நன்மை வாங்குமுன்

கடவுள் தாராள குணமுள்ளவர். நம் இரட்சகராகிய கிறிஸ்து நாதர் நாம் அவரிடமிருந்து பெற விரும்பும் ஆசீர்வாதங்களையும் கொடைகளையும் நமக்குக் கொடுக்கிறார். இது இன்றும் என்றும் உண்மையே. இரட்சகர் இவ்வுலகில் இருக்கையில், அவரை ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தவர்களிடம் சென்று அதிசயங் களைப் புரிந்தார். மக்கள் மற்றக் காரியங்களிலும் ஆட்களிலும் ஈடுபட்டிருந்தால் அவர் அவர்களை வில கிச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களது விசுவாசக் குறையினால், அவர் நீட்டிய கரங்கள் புதுமைகள் செய்ய சக்தியற்றவைபோல் தோன்றின; அவர் பேசிய வார்த்தைகள் அவர்களது செவிகளில் விழ வில்லை .

விருப்பற்றிருந்தவர்களிடம் கிறிஸ்து நாதர் தம்மையோ தம் கொடைகளையோ திணித்தவரல்ல. அவரிலோ, அவர் சொன்னதிலோ, அவர் செய்ய வந்த காரியத்திலோ சற்று கரிசனை காட்டினவர்களை அவர் சம்பூரணமாய் ஆசீர்வதித்தார். சக்கேயுஸ் நல்ல உதாரணம். ஆண்டவரைப் பார்க்க அவனுக்கு ஆசை; அவர் அவன் இல்லத்தில் உணவருந்தி அவ னுடன் தங்கினார்.

லாசர், மரி, மார்த்தா இவர்களது இல்லத்தில் யேசுவுக்கு என்றும் நல்வரவு அளிக்கப்பட்டது. அவர்களது அன்புக்குக் கைமாறாக, இறந்த லாசருக்கு உயிர் கொடுத்தார். மரியம்மாளை ஏழு பேய்களினின்று விடுவித்தார், மார்த்தாளை முதற் கிறிஸ்தவ கன்னியரில் ஒருத்தியாக்கினார்.

அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளுதல் இன்று சாதாரணம். யேசுவை அடிக்கடி அருந்தும் நாம், "என் இரட்சகர் என் உள்ளத்தில் அடிக்கடி வந்தும் நான் ஏன் அவரது வருகையால் மிகப் பயன் பெறாது போகிறேன்?" என நம்மையே கேட்க வேண்டும்.

அடிக்கடி நன்மை வாங்க பாப்பானவர் அனுமதித்திருக்கிறாரே; ஆனால் ஆயிரத்திலொருவ ராவது கிறிஸ்துநாதரும் பாப்பானவரும் எதிர்பார்க் கும் நலனை அடைகிறாரா? என குருக்களும் பக்தியுள்ள விசுவாசிகளும் ஆலோசிக்கிறார்கள். ஜனங்கள் கோவி லில் நுழைகிறார்கள். திவ்விய நற்கருணை கொடுக்கும் நேரம் வந்ததும் நாக்கை நீட்டி நன்மை வாங்குகிறார் கள். அத்துடன் எல்லாம் முடிந்தது என்றாப்போல் அப்படியே வெளிக் கிளம்பிவிடுகின்றனர்.

கடவுள் என்றும் தாராள குணமுள்ளவரே; அவர் ஒருபோதும் மாற மாட்டார், மாற முடியாது. ஆனால் அவரை உட்கொள்ளும் மக்களே அவரது கைகளைக் கட்டுகிறார்கள். அவர் தம் வரங்களை வழங் காதிருக்கும் வண்ணம் நடந்துகொள்கிறார்கள்.

திவ்விய நற்கருணை உட்கொள்வோருக்கு புனித ஞானப்பிரகாசியார் நல்ல மேல்வரிச் சட்டம். நன்மை வாங்குவதற்கு முந்தின நாள் முழுவதும் அவர் தம் மைத் தயாரிப்பதில் செலவழிப்பார். நன்மை வாங் கும் நாளன்று பத்தியுடன் மகிழ்ந்து அக்களிப்பார். அடுத்த நாளை நன்றி செலுத்துவதில் கழிப்பார். நம்மவர்கள் மூன்று நிமிடம் அல்லது மூன்று வினாடி முதலாய் கிறிஸ்துநாதரைப்பற்றி சிந்திக்கிறார்களா என்பது கேள்வி. திவ்விய நற்கருணையினால் நாம் அடையும் நலன் அதை உட்கொள்ளுமுன் நாம் செய் யும் தயாரிப்பையும், உட்கொண்டபின் கிறிஸ்து நாதரை நாம் உபசரிப்பதையும் பொறுத்தது.

