இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இரட்சகருடைய மாதாவே!

“சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே,” “கிறீஸ்துவினுடைய மாதாவே,” “சிருஷ்டிகருடைய மாதாவே” எனத் திருச்சபை அர்ச். மரியாயைப் புகழ்ந்தது. அவர்கள் பெற்ற மகன் தேவன் மட்டுமன்று; சிருஷ்டிகர் மட்டுமன்று; நமது இரட்சகரும் அவரே. அவர் நிறைவேற்றிய நமது இரட்சணிய வேலையையும், அதில் பரிசுத்த மரியம்மாளின் பங்கையும் நமக்கு எடுத்துக் காட்ட, திருச்சபை அவர்களை “இரட்சகருடைய மாதா” என்று அழைப்பதும், “சேசுவின் தாய்” என்று கூறுவதும் ஒன்றே. ஏனெனில் எபிரேய பாஷையில் “சேசு” என்கிற வார்த்தைக்கு “இரட்சகர்” என்றே அர்த்தம்.

கனியிலிருந்து மரத்தை அறியலாம். கனியின் தன்மை மரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. அப்படியாயின் கனியாகிய சேசு இரட்சகரின் மகிமை, மாதாவான மாமரியின் மகிமையல்லவா? எனவே தாய் மாமரியைக் குறித்து அறியுமுன் மகன் சேசுவைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

“சேசு” என்கிற பெயரை அல்லது “இரட்சகர்” என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் அகமகிழாதவர்கள் யார்? இவ்வுலகில் நமக்குப் பிரியமான பெயர்கள் எத்தனையோ இருக்கின்றன. வணக்கத்திற்கும் மரியாதைக் கும் உரித்தானோர் எத்தனையோ பேர் இருந்தனர்; இருக்கின்றனர். ஆயினும் நமக்குப் பிரியமான பெயர் களுள் மிகவும் அருமையானது “சேசு” என்னும் நாமமல்லவா? வணக்கத்திற்கு மாத்திரமன்று, ஆராதனைக்கே பாத்திரமானவர் சேசு இரட்சகரல்லவா? “இதோ உமது உதரத்தில் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவீர், அவ ருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்” (லூக். 1:31) என வானதூதர் மூலமாய்ச் சர்வேசுரனே கொடுத்த இந்நாமம் உன்னதமானது. 

பிதாவினால் அனுப்பப்பட்டு, மாடடைக் குடிலில் பிறந்த மரியாயின் மைந்தன் சேசு, கத்தோலிக்க மக்களுக்கு, ஏன், அகில உலகத்திற்கே முக்கியமானவர். அர்ச். பெர்நார்து சொல்லுவது போல் சேசு என்னும் நாமம் வாய்க்கு ருசி தரும் தேன்; செவிக்கு இன்பமளிக்கும் இசை; மனதிற்கோ மாபெரும் மகிழ்ச்சி. “சேசு” என்கிற நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் மோட்சவாசிகளும், பூவாசிகளும், நரகவாசிகளும், சகலரும் முழங்கால்படியிடுவார்களாக” (பிலிப். 2:10) என வேதாகமம் ஏவுகிறது. 

“எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூவுலகமெங்கும் எவ்வளவு ஆச்சரியத்துக்கு உரியதாயிருக்கின்றது” (சங். 8:1) என்று தாவீது இராஜா வியந்து பாடுகிறார்.

இப்பெயர் இங்ஙனம் யாவராலும் வியந்து போற்றப்படுவது ஏன்? “ஏனெனில் அவரே (சேசு) நமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்” (மத்.1:21). ஏனெனில் “சேசு” என்கிற பெயர் மனுக்குல இரட்சகரைக் குறிக்கின்றது. இம்மீட்பர் உற்ற துணையாக வராவிடில் நம் கதி நித்தியத்திற்கும் என்னமா யிருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆதாம், ஏவாள் செய்த ஒரேயொரு பாவத்தால் மனுக்குலம் முழு வதுமே மாசுற்றது. அதன் விளைவாக சாவு, நரகம், நோய், நோக்காடு, ஆசாபாசம் முதலிய ஆக்கினைகள் மனித சந்ததியை ஆட்கொண்டன. முதல் பாவம் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் பகை மூட்டியது.

ஆனால் கடவுள் கறைப்பட்ட மனித சந்ததியை இந்நிலையில் விட்டுவிடவில்லை. மனுக்குலத்தை இரட் சிக்க சித்தங் கொண்டார். “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித் துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்” (ஆதி 3:15) என்று சர்வேசுரன் பாம்பு வேடம் பூண்டு வந்த அலகைக்கு உரைத்த வார்த்தைகளின் மூலம், ஓர் இரட்சகரை அனுப்புவதாக வாக்களித்தார். இவ்வாக்கின்படி குறிப்பிட்ட நேரம் வந்ததும் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் மனுவுருவெடுத்தார். நமக்காக மனப்பூர்வமாய்ச் சிலுவையில் மரித்துப் பாவத்துக்குப் பரிகாரம் செய்து பசாசின் வல்லமையிலிருந்து எல்லோரையும் மீட்டு இரட்சித்தார். இம்மீட்பினால் தேவ சுதன் கடவுளுக்கும் மனிதருக்கும் பாவத்தினால் எழுந்த பகையாகிய பெருஞ்சுவரை இடித்துத் தள்ளினார். 

