சேசுவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் தொழிற்கல்விப் பாடம்.

21 மார்ச்  1944.

 மழை அடைத்துப் பெய்கிற ஒரு நாளில் வீசுகிற ஒரு சூரியக் கதிர்போல் இனிமையாக என் சின்ன சேசுவைக் காண்கிறேன்.  சுமார் ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கிறார்.  முழுவதும் இளம் பொன் நிற மேனி.  எளிய நீல நிற ஆடையில் மிக்க அழகுடன் விளங்குகிறார்.  அவ்வாடை அவருடைய வடிவான பின்னங்கால்களின் நடுவரையிலும் தொங்குகிறது.  சமையல் தோட்டத்தில் மண்ணை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.  மண்ணைக் குவித்து வைத்து அதன் மேல் சின்ன செடிக் கிளைகளை நட்டு சிறிய மரச் சோலையைப்போல் செய்கிறார்.  சிறுசிறு கற்களால் சாலைகளை அமைக்கிறார்.  அந்த செய்குன்றுக்கடியில் ஒரு ஏரியை அமைக்க விரும்பி, ஒரு பழைய பானையின் அடிப்பாகத்தைக் கொண்டு வந்து அதை வாய் மட்டாக மண்ணில் புதைக்கிறார்.  துணி துவைக்க அல்லது தோட்டத்திற்குத் தண்ணீர் விட பயன்படுத்தப்படுகிற ஒரு தொட்டியில் ஒரு குவளையை அமிழ்த்தி அந்த தண்ணீரைக் கொண்டு வந்து அதில் ஊற்றுகிறார்.  இதனால் அவருடைய ஆடை நனைகிறது.  சட்டைக் கைகள் அதிகம் நனைந்துவிடுகின்றன.  புதைக்கப்பட்ட பானையின் அடிப்பாகத்திலிருந்து நீர் வெளியே ஓடுகிறது.  அது கீறல் உள்ளதாக இருக்க வேண்டும்... ஏரி வறண்டு போகிறது.

வீட்டு வாசலில் அர்ச். சூசையப்பர் அமைதியாக கொஞ்ச நேரம் நின்று குழந்தை சேசுவின் கைவேலையைப் பார்த்துப் புன்னகை செய்கிறார்.  உண்மையிலே இது புன்னகை செய்ய வைக்கும் ஒரு காட்சிதான்.  சேசு மேலும் நனையாதபடி சூசையப்பர் அவரை அழைக்கிறார்.  சிரித்தபடியே சேசு திரும்பிப் பார்க்கிறார்.  சூசையப்பரைக் கண்டதும் தன் சிறு கரங்களை நீட்டிக் கொண்டு அவரை நோக்கி ஓடுகிறார்.  சூசையப்பர் வேலை நேரத்தில் அணிகிற தன் ஆடையின் ஓரத்தால் சேசுவின் அழுக்கடைந்து நனைந்திருக்கிற கரங்களைத் துடைத்து அவைகளை முத்தஞ் செய்கிறார்.  அதோடு இருவருக்கும் ஓர் இனிய உரையாடல் தொடங்குகிறது.

சேசு தான் செய்த வேலையையும் விளையாட்டையும் அதில் அவருக்கு ஏற்பட்ட சிரமத்தையும் சொல்லுகிறார்.  ஜெனாசரேத் ஏரியைப்போல் ஒரு ஏரியைச் செய்ய விரும்பியதாகக் கூறுகிறார்.  (இதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால் சேசுவிடம் ஏரியைப் பற்றி அவர்கள் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவரை அங்கு கொண்டு சென்று காட்டியிருக்க வேண்டும்.)  அந்த ஏரியைப்போல் தன் மகிழ்ச்சிக்காக ஒன்றைச் செய்ய வேண்டுமென்று ஆசித்தார்.  இங்கே இருக்கிறது திபேரியாஸ், அங்கே இருக்கிறது மக்தலா, அதற்கங்கே கப்பர்னாம் ஊர் இருக்கிறது என்று சேசு காட்டிச் சொல்கிறார்.  இதுதான் நசரேத் சாலை.  அது கானாவூர் வழியாகப் போகிறது என்கிறார்.  அந்த ஏரியில் சில படகுகளை விட         வேண்டும் - இந்த இலைகள்தான் படகுகள்.  அவற்றில் ஏறி அடுத்த கரைக்குப் போக வேண்டும்.  ஆனால் தண்ணீர் தங்க மாட்டேன் என்கிறது...

