இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது!

நம் தெய்வீக இரட்சகர் தமது பரலோக மகிமையின் ஒரு கண நேரக் காட்சியைத் தம் அப்போஸ்தலர்களுக்குத் தர விரும்பி, அவர்களுக்கு முன்பாக உருமாறி, தமது திருமுகத்தின் பிரகாசத்தை அவர்கள் காண அனுமதித்தார் என்று இன்றைய சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம். தெய்வீக மகத்துவத்திற்காக உழைக்க அவர்களை ஏவித் தூண்டும்படியாக அவர் இதைச் செய்தார். மகிழ்ச்சியாலும், இன்பத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டவராக, அர்ச். இராயப்பர், "ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது!'' என்றார். ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்போம்; இந்த இடத்திலிருந்து இனி நாம் பிரிந்து செல்ல வேண்டாம். ஏனெனில் உமது அழகின் காட்சி உலகின் எல்லா இன்பங்களையம் விட அதிகமாக எங்களைத் தேற்றுகிறது.

நமது எஞ்சிய காலத்தில் பரலோகத்தை சம்பாதித்துக் கொள்வதற்காக நாம் உழைப்போம். பரலோகம் எந்த அளவுக்கு மிக உயர்வான ஒரு நன்மையாக இருக்கிறது என்றால், அதை நமக்காக விலைக்கு வாங்குவதற்காக, சேசுகிறீஸ்துநாதர் சிலுவையின் மீது தமது உயிரைப் பலியாக்கினார். தங்கள் சொந்தப் பாவத்தாலேயே மோட்சத்தை இழந்து போனது பற்றய நினைவிலிருந்தும் எழும் வாதைதான் நரகத்தில் சபிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் அனைத்து வாதைகளிலும் மிகப் பெரியது என்பதில் உறுதியாயிருங்கள். பரலோகத்தின் ஆசீர்வாதங்களும், இன்பங்களும், சந்தோஷங்களும், இனிமையும் சம்பாதித்துக் கொள்ளப்படலாம்; ஆனால் அவற்றை அனுபவித்து மகிழும் பாக்கியம் பெற்ற ஆன்மாக்களால் மட்டுமே அவற்றை விளக்கிக் கூறவும், புரிந்து கொள்ளவும் இயலும்.

அப்போஸ்தலர் கூறுகிறபடி, பூமியிலுள்ள எந்த மனிதனும் தம்மை நேசிக்கும் ஆத்துமங்களுக்காகக் கடவுள் ஆயத்தம் செய்திருக்கிற அளவற்ற ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள இயலாது: ""சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற காரியங்களைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனித இருதயத்திற்கு அது எட்டினதுமில்லை'' (1கொரி.2:9). இவ்வாழ்வில், புலன்களின வழியாக நாம் அனுபவிக்கும் இன்பங்களைத் தவிர வேறு எந்த இன்பத்தின் மிக அற்பமான அறிவையும் கூட நாம் கொண்டிருக்க இயலாது.

மோட்சத்தைப் பற்றிப் பேசும்போது, அர்ச். பெர்னார்ட் கூறுவதாவது: ""ஓ மனிதா, மோட்சத்தின் ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள நீ விரும்பினால், அந்த மகிழ்ச்சியான நாட்டில், நீ ஆசிக்காத எதுவும் இருக்காது, நீ ஆசிக்கிற எல்லாம் இருக்கும் என்பதை அறிந்து கொள். புலன்களுக்கு உகந்ததாயிருக்கும் சில காரியங்கள் இவ்வுலகில் இருக்கின்றன என்றாலும், இன்னும் எவ்வளவு அதிகமானவை நம்மைச் சித்திரவதை செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டுள்ளன? பகலின் ஒளி இன்பமானது என்றால், இருளின் இரவு வெறுப்புக்குரியது; வசந்த காலமும் நம்மை உற்சாகப் படுத்துகிறது என்றால் குளிர்காலத்தின் பனியும், கோடையின் வெப்பமும் வேதனை தருகின்றன. இது தவிர, நாம் நோயின் வேதனைகளையும், மனிதர்களின் துன்புறுத்தல்கçயும், வறுமையின் அசெளகரியங்களையும் தாங்க வேண்டியுள்ளது; அந்தரங்க கலக்கங்களுக்கும், அச்சங்களுக்கும், பசாசின் சோதனைகளுக்கும், மனச்சான்றின் சந்தேகங்களுக்கும், நித்திய இரட்சணியத்தைப் பற்றிய உறுதியற்ற நிலைக்கும் நாம் உள்ளாக வேண்டியுள்ளது.''