விருந்தாளி வருகையில் அவசியமான சாமான் களை வாங்குவதும் வீட்டைச் சுத்தம் செய்வதும் வழக்கம். வருகிறவர் பெரிய மனிதரானால் தயாரிப் பும் அதற்கேற்ப இருக்கும். பணக்கார உறவினர் வருவாரானால் அவருக்குப் பிரியமான தோற்றத்தை இல்லமும் இல்லத்திலுள்ளவர்களும் அளிக்க முயல் வர். தன் கணவனின் முதலாளி விருந்துக்கு வருகிற தாயிருந்தால், முகமலர்ச்சியுடன் நல்வரவு அளிக்கப் படும். நாட்டின் தலைவரோ, பேர்பெற்ற தளபதியோ வருவாரானால், தெருக்கள் அலங்கரிக்கப்படுகின்றன.

திவ்விய நற்கருணை வழியாக நம் அரசர் நம்மைச் சந்திக்க வருகையிலோ ...?

உலக வாலாற்றிலேயே மிகப் பெரியவரான நசரேத்தூர் யேசு நம் ஆத்துமத்தில் வருகிறார். 

இராஜாதி இராஜன் நம் இதயமாகிய சிம்மாச னத்தில் அமர்கிறார்.

நம் மூத்த சகோதரராகிய கிறிஸ்துநாதர் நம் மைத் தேடி வருகிறார்.

அகில உலகையும் ஆண்டு நடத்தும் சர்வாதி கடவுள் என்மேலும் என்னுடையவைமேலும் தம் கவனத்தையெல்லாம் வைத்தவர்போல் என்னை நாடி வருகிறார்.

இதை நீ விசுவசிக்கிறாயா? உண்மையாகவே விசுவசிக்கிறாயா? பின் ஏன் இந்த அசட்டை ? விசுவ சித்தால் யார் வரவுக்கும் செய்யாத தயாரிப்பை கிறிஸ்துநாதரது வருகைக்கு முன் நீ செய்வாய்.

மனுஷாவதாரத்தின் போது மரியம்மாளிடம் வந்தவரை நான் வரவேற்கிறேன். பெத்லேகேம் குழந்தையை அவ்வூர்ச் சத்திரக்காரரைப்போல் நான் துரத்துவதில்லை, ஏற்றுக்கொள்கிறேன். திருக் குழந்தை குளிரால் வருந்தாதபடி சூடான சட்டை யைக் கொடுக்கும் இடையன் நான். பாதுகாப்பிடம் தேடி ஓடிய தேவனை வரவேற்கும் எஜிப்து நான். கடவுளுடைய சுதனை வீட்டில் வரவேற்கும் தச்சனா சிய சூசை நான். கிறிஸ்து நாதரைத் தங்கள் இல்லத் தில் இராயப்பர் லாசர் இவர்களைப்போல் நான் வர வேற்கிறேன். அரிமத்தேயா சூசையைப்போல் எனக் காக உயிர்விட்ட இரட்சகரை அடக்கம் செய்ய நான் என் இதயத்தைத் தருகின்றேன். கல்வாரியின் பலிக் குப்பின் யேசுவைக் கையிலேந்தும் கன்னி அன்னை நான்.

விசுவாசம் இருந்தபோதிலும், அது நித்திரை செய்யும் விசுவாசமாயிருக்கலாம். திவ்விய நற்கருணை என் இரட்சகரின் இரத்தம் சரீரம் என நான் அறி வேன், எனினும் அந்த உண்மையைப்பற்றி சிறிதும் யோசிப்பதில்லை.

பூசைநேரம் முழுவதும் தூங்கிவிட்டு, மணிச் சத் தம் கேட்டதும் எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டு கிராதிக்குச் சென்று என் தேவனை உட் கொள்கிறேன். அரசனை வரவேற்க சற்றும் தயாரா யில்லாத இராச்சியத்துக்குள் அவரை அழைத்துச் செல்கிறேன். தேவ விருந்தாளியின் வரவுக்கு நான் சிறிதென்கிலும் தயாரிப்பதில்லை, உபசரிப்பதில்லை. அழுக்குப்பிடித்த ஆத்துமத்தில் அவர் நுழையும் படிச் செய்கிறேன். அரோசிக ஞாபகங்களும் முந்தின நாளில் எள்னுள் நுழைந்தவைகளும் நிறைந்த இடத் தில் யேசுவும் நெருக்கிக்கொண்டு உட்காரும்படி சொல்கிறேன்.