பழைய ஏற்பாட்டின் ஆதாம், சர்வேசுரன் கொடுத்த கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியைத் தின்று, தனக்கும் தனது சந்ததியாருக்கும் சாவையும், தேவ கோபத்தையும் பெற்றார். ஆனால் புதிய ஏற்பாட்டின் ஆதாமாகிய சேசு இரட்சகரோ, பிதாவின் சித்தத்திற்கமைந்து, தமக்களிக்கப்பட்ட கசப்பான பாத்திரத்தைக் கடைசித்துளி வரை குடித்துத் தமது இரத்தமெல்லாம் சிந்தி, நமக்கு ஞான உயிரையும், தேவ மன்னிப்பையும் பெற்றுத் தந்தார். பாவத் தளையிலிருந்து நம்மை மீட்டுப் பரலோகத்திற்குச் சுதந்தரவாதிகளாக் கினார். நாம் வாழ, நமக்கு உயிரளிக்க, அவர் சிலுவை மரத்தில் உயிரிழந்து தொங்கினார். என்ன தியாகம்!

இக்காரணம் பற்றியே “சேசு” என்னும் திருநாமம், அல்லது “இரட்சகர்” என்ற வார்த்தை நமக்கு அவ்வளவு அருமையாக இருக்கிறது. “அதினிமித்தம் சர்வேசுரனும் அவரை உயர்த்தி, எல்லாவற்றிற்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்தார்” (பிலிப். 2:9). சேசு என்கிற பெயர் நம்முள்ளங்களில் எத்தனையோ அன்புணர்ச்சிகளை எழுப்புகின்றது. இரட்சகர் என்ற சொல் இரட்சணியப் படலத்தையே நம் மனக்கண் முன் ஓர் வினாடியில் திரையிடுகிறது; தனதுயிரையே தத்தம் செய்த உத்தம தியாகி சேசு கிறீஸ்துநாதரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.

நமக்காக தம் உயிரையே கொடுத்த கொடை வள்ளல் சேசு இரட்சகரை நமக்களித்தது யார்? இவ்வளவு சிறந்த கனியை ஈன்ற மரம் யாது? “பிதாவாகிய சர்வேசு ரன் உலகத்தை எவ்வளவு நேசித்தாரென்றால், தம் ஏக சுதனையே நமக்களித்தார்” (அரு.3:16); ஆம். இது உண்மை. சுதனை நமக்குத் தந்தவர் பிதாவே. ஆனால் அவரை நமக்குத் தருவதற்குப் பிதா தெரிந்து கொண்ட வழி கன்னிமாமரியே.

அன்று நாசரேத்தூர் சிறு குடிசையில் வானதூதர் வார்த்தைகளுக்கு, “உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” (லூக். 1:38) என்று பூரண சம்மதம் அளித்தார்கள் மாமரி. எல்லாம் வல்ல சர்வேசுரன் நமது இரட்சணியத்திற்காக வகுத்த வழிக்கும், ஏற்பாட்டிற்கும் மனம் இசைந்தார்கள். அன்றே இரட்சகருக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றார்கள். இரட்சகராகிய சேசு பாலனை ஈன்றெடுத்தார்கள். சேசு கிறீஸ்துநாதர் நமக்காகப் பாடு படுவதற்கு உதவியாக இருந்த மனித சரீரம் மாமரி கொடுத்த சரீரமே; சேசுநாதரின் தேகத்தில் ஓடிய இரத்தம் அவர்களது இரத்தமே. கடைசியில் தான் அன்போடு வளர்த்த மாசற்ற செம்மறிப் புருவையாகிய தன் செல்வ மகன் சேசுவைக் கல்வாரி பலிக்களத்திற்கு அனுப்பினவர்களும் இத்தாயே. 

சிலுவையாகிய கழுமரத்தில் தன் மகன் தொங்கி, உயிரிழக்கவிருக்கும் தருணத்தில் கூட அவர்கள் தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. தன் ஏக குமாரனை நமக்குப் பலியாக தத்தம் செய்ய இறுதிவரை சிலுவையினடியில் உறுதியாக நின்றார்கள் இவ்வீரத்தாய். கடைசி வரை, தான் “இரட்சகருடைய மாதா” என எண்பித்தார்கள் இவ்வியாகுல மாதா. ஆம், கன்னிமாமரி, சேசுவின் தாய்; உலகத்தின் பாவங்களைப் போக்க வந்த சர்வேசுரனுடைய திவ்விய செம்மறிப் புருவையாகிய அதே சேசுவின் அன்னை; நம் இரட்சகருடைய மாதா. இது கதையல்ல, கனவல்ல; விசுவாச சத்தியம். இரட்சகருக்கு மாதாவான இவர்களின் மகிமையை என்னென்பது!