சூசையப்பர் கவனத்துடன், அது ஒரு பெரிய விஷயம் போலவே அதில் ஊக்கம் காட்டுகிறார்.  நாளைக்கு ஒரு சின்ன ஏரி உண்டாக்கித் தருகிறேன்.  இப்படி உடைந்த பழைய அடிப்பானையைக் கொண்டு அதைச் செய்ய வேண்டாம்.  மரத்தால் செய்து தார் பூசி விட்டால் சின்ன உண்மையான மரப் படகுகளை அதில் விடலாம்.  படகு எப்படிச் செய்வது என்று நான் சொல்லித் தருவேன்... இப்படிக் கூறியபின் அர்ச். சூசையப்பர் சில சின்ன கருவிகளைக் கொண்டு வருகிறார் - சேசு அவைகளைக் களைப்பில்லாமல் பயன்படுத்திப் பயிலும்படியாக.

“அப்போது உங்களுக்கு நான் உதவி செய்ய முடியுமே!” என்கிறார் சேசு சிரித்தபடி.

“ஆமாம்!  எனக்கு உதவி செய்வீர்.  ஒரு நல்ல தச்சன் ஆவீர்.  இவைகளை வந்து பாரும் சேசு” என்கிறார் சூசையப்பர்.

அவர்கள் வேலைப் பட்டரைக்குப் போகிறார்கள்.  அங்கே அர்ச். சூசையப்பர் சிறுவன் சேசுவுக்கு ஒரு சின்ன சுத்தியல், சிறிய ரம்பம், சின்னத் திருப்புளிகள், ஒரு சிறு இழைப்புளி ஆகியவைகளைக் காட்டுகிறார்.  அவையெல்லாம் ஒரு சின்ன தச்சனுக்குப் பொருத்தமான பெஞ்சில் பரப்பி வைக்கப்பட்டுள்ளன.  சேசுவின் தரத்துக்கு ஏற்றவையாக அவை உள்ளன.

“மரத்தை அறுப்பதற்கு அதை இப்படி வைத்துக் கொள்ள வேண்டும்.  ரம்பத்தை இப்படிப் பிடிக்க வேண்டும்.  விரல்களில் பட்டுவிடாதபடி இப்படி அறுக்கத் தொடங்க வேண்டும்.  எங்கே பார்ப்போம்...” என்று அர்ச். சூசையப்பர் கூற, தச்சுப்பாடம் ஆரம்பமாகிறது.

சேசு முயற்சி செய்கிறார்.  உதடுகளை இறுக்கி முகம் சிவக்க அம்மரத்துண்டைக் கவனமாக அறுக்கிறார்.  பின் அதை இழைப்புளியால் சமப்படுத்துகிறார்.  அது முற்றும் நேராக இல்லைதான்.  ஆயினும் அது நன்றாயிருப்பதாக சேசு மகிழ்கிறார்.  சூசையப்பர் சேசுவைப் பாராட்டுகிறார்.  பொறுமையுடனும் அன்புடனும் சேசுவுக்கு வேலை செய்யக் கற்றுக் கொடுக்கிறார்.

மாதா திரும்பி வருகிறார்கள்.  வாசலில் நின்று எட்டிப் பார்க்கிறார்கள்.  சேசுவுக்கும் சூசையப்பருக்கும் பின்புறமாக மாதா நின்றதால் அவர்கள் மாதாவைக் காணவில்லை.  அவர் எவ்வளவு ஆர்வத்துடன் இழைப்புளி போடுகிறார் என்பதையும் சூசையப்பர் எவ்வளவு அன்புடன் அவருக்குப் படிப்பிக்கிறார் என்பதையும் பார்த்து மாதா புன்முறுவல் செய்கிறார்கள்.

மாதா சிரிப்பதை சேசு பார்த்திருக்க வேண்டும்.  உடனே வேலை முடியாத மரத்துண்டை எடுத்துக் கொண்டு மாதாவிடம் ஓடிப்போய் அதைக் காட்டுகிறார்.  மாதா அதைக் கண்டு வியக்கிறார்கள்.  குனிந்து சேசுவுக்கு முத்தமளிக்கிறார்கள்.  கலைந்து கிடக்கிற அவருடைய தலையைக் கோதிவிடுகிறார்கள்.  உஷ்ணமாயிருக்கிற அவருடைய முகத்தில் அரும்பியிருக்கிற வியர்வையைத் துடைக்கிறார்கள்.  அன்போடு சேசு கூறுவதைக் கேட்கிறார்கள்.  மாதா வசதியுடன் உட்கார்ந்து வேலை செய்வதற்கு ஒரு சிறு மணை செய்து தருவதாகக் கூறுகிறார் சேசு.  சூசையப்பர் சேசுவின் பெஞ்ச் அருகில் ஒரு கையை இடையில் வைத்தபடி நின்று புன்னகை புரிகிறார்.

என் சேசுவின் முதல் தொழிற்கல்விப் பாடத்தை நான் கண்டேன்.  இத்திருக்குடும்பத்தின் சமாதானம் எல்லாம் என் உள்ளே இருப்பதைக் காண்கிறேன்.