சுவக்கீன் அன்னம்மாள் மரணம்.

31 ஆகஸ்ட் 1944.

சேசு கூறுகிறார்: 

 என் அன்னையின் பெற்றோர்களுடைய வாழ்வின் சூரியன், தேவாலயத்தின் புனித திரைக்கு முன்பாக பிரகாசிக்கும்படி வைக்கப்பட்ட பின், அவர்களின் வாழ்க்கை பனிக்குளிர் காற்று, ஆகாயத்தில் மேகங்களைத் திரட்டும் போது, துரிதமாய் மறையும் குளிர்கால மாலைப் பொழுதைப் போல் விரைவாக இறங்கி  விட்டது.

ஆயினும் ஞானாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:  

“ஞானமானது தன்னைப் பின்செல்கிறவர்களுக்கு உயர்வுள்ள சீவியத்தைத் தருகிறது.  தன்னைத் தேடுகிறவர்களை  ஏற்றுக் கொண்டு நீதி நெறியில் முன்செல்கிறது.  அதை நேசிக்கிறவன் சீவியத்தை நேசிக்கிறான். அதை அடையக் கவலை கொள்கிறவர்கள் சமாதானத்தைக் கைக் கொள்வார்கள்.  அது பிரவேசித்த இடமெல்லாம் கடவுள் ஆசீர்வதிப்பார்.  அதை சேவிப்பவர்கள் பரிசுத்தருக்கு ஊழியஞ் செய்கிறவர்களாவார்கள்.  அதை நேசிப்பவர்களைக் கடவுள் நேசிக்கிறார்.  அதன் மட்டில் தன் நம்பிக்கையை வைக்கிறவன் அதைத் தன் சுதந்திரமாக அடைவான்.  அவன் சந்ததியாரும் அதில் நிலை கொள்வார்கள்.  ஏனெனில் துன்ப சமயத்தில் அது அவனோடு உலாவுகின்றது.  அவனை அது ஆதியில் தெரிந்து கொள்கின்றது.  அச்சத்தையும் சோதனையையும் அவன் பேரில் ஏவுகின்றது.  அவனுடைய எண்ணங்களால்  அவனை ஏவி அவனை நடப்பிக்கும்.  அவன் ஆத்துமத்தில் நம்பிக்கை கொள்ளும் வரைக்கும் தன் போதனையினால் உண்டாகும் துன்பத்தில் அவனை வருத்துவிக்கின்றது.  அவனை உறுதிப்படுத்தி, அவனை நேர்வழியில் நடத்திச் சென்று,  அவனை சந்தோஷிப்பிக்கும்.   தன் இரகசியங்களை அவனுக்கு வெளிப்படுத்தி, சாஸ்திரத்தையும், நீதியின் அறிவையும் அவனிடம் சேர்ப்பிக்கும்.” (சர்வ.4:12-17).

ஆம்.  இவையெல்லாம் கூறப்பட்டுள்ளன.  ஞானாகமத்தின்  புத்தகங்கள் எல்லா மனிதருக்கும் பொருத்திக் கூறப்பட முடியும்.  அவர்கள் அவற்றிலே வாழ்வுக்கு வழிகாட்டுதலையும், தங்கள் நடத்தைக்கு ஒளியையும் காண்பார்கள்.  ஆனால் ஞானத்தை உள்ளார நேசிப்பவர்களாகக் காணப்படக் கூடியவர்கள் பாக்கியம் பெற்றவர்களே.

என்னுடைய மானிட உறவினர்களை ஞானமுடைய வர்களாக நான் வைத்துக் கொண்டேன்.  அன்னாள், சுவக்கீன், சூசை, சக்கரியாஸ், மேலும் கூடுதலாக, எலிசபெத்,  இதறகுப் பின் ஸ்நாபக அருளப்பர். இவர்களெல்லாரும் உண்மையான ஞானமுடையவர் களில்லையா?  ஞானத்தின் இருப்பிடமான என் அன்னையைப் பற்றிச் சொல்லவே அவசியமில்லை.

என் தாயின் பெற்றோருக்கு, அவர்களின் இளமையிலிருந்து, மரணம் வரையிலும், கடவுளுக்கு உவந்த முறையில் வாழும் முறையை ஞானம் உணர்த்தியிருந்தது.  இயற்கையின் சீற்றத்திலிருந்து காப்பாற்றும் ஒரு கூடாரத்தைப் போல், ஞானமானது பாவத்தின் ஆபத்திலிருந்து அவர்களைப்      பாதுகாத்தது.  புனிதமான தெய்வ பயமே ஞானமென்ற மரத்தின் வேர்.  அது தன் கிளைகளைத் தூரமாய், அகலமாய்ப் பரப்பி, அதன் உச்சியில் தன் சமாதானத்திலே அமைதியான அன்பை அடைந்து கொள்கிறது.  தன்          பாதுகாப்பிலே சமாதானமான அன்பை அடைகிறது.  தன் பிரமாணிக்கத்திலே பாதுகாப்பான அன்பையும், அதன் தீவிரத்திலே பிரமாணிக்கமுள்ள அன்பையும் அடைந்து கொள்கிறது.  முழுமையான, தாராளமுள்ள, செயலூக்கமுள்ள அர்ச்சிஷ்டவர்களின் அன்பு அது.

