4 செப்டம்பர் 1944.
அது தேவாலயத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். அது ஒரு நல்ல பெரிய அறை. அழகிய தளம். அழகான திரைகள் விரிப்புகள், பதிப்பு வேலைகள் செய்த மரச் சாமான்கள். அதிலே சக்கரியாஸ் உட்பட்ட குருக்களும், இருபது முதல் கிட்டத்தட்ட ஐம்பது வயது வரையிலுமுள்ள ஆண்களும் காணப்படுகின்றனர்.
அவர்கள் எதையோ எதிர்பார்த்து, தாழ்ந்த குரலில் ஊக்கத்தோடு பேசுகிறார்கள். பரபரப்புடன் காணப்படுகிறார்கள். எனக்குக் காரணம் தெரியவில்லை. அவர்கள் சிறந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அவை புதியவை அல்லது சமீபத்தில் சலவை செய்யப்பட்டவை. ஒரு விசேஷ திருவிழாவிற்கு என்று தெரிகிறது. அநேகர் தங்கள் தலைகளை மூடிய துகில் துண்டுகளை அகற்றிவிட்டார்கள். சிலர் இன்னும் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, மூப்பர்கள். இள வயதினர் தங்கள் வெறும் தலைகளைக் காட்டியபடி - சில இருண்ட மாநிறத்தில், சில பழுப்பு நிறத்தில், சில கறுப்பாக அவை காணப்படுகின்றன - ஒரே ஒரு தலை மட்டும் கோதுமை நிறமாகத் தெரிகிறது. முடி பொதுவாகக் குட்டையாயிருக்கிறது. ஆனால் சிலர் தங்கள் தோள் வரையிலும் அதை வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் மற்ற எல்லாருக்கும் அறிமுகமானவர்கள் அல்ல. ஏனென்றால், ஒருவரையயாருவர் கேள்விக்குறிகளுடன் பார்க்கின்றனர். ஆயினும் அவர்கள் ஒரே விஷயத்தைப் பற்றிக் கரிசனை கொண்டிருப்பதால் ஒருவருக்கொருவர் உறவு கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஓரத்தில் சூசையப்பரைக் காண்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியமுள்ள மூப்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். சூசையப்பருக்கு முப்பது வயதிருக்கும். பார்க்க நன்றாக இருக்கிறார். குட்டையான சுருள்முடி. அது அவருடைய மீசை, தாடியைப் போல, இருண்ட பழுப்பு நிறமாயிருக்கிறது. அவை நல்ல வடிவமான நாடியை மூடி, பழுப்பு ரோஜா நிறக் கன்னங்களில் மேலெழும்புகின்றன. சாதாரணமாக பழுப்பு நிற ஆள்களுக்கு கன்னங்கள் ஒலிவ நிறமாயிருக்கும். அவருடைய விழிகள் இருண்ட ஆழமான அன்புள்ள மிக காரியார்த்தமுள்ளவையாயும் சற்றுத் துயரமாயுமிருக்கின்றன. அவர் இப்போது புன்னகை செய்கிறார். புன்னகை செய்யும்போது அவரின் கண்கள் மகிழ்ச்சியுடனும், இளமையுடனும் காணப்படுகின்றன. எளிய, ஆனால் மிகச் சுத்தமான இள மர நிற உடையணிந்திருக்கிறார்.
ஒரு லேவியர் குழு வருகிறது. அவர்கள் வாசல் கதவிற்கும், ஒரு நீண்ட ஒடுங்கிய மேசைக்கும் நடுவில் நிற்கிறார்கள். அம்மேசை கதவு இருக்கிற சுவருக்கெதிராக உள்ளது. கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. காலியிடத்தை மூடுவதற்கு ஒரு ஒற்றைத் திரை தரையிலிருந்து சுமார் இருபது சென்டிமீட்டர் உயரத்தில் தொங்குகிறது.