இம் மகிமையினால் பலனடைந்தவர்கள் நாமே. இரட்சகருக்கே மாதாவான உரிமையால் மாமரி ஆற்றிய அரும்பணி சிருஷ்டிகள் எல்லாம் சேர்ந்து செய்யும் உதவியைவிட மிகப் பெரிது. முற்காலத்தில் தீர்க்க தரிசிகள் இரட்சகரின் வருகையை மக்களுக்கு முன்னறி வித்தனர். தேவதூதன் உலக இரட்சகரின் பிறப்பை வெளிப்படுத்தினார். இரட்சகரின் முன்னோடியாகிய ஸ்நாபக அருளப்பர் அம்மீட்பரை உலகுக்குச் சுட்டிக் காட்டினார். அப்போஸ்தலர்களும் சுவிசேஷகர்களும் இரட்சகரைச் சகல ஜனங்களும் அறியும்படி செய்தனர். திருச்சபையின் ஞான அதிகாரிகள் அவரின் திரு வாக்கைப் பிரசங்கித்து, இன்று வரை இரட்சணிய வேலையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் கன்னி மாமரியோ அந்த இரட்சகரையே நமக்கு அளித்தார்கள். இதை விட அவர்கள் நமக்கென்ன அதிகம் செய்ய முடியும்?

இம்மகத்தான மாதரசியைத்தான், “இரட்சகருடைய மாதாவே” என்று வாழ்த்தி வணங்குகிறோம். ஆனால் இக்கருணை நிறைந்த அன்னையையும், அவர்களது மைந்தனையும் அநேகர் சரிவர அறியாதிருப்பது வருந்தத் தக்கது. இதை விட மிகவும் வருத்தமளிப்பது இம் மாதாவை முற்றிலுமே மறந்து திரியும் பதிதக் குழுவினரின் அர்த்தமற்ற செயல்தான். கனி வேண்டும், மரம் வேண்டாம் என்கின்றனர். என்ன விந்தை! மகனை வைத்துக் கொண்டு தாயைத் தள்ளி விடுவதா? இரட்சகரை ஏற்றுக் கொண்டு அவரின் மாதாவைப் புறக்கணிப்பதா? இவ்விருவரையும் பிரிப்பது சரியன்று. இரட்சணிய அலுவலில் மரியன்னையும் பங்கெடுத் தார்கள். சேசு கிறீஸ்து நம் இரட்சகர். கன்னி மாமரியோ உடன்-இரட்சகி (Co-redemptrix). இந்த இரட்சகியை இப்பொழுது நாம் மறந்து விடுவதா?

சர்வேசுரன் எவ்விதம் இரட்சணிய வேலையில் மாமரியும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று சித்தம் கொண்டாரோ, அவ்விதமே இரட்சணியத்தின் பலனை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் அவர்கள் சேர்ந்து உழைக்க வேண்டுமென்று ஆசிக்கிறார். உண்மையில் இரட்சக ருடைய மாதா, வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாகவும் இருக்கிறார்கள். ஆகவே இத்தாயை அன்புடன் அண்டி உருக்கமுடன் வேண்டுதல் நலமல்லவா?

“மாசற்ற கன்னிகையே! பரிசுத்த ஆண்டவளே! இராக்கேல் என்பவள் எஜிப்து தேசத்தின் போஷகனைப் பெற்றது போல, நாங்கள் ஸ்துதித்து ஆராதித்து வழிபடும் படியாக ஓர் இரட்சகரை இப்பிரபஞ்சத்திற்குப் பெற்றுத் தந்த உம் கருணையையும், பெருமையையும் என்னென் போம்! இரட்சகருடைய மாதாவே! மகனையே பலியாக்கிய வீரத்தாயே! எங்கள் இரட்சணியத்தினிமித்தம் திவ்விய சேசு பட்ட பாடுகளையும், நீர் அனுபவித்த வியாகுலங்களையும் எங்கள் உள்ளங்களில் பதித்தருளும். எங்கள் பாவங்களுக்காக என்றும் கண்ணீர் சிந்தி, அழுது, பிரலாபிக்க அருள் புரிந்தருளும். அன்பு நிறை கன்னிகையே, எங்களுக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்த உமது மைந்தனுக்கு உயிருக்கு உயிர், இரத்தத்திற்கு இரத்தம் அளிக்காவிட்டாலும், அன்பிற்கு அன்பாவது காட்டி, இரட்சணியத்தின் பலனை நாங்கள் அபரிமிதமாய் அடையும்படி உமது திருக்குமாரனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்.” 


இரட்சகருடைய மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!