“ஞானத்தை நேசிக்கிறவன் சீவியத்தை நேசிக்கிறான்.    அவன் ஜீவியத்தை சுதந்தரித்துக் கொள்கிறான்” என சர்வப்         பிரசங்கி ஆகமம் கூறுகிறது.  இந்த வாக்கியம் என்          வாக்கியத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.  “என் பொருட்டு            தன் ஜீவனை இழப்பவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான்.”  ஏனென்றால் நாம் இந்த பரிதாப உலக ஜீவியத்தைப்                       பற்றிக் குறிப்பிடவில்லை.  நித்திய வாழ்வைக் குறிப்பிடுகிறோம்.  ஒரு மணி நேர இன்பத்தையல்ல, முடிவில்லாத இன்பத்தைக் குறிப்பிடுகிறோம்.

இப்படித்தான் சுவக்கீனும், அன்னம்மாளும் ஞானத்தை நேசித்தார்கள்.  அதனால் ஞானமும் அவர்களின் சோதனைகளில் அவர்களுடன் இருந்தது.

அவர்கள் எத்தனை எத்தனை துன்ப சோதனைகளை அனுபவித்தார்கள்!  ஆனால் மனிதர்களே, நீங்கள் முற்றிலும் கெட்டவர்களாக இல்லை என்று நீங்கள் கருதுவதை வைத்துக் கொண்டே, துன்பப்படவும் அழவும் நீங்கள் விரும்புவதில்லை. எவ்வளவு வேதனை,  சோதனைகளை   இவ்விருவரும் பட்டார்கள்!  அதனால் மரியாயைத் தங்கள் மகளாகக் கொண்டிருக்கும் தகுதி பெற்றார்கள்.  அரசாங்க இம்சை அவர்களை தாவீதின் நாட்டிலிருந்து வெளியே துரத்தி விட்டது;  அவர்களை மிகவும் வறியவர்களாக்கி விட்டது.  “உங்களுடைய தொடர்ச்சியாக நான் இருப்பேன்” என்று சொல்லக் கூடிய பூ ஒன்று இல்லாமல் அவர்களுடைய  ஆயுள் மங்கி வந்ததைப் பற்றி துயரப்பட்டார்கள். அதன்பின், தங்கள் மகள் ஒரு ஸ்திரீயாக வளர்ச்சி பெறுவதைத் தாங்கள் காண முடியாது என்று அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்த சமயத்தில், தங்கள் வயோதிபத்தில், ஒரு மகளைக் கொண்டிருக்கும் கவலை.  அத்துடன் கடவுளுடைய பீடத்தில், அவளை ஒப்புக்கொடுக்க, அவளைத் தங்கள் இருதயத்திலிருந்து பிய்த்தெடுக்க வேண்டிய அவர்களுடைய கட்டாயம்.  அதற்குப் பின் அவர்களின் வாழ்வு இதைவிடக் கூடுதலான வேதனையான நிசப்தமாகி விட்டது.  தங்களுடைய சின்னப் புறாவின் கூவுதல்களுக்கும், அவளுடைய சின்னப் பாதங்களின் ஓசைக்கும், அவளுடைய புன்னகைக்கும், முத்தங்களுக்கும் பழகி விட்ட அவர்கள், இப்போது கடவுளின் அழைப்பின் நேரம் ஒன்றிற்கே காத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரே துணையாயிருப்பது கடந்த கால நினைவுகளே.  இவை மட்டுமல்ல... நோய் நொடிகள், சீதோஷ்ண சீர்கேடுகளால் பெரும் இடர்கள், உலக அதிகாரிகளின் மூர்க்கத்தனம்... அவர்களுடைய எளிய உடைமைகளின் மீது செய்யப்பட்ட கடுமையான பல தாக்குதல்கள்... இவையெல்லாம் பற்றாதென்று வெகு தூரத்தில் இருக்கும் தங்கள் குமாரத்தியை நினைத்து வேதனை.  தனிமையிலும், வறுமையிலும் அவள் விடப்படுவாள்.  அவளுக்காக அவர்கள் எவ்வளவோ கவலையும், தியாகமும் செய்தும், அவள் தன் தந்தையிடம் எஞ்சியுள்ள சொத்தை மட்டுமே அடைவாள்.  அந்த மிச்ச சொத்தும் அவள் திரும்பி வர ஆகும் பல ஆண்டுகளாக பண்படுத்தப்படாமல் விடப்படுமாதலால், அதை என்ன நிலையில் அவள் பெற்றுக் கொள்வாள்?  அச்சங்கள், துன்ப வேதனைகள், சோதனைகள்!  அந்நிலையிலும் கடவுளுக்கு நித்திய பிரமாணிக்கம்!