அந்தக் கூட்டத்தின் வினோதப் பிரியம் அதிகரிக்கிறது. ஒரு கரம் திரையை ஒரு பக்கமாக விலக, ஒரு லேவியன் வரவும் ஆர்வம் கூடுகிறது. அவன் தன் கரங்களில் ஒரு கட்டு காய்ந்த குச்சிகளைக் கொண்டு வருகிறான். அவற்றுள் ஒரு கம்பு பூப்பூத்திருக்கிறது! குச்சிகள் மெதுவாக மேசை மீது வைக்கப்படுகின்றன. பூவின் இதழ்கள் நுரைபோல் வெண்மையாக உள்ளன. பூக்களின் நிறம் ரோஜா நிற நிழல் படர்ந்திருக்கிறது. அந்நிறம் பூவின் நடுவிலிருந்து இதழ்களின் ஓரத்திற்கு வரவர வெளிறிக் காணப்படுகின்றது. மலர்கள் நிறைந்த கிளையின் புதுமையிலிருந்து கவனம் சிதறாதபடி அந்த லேவியன் குச்சிகளின் கட்டை மிக மெல்ல மேசை மீது வைக்கிறான். எத்தனையோ காய்ந்த குச்சிகளின் நடுவே ஒரு குச்சி மலர்களால் நிரம்பியிருக்கிறது!
கிசுகிசுவென பேச்சு அவ்வறை முழுவதும் பரவுகிறது. எல்லாரும் தலையை நீட்டி பார்வையைக் கூர்மையாக்குகிறார்கள். மற்றக் குருக்களுடன் நிற்கிற சக்கரியாசும் அதைக் காண முயல்கிறார். அவரால் பார்க்க முடியவில்லை.
சூசையப்பர் தாம் இருந்த இடத்திலிருந்தே ஒரு துரிதப் பார்வையால் குச்சிகளைப் பார்க்கிறார். அவருடன் பேசிக் கொண்டிருந்த மனிதன் அவரிடம் எதோ சொல்ல, “இருக்காது” என்றதுபோல் அவர் தலையை அசைத்துச் சிரிக்கிறார்.
ஓர் எக்காள ஒலி திரைக்கு அப்பாலிருந்து கேட்கிறது. எல்லாரும் அமைதியாகி ஓர் ஒடுக்கமான வாசலை நோக்கித் திரும்புகிறார்கள். திரை முழுவதும் விலக்கப்பட்டதால், கதவு முழுவதும் திறந்து தெரிகிறது. மூப்பர்கள் சூழ உள்ளே நுழைகிறார் பெரிய குரு. எல்லாரும் தாழ்ந்து தலை பணிகிறார்கள். அவர் மேசையருகே சென்று நின்றபடி பேசத் தொடங்குகிறார்:
“தாவீதின் கோத்திரத்தாரே! என் விண்ணப்பத்திற் கிணங்க இங்கு கூடியிருக்கிறீர்கள். கேளுங்கள்: ஆண்டவர் திருவாய் மலர்ந்துள்ளார். அவருக்கே மகிமையுண்டாவதாக! அவருடைய மகிமைப் பிரதாபத்திலிருந்து ஒரு கதிர் இறங்கி வந்துள்ளது. வசந்த காலக் கதிரவனைப் போல் அது ஒரு காய்ந்த கம்பை உயிர் பெறச் செய்திருக்கிறது. அது அற்புதமாக பூத்திருக்கிறது. பூமியில் வேறெந்த மரக்கிளையிலும் இன்று மலர் இல்லை. இது அபிஷேகப் பண்டிகையின் இறுதி நாள். யூதா மலைகளில் பெய்த பூம்பனி இன்னும் உருகவில்லை. சீயோனுக்கும், பெத்தானியாவுக் குமிடையில் எல்லாமே வெண்மை நிறமாயிருக்கிறது. தேவன் பேசியுள்ளார். தாவீதின் வம்ச கன்னிகைக்குத் தம்மையே தந்தையாகவும், காப்பாளராகவும் ஏற்படுத்திக் கொண்டார். அவரை மாத்திரமே அவள் தன் பாதுகாப்பாளராகக் கொண்டிருக்கிறாள். பரிசுத்த நங்கை, தேவாலயத்தின் மகிமை, நித்தியருக்கு விருப்பமான தன் மணாளனுடைய பெயரை அறிந்து கொள்ள கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொள்ளும் தகுதி பெற்றவள். அந்த மணாளனும், ஆண்டவருக்கு மிக அருமையுள்ள கன்னிகையின் காவலனாக அவரால் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதால், மிக நீதிமானாயிருக்க வேண்டும். இக்காரணத்திற்காக அவளை இழப்பதால் எங்களுக்கு ஏற்படும் துயரம் குறைகிறது. மனைவி என்ற அவளுடைய நிலையைப் பற்றிய எங்கள் எல்லாக் கவலையும் தீர்ந்தது. கடவுளால் நியமிக்கப்பட்ட அந்த மனிதனிடம், கடவுளாலும், எம்மாலும் ஆசீர்வதிக்கப்பட்ட இக்கன்னிகையை, முழு நம்பிக்கையுடன் ஒப்படைக்கிறோம். அந்த மணாளனுடைய பெயர் பெத்லகேம் யாக்கோபினுடைய சூசை. தாவீதின் கோத்திரம். கலிலேய நாசரேத்தில் ஒரு தச்சன். சூசையே! முன்வாரும். இது பெரிய குருவின் ஆணை...”