ஆனால் மோட்சத்திற்குள் நுழைந்தபின், பாக்கியம் பெற்ற ஆன்மாக்களுக்கு இனி துயரங்கள் இருக்காது. ""சர்வேசுரன் அவர்களுடைய கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக் கேட்டேன். அன்றியும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்'' (காட்சி.21:4).

மோட்சத்தில், இனி மரணமும், மரண பயமும் இல்லை. அந்தப் பேரின்ப ஸ்தலத்தில் துயரங்களோ, நோய்களோ, வறுமையோ, வசதிக் குறைவுகளோ, பகல் இரவு மாற்றங்களோ, குளிரோ, வெப்பமோ இல்லை. அந்த இரçVச்சியத்தில் எப்போதும் பேரமைதியுள்ள ஒரு தொடர்ச்சியான பகல் பொழுதும், எப்போதுமே மலர்ந்து மணம் வீசும் ஒரு தொடர்ச்சியான வசந்த காலமும் மட்டுமே உள்ளது. மோட்சத்தின் துன்புறுத்தல்களோ, பொறாமையோ இல்லை; ஏனெனில் அனைவரும் ஒருவரை ஒருவர் கனிவுள்ள அன்போடு நேசிக்கிறார்கள். பிறரது மகிழ்ச்சி தன்னுடைய மகிழ்ச்சி என்பது போல, மற்றவர்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொருவரும் அக்களிக்கிறார்கள். இனி நரகத்தைப் பற்றிய அச்சம் இல்லை, ஏனெனில் வரப்பிரசாதத்தில் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட ஆத்துமம் இனி பாவம் செய்யவோ, கடவுளை இழக்கவோ முடியாது.

மோட்சத்தில் நீ ஆசிக்கக் கூடிய அனைத்தையும் கொண்டிருப்பாய். ""இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.'' அங்கே அனைத்தும் புதிதாக இருக்கிறது: புதிய அழகுகள், புதிய இன்பங்கள், புதிய மகிழ்ச்சிகள். அங்கே நம் எல்லா ஆசைகளும் திருப்தியாக்கப்படுகின்றன. பார்வை அந்த நகரத்தின் அழகைக் காண்பதில் திருப்தியடைகின்றன. படிகத்தாலான தெருக்களும், வெள்ளியாலான வீடுகளும், பொன்னாலான ஜன்னல்களும் கொண்டதும், அனைத்தும் மிக அழகிய மலர்களால் அலங்கரிக்கப் பட்டதுமான ஒரு பட்டணத்தைக் காண்பது மனதுக்கு எவ்வளவு இன்பம் வருவிப்பதாக இருக்கும்! ஆனால், ஓ, பரலோக நகரம் இன்னும் எவ்வளவு அதிக அதியற்புத அழகுள்ளதாக இருக்கும்! அந்த இடத்தின் அழகு, அரச உடைகள் அணிந்து அங்கே வசிப்பவர்களின் அழகால் அதிகரிக்கப்படும்; ஏனெனில், அர்ச். அகுஸ்தீனார் கூறுவது போல, அவர்கள் அனைவருமே அரசர்களாக இருப்பார்கள்: குவோத் சிவெஸ் தோத் ரேஜெஸ்.