என்னை மகிழ்வித்து ஏராளமான வரப்பிரசாதங் களை நான் பெறச் சந்தர்ப்பம் கொடுக்கும்படி யேசு விருப்பத்துடன் வருகிறார். ஆனால் என் ஆத்துமம் அவரை வரவேற்று பசரிக்கத் தயாராயிருப்பதில்லை. அவர் ஒரு நன்மையும் செய்யக்கூடாத நிலையில் அவரை நான் வைக்கிறேன். அவர் கொடுக்கும் திரவி யங்களை நான் பெற்றுக்கொள்ள முடியாதபடி என் இரு கைகளிலும் நிறைய சிறு பிள்ளைகளின் விளை யாட்டுச் சாமான்கள் இருக்கின்றன. அவரது குரலைக் கேட்கமுடியாதபடி, என் வீட்டில் ஒரே சத்தம். என் வீட்டில் அவர் உட்கார இடம் கிடையாது. இந்த இலட்சணத்தில் என் இருதய வீட்டை நான் வைத்தி ருக்கிறேன். அவர் வந்த பிறகும் தூசியையும் அழுக் கையும் நான் துடைப்பதில்லை. நூலாம்படைகளையும் பயனற்ற பொருட்களையும் அகற்றுவதில்லை. "ஆண்ட வரே, சற்று பொறுத்திரும், நான் வீட்டை சற்று ஒழுங்கு படுத்தும்வரை காத்திரும். ஏதாவது ஒரு மூலையில் நின்று கொள்ளும். உம்முடன் பேச எத்தனை யோ காரியங்களைப்பற்றி நினைத்தேன். இப்பொழுது எல்லாம் மறந்து போயிற்று. தேவ விருந்தாளியே, பொறுமையாயிரும்'' என சிலர் சொல்கின்றனர். ஏனைய விருந்தாளிகளுக்கு நாம் செய்வதையா வது நம் தெய்வீக விருந்தாளிக்கு நாம் செய்ய வேண் டும்; குறையக்கூடாது, கூடுதலாகவே இருக்க வேண்டும்.

திவ்விய நற்கருணை வழியாய் வரும் யேசுவின் வருகைக்கு நாம் தயாரிக்காவிட்டால், நஷ்டமடைவது நாமே. அவர் நம்மிடம் தங்கியிருக்கும் நேரம் சொற் பம். அவர் வந்தபின் ''ஆண்ட வர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்'' என நமக்கு பிறர் நினைப்பூட் டும்படி வைத்துக்கொள்ளலாகாது. அவரது வரவுக் காக எப்பொழுதுமே நாம் விழிப்புடன் காத்திருக்க வேண்டும். சற்று பிரயாசையுடன் நாம் தயாரிப்போ மானால் அவர் நம்மில் பெரும் அதிசயங்களைப்புரிவார். நாம் அவருடன் ஒத்துழைக்க வேண்டும்.

"இதோ நான் வாசலில் நின்று கதவைத் தட்டு கிறேன்.'' வெறுமனே கதவைத் திறந்தால் மாத்திரம் பற்றாது. அவருடன் சல்லாபிக்க வேண்டும். அவர் வசதியுடனிருப்பதற்கானவற்றைச் செய்ய வேண்டும்.

பாவசங்கீர்த்தனத்தில் கிறிஸ்து நாதர் என் பாவங்களைத் தயவுடன் மன்னிக்கிறார். நான் மன் னிக்கப்பட்டு விட்டதாக தம் பிரதிநிதி வழியாக எனக்கு அறிவிக்கிறார். பாவ சங்கீர்த்தனத் தொட்டி யானது தெய்வீக டாக்டருடன் கலந்தாலோசிக்கும் இடம்; என் ஆத்துமத்தை சுகநிலையில் எவத்திருப் பதற்கான புத்திமதி. மருந்து ஆகியவற்றை விரும் பித்தேடி அங்கு செல்கிறவன் பாக்கியசாலி.

நான் பாவத்தில் விழாதிருக்க பாவ சங்கீர்த்தன மானது நல்ல ஒரு மருந்து; பலவீனனான எனக்கு பலம் தருகிறது, இதற்கு முன் செய்த பாவங்களை மன்னித்து இனி பாவம் செய்யாதபடி பலமும் பெற் றுத்தருகிறது. சற்பிரசாத தேவனின் வருகைக்குத் தயாரிக்க அது நல்ல ஒரு வழி.

என் ஆத்துமத்தில் கனமான பாவங்கள் இருக்கு மானால், நான் திவ்விய நற்கருணை உட்கொள்ளுமுன், பாவம் செய்ததற்காக மிக விசனித்து, பாவத்தை வெறுத்துப் பகைத்து, இனி பாவம் செய்யமாட் டேன் என தீர்மானித்து, குருவிடம் அதை வெளிப் படுத்தி, மன்னிப்புப் பெறவேண்டும். அப்படி யானால் தான் என் உள்ளத்திலிருந்து இருளின் அரசன் வெளிபோற்றப்படுவான். வெளிச்சத்தின் அரசரை அவருடைய ஜென்ம சத்துரு இருக்கும் இடத்துக்கு அழைக்கலாகாது, இருவரும் ஒன்றாய்க் குடியிருக்க முடியாது.

