இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயம்!

தமது தேவ சுதனில் தாம் மிகப் பிரியமாயிருப்பதாக பிதாவாகிய சர்வேசுரன் பரலோகத்திலிருந்து இரண்டு முறை நமக்குக் கூறினார். ஒரு முறை, தாம் ஒரு பாவி என்பது போல, யோர்தானில் தவத்தின் ஞானஸ்நானத்தை அவர் பெற்றுக் கொண்ட போது. அதன்பின் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னும் பெரியதாயிருக்கிற தமது நிந்தை அவமானத்தைக் குறித்து - அதாவது தம் சிலுவை மரணத்தைக் குறித்து - தீர்க்கதரிசனம் சொன்ன பிற்பாடு, தாபோர் மலையின் மீது. மற்றொரு சமயத்தில், வரவிருக்கும் துன்பத்தைப் பற்றிய நினைவால் அவருடைய ஆத்துமம் கலக்கமுற்றபோது, “பிதாவே, இந்த நேரத்தின் துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்” என்று அவர் கூக்குரலிடுகிறார். ஆனாலும் மீண்டும் ஒரு முறை அந்தக் கொடிய மரணத்தையே தாம் உலகிற்கு வந்ததன் காரணமாக ஏற்றுக் கொண்டதன் மூலம், சீக்கிரமாகவே அவர் தம் சொந்த பயங்களுக்கு எதிராகத் திரும்பினார். “இந்தக் காரணத்திற்காகத்தானே நான் இந்த நேரத்திற்கு வந்திருக்கிறேன். பிதாவே, உம் திருநாமத்தை மகிமைப்படுத்தும்” என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தமது பிதாவின் மகிமைக்காக சிலுவையின் அவமானத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது பரலோகத்திலிருந்து இடியைப் போன்ற ஒரு குரலொலி கேட்டது. “என் நாமத்தை நான் மகிமைப்படுத்தினேன், மீண்டும் அதை மகிமைப்படுத்துவேன்” என்று அவருடைய பரலோகப் பிதா கூறினார். வேதாகமப் பதிவுகளின்படி, பரலோகப் பிதா தமது அன்பார்ந்த குமாரனில் தாம் கொண்டிருந்த பூரண பிரியத்தை வெளிப்படுத்தினார். நீங்கள் நன்றாகக் கவனித்தீர்கள் என்றால், அது ஏனென்று கண்டுபிடிப்பீர்கள். இந்த அவருடைய அரசத்துவமுள்ள திருச்சுதன் தம் பரலோகப் பிதாவைப் பிரியப்படுத்தும்படி, மிகப் பெரும் அவமானங்களுக்குத் தம்மையே கையளித்தார். தமது பிதா அதை விரும்பினார் என்றால், அதைப் பற்றிய நினைவில் ஒரு முறை அவர் நடுங்கினார் என்றாலும் கூட, எந்தத் தயக்கமும் இன்றி அவர் அதைச் செய்தார்.

பாவத்திலிருந்து விடுபட்டிருப்பதாகத் தோன்றுவது ஆங்காரமுள்ள எல்லா மனிதர்களுடையவும் மகிமையாக இருக்கிறது. அவர்கள் பாவிகளை நிந்தித்து வெறுக்கிறார்கள், தாங்கள் பாவத்தை வெறுக்கிறார்கள் என்பதால் அல்ல, மாறாக, பாவிகளின் மீதான அந்த வெளியரங்கமான பேரச்சம் அவர்களைப் பெரும் புனிதர்களாகத் தோன்றச் செய்யக் கூடும். அதுதான் ஆங்காரம். நம் இரட்சகரோ தாழ்ச்சியுள்ளவராக இருந்தார். அவரிடம் பாவம் இல்லை. ஆங்காரமுள்ள மனிதனோ முழுவதும் பாவமாக இருக்கிறான். தாம் எந்தப் பாவமும் அணுக முடியாதவர் என்று பிறர் அறியப் பண்ணுவதற்கு நம் இரட்சகர் உரிமையுள்ளவராக இருந்தார். ஆனாலும் அவர், தங்கள் உரிமைகளை வலியுறுத்துகிறவர்களும், தங்கள் சலுகைகளை வற்புறுத்துகிறவர்களுமாகிய உலகத்தன்மையான மனிதர்களைப் போன்றவர் அல்லர். அவர் உலக முழுவதினுடையவும் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கிற ஒரு பாவியைப் போல தம்மைத் தாழ்த்தி, இறங்கிப் போய், ஞானஸ்நானம் செய்விக்கப்படுகிறார். பிதாவாகிய சர்வேசுரனுடைய சித்தமே நம் இரட்சகருக்கு வழிகாட்டிய நட்சத்திரமாக இருந்தது. அத்தகைய ஒரு தாழ்மை புகழப்படாமல் போக பிதாவாகிய சர்வேசுரன் அனுமதிக்கவில்லை. வானங்களிலிருந்து, ஒரு தெளிவான குரலில், “என் நேச குமாரன் இவரே. இவரில் நான் பூரண பிரியமாயிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

