சலேசிய சபையின் எதிர்கால வெற்றிகளும், அவற்றை அடைவதற்கான நிபந்தனைகளும்!

இத்தகைய புதுமைகளைக் கண்டு அதிசயித்தவர்களாக நாங்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந் தோம். யாரும் பேசத் துணியவில்லை. டொன் போஸ்கோவோ, அல்லது அந்த கம்பீரமான மனிதரோ ஏதாவது சொல்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த சந்தர்ப்பத்தில் என் மர்மமான அந்த வழிகாட்டி என் அருகில் நெருங்கி வந்து என் காதில் கிசுகிசுப் பாக: “வாரும், சலேசிய சபைக்கு வரக் காத்திருக்கிற வெற்றியை நான் உமக்குக் காட்டுவேன். அந்தப் பாறையின் மீது ஏறி நீரே பார்த்துக் கொள்ளும்!” என்றார்.

நான் அந்தப் பெரிய பாறையின்மீது ஏறினேன். அந்த உடைபடாத சமவெளியில் அது ஒன்று மட்டும்தான் பாறையாக இருந்தது. அங்கே எவ்வளவு அற்புதமான, மகிமையான காட்சியை நான் கண்டேன்! முதலில் அவ்வளவு பெரியதாகத் தோன்றாத அந்த வயல், இப்போது இந்த முழு பூமியின் அளவுக்கு மிகப் பெரிதாகத் தோன்றியது! அதில் நான் எல்லா நிற மனிதர்களையும், எல்லா வித ஆடைகளிலும் கண்டேன். எல்லா நாடுகளையும் சேர்ந்த மனிதர் களைக் கண்டேன். அந்தச் சமவெளியில் நான் கண்ட மனிதர்களின் பெரும் எண்ணிக்கையை பூமி தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை . நான் நின்று எனக்கு மிக அருகில் இருந்தவர்களைக் கூர்ந்து ஆராய்ந்தேன். அவர்களும் நம்மைப் போலத்தான் உடை அணிந்திருந்தார்கள். முதல் வரிசைகளில் நின்றவர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களில் சிறுவர் சிறுமியரின் பெரும் கூட்டங்களை வழிநடத்திக் கொண்டிருந்த பல சலேசியத் துறவிகள் இருந்தார்கள். ஆயினும் யார் யாரென்று என்னால் கண்டு பிடிக்க முடியாதவர்களும் இருந்தார்கள். ஏனெனில் இவர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள். தெற்குப் பக்கத்தில் நான் சிசிலியர்களையும், ஆப்ரிக்கர்களையும், முடிவற்ற பல மக்களினங்களையும் கண்டேன். இவர்கள் நான் அறியாதவர்கள். இவர்கள் எப்போதும் சலேசியர்களால் வழிநடத்தப்பட்டார்கள். முதல் வரிசைகளில் இருந்தவர்களை மட்டுமே நான் அறிந்திருந்தேன். பின்வரிசைகளில் இருந்தவர்கள் எனக்கு முற்றிலும் அந்நியமானவர்களாக இருந்தார்கள்.

“திரும்பும்” என்று கட்டளையிட்டார் என் வழிகாட்டி. மற்றொரு முடிவில்லாத மக்கள் திரளை நான் அங்கு கண்டேன். அவர்களுடைய உடை நம் உடையிலிருந்து வேறுபட்டிருந்தது; அவர்கள் மேற்போர்வைகளின் அமைப்பில் இருந்த மயிராடைகள் அணிந்திருந்தார்கள். அவை தூரத்திலிருந்து பார்க்கும்போது வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருந்த வெல்வெட் துணிகளைப் போலத் தோன்றின. அதன்பின் நான்கு முக்கியத் திசைகளையும் நோக்கித் திரும்பும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். பல்வேறு காரியங்களுக்கிடையே நான் கிழக்கில் மிகச் சிறிய பாதங்களைக் கொண்டிருந்த பெண்களைக் கண்டேன். அவர்கள் நிற்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். நடப்பதோ அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே இருந்தது. இந்தக் காட்சியில் இருந்த சிறப்பம்சம், எல்லா இடங்களிலும் சிறுவர் சிறுமியர் குழுக்களை சலேசியர்கள் வழிநடத்திக் கொண்டிருந்ததுதான். அவர்களோடு பெரும் எண்ணிக்கையிலான வேறு மனிதர்களும் இருந்தார்கள். முதல் வரிசைகளில் இருந்த சலேசியர்களை மட்டும் நான் அடையாளம் கண்டுபிடித்தேன்; அவர்களைப் பின்பற்றிய வர்கள் எனக்குத் தெரியாதவர்களாக இருந்தனர். என் வேதபோதகர் களையும் கூட என்னால் அடையாளம் காண முடியவில்லை. என் வர்ணனை மிகவும் நீளமாகி விடும் என்று நான் பயப்படுவதால், மேற்கொண்டு எந்த விவரத்தையும் உங்களுக்குத் தர என்னால் இயலவில்லை.