அவர்களுடைய மிகப் பலமான சோதனை:  தங்களுடைய அந்திய காலத்தில் தங்களுடைய குமாரத்தி தங்களுடன் இருக்க முடியாதே என்ற கவலை.  ஆயினும், குழந்தைகள் கடவுளுக்கே முதலிலும், அதற்குப் பிறகே பெற்றோருக்கும் சொந்தமாயிருக்கிறார்கள்.  “என் பிதாவின் காரியங்களில் நான் அலுவலாயிருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதோ?” என்று நான் என் தாயிடம் கேட்டதை எந்த மகனும் கேட்கலாம். ஒவ்வொரு தந்தையும், தாயும் தங்களிடம் இருக்க வேண்டிய மனப்பான்மையை தேவாலயத்தில் மரியாயையும், சூசையப்பரையும், நாசரேத் வீட்டில் அன்னம்மாளையும், சுவக்கீனையும் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அன்னம்மாளின் வீடு வர வர தனிமையில் விடப்பட்டு, துயரம் படர்ந்து வந்தது.  ஆனால் அங்கே ஒரு காரியம் ஒருபோதும் குறையாதிருந்தது - மாறாக, இடைவிடாமல் வளர்ந்து வந்தது:  இரு இதயங்களின் புனிதம்; ஒரு மெய்விவாகத்தின் அர்ச்சிஷ்டதனம்.

நோய்ப்பட்டவரான சுவக்கீனுக்கும், துயரப்படும் அவரது மனைவிக்கும், தாங்கள் மரணமடையப் போவதாக உணரும் அவ்விருவருக்கும், நீண்ட நிசப்தமான இரவுகளில் என்ன ஒளி உள்ளது?  வெகு தூரத்திலிருக்கும் தங்கள் சின்ன மகளின் முதல் ஜோடி காலணிகள், அவளுடைய எளிய விளையாட்டுப் பொருள்கள், அவளுடைய ஞாபகங்கள்... “நாங்கள் வேதனைப்படுகிறோம்;  ஆயினும் எங்கள் அன்பின் கடமையை கடவுளுக்குச் செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறும்போது அங்கே ஏற்படுகிற சமாதானம் ஆகியவைகளே.

அங்கே அவர்கள் சுபாவத்திற்கு மேலான மகிழ்ச்சியால் மேற்கொள்ளப்பட்டார்கள்.  பரலோக ஒளியால்  பிரகாசித் தார்கள்.  அந்த மகிழ்ச்சி உலகத்தாரின் கண்களுக்குத் தெரியாதது.  கனத்த கண்ணிமைகள் மரிக்கிற இரு கண்களில் மூடும் போது, அம்மகிழ்ச்சி மங்காது.  மாறாக, அவ்விறுதி நேரத்தில்  அதிக பிரகாசமாக அது ஒளிர்கிறது.  அவர்களுடைய வாழ்வு முழுவதிலும் அவர்களுக்குள் மறைந்திருந்த உண்மையை பிரகாசிக்கச் செய்கின்றது.  தன் கூட்டுக்குள் இருக்கிற வண்ணத்துப் பூச்சியைப் போல் அவர்களுக்குள் இருந்த உண்மை, மிக         மெல்லிய அடையாளங்களை, மென்மையான ஒளிக்கதிர்   வீச்சுக்களை மட்டும் கொடுத்தது.  ஆனால் இப்போது அது சூரியனுக்குத் தன் இறக்கைகளை விரித்து, தன் அழகின் அலங்காரங்களைக் காட்டுகிறது.  தங்களுக்கும், தங்கள் சந்ததியாருக்கும் சந்தோஷமான எதிர்காலம் உள்ளது என்ற நிச்சயத்தோடு, நடுங்கும் அவர்களின் உதடுகள் கடவுளின் புகழை உரைக்க, அவர்களின் ஆவி பிரிந்தது.

