேசிக்கொண்டார்கள்.

சேசு இன்னும் மிக இளையவராக இருந்தபோதும், சுற்றிலு முள்ள நாட்டுப்புறத்திலிருந்து குழந்தைகளும், ஏதாவது பிரச்னை களில் சிக்கியிருந்த மக்களும் அவரைக் காணவும், அதனால் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் கண்டடையவும் அவரிடம் வந்தார்கள். "நாம் போய் மரியாயின் அழகிய குழந்தையாகிய இளம் சேசுவைப் பார்ப்போம்." "அவருடைய திருமுகத்தின் அழகும் கம்பீரமும் ஒரே சமயத்தில் எவ்வளவு இனிமையாகவும், எவ்வளவு மரியாதைக்குரியதாகவும் இருந்தன என்றால், அவரை அறிந்திருந்தவர்கள் அவரைத் தாங்கள் நேசிப்பதைத் தடுக்க இயலாதவர்களாக இருந்தார்கள். தொலைவிலிருந்த அரசர்கள் அவரது அழகைப் பற்றிக் கேள்வியுற்று அவரது சித்திரம் ஒன்றை வைத்திருக்க விரும்பினார்கள். ஒரு விசேஷ அனுக்கிரகமாக, நமதாண்டவர் அபோகார் அரசருக்குத் தமது சித்திரம் ஒன்றை அனுப்பினார் என்றும் கூட சொல்லப்படுகிறது. உரோமைச் சேவகர்களும், யூதர்களும் சுதந்திரமாக அவரை அடிக்கவும், தலையில் குட்டவும் வசதியாக, முதலில் அவருடைய முகத்தை மூடினார்கள், ஏனெனில் மிகக் கொடிய மனிதர்கள் கொடூரத் தையும் கூட அவர்களிடமிருந்து அகற்றி விடுகிற கருணையும், மனதைக் கொள்ளை கொள்ளும் ஒளிச்சுடரும் அவருடைய கண்களில் இருந்தன என்று சில நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.


அவர் தம் வார்த்தைகளில் சாந்தமுள்ளவராக இருந்தார்

122. சேசுநாதர் தம் வார்த்தைகளிலும் சாந்தமுள்ளவராக இருந் தார். பூமியில் அவர் வாழ்ந்த போது, தமது கனிவுள்ள பேச்சைக் கொண்டு அனைவர் மீதும் வெற்றி கொண்டார். அவர்தம் குரலை உயர்த்துவதையோ, கோபத்தோடு வாதிடுவதையோ யாரும் ஒருபோதும் கேட்டதேயில்லை . தீர்க்கதரிசிகளும் அவரது இந்தக் குணத்தைப் பற்றி முன்னுரைத்தார்கள் (இசை. 42:2). நல்ல மனதோடு அவரது வார்த்தைகளைக் கேட்டவர்கள், அந்த ஜீவிய மளிக்கும் வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டார்கள். " எந்த மனித னும் ஒரு போதும் அவரைப் போலப் பேசினதில்லை " (அரு. 7:46) என்று அவர்கள் அதிசயித்தபடி கூறினார். அவரை வெறுத்தவர்களும் கூட அவரது வாய்ச்சாலகத்தையும், ஞானத்தையும் கேட்டு வியந்து ஒருவர் மற்றவரைப் பார்த்து, "இந்த ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது?" என்றார்கள் (மத் 13:54). எந்த மனிதனும் அவரைப் போல சாந்தத்தோடும், அதிகாரத்தோடும் ஒரு போதும் பேசின தில்லை. "தமது பேச்சில் இவ்வளவு ஞானத்தை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

ஏழைகள் கூட்டங்கூட்டமாக வீடுகளையும் குடும்பங் களையும் விட்டு, அவர் பேசுவதைக் கேட்க பாலைவனம் வரை கூட சென்றார்கள். அங்கே அவர்கள் பல நாட்களுக்கு உணவும் தண்ணீரும் கூட எடுத்துக் கொள்ளாமல் சென்றார்கள். ஏனெனில் அவரது கனிவுள்ள வார்த்தைகள் அவர்களுக்குப் போதுமான உணவாக இருந்தன. அப்போஸ்தலர்கள் அவர் சாந்தத்தோடு பேசும் முறையைக் கண்டு பாவிக்கும்படி தூண்டப்பட்டார்கள். அவரது வார்த்தைகள் குணமாக்கப்பட முடியாதவர்களையும் குணப்படுத்தின, கஸ்திப்பட்டவர்களைத் தேற்றின. துயரத்தால் தாக்கப்பட்டிருந்த மரிய மதலேனம்மாளிடம் அவர் "மரியே!" என்ற ஒரே ஒரு வார்த்தைதான் பேசினார். உடனே அவள் மகிழ்ச்சியாலும், சந்தோஷ உற்சாகத்தாலும் நிரப்பப்பட்டாள்.