சாவான பாவத்தினால் என் அழியாத ஆத்துமத் தில் பசாசு உரிமை பெறுவானானால், பாவசங்கீர்த் தனம் செய்யுமுன் நன்கு நான் தயாரிக்க வேண்டும். ஆத்துமத்தில் அற்பப் பாவம் மாத்திரம் இருக்கு மானால் திவ்விய நன்மை வாங்கு முன் பாவசங்கீர்த் தனம் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை.

புண்ணிய வாழ்க்கை நடத்த விரும்புவோர், இரண்டு வாரங்களுக்கொருமுறையென்கிலும் குறிப் பிட்ட குரு ஒருவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்து வர வேண்டும். பாவசங்கீர்த்தனத்துக்கு முன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்த பின்னும் ஒருவன் தக்கவித மாக தேவ வரப்பிரசாதத்துடன் ஒத்துழைப்பானா கில் அவனிடமிருக்கும் பழைய புண்ணியங்கள் திடம் பெறும், புதிய வரப்பிரசாதங்களைப் பெறுவான், சற பிரசாத அரசரது வருகைக்கு ஆத்துமத்தை தயாரிப் பான்.

பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் நாம் கடவுளது நன்மைத்தனத்தையும், தாராள குணத்தையும், அவர் நமக்குச் செய்துள்ள கணக்கற்ற உபகாரங்களை யும் பற்றி நினைத்துப் பார்க்கிறோம். அந்த உதவி களிற் தலை சிறந்தது திவ்விய நற்கருணை. நாம் நம் மனச் சாட்சியைப் பரிசோதிக்கையில், நம் தகுதியின்மை நினைவுக்கு வருகிறது; சர்வ நன்மைச் சாரூபியான இறைவனுக்கு முன் நம்மைத் தாழ்த்துகிறோம்.

நாம் செய்யும் மனஸ்தாப முயற்சியும், குருவின் கையால் பெறும் ஆசீர்வாதமும், நம் ஆத்துமத்தில் நிறைந்திருக்கும் நூலாம்படை முதலிய அசுத்தங்க ளான அற்பப் பாவங்களை அகற்றுகின்றன. பாவசங் கீர்த்தனம் என்னும் தேவதிரவிய அனுமானத்தால் கிடைக்கும் புது வரப்பிரசாதமானது ஆத்துமத் துக்கு திடனையும், அழகையும் பிரகாசத்தையும் தந்து, வரவிருக்கும் அரசருக்கு ஏற்ற இல்லிடத் தைத் தயாரிக்கிறது.

பாவசங்கீர்த்தனத்துக்கு நம்மை நாம் தயாரிக் கையில் கடவுள் நமக்குத் தந்துள்ள அரிய பெரிய கொடைகளைப் பற்றி சிந்திக்கிறோம். நித்திய வார்த் தையானவர் நமக்காக மாம்சமானது அவற்றில் ஒன்று; மாம்சமான வார்த்தை, அப்பத்துக்குள் தம்மை மறைத்து வைத்திருப்பது இன்னொன்று. நம் இருதயத்தினுள் நுழைய அனுமதி கேட்டு நிற்கும் இரட்சகர் பாரிசமாய் நாம் திரும்புகிறோம். அரசர் தம் வேலைக்காரனின் இல்லத்துக்குள் நுழைய அனுமதி கேட்கிறார். அந்த அரசரது வருகைக்கு வேலைக்காரன் எவ்வளவு சிறந்தவிதமாகத் தயார் செய்தாலும் தகும்.

இதையெல்லாம் ஒரு சிறு ஜெபத்தின் வழியாக நாம் தெரிவிக்கலாம்: “நேச இரட்சகரே, சற்பிரசா தத்தின் வழியாக என்னிடம் வர இருக்கும் உமக்கு நல்ல ஓர் இல்லிடம் தயாரிக்கும்படி நான் இந்த பாவ சங்கீர்த்தனத்தைச் செய்யப் போகிறேன். அற்பப் பாவத்தால் கறைபிடித்து, மன்னிக்கப்படாத பாவங் களால் அசுத்தமடைந்திருக்கும் ஆத்துமத்தை நான், உமக்கு இருப்பிடமாகத் தர விரும்பவில்லை. என்னிட மிருக்கும் அற்பப் பாவங்களையும், என் ஆத்துமத்தை அரோசிகப்படுத்தும் அனைத்தையும் என்னிடமி ருந்து அகற்றியருளும். நீர் மரியன்னையின் உதரத் தில் அவதரிக்கையில் அந்த அன்னை இஷ்டப் பிரசா தத்தினால் நிறைந்திருந்தாள்; உம்மை வரவேற்கும் படி பரிசுத்தவான்கள் தங்கள் ஆத்துமங்களை திறந்த போது அவர்களிடம் தேவ இஷ்டப்பிரசாதம் இருந் தது. நானும் அவர்களைப் போல் தேவ இஷ்டப்பிர சாதத்துடன் இருக்க ஆசிக்கிறேன். உமக்கு நல்ல உறைவிடமளிக்க நான் என்னென்ன செய்ய வேண் டுமோ அதையெல்லாம் செய்ய எனக்கு வரப்பிரசாத மும், பலமும், ஒத்துழைக்க மனதும் தந்தருள்வீ ராக''.

