இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயம்!

தத்துவஞானத்தில் அனைவராலும் ஏற்கப்பட்ட ஒரு கோட்பாடு இருக்கிறது. “நன்மைத்தனம் (தயாளம்) தன்னைத்தானே எங்கும் பரவச் செய்ய விரும்புகிறது” என்று அது கூறுகிறது.

நல்லவனாய் இருக்கிறவன் தன் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். நல்லவனாக இராதவன், மற்ற மனிதனுடைய நலத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாதவனாக இருக்கிறான். அவன் தன்னுடைய காரியங்களிலேயே பரபரப்பாயிருக்கிறான். எனவே, நன்மைத்தனமும், சுய நேசமும் ஒரே இருதயத்தில் சேர்ந்திருக்க முடியாது.

கடவுள் அளவற்ற நன்மைத்தனமுள்ளவராக இருக்கிறார். அவர் நல்லவராக இருப்பதால், தம் எல்லா உடமைகளையும், அறிவுள்ள மற்ற ஜீவராசிகளோடு பகிர்ந்து கொள்ள ஆசிக்கிறார். அதுதான் சிருஷ்டித்தலுக்கான காரணமாக இருக்கிறது. அவர் தாம் யாரோடு தமது பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்கிறாரோ, அந்த ஜீவராசிகளை முதலில் தாம் படைக்க வேண்டியிருக்கிறது. இலட்சக்கணக்கான, ஏன், கோடானு கோடிக்கணக்கான மனிதர்களையும், சம்மனசுக்களையும் அவர் சிருஷ்டித்தார். அவர்களோடு தமது பரலோக மகிமையை அவர் பகிர்ந்து கொள்ள ஆசிக்கிறார். மனிதர்கள் இந்தப் பூமியில் வசிக்கும்போது, அவர்கள் தங்களை விடத் தாழ்ந்த கோடிக்கணக்கான ஜீவராசிகளாகிய தாவரங்கள், மிருகங்கள், கிரகங்கள், சூரியன், நிலவு மற்றும் நட்சத்திரங்களைப் பயன்படுத்தவும், அவற்றைக் கண்டு வியந்து பாராட்டவும் செய்யலாம். தமது சிருஷ்டிப்பில் கடவுள் எவ்வளவு அளவுகடந்தவராகவும், தாராளமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை நீ காண விரும்பினால், ஒரு மணல் துகளின் அளவுள்ள மண்ணை எடுத்து அதை உருப்பெருக்கம் செய்து பார். நம் இந்தப் பூமியின் அந்த அற்ப பகுதியிலும் கூட எவ்வளவு அதிக ஜீவராசிகள் இருக்கின்றன என்பதைக் கண்டு நீ அசந்து போவாய். ஆயினும் தன் எல்லா அணிகலன்களோடும் இருக்கிற இந்த பூமியும் கூட ஒரு தற்காலிகப் பொருள்தான், சீட்டுக்களால் கட்டப்பட்ட ஒரு வீடுதான், மண்ணால் வரையப்பட்ட ஒரு ஓவியம்தான், அல்லது பனிக்கட்டியால் செதுக்கப்பட்ட சிற்பம்தான் என்பதையும் நினைத்துக் கொள். அது நம் கடந்துபோகும் பயன்பாட்டுக்கும், பிரமிப்புக்கும்தான் உரியது. நிஜமான காரியங்கள், நீடித்திருக்கிற காரியங்கள், நித்திய கல்லில் செய்யப்பட்ட செதுக்குதல்கள், திடமான பளிங்கினால் செய்யப்பட்ட தேவாலயம், கடவுளின் பேராச்சரியத்துக்குரிய கலையின் நித்திய அதியற்புதப் படைப்புகள் மேலேயுள்ள நம் உண்மையான இல்லத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. நமக்குக் குழப்பம் தருகிற அதிசயங்களை அவர் வைத்திருப்பார். நம்மை சந்தோஷப்படுத்துவதுதான் அவருடைய மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் நாம் இங்கே, இந்த வஞ்சகமுள்ள உலகத்தில் இருக்கிறோம். இங்கு கடந்து போகிற ஒரு காரியத்தை நேசிக்கும்படியாகவும், அதை அடைய முயல்வதில் நல்ல சர்வேசுரனை நோகச் செய்யும்படியாகவும் கூட, பசாசு நம்மை இச்சகமாகத் தூண்டுகிறது. ஞான இருளால் நாம் சூழப்படுகிறோம். நமது ஆசாபாசங்கள், தங்கள் அடிமைகளாக நம்மை ஆக்குவதன் மூலம், நம்மை வழிதவறச் செய்யப் பொருத்தமானவையாக இருக்கின்றன. நாம் பாவிகள். நாம் விழுந்து விட்டோம். நாம் பரிதாப நிலையில் இருக்கிறோம். மரணத்திற்குப் பிறகு நமக்காக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சர்வேசுரன் நல்லவராயிருக்கிறார்! நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உண்மையில் அவர் தமது சொந்த தெய்வீக மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஆகவே அவர், எல்லாவற்றிற்கும் முதலாவதாக, இருளை அகற்றும்படியாக, தமது பரலோக வீட்டை விட்டு நீங்கி, இந்த உலகிற்குள் வருகிறார். (“என் பின்செல்கிறவன் இருளில் நடவான்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.) அவர் நமக்கு சத்தியத்தைப் போதித்தார். அதற்காகக் கடவுள் வாழ்த்தப் படுவாராக, ஏனென்றால் நமக்கு சத்தியம் அவ்வளவு அதிகம் தேவையாயிருந்தது! அதன்பின் நம்மைத் தேற்றி நம்மைப் பலப்படுத்தும்படி தமது பொக்கிஷங்களைத் தம்மோடு கொண்டுவந்தார். அவருடைய பொக்கிஷங்களை நாம் திருச்சபையின் தேவத்திரவிய அனுமானங்களில் கண்டடைகிறோம். அவர் நம் எதிரியை நொறுக்கி நசித்து, நமக்காகப் பரலோகத்தின் கதவுகளைத் திறந்தார். தம்மைப் பின்செல்லுகிற எவனையும் பரலோகத்திற்குள் வழிநடத்திச் செல்ல அவர் தயாராக இருக்கிறார். அவரை நாம் பின்சென்றால், அது நமக்குக் கடினமாக இருக்காது, ஏனென்றால் நம்மைத் தேற்றவும் நம்மைப் பலப்படுத்தவும் அவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். எத்தகைய அளவற்ற நன்மைத்தனம்! இத்தகைய அளவற்ற தயாளத்தை நம்மால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

