இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாம் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயம்!

அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் அறிமுகப் பகுதியில், “வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராக நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையை நாங்கள் கண்டோம். அது பிதாவின் ஏக சுதனுடைய மகிமைக்கு நிகராயிருந்தது” என்று நாம் வாசிக்கிறோம். ஆம், அவர் இஷ்டப்பிரசாதம், சத்தியம் ஆகியவற்றின் அளவற்ற பொக்கிஷங்களோடு வந்தார். அவற்றைக் கொண்டு நம்மை வளப்படுத்த அவர் விரும்புகிறார் - சத்தியம்: இருளில் குருட்டுத்தனமாகத் தேடிக்கொண்டிருக்கும் அறிவுக்காக - இஷ்டப்பிரசாதம்: பலவீனத்தால் தள்ளாடுகிற சித்தத்திற்காக.

இப்போதுதான் மேற்கோள் காட்டப்பட்ட வேத வாக்கியத்திற்கு இரண்டு வாக்கியங்களுக்குக் கீழ், “நாம் எல்லோரும் அவருடைய சம்பூரணத்திலிருந்து வரப்பிரசாதத்திற்கு மேல் வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டோம்” என்று அர்ச். அருளப்பர் கூறினார். அவர் பொக்கிஷங்களோடு வந்தார். மிகத் தாராளமாக அவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவர் நமக்கு எவ்வளவு தந்திருக்கிறார்?

எல்லாவற்றிற்கும் முதலாவதாக, விசுவாசம். அந்தக் கொடை எத்தகைய மதிப்புள்ளது என்று நமக்கு யார் சொல்வார்கள்? முழு உலகிலும் உள்ள எல்லா வைரங்களையும், முத்துக்களையும் ஒரு மலையின் உயரத்திற்குக் குவித்து வையுங்கள். அருமையான தங்கத்தை டன்கணக்கில் கொண்டு வாருங்கள். அதைக் கொண்டு இன்னொரு மலையைச் செய்யுங்கள். உங்களிடம் இப்போது எவ்வளவு மதிப்புள்ள செல்வம் உள்ளது? இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான, கோடானு கோடி பணம் இருக்கிறது. விலையேறப் பெற்ற விசுவாசத்தின் சிறு முத்தோ, இந்த எல்லாத் திரவியங்களையும் விட அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது! நம் ஆண்டவர் தாராளமாக இருந்திருக்கிறாரா, இல்லையா? உண்மைகள் இதற்குப் பதில் சொல்லட்டும்.

ஞானஸ்நானம் - கடவுளின் குழந்தையாக மாறும் அளவற்ற மகத்துவம்: இனி நீ ஒரு புழு அல்ல, ஓர் அரசன் கூட அல்ல, மாறாக, மனித மனத்தால் புரிந்து கொள்ளப்படுவதற்கும் மேலாக - கடவுளின் சொந்த ஜீவியத்தை வாழ்வதும், தேவ சுபாவத்தைப் பகிர்ந்து கொள்வதுமாகிய அவருடைய சொந்தக் குழந்தை!! என் சர்வேசுரா! தேவரீர் நன்றியற்ற புழுக்களாகிய எங்கள் மட்டில் அளவற்ற தாராளமுள்ளவராயிருக்கிறீர்!