ஏராளமான மெல்லொலிப் பேச்சுகள் கேட்கின்றன. தலைகள் திரும்புகின்றன. கண்கள் கேள்விக் குறிகளை வீசுகின்றன. கைகள் சைகைகளைக் காட்டுகின்றன. ஏமாற்றம், விடுதலை ஆகிய உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. இப்பதவிக்கு தெரிந்து கொள்ளப் படாதிருந்ததைப் பற்றி சற்று மூத்த வயதுடையோருக்குள் ஒருவர் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.
சூசையப்பர் குழம்பிப் போய் வெட்கம் மேலிட முன்னே போகிறார். மேசைப் பக்கம், பெரிய குருவின் முன்பாக மரியாதையுடன் வணக்கம் கூறி நிற்கிறார்.
பெரிய குரு கூறுகிறார்: “இந்தக் கிளையின் மீது எழுதப்பட்ட பெயரை அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் தன் குச்சியை எடுத்துச் செல்ல வேண்டும். இதில் ஏமாற்று எதுவுமில்லை என்று உறுதியாக்கப்பட வேண்டும்.”
அனைவரும் கீழ்ப்படிகின்றனர். பெரிய குரு மெல்லப் பிடித்துள்ள கிளையைப் பார்க்கின்றனர். பின் தங்கள் குச்சிகளை எடுத்துச் செல்கின்றனர். சிலர் அதை ஒடிக்கிறார்கள். சிலர் அதை வைத்துக் கொள்கிறார்கள். அனைவருமே சூசையப்பரை நோக்குகிறார்கள். சிலர் பார்த்து மவுனமாகிறார்கள். சிலர் அவருக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். சூசையப்பர் முன்பு பேசிக் கொண்டிருந்த மூப்பர்: “சூசை! நான் கூறவில்லையா? யார் குறைந்த நிச்சயமாயிருக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுகிறார்கள்.” என்கிறார். எல்லாரும் பெரிய குருவைக் கடந்து சென்றாயிற்று.
பூக்கள் மலர்ந்திருக்கும் கிளையை சூசையப்பரிடம் பெரிய குரு கொடுக்கிறார். அவருடைய தோள்மேல் தம் கையை வைத்து: “சூசையே, உமக்குத் தெரியும், ஆண்டவர் உமக்களித்துள்ள மணிவாளி செல்வமுடையவள் அல்ல. ஆனால் எல்லாப் புண்ணியங்களும் அவளிடம் இருக்கின்றன. அவளுக்கு நீர் மேலும் மேலும் தகுதியுடையவராயிருந்து கொள்ளும். அவளைப் போல் அழகும் பரிசுத்தமும் உடைய வேறு மலர் இஸ்ராயேலில் இல்லை. இப்பொழுது எல்லாரும் வெளியே செல்லுங்கள். சூசையே, நீர் இங்கே இரும். சக்கரியாஸே, நீர் மணவாளியின் உறவினரானதால், அவளை இங்கு அழைத்து வாரும்.”
பெரிய குருவையும், சூசையப்பரையும் தவிர எல்லாரும் வெளியில் செல்கிறார்கள். கதவின் திரை மூடப்படுகிறது.