ஆகவே, பரலோக நித்திய மகிமையை சம்பாதித்துக் கொள்வதற்கு, நாம் நித்திய உழைப்பை சந்தோஷ உற்சாகத்தோடு அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்ச். அகுஸ்தீனார் கூறுவது நீதியானதே. புனிதர்கள் மோட்சத்தை அடைந்து கொள்ள சிறிதளவே செய்திருக்கிறார்கள். எத்தனையோ அரசர்கள் தங்கள் சிம்மாசனங்களைத் துறந்து, துறவற மடங்களுக்குள் தங்களை அடைத்துக் கொண்டார்கள். ஏராளமான பரிசுத்த வனவாசிகள் குகைகளுக்குள் தங்களை அடைத்துக் கொண்டார்கள்; ஏராளமான வேதசாட்சிகள் மகிழ்ச்சியோடு வாதைகளுக்குத் தங்களைக் கையளித்தார்கள், சித்திரவதைச் சட்டங்களையும், பழுக்கச் சிவந்த இரும்புத் தகடுகளையும் ஏற்றுக்கொண்டார்கள் - இவர்கள் எல்லோருமே மிகச் சிறிதளவு மட்டுமே செய்திருக்கிறார்கள். இக்காலத் துன்பங்கள் வரவிருக்கும் மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை (உரோ.8:18). மோட்சத்தை சம்பாதிப்பதற்கு, நாம் இந்த வாழ்வின் எல்லா வேதனைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், அது கொஞ்சமாகவே இருக்கும்!

ஆகவே, நம் வாழ்நாட்களில் நமக்கு வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ள தைரியத்தோடு தீர்மானம் செய்வோம்; மோட்சத்தை உறுதி செய்து கொள்வதற்கு இவை மிகக் குறைவான விலையாக, அல்லது ஒன்றுமில்லாமையாக இருக்கின்றன. ஆகவே, நாம் இரட்சிக்கப்படுவோமானால், இந்த எல்லா வேதனைகளும், துயரங்களும், துன்புறுத்தல்களும் முடிவில்லாத இன்பங்கள் மற்றும் சந்தோஷங்களின் ஊற்றாக இருக்கும் என்பதற்காக நாம் அகமகிழ்ந்து களிகூர்வோமாக. ""உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்'' (அரு.16:20). ஆகவே, இவ்வாழ்வின் சிலுவைகள் நம்மைத் துன்பப்படுத்தும்போது, நாம் பரலோகத்தை நோக்கிந ம் கண்களை உயர்த்தி, மோட்சத்தைப் பற்றிய நம்பிக்கையைக் கொண்டு நம்மைத் தேற்றிக் கொள்வோமாக. அர்ச். எகிப்து மேரியின் வாழ்வின் முடிவில், மடாதிபதியாக அர்ச். ஸோஸிமுஸ் என்பவர் வனாந்தரத்தில் அவள் மரணத் தருவாயில் இருப்பதைக் கண்டார். அவர் அவளிடம், நாற்பத்தேழு ஆண்டுகளாக அந்த வனாந்தரத்தில் அவளால் எப்படி வாழ முடிந்தது என்று கேட்டார். ""பரலோகத்தைப் பற்றிய நம்பிக்கையோடு!'' என்று அவள் பதிலளித்தாள். இதே நம்பிக்கை நம்மையும் தூண்டும் என்றால், இவ்வாழ்வின் துன்பங்களை நாம் உணர மாட்டோம். தைரியம் கொள்ளுங்கள்! நாம் கடவுளை நேசித்து, பரலோகத்திற்காக உழைப்போம். அங்கே புனிதர்கள் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாமரி நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; சேசுநாதர் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நித்திய இராச்சியத்தில் நம் ஒவ்வொருவரையும் ஓர் அரசனாக ஆக்கும்படி அவர் தம் திருக்கரத்தில் ஒரு கிரீடத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.