சேசுநாதர் மனுமக்களின் ஆசிரியர்

நாவால் போதிப்பதைவிட நடத்தையால் போதிப்பதே மேலானது. உலகத்தை மீட்க மனிதனாக அவதரித்த தேவன், முதலில் சாதனையாலும், பின்பு போதனையாலும் நமக்குக் கற்பிக்கத் திருவுளமானார். ஆதலால் மனிதர்கள் ஒழுக்க வழியில் நடந்து இரட்சிப்படைய வேண்டுமானால், இந்த உன்னத ஆசிரியர் காட்டிச் சென்ற உத்தம மாதிரிகையைப் பின்பற்ற வேண்டும். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமா யிருக்கிறேன். என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். என் வழி யாக அல்லாது பிதாவிடம் எவனும் செல்வதில்லை " (அரு.14:6) எனக் கூவி அழைப்பது இவர் மட்டுமே.

"இவரே நமது நேச குமாரன். இவர்மீது நாம் பூரண பிரிய மாயிருக்கிறோம். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 15:5) என்று சர்வ வல்லபப் பிதா கட்டளையிடுகிறார். "முந்நாட் களில் .... தீர்க்கதரிசிகள் மூலம் பேசிய சர்வேசுரன், கடைசியாய் இந்நாட்களில், தமது குமாரன் வழியாக நம்மோடு பேசியருளினார்" (எபி.7:1) என்றும், "நமது இரட்சகராகிய சர்வேசுரன் நமக்குப் போதிப்பதற்காகத் தோன்றினார்" (தீத்து. 2:12) என்றும் அர்ச். சின்னப்பர் கூறுகிறார்.

சேசுநாதரின் இந்த போதனை பற்றி இசையாஸ் தீர்க்கதரிசி : ''ஆண்டவரின் இஸ்பிரீத்து வானவர் என்மீது அமர்ந்தார்; ஆதலால் ஆண்டவர் என்னைத்தம் பரிசுத்த தைலத்தால் அபிஷேகம் செய்தார்; சாந்தமும் தாழ்ச்சியும் உடையவர்களுக்குப் போதிக்கவும்..... சிறைப்பட்டவர் களுக்குக் கிருபையையும், அடைப்பட்டோருக்கு மீட்பையும் அறிவிக்கவும், ஆண்டவருடைய சமாதானத்தின் வருஷத்தையும், நமதாண்டவரின் பழிவாங்கும் நாளையும் வெளிப்படுத்தவும், அழுவோர் எல்லோரையும் ஆறுதல் படுத்தவும்.... அவர் என்னை அனுப்பினார்" (இசை. 61:1) என்கிறார். இந்தத் தீர்க்கதரிசனத்தை சேசுவே ஒரு நாள் யூதர்களின் ஜெபக்கூடம் ஒன்றில் வாசித்து விட்டு, "இன்று இந்த வேதவாக்கியம் ... நிறைவேறிற்று" என்றார்.


தேவ வார்த்தையானவர் 

தேவசுதன் நமக்குச் சாத்தியத்தை போதிப்பதற்காகவே மனுவுரு எடுத்தார். தாம் அநியாயமாய் மரணத் தீர்வை அடையுமுன் பிலாத்துவிடம் "சத்தியத்திற்குச் சாட்சியங் கூறவே நான் பிறந்தேன். இதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தேன்" (அரு.18:37) என்று அவர் கூறுகிறார். இந்த சாந்தமுள்ள ஆண்டவர், தேவ வார்த்தையானவர். "ஆதியிலே வார்த்தை இருந்தார், அந்த வார்த்தை சர்வேசுர னிடத்தில் இருந்தார், அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார். (அதே) வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகிமைக்கு நிகராய் இருந்தது" (அரு.1:1-14) என்று சேசுவின் பிரிய அப்போஸ்தலராகிய அர்ச். அருளப்பர் கூறுகிறார்.