சூசையப்பர் மிகத் தாழ்ச்சி வினயத்தோடு பெரிய குரு பக்கத்தில் நிற்கிறார். அமைதி நிலவுகிறது. பின் பெரிய குரு சூசையப்பரிடம்: “மரியா தான் செய்துள்ள ஒரு வார்த்தைப்பாட்டைப் பற்றி உம்மிடம் தெரிவிக்க விரும்புகிறாள். அவளின் கூச்சம் நீங்க நீர் அவளுக்கு உதவி செய்யும். மிக நல்லவளான அவளை நன்றாக வைத்துக் கொள்ளும்” என்கிறார்.
அதற்கு சூசையப்பர்: “என் பலத்தையும், மணவாளன் என்னும் அதிகாரத்தையும் அவளுடைய ஊழியத்தில் நான் வைப்பேன். அவளுக்காக நான் செய்யும் எந்தப் பரித்தியாகமும் எனக்குப் பாரமாயிராது. இது பற்றி நீர் உறுதியாயிருக்கலாம்” என்று பதிலளிக்கிறார்.
அப்போது சக்கரியாசுடனும் பானுவேலின் அன்னாளுடனும் மரியா வாசலில் நுழைகிறார்கள்.
“மரியா, வா. கடவுள் உனக்கு நியமித்துள்ள மணாளன் இவரே. இவர் நாசரேத் சூசை. ஆகவே நீ உன் சொந்த ஊருக்கே திரும்பிப் போவாய். இனி நான் செல்கிறேன். கடவுள் தம் ஆசீரை உங்களுக்கு அளிப்பாராக. ஆண்டவர் உங்களைப் பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக. அவர் தம் முகத்தை உங்களுக்குக் காட்டி, உங்கள் மேல் இரக்கங் கொள்வாராக. அவர் உங்கள் பக்கமாய்த் திரும்பி உங்களுக்கு சமாதானம் அளிப்பாராக!” என்று கூறிவிட்டு பெரிய குரு செல்கிறார். பெரிய குருவுடன் சக்கரியாஸும் போகிறார். அன்னாள் சூசையப்பருக்கு வாழ்த்துக் கூறி அவளும் சென்று விடுகிறாள்.
மணமாகிறவர்கள் ஒருவர் முன்பாக ஒருவர் நிற்கிறார்கள். மரியா முகஞ்சிவந்து, தலை கவிழ்ந்து நிற்கிறார்கள். அர்ச். சூசையப்பரும் முகம் சிவக்க, பேசுவதற்கு முதல் வார்த்தைகளைத் தேடுகிறார். வார்த்தைகள் கிடைத்து விடுகின்றன. அவர் முகம் மலர்ந்து , கண் ஒளிரக் கூறுகிறார்: “மரியா! உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன். நீங்கள் சில நாட்கள் சிசுவாயிருந்த போது உங்களைப் பார்த்திருக்கிறேன்... உங்கள் தந்தைக்கு நான் நண்பன். என் சகோதரனுடைய மகன் அல்பேயுஸ் உங்கள் தாயின் பெரிய சிநேகிதன். அவளுக்கு அவன் சிறிய நண்பன். அவனுக்கு வயது பதினெட்டே ஆகிறது. நீங்கள் பிறப்பதற்கு முன் அவன் சிறு பைனொக இருந்த போது அவனை அதிகம் நேசித்த உங்கள் துயரத் தாயை அவன் மகிழ்ச்சிப்படுத்தினான். நீங்கள் இங்கு வந்த போது மிகச் சிறுமியாக இருந்ததால், உங்களுக்கு எங்களைத் தெரியாது. ஆனால் நாசரேத்திலுள்ள எல்லாரும் உங்களை நேசிக்கிறார்கள். சுவக்கீனின் சின்ன மரியா என்று நினைத்து பேசிக் கொள்வார்கள். உங்களுடைய பிறப்பு ஆண்டவருடைய ஓர் அற்புதமாக இருந்தது. வளமற்றிருந்த மூதாட்டியை ஆச்சரியமாகக் கனி தரச் செய்தார் ஆண்டவர்... நீங்கள் பிறந்த அந்த மாலை வேளை எனக்கு நினைவிருக்கிறது... எங்கள் எல்லாருக்கும் அது நினைவிருக்கிறது. காரணம்: ஒரு பெரும் மழை. அது நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றியது. ஒரு பெரிய புயற்காற்று. அந்த இடி மின்னல்களால் ஒரு சின்னச் செடியின் தண்டு முதலாய் சேதப்படவில்லை. முடிவில் ஓர் அழகான