நாம் நம் அயலார் மட்டில் இன்னும் சற்று அதிக நன்மைத்தனம் உள்ளவர்களாக இருப்போம். சிறு புழுக்களான நமக்காகத் “தம்மையே வெறுமையாக்க” சர்வேசுரன் சித்தங்கொண்டது போல, நமககு சமமானவர்களின் நன்மைக்காக நம்மையே நாம் தாராளமாகக் கையளிப்போமாக. ஆனாலும், ஓ! நாம் எவ்ளவு கஞ்சர்களாக இருக்கிறோம்! யாராவது ஒருவனை சந்தோஷப்படுத்துவது நமக்குக் கடினமானதாய் இருப்பதாக நாம் காணும்போது, நாம் சீக்கிரத்தில் நம் முயற்சியைக் கைவிட்டு விடுகிறோம். பாவத்திலிருந்து நம்மை வெளியே நடத்திச் செல்வது மிகக் கடினமாயிருக்கிறது என்று நம் ஆண்டவர் கண்டு தமது வேலையைப் பாதியிலேயே கைவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்! பயங்கரத்துக்குரிய சிந்தனை! நாம் எல்லோரும் இன்று நரகத்தில் இருந்திருப்போம்! நல்லவனாய் இரு, அதாவது, சந்தோஷத்தை எங்கும் பரப்ப ஆசைப்படு.


தயாளமும் நேசமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!