நாமும் கூட அவமானங்களுக்குரிய சநதர்ப்பங்களை, அல்லது வாய்ப்புகளைச் சந்திப்போம். முழுமையான கசப்பை நாம் உணர்வோம். அவற்றிலிருந்து விலகியோடுவதை நாம் தேர்ந்து கொள்வோம். ஆனால் வேணடாம்! கடவுளின் திருச் சித்தம் நம்மைத் தாழ்த்தும்படி நம்மை அழைக்கிறது. நாம் அதைச் செய்வோமாக! இதோ மேலதிகாரியான ஒரு பெண் இங்கே இருக்கிறாள். நாம் செய்யாமலே விட்டுவிட்ட ஒரு காரியத்திற்காக அவள் நம்மை நன்றாகத் திட்டுகிறாள். நாம் சம்பாதித்துள்ள நல்ல பெயர் சேற்றுக்குள் இழுத்து வரப்படுகிறது. ஓ! நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் எப்படிக் கிடந்து வேகிறோம்! ஆனால் வேண்டாம்! அத்தகைய தற்காப்பு அடிக்கடி ஒரு கோபமான சண்டையில்தான் வந்து முடிகிறது, அது நமக்கு காரியங்களை அதிக மோசமாவதுதான் நடக்கிறது. அப்போது ஒரு திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு நாம் மிகுந்த ஆங்காரமுள்ளவர்கள் என்ற இரு மடங்கு பழிப்புக்கு ஆளாகிறோம். கிறீஸ்துவைப் போல் இருங்கள்! அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள், ஒரு வார்த்தை முதலாய் பேச வேண்டாம்! மவுனம் உங்கள் மாசற்றதனத்திற்கு ஆதரவாக உரக்கப் பேசுகிறது! குற்றம் சுமத்தப்படும்போது, கோபமாகத் திருப்பிப் பேச எந்தப் பாவியாலும் முடியும். ஆனால் தைரியமிக்க ஒரு வீரனால்தான் தன் நாவை அடக்க முடியும். ஆகவே, மவுனம் மாசற்றதனத்தை எண்பிக்கிறது. அந்தக் குற்றஞ்சாட்டுதலை ஒப்புக்கொடுத்து, உங்களை வசைகூறிய அந்த ஆளுக்கு எதிராக எந்த வன்மமுள்ள உணர்வும் கொள்ளாதிருக்கும் வரப்பிரசாதத்தைக் கடவுளிடம் கேளுங்கள். இத்தகைய பொறுமைக்கு நாம் நம்மையே பழக்கப்படுத்திக் கொண்டோமானால், வசையை நாம் விரும்பத் தொடங்கி விடுவோம். அது உண்மையான சுவையுள்ள பதார்த்தமாக நமக்கு இருக்கும். அதன்பின் வசைகள் நமக்கு கடவுளிடம் ஏறிச் செல்லும் படிக்கற்களாக இருக்கும்.

நாம் விரும்பாததைச் செய்கிற மற்ற சந்தர்ப்பங்கள், குறைவான முக்கியத்துவமுள்ள ஒரு பதவிக்கு மாற்றப்படுதல், ஒரு நோயால் துன்பப்படுதல் போன்றவை. ஆனால் நம் சித்தம் கடவுளுடைய சித்தத்திற்கு ஒத்ததாக இருப்பது, இந்த எல்லாக் காரியங்களையும் ஆசீர்வாதங்களாக மாற்றுகிறது. நம் பரலோகப் பிதாவை நம்மில் பூரண பிரியமுள்ளவராக ஆக்குகிறது.

“பிதாவே, என் சித்தமல்ல, உம் சித்தமே நிறைவேறக் கடவது.” கடின உபத்திரவங்கள் வரும்போது இதைச் சொல்லுங்கள். கடவுள் உங்களிடம்: “நான் உன்னில் பூரண பிரியமாயிருக்கிறேன்” என்று சொல்வார்.


உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!