திவ்ய நன்மை - ஒரு முறையா? ஓராயிரம் முறையா? ஆம், பல்லாயிரம் முறை! மேலும் திவ்ய நன்மை வாங்குவது என்றால் என்ன? ஓர் ஏழை மனிதன் ஒரு தடவை திவ்ய நன்மை வாங்குவதற்காக தொண்ணூறு மைல்கள் நடந்தே போன போது, முதலில் அவன் தான் பெற்றுக் கொண்ட காரியத்திற்கு ஒரு மிகப் பெரிய விலை தந்திருக்கிறான் என்று நாம் நினைத்திருக்கக் கூடும். ஏனென்றால் சோம்பேறிகளாகிய நாம் சில சமயங்களில் அதற்காக ஒரு மைல் தூரம், அல்லது ஒரு தெருவின் நீளம் கூட நடந்து போக விருப்பமில்லாமல் இருக்கிறோம். ஆனாலும் ஒரு திவ்ய நன்மையின் மதிப்பைக் கணக்கிட யாரால் முடியும்? திவ்ய நற்கருணையில் ஒரே ஒரு முறை கடவுளைப் பெற்றுக் கொள்ளும் சலுகையைக் கடவுளிடமிருந்து வாங்கிக் கொள்ளும்படி, நீ உன்னையே அடிமையாக விற்று, நாற்பது ஆண்டுகளாக கொடூரமாக அடிக்கப்பட்டு, குளிரிலும் பசியிலும், கடினமான படுக்கைகளிலும் பல உபத்திரவங்களை அனுபவித்திருந்தாலும் கூட, போதுமான அளவுக்கு செய்ய வேண்டியதைச் செய்து விட்டதாக நினைக்கிறாயா? இல்லை! சேசு நாதரைப் பெற்றுக் கொள்வதற்காக நீ என்ன செய்திருக்கிறாய்? நீ அவரைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக, உன் முதுகிலிருந்து எவ்வளவு இரத்தம் அடிகளால் வெளியேற்றப்பட்டிருக்கிறது? ஓ, நாம் இவ்வளவு சோம்பேறிகளாக இருப்பது பற்றி நம்மையே தாழ்மைப்படுத்திக் கொள்வோமாக. இந்தக் கடினமான காரியங்களில் எதையும் நாம் செய்யாமலே, கடவுள் தம்மையே நமக்குத் தந்திருக்கிறார். அதுவும் எத்தனை தடவைகள்? பத்து? ஓராயிரம்? ஓ, எத்தனை ஆயிரம் தடவைகள்! கடவுள் தாராளமுள்ளவராக இருக்கிறாரா, இல்லையா? உண்மைகள் நம்மைக் குற்றஞ்சாட்டுவனவாக!

பாவங்கள்! நம் ஜீவியத்தின் ஒவ்வொரு நாளிலும் நரகத்தைக் காட்டி நம்மை மிரட்டுகிற அந்த அரக்கன் - பாவம், உலகின் சாபம்! பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் நாம் எப்படி நரகத்திலிருந்து தப்ப முடியும்? உன் பாவங்களைக் கணக்கிட்டுப் பார். நூறுகளோடு நிறுத்திவிடாதே, ஏனென்றால் அவை ஆயிரமாயிரமாக இருக்கின்றன! ஒரு நூற்றாண்டு கால குஷ்டரோகமோ, அல்லது மருத்துவமனையில் துன்பப்படுதலோ, நம்முடைய ஓர் அற்ப பாவத்தின் தீமைக்குரிய கடனைத் தீர்த்துவிடுமா? இல்லை! நம் இரட்சகரான சர்வேசுரன் இத்தகைய ஆயிரமாயிரம் பாவங்களையும், இதைவிடப் பெரிய பாவங்களையும் நமக்கு மன்னித்திருக்கிறார்! அவர் தாராளமுள்ளவராக இருக்கிறாரா, இல்லையா? உண்மைகள் பெரும் நன்றியற்றதனத்தைப் பற்றி நம்மைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுகின்றன!

உதவி வரப்பிரசாதங்கள்! இவற்றை நாம் கோடிக்கணக்கில் கணக்கிட வேண்டி வரும். அவை எல்லாவற்றையும் கணக்கிட யாரால் முடியும்? கடவுள் ஒரு நாளில் ஓராயிரம் தடவைகள் நம்மை ஈர்க்கிறார், நம்மை உயர்த்துகிறார், நமக்கு உற்சாகமூட்டுகிறார், நயமாக நம்மைத் தூண்டுகிறார், நம்மைப் பலப்படுத்துகிறார், நமக்கு உதவி செய்கிறார், நம்மை வழிநடத்துகிறார், நம்மை ஒளிர்விக்கிறார், நம்மைத் தேற்றுகிறார். அவர் தாராளமுள்ளவராக இருந்திருக்கிறாரா, இல்லையா? “அவருடைய சம்பூரணத்திலிருந்து, நாம் சகலத்தையும் பெற்றுக் கொண்டோம்” என்று அர்ச். அருளப்பர் கூறியது உண்மையில்லையா? அவருடைய பொக்கிஷங்களால் நாம் செல்வந்தர்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பொக்கிஷங்களுக்கு விலையாக அவர் தம் உயிரையே தந்தார். நன்றியுள்ளவர்களாக இருக்க நாம் கற்றுக் கொள்வோம். “சேசுவே, தேவரீர் எனக்காகச் செய்திருக்கிற சகல காரியங்களுக்காகவும் உமக்கு நன்றி” என்ற இந்த சிறிய ஜெபத்தை நம் நன்றியுள்ள இருதயங்களிலிருந்து கேட்கும் மகிழ்ச்சியை நாம் அவருக்குத் தருவோமாக! அது அவருடைய செவிகளுக்கு இனிய இசையாக இருக்கும்.


உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!