அரசர் அளிக்கும் விருந்தில் பங்கு பற்றும்படி அழைக்கப்படுவது பெரும் மகிமை. அழைக்கப்படு கிறவர்கள் அழகிய உடை தரித்துச் செல்வர். யேசு அரசர்களில் பெரிய அரசர்; அவர் அளிக்கும் விருந்து திவ்விய நற்கருணை. குஷ்டரோகிகளையும், இறந்தோ ரையும், அசுத்த உடை அணிந்த பிச்சைக்காரரை யும் அன்புடன் வரவழைத்த யேசு, அழகிய உடை களை விரும்பித் தேடுபவரல்ல; எனினும் பரலோக விருந்துக்குச் செல்கையில் அழைக்கப்படுகிறவர்கள் உள்ளமும், உடலும் ஒருங்கே சுத்தமாயிருத்தல் பொருந்தும்.

அவரை நம் உள்ளத்தில் வரவேற்க ஒரு தயாரிப் பாக நாம் உடைகளை அணிய வேண்டும். “என் கடவுளை வரவேற்பதற்காக இன்று நான் இந்த உடை களை அணிகிறேன். என் ஆத்துமம் தேவ இஷ்டப் பிரசாதத்துடனிருக்கிறது என நம்புகிறேன். நீர் கொடுத்துள்ள உடைகளால் என் உடலை நான் அடக்க ஒடுக்கத்துடன் மூடுகிறேன். நேச ஆண்டவரே, நீர் தரும் விருந்துக்கு ஏற்ற உடையுடன் நான் வருவேனாக'.

பூசைப்பலி தொடங்குமுன் கிடைக்கும் ஐந்து நிமிட நேரம் மிக விலையேறப்பெற்றது. காணப் போகும் திவ்விய பூசையையும் உட்கொள்ள இருக்கும் திவ்விய நற்கருணையையும் என்ன கருத்துகளுக்காக ஒப்புக்கொடுப்பது எனத் தீர்மானிக்கும் நேரம் அது. "என் சர்வேசுரா, நான் காணப்போகும் பலியைஇன்னின்ன கருத்துக்களுக்காக ஒப்புக்கொடுக் கிறேன். உயிரோடிருப்போருக்காக, மரித்தோருக் காக, மரண அவஸ்தையிலிருப்போருக்காக, திருச் சபைக்காக, உலகத்துக்காக, எனக்காக, என் தேவை களுக்காக.... இந்த சற்பிரசாத பலியை மகா பரிசுத்த தம திரித்துவத்தின் சமுகத்தில் வைக்கிறேன். சற் பிரசாத விருந்தில் நான் பங்கெடுக்கப் போகிறேன். என் இரட்சராகிய கிறிஸ்துநாதர் என்ன கருத்துக் களுக்காக பூசைப்பலியை ஏற்படுத்தினாரோ, அந்த கருத்துக்களுக்காக, என் பாவங்களின் மன்னிப்புக் காக, உமது மகத்துவத்தை வாழ்த்தி நேசிக்க, நீர் எனக்குக் கொடுத்துள்ள அரிய கொடைகளுக்கு நன்றியாக, உமது உதவியைக் கேட்க - இந்தப் பூசை யையும் திவ்விய நன்மையையும் ஒப்புக்கொடுக் கிறேன்".

பின், உன் இருதயத்தில் யேசு வந்ததும் அவரி டம் என்ன பேசப்போகிறாய், அவர் உன்னை சந்தித்த தற்குக் கைமாறாக அவருக்கு என்ன கொடுக்கப் போகிறாய், இது போன்றவற்றை இப்பொழுதே தீர் மானித்துக் கொள். அப்படியானால் குரு பூசையை ஆரம்பிக்கையில் அவருடன், உன் உள்ளத்தில் வர இருக்கும் உன்னத குருவுடனும் சேர்ந்து, நீயும் உன்னைப் பிதாவுக்கு கையளிக்க தயாராயிருப்பாய்.