வானவில். அதுமாதிரி வானவில் அதற்குப் பிறகு எப்பொழுதுமே காணப்பட்டதில்லை... பின்னும் சுவக்கீனுடைய மகிழ்ச்சியை நினைக்காதது யார்? உங்களைக் கையில் ஏந்திக் கொண்டு அயலகத்தாருக்குக் காண்பித்துக் கொண்டிருந்தாரே!... மோட்சத்திலிருந்து வந்த ஒரு பூவைப் போல் உங்களை அவர் வியந்தார். மற்ற எல்லாரும் உங்களைக் கண்டு வியக்கும்படி ஆசித்தார். அவர் மரிக்கும்போது கூட தன் மரியாயைப் பற்றிப் பேசியபடியே உயிர் துறந்த பாக்கியம் பெற்ற தந்தை. உங்களை அழகிய நல்ல மகள் என்றும், உங்கள் வார்த்தைகள் ஞானமும் அருளும் நிறைந்தவை என்றும் பேசுவார்... உங்களை அவர் பாராட்டியதும், உங்களைப் போல் அன்பிற்குரிய வேறு எந்த ஸ்திரீயும் இல்லை என்று அவர் கூறியதும் மிகச் சரியே. உங்கள் தாய்! உங்கள் வீடும், அதன் சுற்றுப்புறங்களும், அவர்களுடைய பாடல்களால் நிரம்பின. உங்களை வயிற்றில் சுமந்தபோதும், பின்னர் கைகளில் ஏந்திய போதும், வசந்தகால வானம்பாடிபோல் பாடுவார்களே! உங்களுக்கு நான் ஒரு தொட்டில் செய்து கொடுத்தேன். ரோஜாக்கள் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிறிய தொட்டில். உங்கள் தாய் அதை அப்படிச் செய்ய விரும்பினார்கள். ஒருவேளை அது இன்னும் அந்த வீட்டில் இருக்கக் கூடும். நான் வயது மூத்தவன் மரியா. உங்கள் பிறப்பின் போது நான் உழைக்கத் தொடங்கினேன். வேலை செய்து வந்தேன்... உங்களை மணவாளியாகப் பெற்றுக் கொள்வேன் என நான் ஒருபோதும் எண்ணியிருந்ததில்லை. இதை உங்கள் பெற்றோர் அறிந்திருந்தால் அவர்கள் அதிக மகிழ்ச்சியாக மரணமடைந்திருக்கக் கூடும். ஏனென்றால் அவர்கள் எனக்கு நண்பர்களாயிருந்தார்கள். உங்கள் தந்தையை நேர்மையான இருதய துக்கத்தோடு நான் அடக்கம் பண்ணினேன். ஏனென்றால் அவர் என் நல்ல ஆசிரியராயிருந்தார்.” இவ்வாறு அர்ச். சூசையப்பர் பேசினார்.
மரியா மெல்ல தன் முகத்தை உயர்த்துகிறார்கள். சூசையப்பர் இவ்வாறு தன்னிடம் பேசப்பேச அவர்களுக்குத் திடன் ஏற்படுகிறது. அவர் தொட்டிலைப் பற்றிக் குறிப்பிட்ட போது லேசாகச் சிரித்துக் கொண்டார்கள். தன் தந்தையைப் பற்றிப் பேசிய போது, கரத்தை நீட்டி “நன்றி” என்று மெல்லக் கூறினார்கள். மருண்ட மெல்லிய நன்றி அது. அவர்கள் மேலும் பேச சூசையப்பர் எதிர்பார்த்தார் போலும். ஆனால் மரியா பேசவில்லை. அர்ச். சூசையப்பரே மீண்டும் தொடர்ந்து பேசுகிறார்:
“உங்கள் வீடு இன்னும் அப்படியே இருக்கிறது. ஆளுநரின் ஆணையால், உரோமையரின் வாகன சாலைக்காக இடிக்கப்பட்ட ஒரு பாகத்தைத் தவிர. நிலபுலன்கள் பல உங்கள் தந்தையின் சுகவீனத்திற்காக விற்கப்பட்டு விட்டன. மீதி உள்ளவையும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. மூன்றாண்டுகளுக்கும் மேலாக மரங்களும், திராட்சைக் கொடிகளும் கழிக்கப்படாமல் உள்ளன. நிலமும் பண்படுத்தப்படாமல் கடினமாகியுள்ளது. சிறுமியாக உங்களைப் பார்த்து நின்ற மரங்கள் இன்றும் அங்கு உள்ளன. நீங்கள் சம்மதித்தால் நான் உடனடியாக அவைகளைப் பராமரிப்பேன்!” என்கிறார்.