இப்போது வரைக்கும் என் வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான மனிதர் என்னிடம், “நின்று, இதைப் பற்றி சிந்தித்துப் பாரும்! இப்போது நான் சொல்லும் எல்லாவற்றையும் நீர் புரிந்து கொள்ளாமல் போகலாம். ஆனால் இதை மனதில் நன்றாக இருத்திக் கொள்ளும். நீர் பார்த்துள்ள அதெல்லாம் சலேசியர்களுக்காகக் காத்திருக்கிற பெரும் அறுவடையாகும். அதன் பிரமாண்டத்தை நீர் காணவில்லையா? நீர் நின்று கொண்டிருக்கிற இந்த மிகப் பெரிய வயல்தான் சலேசியர்கள் வேலை செய்ய வேண்டிய களமாகும். உம் முன்பாக நீர் காணும் சலேசியர்கள் ஆண்டவரின் இந்த திராட்சைத் தோட்டத்து வேலை யாட்கள் ஆவர். உண்மையில் பலர் வேலை செய்து கொண்டிருக் கிறார்கள், அவர்களை நீர் அடையாளம் கண்டுபிடிக்கிறீர். ஆனால் அடிவானம் விரிவடைந்து கொண்டே செல்லச் செல்ல, நீர் அறியாத மக்களினங்களையும் நீர் காண்கிறீர். இந்த நூற்றாண்டில் (1876-1900) மட்டுமல்ல, மாறாக அடுத்த நூற்றாண்டிலும் (1900-2000) இன்னும் வரவிருக்கும் நூற்றாண்டுகளிலும் சலேசியர்கள் தங்கள் வயலில் வேலை செய்வார்கள் என்பதை உமக்குச் சொல்வதற்காகவே இது உமக்குக் காட்டப்பட்டது. ஆனால் இது நிறைவேறத் தேவைப் படுவது என்ன என்று உமக்குத் தெரியுமா? நான் உமக்குச் சொல்வேன். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளும். இங்கே பாரும்: இந்த வார்த்தைகளை அச்சிட்டு வைத்துக் கொள்ளும். அவை உமது விருதுவாக்காக, உமது கடவுச் சொல்லாக, உமது சபையின் மரபுச் சின்னமாக இருப்பதாக. இவற்றைக் குறித்துக் கொள்ளும்: உழைப்பும், மட்டுமிதமும் மட்டுமே சலேசிய சபையை செழித்து வளரச்செய்யும். இந்த வார்த்தைகள் உம்மால் விளக்கப்படவும், திரும்பத் திரும்பச் சொல்லப்படவும், வலியுறுத்தப்படவும் வேண்டும். நீர் ஒரு கையேட்டை அச்சிட வேண்டும். அதில் இதை நீர் முழுமையாக விளக்க வேண்டும். உழைப்பும் மட்டுமிதமும் சபைக்கு நீர் விட்டுச்செல்லும் தந்தைவழிச் சொத்தும், அதே சமயத்தில் அதன் மகிமையாகவும் இருக்கிறது என்பதை உம்மைப் பின்செல்பவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்யும்.”

நான் ஆர்வத்தோடு அவரிடம்:, “மிகுந்த மன உவப்போடு இதை நான் செய்வேன். உண்மையில் இது வரை இதுதான் எங்கள் நோக்கமாக இருந்து வந்துள்ளது. மிகச் சரியாக இதைத்தான் நான் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இதை வலியுறுத்த நான் தவற மாட்டேன்” என்றேன்.

“ஆக, இதை நீர் முற்றிலுமாக நம்பி ஏற்றுக் கொள்கிறீரா?” என்று கேட்டார் என் வழிகாட்டி. “நான் சொன்னதை நீர் முழுமையாகப் புரிந்து கொண்டீரா? இதை நீர் உம் குழந்தை களுக்குத் தந்தை வழிச் சொத்தாக நீர் விட்டுச் செல்வீர். ஆயினும் இந்த விருதுவாக்கின்படி அவர்கள் வாழும் வரைக்கும், அவர்கள் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லும். இப்போது தியானததை முடிவுக்குக் கொண்டு வாரும், உம் குழந்தைகளை அவர்கள் உழைக்க வேண்டியுள்ள வயலுக்கு அனுப்பும். உம்முடைய இந்த மகன்கள், பிற்காலத்தில் வர இருப்பவர்களுக்கு நல்ல முன்மாதிரிகைகளாக இருப்பார்கள்.”

அவர் பேசி முடிக்குமுன்னரே எங்களை ட்யூரினுக்கு அழைத்துச் செல்ல, சில வண்டிகள் காட்சியில் தோன்றின. அவை எந்த வகையான வண்டிகள் என்று நான் மிகக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவை மிக விநோதமான வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் போன்ற வண்டிகளை நான் பார்ப்பது அதுவே முதல் முறை. என்னோடு இருந்தவர்கள் வண்டியில் உடனே ஏறிக் கொண்டார்கள். நான் அவர்களுடைய பாதுகாப்பைப் பற்றி சற்று கவலைப்பட்டேன். ஏனெனில் அந்த வண்டிகளில் பக்கவாட்டுப் பலகைகள் இல்லை. ஆகவே அவை புறப்பட அனுமதிக்க எனக்கு மனமில்லை . ஆனால் அந்தப் பிரசித்த மான மனிதர் என்னை நோக்கித் திரும்பி, “அவர்களைப் போக விடும்! ‘ஸோப்ரீயி எஸ்தோத்தே எத் விஜிலாத்தே - மட்டுமிதமாகவும் விழிப்பாகவும் இருங்கள்' என்ற அறிவுரையை நன்கு அனுசரிப் பார்கள் என்றால், அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. இது நுணுக்கமாக அனுசரிக்கப்பட்டால், வண்டியில் பாதுகாப்புப் பலகைகள் இல்லையென்றாலும் கூட, யாரும் விழ மாட்டார்கள் என்று என்னால் உமக்கு உறுதி கூற முடியும்” என்றார்.