திவ்விய நன்மை உட்கொள்தல் பூசைப் பலியின் முக்கிய பாகம். பலியில் நம்மைப் பங்கு பற்றச் செய்யும் விருந்து அது. கடவுளால் அங்கீகரிக்கப் பட்ட யூத வேத சடங்குகளின் போது, கடவுளை வணங்கச்சென்றவர்கள் பலி மாம்சத்தையும் அருந்து வார்கள். பாஸ் கு செம்மறிப்புருவையை ஒப்புக் கொடுத்து, பின் குடும்பத்தினருடன் அதை அருந்து வார்கள். சர்வாங்க தகனப் பலிப்பொருட்களைத் தவிர, மற்ற மிருகங்களை தேவாலயத்தில் ஒப்புக் கொடுத்த பின் குருக்களும் மக்களும் அவற்றை அருந்துவார்கள்.

பூசைப்பலியின் முக்கிய பாகங்கள், அப்பத்தை யும் இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக் கொடுத் தலும் பலிப்பொருட்களை வசீகரம் செய்தலும், தேவ பலிப்பொருள் தம்மைப் பலியாக்குதலும், பலி விருந்துமே.

திவ்விய பூசைப்பலியே திவ்விய நற்கருணை வாங்க நல்ல தயாரிப்பு. பூசை நேரத்தில் முதலாவது, பாவங் களுக்காக மிக துயரப்பட்டு, நம் தகுதியின்மையை வெளிப்படுத்துகிறோம். சம்மனசுக்களுடன் சேர்ந்து நம் ஆண்டவரின் மகிமையை உச்சாரணம் செய்கி றோம். சற்பிரசாதத்திலிருக்கும் தங்கள் அரசரையும் திவ்விய நற்கருணையையும், பரலோக அரசரின் மோட்சத்தையும், நேசத்துடன் நாடிய அர்ச்சிய சிஷ்டர்களை நாம் பிரார்த்தித்து, நாம் நிறைவேற்ற இருக்கும் உன்னத பலியின் போது அவர்கள் நம்முடன் இருக்கும்படி அவர்களை மன்றாடுகிறோம். அவரை நன்கு அறிந்த அப்போஸ்தலர்களும் , அவரை தீர்க்க தரிசனமாய் அறிந்த பழைய ஏற்பாட் டின் பரிசுத்தவான்களும் சொல்லும் வார்த்தைகளுக் குச் செவி கொடுக்கிறோம். கிறிஸ்துநாதருடன் நாம் நடந்து சென்று அவர் செய்த புதுமைகள், சொன்ன உவமைகள், பட்ட பாடுகள், அவர் போதித்த சுவிசே ஷத்தின் மகிமை இவற்றைப் பார்க்கிறோம். பின் அவரையும் அவர் ஏற்படுத்திய திருச்சபையையும் அதன் போதனைகளையும் விசுவசிப்பதாகச் சொல்கிறோம்.

பின் உயிர்வாழ அவசியமான அப்பத்தையும் இரசத்தையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறோம் இவ்விரண்டயும் நாம் கடவுளுக்குக் கொடுத்து, இவற்றுடன் நம்மையும் நம்மிலுள்ள யாவற்றையும் அவர் ஏற்றுக் கொண்டு, அப்பத்தை யும் இரசத்தையும் அவர் தம் நேச குமாரனுடைய சரீரமும் இரத்தமுமாக மாற்றித் தரும்படி பிரார்த் திக்கிறோம். குரு தம் விரல்களைக் கழுவுகையில் கடவுள் நம் ஆத்துமங்களை பாவத்தினின்று கழுவும் படி அவரை மன்றாடுகிறோம்.

சகல அர்ச்சியசிஷ்டர்களும் நம்முடன் சேர்ந்து கடவுளைப் பிரார்த்திக்கக் கேட்டு, சம்மனசுக்கள் நித் தியத்துக்கும் மோட்சத்தில் பாடும் பரிசுத்தர், பரி சுத்தர், பரிசுத்தர் என்னும் கீதத்தைச் சொல்கிறோம்.

பின் சகல விசுவாசிகள் மேலும், முக்கியமாக நம்மை நேசிப்பவர்கள் மேலும் கடவுளது இரக்கத் தைக் கேட்டு மன்றாடுகிறோம்.

இரட்சகரின் செய்கைகளை குருவானவர் செய்து, அவர் சொன்ன வார்த்தைகளையே குருவானவரும் சொல்கிறார். இதோ கிறிஸ்துநாதர் நம்முடன் இருக் கிறார். நேசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் தம் பலியை நிறை வேற்றி விட்டார்.

சற்றுமுன் அப்பமாயிருந்தது கிறிஸ்துநாதரது உடலாகிறது. இரசம் அவரது இரத்தமாகிறது. குருவானவருடன் சேர்ந்து பரிசுத்த தம திரித்துவத் துக்குக் காணிக்கையாக அவற்றை உயர்த்துகிறோம். அந்தக் காணிக்கையுடன் நம் மனதையும் அன்பை யும் அளிக்கிறோம். கடவுள் நமக்குக் கொடுத்துள்ள கணக்கிடமுடியாத கொடைகளுக்கு நன்றியாக அவ ருடைய தேவசுதனையே திருப்பிக் கொடுக்கிறோம்.

