மூன்றாம் பதிப்பின் முகவுரை

1926-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி முற்பகல், மிக வந். திருச்சி மேற்றிராணியார் ஆண்டவரவர்களும், சேசு சபை சுவாமிமார் பலரும் சூழ்ந்து நிற்க, மரண பயங்கரம் யாதுமற்றவராய், அமைதியாய் நித்திரை செய்பவர் போல், பரலோக பாக்கிய மடைந்தார் எழுபத்தெட்டு வயது முதிர்ந்த சங்கைக்குரிய வயோதிகர் சேசு சபை சந்தியாகப்பர் சுவாமியவர்கள். சந்தியாகப்பர் என்றால் இவருடைய தூய்மையும், வாய்மையும், கல்வித் திறமையும், பிரசங்க வல்லமையும், தெய்வ பக்தியும் இத்தமிழ் நாட்டில் அறியாதார் யாவர்! இவருடைய வாழ்க்கை வரலாறு சமீபத்தில் தனிப் புத்தகமாய்ப் பிரசுரிக்கப்படுமென்பதால், அதனை இங்கு விரித்துரைத்தல் அனாவசியம்.

அமிர்த மழை பொழிந்தது போல், தமிழ் நாடெங்கும் சந்தியாகப்பர் மொழிந்து வந்த இனிய பிரசங்கமாரி நின்றுவிட்ட தென்றாலும், அவர் எழுதித் தந்த சில நூல்கள் தமிழ் மக்களுக்கு எக்காலமும் சிறந்ததோர் தந்தை வழிச் சொத்தாம்! இந்த தந்தை வழிச் சொத்தின் நற்பாகம் ஒன்று மன்ரேசா என்ற புத்தகமாகும்! இரு பதிப்புப் பிரதிகள் யாவும் முற்றிலும் விற்பனையாகி, சில வருஷங்களாகப் பற்பல இடங்களிலிருந்து அநேகர் இப்புத்தகம் வேண்டுமென்று விரும்பிக் கேட்டு வந்ததால், மறு பதிப்பு அவசியமாயிற்று. காலஞ்சென்ற சந்தியாகப்பர் சுவாமியவர்கள் தாமே தமது புத்தகத்தை மூன்றாம் பதிப்புக்குத் திருத்திக் கொடுக்க ஆவல் நோக்கமுடையவராய், ஏற்கெனவே அவ்வாறே ஆரம்பித்துமிருந்தார். வயோதிக காலத்தில் அவர் எடுத்த சிரமம் நிறைவு பெறவில்லை.

பெரியோர்கள் விருப்பத்துக்கிசைந்து, இப்புத்தகத்தை நாம் துவக்கம் முதல் முடிவு வரை ஆராயந்து பரிசோதித்ததில், ஆங்காங்கு சிற்சில விஷயங்கள்தான் திருத்தவோ மாற்றவோ நேர்ந்தது. அத்துடன் இரண்டொரு குறிப்புகளும் அடிப்பாகத்தில் தனியாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி, இந்நூல் சந்தியாகப்பர் சுவாமியவர்கள் அமைத்துத் தந்தபடியே, உருமாற்றமின்றி மூன்றாம் முறை பிரசுரமாகின்றது. நீடித்த காலம் சந்தியாகப்பர் சுவாமியவர்கள் அயராது செய்துவந்த எண்ணிறந்த தியானப் பிரசங்கங்களின் பிரதான பிரசங்கங்கள் ஓர் கோர்வையாக ஒன்று சேர்க்கப்பட்ட சிறந்த பொக்கிஷமாம் மன்ரேசா என்ற இப்புத்தகம்! மூன்று நாளோ, நான்கு நாளோ, எட்டு நாளோ, உள் தியானம் செய்யவோ அல்லது தியானப் பிரசங்கங்கள் கேட்கவோ கூடி வரும் இல்லறவாசிகளுக்கு இன்றியமையாத ஞானச் சாதனம் இந்த மன்ரேசா! மேலும் மானிடன் மனதில் நற்சிந்தனை, நற்பற்றுதல், தெளிந்த புத்தி, தெய்வ பக்தியைப் புகட்டுவதற்கு எச்சமயத்திலும் எடுத்து வாசிக்கவோ, வாசிக்கக் கேட்கவோ நன்கமைந்த ஞானக் களஞ்சியம் இந்த மன்ரேசா! விசுவாசிகள் ஒவ்வொருவர் இல்லத்திலும் மன்ரேசா என்ற அருமையான இப்புத்தகம் எப்போதும் காப்பாற்றப்பட்டு, சமயத்துக்குச் சமயம் பயன்படுத்தப்பட்டு வருதல் வெகுவாய் விரும்பத்தக்கதாம்.

போ! மன்ரேசா! எழுந்து போ! உன் தந்தை சந்தியாகப்பரின் நல்மைந்தன், நல்தூதனாய், அவருடைய இனிய குரலொலியாய், ஞானம் விதைத்து நன்மை விளைவிக்கத் தமிழ் நாடெங்கும் அயராது சுற்றித் திரிவாயாக!

சேசு சபை, வி.மரிய இஞ்ஞாசியார்.