என் அன்னையின் பெற்றோர்களின் மரணம் இவ்வாறிருந்தது. அவர்களுடைய புனித வாழ்வு பெற்றிருந்த தகுதிப்படியே அது நடந்தது.  அவர்களுடைய அர்ச்சிஷ்டதனத்தினால் கடவுளின் அன்புக்குரிய கன்னிகையின் முதல் காப்பாளர்களாக அவர்கள் இருக்கத் தகுதி பெற்றார்கள்.  அவர்களுடைய வாழ்வின் இறுதியில் அதைவிடப் பெரிய சூரியன் காணப்பட்ட போதுதான் அவர்கள் கடவுள் தங்களுக்கு அளித்திருந்த  வரத்தைக் கண்டுபிடித்தார்கள்.

அவர்களுடைய புனிதத்தின் காரணமாக அன்னம்மாள் தன் குமாரத்தியைப் பெற்ற போது, ஒரு வேதனையும்  அடையவில்லை.  மாசற்றவளைப் பெற்ற தாயின் பரவசம் அது.  சுவக்கீனும் அன்னம்மாளும் மரணத்தின் அவஸ்தையைப் படவில்லை.  காலையில் சூரியன் உதிக்கையில் மெல்ல மறையும் நட்சத்திரத்தைப் போல் மங்கி மறையும் ஒரு பலவீனத்தை மட்டுமே அவர்கள் உணர்ந்தார்கள்.  அர்ச். சூசையப்பருக்கு கிடைத்தது போல், அவர்களுடன் அந்நேரம் மாம்சமெடுத்த ஞானமாக நான் அங்கிருக்கும் ஆறுதல் அவர்களுக்கு இல்லையென்றாலும், அங்கு நான் கண்காணா வகையில் பிரசன்னமாயிருந்து உந்நதமான வார்த்தைகளை மெல்லக் கூறினேன்.  தங்கள் வெற்றியை எதிர்நோக்கிய அவர்களின் ஓய்வுக்கு அவர்களை அனுப்பி வைக்க அவர்களின் தலையணைகளின் மீது குனிந்தபடி நின்றிருந்தேன்.

“அவர்களும் ஆதாமின் பிள்ளைகளாயிருக்க, அவர்களுக்கு மட்டும் மகப்பேறு வேளையிலும், மரண சமயத்திலும் வேதனை இல்லாதது ஏன்?” என்று யாராவது கேட்கக் கூடும்.  அதற்கு என் பதில்:  ஆதாமின் பிள்ளையாயிருந்த ஸ்நாபக அருளப்பர் ஜென்மப் பாவத்தோடு உற்பவித்தாலும், நான் அவரை நெருங்கிச் சென்றதால் மட்டுமே அவருடைய தாயின் உதரத்திலே அவர் முன்கூட்டியே அர்ச்சிக்கப்பட்டாரென்றால், கடவுளால் பாதுகாக்கப்பட்டு, அவரைத் தன் கிட்டத்தட்ட தெய்வீக உள்ளத்திலும், தன் மிக மாசற்ற இருதயத்திலும் கொண்டிருந்து, பிதாவினால் சிருஷ்டிக்கப் பட்டு, ஒரு உதரத்தில் உற்பவித்ததிலிருந்து ஒருபோதும் அவரிடமிருந்து பிரிக்கப்படாதவளும், அதன்பின் சதா காலத்திற்கும் மகிமையில் கடவுளை சுதந்தரிக்கும்படியாகவும் மோட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித பழுதற்றவளின் தாய்க்கு, ஒரு வரப்பிரசாதமும் கொடுக்கப்பட      வேண்டியதில்லையா என்று கேட்கிறேன்.  மேலும் கூறுகிறேன்:  “நேர்மையான மனச்சாட்சி அமைதியான மரணத்தைத் தரும்.  அர்ச்சிஷ்டவர்களின் மன்றாட்டுக்கள் உங்களுக்கு அதைப்     பெற்றுத் தரும்.” 

சுவக்கீனும், அன்னம்மாளும் வாழ்வு முழுவதும் நேர்மையான மனச்சாட்சி பெற்றிருந்தார்கள்.  அதனால் அவர்களின் வாழ்வு ஓர் அழகிய இயற்கைக் காட்சி போல் எழுந்து அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றது.  அவர்களின் குமாரத்தியும், வெகு தொலைவில் கடவுளின் திருப்பேழையின் முன்பாக அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.  தன் பெற்றோரை முழு நன்மையான கடவுளுக்கு அடுத்தபடியிலேயே வைத்தார்கள்.  ஆயினும், வேதப் பிரமாணமும் தன் உணர்வும் ஏவியபடி, ஓர் உத்தமமான, சுபாவத்திற்கு மேற்பட்ட அன்பினால் அவர்களை நேசித்தார்கள்.