சுரங்கங்களில் ஆதிகாலத்து வேதசாட்சிகளின் கல்லறைகள் மீது பூசைப்பலி நடக்கையில் சொல்லப் பட்ட ஜெபங்களைச்சொல்லி, பின் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொல்கிறோம். இரக்கமுள்ள இரட்சகர் முன் தலைகுனிந்து, சர்வேசுரனுடைய செம்மறிப் புருவை நம்மேல் இரக்கமாயிருக்கப் பிரார்த்திக் கிறோம். இரட்சகரை வரவேற்றுபசரிக்க நாம் அருக ரல்ல, அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், நம் ஆத்துமங்கள் சுகமும் பலமும் பெறும் என செந்தூரி யனுடன் சேர்ந்து சொல்கிறோம்.

பாவசங்கீர்த்தன மந்திரத்தைச் சொல்லி நாம் பாவிகள் என ஒத்துக்கொண்டதும், குருவானவர் சர்வ வல்லப இறைவனிடம் நமக்காக மன்னிப்பை இறைஞ்சிக் கேட்கிறார். அதிசயத்திலும் அதிசயம், பூசையின் முதற்பாகத்தில் நாம் கடவுளுக்குக் கொடுத்ததை, அதாவது அப்பமும் இரசமுமாகத் தோன்றுவதை நமக்குத் திரும்பக் கொடுக்கிறார். ஆனால் கடவுள் கொடுப்பது மாம்சமான வார்த்தை யின் மாம்சமும் இரத்தமும். நாம் கொடுத்ததை கடவுள் தமக்குரிய தாராள குணத்துடன் அளவற்ற விதமாய்ப் பெருக்கிக் கொடுக்கிறார்.

சிலுவையில் உயிர்விட்ட யேசு, கல்லறையி னின்று இறக்கப்பட்டு, மாதாவின் மடியிற் கிடத்தப் பட்ட யேசு, அரிமத்தியா சூசை, நிக்கொதேமுஸ், புண்ணிய ஸ்திரீகள் ஆகியோரால் கல்லறையில் வைக்கப்பட்ட யேசு, உயிருடன் நம் உள்ளத்தில் இருக்கிறார். வேத விரோதிகளின் சூழ்ச்சிகளை எதிர்த் துப் போராடுவதற்கான பலத்தை, திவ்விய பூசைப் பலியினால் ஆதிக் கிறிஸ்தவர்களுக்கும், தற்போது இரும்புத் திரைக்குள் அகப்பட்டு தத்தளிப்போருக் கும் கொடுக்கும் யேசு நம் உள்ளத்தில் இருக்கிறார். அன்றாட துன்ப துயரங்களைச் சகிப்பதற்கான திடத்தை ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கொடுத்துவரும் பூசைப்பலியை, மானிட சந்ததியின் மீட்புக்காகவும், உலகத்தின் சந்தோஷத் துக்காகவும் உலக முடிவுவரை திருச்சபை ஒப்புக் கொடுத்துவரும் பலியை, உன்னத குருவாகிய கிறிஸ்து நாதருடன் ஒன்றித்து நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

பழைய ஏற்பாட்டின் பாஸ்காவில் யூதர்கள் செம் மறிப்புருவையை பலியிட்டார்கள். புதிய ஏற்பாட்டின் விருந்தில் பலியிடப்படுவது இறைவனுடைய செம் மறிப்புருவையே. புளியாத அப்பம் மனுஷாவதாரம் எடுத்த வார்த்தையின் மாம்சமாகிறது. யூதர்கள் அருந்திய இரசம் இப்பொழுது உலகத்தார் அனை வருக்கும் இரட்சணியத்தின் பாத்திரமாகிறது. சில கோதுமை அப்பங்களைக்கொண்டு அநேகாயிரம் பேர்களுக்கு உணவளித்தவர் இப்பொழுது அப்பத்தை தம் மாம்சமாக்குகிறார். விசுவாசிகளின் உலகத்துக்கு அது உணவாகிறது.

அரச குமாரனது கலியாண விருந்துக்குச் செல் கிறவர்கள் தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் கலியாண உடையுடன் செல்லவேண்டும் என கிறிஸ்துநாதர் கூறியிருக்கிறார். தொடங்க இருக்கும் விருந்தில் நாம் பங்கு பற்ற நம் ஆத்துமங்கள் சுத்த மான உடையுடன் இருக்கவேண்டும்.

