இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவாலயத்தில் பசாசுக்கள்!

டொன் போஸ்கோவின் வற்புறுத்தலான வார்த்தைகள் நற்பயன் விளைவிக்கும் வகையில், புதிய மாணவர்கள் ஒரு பலனுள்ள பள்ளியாண்டுக்கான (1861 - 1862) அஸ்திவாரங்களை இட்டு வைக்க அவர்களுக்கு உதவியது. நவம்பர் 28 அன்று, சுவாமி ரூஃபினோ விவரிப்பது போல, டொன் போஸ்கோ சிறுவர்களிடம் பின்வருமாறு பேசினார்:

நாம் உறங்கும்போதுதான் கனவு காண்கிறோம். ஆகவே, நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, எல்லாச் சிறுவர்களோடும் நான் கோவிலில் இருந்ததாகத் தோன்றியது. பூசை தொடங்கிய போது, பல செந்நிற உடையணிந்த, கொம்புள்ள பசாசுக்கள் சிறுவர்களைச் சுற்றி வந்து, பொம்மைகள், புத்தகங்கள், சுவையான பதார்த்தங்கள், வீட்டுக் காட்சிகள், அல்லது ஒவ்வொரு சிறுவனுடைய தனிப்பட்ட விருப்பத்திற்குரிய காரியங்களைக் கொண்டு அவர்களுடைய கவனத்தைக் கவர முயன்றன. ஒவ்வொரு சிறுவனின் பக்கத்திலும், பூசையிலிருந்து அவனுடைய கவனத்தைத் திருப்ப முயன்ற ஒரு பசாசு இருந்தது. சிறிய பசாசுக்களை சில சிறுவர்கள் தங்கள் தோள்களில் ஏற்றி வைத்துக் கொண்டு, அவற்றோடு கொஞ்சிக் கொண்டும், செல்லமாக அடித்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். எழுந்தேற்றத்திற்கான மணி ஒலித்ததும், சிறுவர்கள் தலைவணங்க, பசாசுக்கள் மறைந்து போயின. ஆனாலும், தங்கள் தோள்களின்மீது பசாசுக்களைக் கொண்டிருந்த சிறுவர்கள், ஆராதிப்பதற்குப் பதிலாகப் பீடத்திற்குத் தங்கள் முதுகைக் காட்டியபடி நின்றனர். எழுந்தேற்றத்திற்குப் பின், ஒவ்வொரு பசாசும் தன் வேலையைச் செய்யத் திரும்பி வந்தது.

என் பிரியமுள்ள சிறுவர்களே, பூசையின்போது பசாசால் நீங்கள் உள்ளாக்கப்படுகிற அனைத்து பராக்குகளையும் இந்தக் கனவு எனக்குக் காட்டியது என்று நான் நம்புகிறேன். சில பசாசுக்கள் எழுந்தேற்றத்தின்போது கூட மறையவில்லை என்ற உண்மை, அந்தச் சிறுவர்கள் சாவான பாவத்தில் இருந்தார்கள் என்று காட்டுகிறது. பசாசு மேற்கொண்டு அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்ப வேண்டியிருக்கவில்லை; அவர்கள் ஏற்கனவே அவனுக்குச் சொந்த மாயிருந்தார்கள். அவன் வெறுமனே அவர்களை வருடி சீராட்டுகிறான். இந்தச் சிறுவர்களால் மேற்கொண்டு ஜெபிக்கக் கூட முடியாது.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு - வருடத்தின் கடைசி நாளில் - டொன் போஸ்கோ 1862 புத்தாண்டின் வருடாந்தர ஸ்ட்ரென்னா வைச் சிறுவர்களுக்குத் தந்தார். சுவாமி போனெட்டியின் காலக் கிரமப் பதிவேடு டொன் போஸ்கோவின் “நல்லிரவு வாழ்த்துரை யைப்” பின்வருமாறு பதிவு செய்கிறது:

“இன்றிரவு உங்களிடம் இறங்கி வந்து உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் நான் முடிவு செய்தேன். ஏனெனில் நான் அப்படிச் செய்யாவிடில், அடுத்த வருடம் வரைக்கும் நான் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். (சிரிப்பு). 1861-ஆம் ஆண்டு கடந்து விட்டது. அதை நன்றாகச் செலவிட் டவர்கள் அகமகிழ்ச்சி கொள்வார்கள்; மற்றவர்கள் மனஸ்தாபத்தை உணர்ந்து மனந்திரும்பலாம். ஆனாலும் அவர்கள் முடிந்த போன இந்த வருடத்தை இனி ஒருபோதும் திரும்பப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். “ஃபூஜித் இர்ரெப்பராபிலே தெம்புஸ் - திருத்திக் கொள்ள முடியாதபடி காலம் பறந்தோடுகிறது.” ஒவ்வொரு வருடத்தின் கடைசி நாளிலும், புத்தாண்டுக்கான ஒரு சில ஆலோசனைகளை என் மகன்களுக்குத் தருவது என் வழக்கம். 1862-ஆம் ஆண்டுக்காக நான் பரிந்துரைக்கும் சில ஆலோசனைகள் இதோ :

பக்தியோடு பூசை காண உங்களால் முடிந்ததெல்லாம் செய்யுங்கள்; மற்றவர்களும் அப்படியே செய்யும்படி அவர்களைத் தூண்டுங்கள். இந்த வருடம் என்னுடைய இந்த ஆலோசனையை உங்கள் மனதில் ஆழமாக இருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மிகத் தீவிரமாக விரும்புகிறேன். ஏனெனில் நான் நிஜமாகவே இதை வலியுறுத்திச் சொல்கிறேன். பெரும் தீமையான காரியங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. திவ்விய பலிபூசை கடவுளை சாந்தப் படுத்தவும், அவருடைய தண்டனையை விலக்கவும் நமக்குள்ள சிறந்த வழியாக இருக்கிறது. ஆகவே திரிதெந்தின் பொதுச்சங்கத்தின் நன்மை பயக்கும் பின்வரும் அறிவுரையை நாம் நிறைவேற்றுவோ மாக: “பூசை காணும்போது நாம் திவ்விய நன்மை வாங்க ஆயத்தமாக இருக்குமாறும், அதன் மூலம் இந்த மேன்மை மிக்க திருப்பலியில் நாம் அதிக முழுமையான விதத்தில் பங்கடையுமாறும் நம்மை நாம் எப்போதும் தேவ இஷ்டப்பிரசாத (சாவான பாவமில்லாத) நிலையில் காத்துக் கொள்வோமாக.” (Vol. VI, page 631).