இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டுமென கடவுள் சித்தம் கொள்கிறார்.

நம் பரிசுத்த மீட்பர் தமது சொந்த திரு இரத்தத்தை விலையாகத் தந்து, நித்திய சாவினின்று நம்மை மீட்டுக் கொண்டார். தாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்கக் காரணமாயிருந்த நம் ஆன்மாக்கள் இழக்கப்படுவதைக் காண அவர் விரும்புவதில்லை. தங்களை நரகத்திற்குத் தீர்ப்பிடுமாறு, தங்கள் பாவங்களைக் கொண்டு அவரை நெருக்குகிற ஆன்மாக்களை அவர் காணும்போது, அவர்கள் மீதுள்ள தயவிரக்கத்தால் அவர் அழுதபடி, ""இஸ்ராயேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?... மனந்திரும்புங்கள், (அதனால்) பிழைத்திருப்பீர்கள்'' (எசேக.18:31) என்கிறார். என் குழந்தைகளே, உங்களை இரட்சிக்கும்படியாக நான் ஒரு சிலுவையின் மீது மரித்திருக்க, நீங்கள் ஏன் உங்களை அழித்துக் கொள்கிறீர்கள், ஏன் உங்களையே சாபத்துக்கு உள்ளாக்கிக் கொள் கிறீர்கள்? மனந்திரும்பி தவம் செய்தபடி என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது, நீங்கள் இழந்துபோன தேவ உயிரை நான் உங்களில் மீண்டும் புதுப்பிப்பேன்.

கடவுள் எல்லா மனிதர்களின் இரட்சணியத்தையும் சித்தங் கொள்கிறார் என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கற்பிக்கிறார்: ""சகல மனிதர்களும் இரட்சிக்கப்பட... அவர் சித்தமா யிருக்கிறார்'' (1 திமோ.2:4). ""அவர் (சர்வேசுரன்) ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்ப வேண்டுமென்று விரும்பி, உங்களைப் பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார்'' என்று அர்ச். இராயப்பர் கூறுகிறார் (2 இரா.3:9). தேவ சுதன் இதற்காகவே பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, மனிதனாக அவதரித்து, கடும் உழைப்புகளிலும், துன்பங்களிலும் 33 ஆண்டுகளைச் செலவிட்டு, இறுதியாக, நம் இரட்சணியத்திற்காகத் தம் இரத்தத்தைச் சிந்தித் தம் உயிரைக் கையளித்தார். அப்படியிருக்க, நாமே நம் இரட்சணியத்தை வேண்டாமென்று தள்ளி விடலாமா?

நீரோ, என் இரட்சகரே, தேவரீர் என் இரட்சணியத்தை சம்பாதிப்பதில் உம் வாழ்நாளெல்லாம் செலவழித்தீர். என் வாழ்வில் இவ்வளவு அதிக ஆண்டுகளை நான் எதிலே செலவழித்திருக்கிறேன்? என்னிடமிருந்து என்ன பலனை நீர் அறுவடை செய்திருக்கிறீர்? வெட்டுண்டு, நரகத்தில் போடப்பட மட்டுமே நான் தகுதி பெற்றிருக்கிறேன். ஆனால் நீரே பாவியின் சாவை விரும்பாமல், அவன் மனந்திரும்பி, பிழைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறீர் (எசேக்.33:11). ஆம், என் தேவனே, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு, உம்மிடம் திரும்பி வருகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை நான் நேசிப்பதால், உம்மை மனநோகச் செய்ததற்காக நான் மனஸ்தாபப்படுகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும், இனி நான் உம்மைக் கைவிட்டு விலக என்னை அனுமதியாதிரும்.

தங்கள் நித்திய இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, புனிதர்கள் என்னதான் செய்யாதிருந்தார்கள்! எத்தனை பிரபுக்களும், அரசர்களும் தங்கள் இராச்சியங்களையும், நிலச் சொத்துக்களையும் துறந்து, அடைபட்ட மடங்களுக்குள் தங்களை வைத்து அடைத்துக் கொண்டார்கள்! எத்தனை இளவயதினர் தங்கள் நாட்டையும், நண்பர்களையும் விட்டுப் பிரிந்து குகைகளிலும், வனாந்தரங்களிலும் தங்கி வசித்தார்கள்! மேலும் எத்தனை வேதசாட்சிகள் மிகக் கொடூரமான வாதைகளுக்கு உட்பட்டுத் தங்கள் உயிரைக் கையளித்தார்கள்! இவற்றையயல்லாம் அவர்கள் ஏன் செய்தார்கள்? - தங்கள் ஆன்மாக்களை இரட்சித்துக் கொள்வதற்காக. நாம் என்ன செய்திருக்கிறோம்?

மரணம் அண்மையில் உள்ளது எனினும், அதைப் பற்றி நினைக்காதிருக்கிற எனக்கு ஐயோ கேடு! இல்லை, என் தேவனே, இனியும் உம்மிடமிருந்து நான் தொலைவாக வாழ மாட்டேன். நான் ஏன் தாமதிக்கிறேன்? நான் இப்போது இருக்கும் பரிதாபத்திற்குரிய நிலையில் மரணம் என் மீது வெற்றி கொள்வதற்காகவா? இல்லை, என் சர்வேசுரா, சாவுக்குத் தயாரிக்க தேவரீர் எனக்கு உதவி செய்தருளும்.

ஓ தேவனே, நான் என் ஆத்துமத்தை இரட்சித்துக்கொள்வதில் எனக்கு உதவும்படியாக, என் இரட்சகர் எவ்வளவு அதிகமான வரப் பிரசாதங்களை என்மீது பொழிந்தருளினார்! மெய்யான திருச் சபையின் உதரத்தில் நான் பிறக்கச் செய்தார்; பல முறை என் மீறுதல்களை அவர் மன்னித்தார்; பிரசங்கங்களிலும், ஜெபங்களிலும், தியானங்களிலும், திவ்ய நன்மைகளிலும், ஞானப் பயிற்சிகளும் எவ்வளவோ அதிகமான ஒளிகளை எனக்குத் தரத் தயை புரிந்திருக்கிறார்; அடிக்கடி தம் நேசத்திடம் வரும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார். ஒரே வார்த்தையில், மற்றவர்களுக்குத் தராத எத்துணை அதிகமான இரட்சணிய வழிகளை அவர் எனக்குத் தந்தருளியிருக்கிறார்!

இருந்தும், என் தேவனே, உலகத்திடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு, நான் என்னை முழுவதும் உமக்குத் தருவது எப்போது? என் சேசுவே, என்னைக் கண்ணோக்கும், இனி நான் உம்மை எதிர்த்து நிற்க மாட்டேன். உம்மை நேசிக்கும் கடமையை எனக்குத் தந்திருக்கிறீர். முழுவதும் உம்முடையவனாக இருக்க நான் ஆசிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொள்ளும், இது வரை உம்மை மிக அதிகமாக நிந்தித்துத் துன்புறுத்திய ஒரு பாவியின் அன்பைப் புறக்கணித்துத் தள்ளாதேயும். என் தேவனே, என் அன்பரே, என் சர்வமுமே, நான் உம்மை நேசிக்கிறேன். மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.