“நன்றி கூறுகிறேன். ஆனால் உங்களுக்கு உங்கள் அலுவல்கள் உள்ளனவே” என்கிறார்கள் மரியா.
“உங்கள் பழமரத் தோட்டத்தில் காலையிலும், மாலையிலும் வேலை செய்வேன். பகல் பொழுது நீளமாகி வருகிறது. இளவேனில் வருமுன் எல்லாவற்றையும் உங்கள் மகிழ்ச்சிக்காக சீர்ப்படுத்தி விட விரும்புகிறேன். பாருங்கள்: இதோ, உங்கள் வீட்டருகிலுள்ள ஆல்மண்ட் மரத்தின் ஒரு கிளை. வேலி எவ்வளவு சேதமாகியுள்ளதென்றால், எந்த இடத்திலும் உள்ளே போய் விடலாம். இதை ஏன் எடுத்தேனென்றால், நான் தெரிந்து கொள்ளப்பட்டால் உங்கள் தோட்டத்திலிருந்து ஒரு மலரை நீங்கள் விரும்புவீர்கள் என்றுதான். ஆனால் நான் தெரிந்து கொள்ளப்படுவேன் என்று நினைக்கவில்லை. நான் ஒரு நசரேயன். (விசேஷ முறையில் கற்பை காப்பாற்ற நேர்ந்து கொண்டவர்களே நசரேயர்கள். எண்ணாகமம் 6-ம் அதி. காண்க.) பெரிய குருவின் கட்டளையென்பதால் கீழ்ப்படிந்தேன். அல்லாமல் நான் திருமணஞ் செய்ய விரும்பியதில்லை. இதோ அந்தக் கிளை. அதோடு என் உள்ளமும் தரப்படுகிறது. என் இருதயம் இதுநாள் வரையிலும் ஆண்டவருக்காகவே மலர்ந்தது. இப்பொழுது என் சதியான உங்களுக்காக விரிகிறது.”
மரியா அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதிகமதிகம் நம்பிக்கை கொண்டு பிரகாசமடையும் முகத்தோடு பார்க்கிறார்கள். அவரைப் பற்றி அவர்களுக்கு உறுதி ஏற்படுகிறது. அவர் “நான் ஒரு நசரேயன்” என்றபோது, அவர்களின் முகம் பிரகாசிக்க, அவர்கள் தைரியமடைந்து, “நானும் ஆண்டவருக்கே முழுவதும் சொந்தமானவள். பெரிய குரு இதைப் பற்றிச் சொன்னாரோ என்று தெரியவில்லை...” என்கிறார்கள்.
“நீங்கள் நல்லவர்கள், பரிசுத்தமானவர்கள் என்று தான் பெரிய குரு கூறினார். ஒரு வார்த்தைப்பாட்டைப் பற்றி என்னிடம் நீங்கள் கூற விரும்புவதாகவும் நான் உங்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். மரியா பேசுங்கள். உங்கள் எல்லா விருப்பத்திலும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கு நான் காட்டும் அன்பு சரீர அன்பல்ல. என் ஆன்மாவைக் கொண்டே உங்களை நேசிக்கிறேன். கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்ட புனிதமான பெண் நீங்கள். தயவு செய்து என்னில் நீங்கள் மணாளனோடு ஒரு தந்தையையும், சகோதரனையும் காண வேண்டும். ஒரு தந்தையிடம் கூறுவது போல் உங்கள் உள்ளம் திறந்து கூற வேண்டும். ஒரு சகோதரனை நம்புவது போல் என்னை நம்ப வேண்டும்...” என்கிறார் சூசையப்பர்.
