"நான் ஒரு நாள் சாக வேண்டும்!'' என்று நமக்கு நாமே அடிக்கடி சொல்லிக் கெள்வது நம் இரட்சணியத்திற்கு மிகவும் பயனுள்ளது. பரிசுத்த திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதனன்று இதை விசுவாசிகளுக்கு நினைவுபடுத்துகிறது: "மெமெந்தோ ஹோமோ, குய்யா புல்விஸ் எஸ் இன் புல்வேரெம் ரெவெர்த்தேரிஸ்: மனிதா, நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை நினைத்துக் கொள்!''
மனிதா, நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை நினைத்துக்கொள்! மரணத்தைப் பற்றிய இந்த உறுதிப்பாடு வருடத்தில் பல முறை நம் சிந்தனைக்குக் கொண்டு வரப்படுகிறது. சில சமயங்களில் சாலையில் நாம் கடந்து செல்லும் கல்லறைத் தோட்டங்களாலும், சில சமயங்களில் தேவாலயங்களின் அருகில் உள்ள கல்லறைகளாலும், சில சமயங்களில் அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் மரித்த உடல்களாலும் இது நமக்கு நினைவு படுத்தப்படுகிறது.
வனவாசிகள் தங்கள் குகைகளுக்கு எடுத்துச் செல்லும் மிக விலையுயர்ந்த தட்டுமுட்டுப் பொருட்கள் ஒரு சிலுவையும், ஒரு மண்டையோடும் ஆகம்; சிலுவை சேசுகிறீஸ்துநாதர் நம்மீது கொண்டுள்ள மாபெரும் நேசத்தை அவர்களுக்கு நினைவு படுத்துவதற்காக, மண்டையோடு தங்கள் சொந்த மரணத்தின் நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக. இவ்வாறு, தங்கள் வாழ்நாட்களின் இறுதி வரை அவர்கள் தவச் செயல்களில் நிலைத்திருந்தார்கள்; இவ்வாறு வனாந்தரத்தின் வறுமையில் இறந்த போது, தங்கள் அரண்மனைகளில் மரித்த அரசர்களை விட அதிக மனதிருப்தியோடும் மகிழ்ச்சியோடும் அவர்கள் மரித்தார்கள்.
முடிவு அண்மையில் உள்ளது! முடிவு அண்மையில் உள்ளது! ஃபீனிஸ் வெனித்; வெனித் ஃபீனிஸ் (எசேக். 7:2). இவ்வாழ்வில் ஒருவன் அதிகக் காலம் வாழ்கிறான், மற்றொருவன் அதை விடக் குறுகிய காலம் வாழ்கிறான்; ஆனால் விரைவிலோ, சற்றுத் தாமதமாகவோ முடிவு வந்தே தீரும்; அந்த முடிவு வரும்போது, சேசுகிறீஸ்துவை நாம் நேசித்திருக்கிறோம், அவருடைய அன்பிற்காக இவ்வாழ்வின் துன்பங்களையும், உழைப்புகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டோம் என்ற எண்ணத்தை விட மரணத்தின் போது நம்மை அதிகம் தேற்றக் கூடியது வேறு எதுவுமில்லை. ஆகவே, நமக்கு ஆறுதல் தரப் போவது, நாம் சம்பாதித்துள்ள செல்வங்கள் அல்ல, நாம் அடைந்துள்ள பதவிகள் அல்ல, நாம் அனுபவித்துள்ள இன்பங்களும் அல்ல. உலகத்தின் மேன்மை முழுவதும் மரிக்கிற ஒரு மனிதனைத் தேற்ற இயலாது; அதற்குப் பதிலாக அது அவனுடைய வேதனைகளை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. எவ்வளவுக்கு அவன் உலக மேன்மைகளை சம்பாதித்திருந்தானோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் துன்பப் படுவான். பாதணிகள் அணியாத கார்மேல் சபையின் மிகப் பரிசுத்த கன்னிகையும், பேரரசர் இரண்டாம் ரூடால்ஃபின் மகளுமான அர்ச். அன்னம்மாளின் சகோதரி மார்கரெட் என்பவள், ""மரண நேரத்தில் ஓர் இராச்சியத்தால் வரும் பயன் என்ன?'' என்கிறாள்!
ஓ எவ்வளவு அதிகமான உலகத்தன்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்! உலக இலாபங்களையும், அதிகாரத்தையும், பதவியையும் சம்பாதிப்பதில் அவர்கள் மும்முரமயிருக்கும் அதே கணத்தில் அவர்களுக்கு மரணச் செய்தி வருகிறது: ""உன் இல்லத்தை ஒழுங்குபடுத்து; ஏனெனில் சாகப் போகிறாய், பிழைக்க மாட்டாய்'' (இசை.38:1). ஓ மனிதா, நீ நோயில் விழும் நேரம் வரைக்கும் உன் உயிலை எழுதி வைப்பதில் ஏன் அலட்சியமாய் இருந்திருக்கிறாய்? ஓ என் சர்வேசுரா, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றி பெறும் நிலையில், அல்லது ஏதாவது ஓர் அரண்மனையை அல்லது ஒரு நிலச் சொத்தை உரிமையாக்க இருக்கும் நிலையில், ஒரு குருவானவர் வந்து தன் ஆத்துமத்திடம், ""கிறீஸ்தவ ஆத்துமமே, இவ்வுலகிலிருந்து புறப்பட்டுப் போ'' என்று சொல்வதைக் கேட்கும் ஒருவனது வேதனை எவ்வளவு பெரிதாக இருக்கும்! இவ்வுலகிலிருந்து புறப்பட்டுப் போய், சேசுகிறீஸ்துநாதருக்கு உன் கணக்கை ஒப்புவி. ""ஆனால், நான் இப்போது ஆயத்தமாக இல்லை'' என்று அவன் கதறுகிறான்.'' அதைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? நீ இப்போது புறப்பட்டுப் போய்த்தான் ஆக வேண்டும்!
ஓ என் சர்வேசுரா, எனக்கு ஒளி தாரும், உமக்கு ஊழியம் செய்வதிலும், உம்மை நேசிப்பதிலும் என் எஞ்சிய வாழ்நாளைச் செலவிட எனக்கு பலம் தாரும். இப்போது நான் சாவேன் என்றால், மனதிருப்தியோடு நான் சாக மாட்டேன்; மனக்கலக்கத்துடனேயே நான் சாவேன். அப்படியானால், நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? என் ஆத்துமம் மிக ஆபத்தான ஒரு நிலையில் இருக்கும் சமயத்தில் மரணம் வந்து என்னைப் பற்றிப் பிடிப்பதற்காகவா? ஆண்டவரே, கடந்த காலத்தில் நான் மூடனாக இருந்திருக்கிறேன் என்றாலும், இனி வரவிருக்கும் காலத்தில் நான் அப்படி இருக்க மாட்டேன். இப்போது நான் என்னை முழுமையாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்ளும், உமது வரப்பிரசாதத்தால் எனக்கு உதவியருளும்.