“என் குழந்தைப் பருவ முதல் என்னை ஆண்டவருக்கு வசீகரித்து அளித்தேன். இஸ்ராயேலில் இது வழக்கமல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் மெசையாவின் வருகைக்காக அன்பின் பலியாக என் கன்னிமையைக் கேட்ட ஒரு குரலை நான் கேட்டேன். அவருடைய வருகைக்காக எவ்வளவு காலமாக இஸ்ராயேல் காத்திருக்கிறது!... அதற்காக ஒரு தாயாகும் மகிழ்ச்சியைத் தியாகம் செய்வது பெரிதாகாது.”
அப்போது சூசையப்பர் மரியாயின் உள்ளத்தை வாசிப்பவர் போல் உற்றுப் பார்த்து, அந்த மலர்ந்த கிளையைப் பிடித்திருக்கும் சிறு கரங்களைத் தம் கரங்களில் எடுத்து: “உங்களுடைய தியாகத்துடன் என்னுடைய தியாகத்தையும் நான் இணைப்பேன். அதோடு நாம் நித்திய பிதாவை நம் கற்பினால் எவ்வளவு நேசிப்போமென்றால், அவர் இரட்சகரை சீக்கிரமாக உலகிற்கு அனுப்பி அவருடைய ஒளி உலகில் பிரகாசிப்பதை நாம் காணும்படி செய்வார். மரியா, நாம் அவருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாகச் சென்று, நாமிருவரும் சம்மனசுக்கள் ஒருவரையயாருவர் நேசிப்பது போல் நேசிப்பதாக வாக்குறுதி எடுப்போம். அதன்பின் நான் நாசரேத்துக்குச் சென்று உங்கள் வீட்டை, அங்கு நீங்கள் செல்ல விரும்பினால், அல்லது வேறெங்கும் நீங்கள் செல்ல விரும்பினால், அந்த இடத்தை உங்களுக்கு ஆயத்தம் செய்வேன்” என்கிறார்.
“எங்கள் வீட்டின்... கோடியில் ஒரு கெபி இருந்தது... அது இன்னும் இருக்கிறதா?”
“அது இருக்கிறது. ஆனால் இப்பொழுது அது உங்களுக்கு சொந்தமாக இல்லை... ஆனால் உங்களுக்கு நான் ஒரு கெபி அமைத்துத் தருகிறேன். அங்கே பகலின் மிக வெப்பமான நேரங்களில் குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். முந்திய கெபியைப் போல் எவ்வளவுக்கு முடியுமோ அப்படி அது இருக்கும்படி செய்கிறேன். அங்கு உங்களுடன் யார் இருக்க விரும்புகிறீர்கள்?”
“யாரும் வேண்டாம். எனக்குப் பயம் கிடையாது. என்னை எப்போதும் பார்க்க வந்த அல்பேயுஸின் தாய் பகலில் எனக்குத் துணையாயிருப்பார்கள். இரவில் நான் தனியே இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு தீங்கும் நேரிடாது.”
“உங்களை அங்கே நான் எப்போது கூட்டிப் போக வேண்டும்?”
“உங்கள் விருப்பப்படி.”
“அப்படியென்றால் வீடு தயாரானவுடன் நான் வருகிறேன். அங்கு எதையும் நான் தொட மாட்டேன். உங்கள் தாய் விட்டுச் சென்றபடியே நீங்கள் அதைக் காண ஆசிக்கிறேன். ஆனால் அது சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும். எந்தத் துயரச் சாயலும் இல்லாமல் உங்களை வரவேற்க வேண்டும். மரியா வாருங்கள். இப்போது நாம் ஆண்டவரிடம் சென்று அவரை நாம் வாழ்த்துவதாகக் கூறுவோம்.”
வேறெதுவும் காணப்படவில்லை. ஆனால் என் உள்ளத்தில், மாமரி உணர்ந்த நம்பிக்கையுறுதியை நான் உணருகிறேன்.