சற்பிரசாத விருந்தில் விருந்தளிப்பவர் கிறிஸ்து நாதர், விருந்துண்ணச் செல்கிறவன் நான். சீக்கிரம் அவர் என் விருந்தாளியாவார், நான் அவரை ஏற்று உபசரிக்க வேண்டும்.

இந்த விருந்தில் சம்மனசுக்களின் உணவால் நான் ஊட்டப்படுவேன், கன்னியரை வளர்க்கும் இரசத்தால் என் தாகம் தணிக்கப்படும். திவ்விய நற்கருணை உட்கொள்ள நான் முழந்தாளிடுகையில் இந்த நினைவுகள் என்னிடம் இருக்க வேண்டும்.

திவ்விய சற்பிரசாதத்தைக் கொடுப்பதாக கிறிஸ்துநாதர் வாக்களித்தபோது, மக்கள் பலர் அவரைவிட்டுப் பிரிந்தார்கள். கடவுள் இவ்வளவு தாராள குணமுள்ளவர் என அவர்கள் நினைக்கவில்லை, தங்களைப்போல் அவரும் சுயநலப்பிரியர் எனக் கருதி னார்கள்,

இன்றும் கிறிஸ்துநாதர், “இது என் சரீரம்.... இது என் இரத்தம்" என்கிறார். “முடியாது, இதை நான் நம்பமாட்டேன்'' என்கின்றனர் அநேகர். “உன் ஆத்துமத்தில் நான் தங்கி இளைப்பாற வேண்டும், என்னை ஏற்றுக்கொள்'' என்கிறார் யேசு. பெத்லெகேம் நகர் வாசிகளைப்போல அநேகர் “உனக்கு இடம் இல்லை” என்கின்றனர். யா மனிதர் அவரைக் கடவுளாக இரட்சகராக ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? அவர் அவர்களது விருப்பங் களின் விரோதி, அகங்காரம் ஆசாபாசம் இவற்றின் சத்துரு. பகை வெறுப்பை விட்டுவிட்டு சிநேகியுங் கள் என்கிறார் அவர்; முடியாது என அவர்கள் சாதிக் கிறார்கள். அவரை வெறுத்துத் துரத்துகின்றனர். அவருக்கு எங்குமே இடமில்லை.

நானோ கிரா தியருகில் முழந்தாளிட்டு அவரை என் கடவுளாக அங்கீகரித்து, என் இருதயத்திலும் நினைவிலும் முதல் இடத்தை அவருக்குத் தரும்படி அவரை உட்கொள்ளப் போகிறேன். எல்லோராலும் புறக்கணிக்கப்படும் தேவனுக்கு நான் நல்வரவு கூறுகிறேன். அவர் கதவைத் தட்டுகிறார், வெகு சிலரே தங்கள் இதயங்களைத் திறந்து அவரை உள்ளே வரவிடுகின்றனர். அரச மாளிகைகளிலும், அரசாங்க ஸ்தாபனங்களிலும், நூல்நிலையங்களிலும், நாடக மேடைகளிலும், ஆஸ்பத்திரிகளிலும், தொழிலாள ரின் உலகிலும் அவருக்கு இடம் கொடுக்கப்படுவ தில்லை. தலைசாய்க்க அவருக்கு இடமில்லை. நானோ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உலக இரட்கக ருக்கு என் ஆத்துமத்தைத் திறந்துவிடுகிறேன். அத னாலேயே திவ்விய நற்கருணை உட்கொள்ளப் போகி றேன்.

ஜெருசலேமுக்கருகில் இருந்த ஓர் இல்லம் திவ்விய நன்மை வாங்குவோருக்கு மேல் வரிச்சட்டம். தம் நேச ஆட்டுக்குட்டிகளைத் தேடி, நாடு நகரமெல்லாம் சுற்றிய யேசுவுக்கு விரோதமாக எங்கும் சூழ்ச்சிகள் நடந்தன. பாவம் ஆட்சி புரிந்தது, உலகத்தின் வெளிச்சமானவரை மறைக்க முயன்றது. அவர் ரோமானர்களை முறியடிப்பார் என்று எதிர் பார்த் தார்கள். அன்பு மொழிகளைச் சட்டை பண்ணவில்லை. வாழ்வு தரும் அப்பத்தைப் பற்றி அவர் பேசிய போதி லும், அப்பத்தையும் மீன்களையும் இனி எப்போ பலுகச் செய்வார் என நினைத்துக் கொண்டிருந் தார்கள். அவரது புதுமைகளை முணுமுணுப்புடன் ஏற்று, புதுமை செய்த அவரை உடனே மறந்தார் கள்.

அவருடைய சீடர்கள் முதலாய் தங்களுக்குள் வாக்குவாதம் செய்தனர்; அவரை ஏற்றுக்கொள்ளாத நகரங்களை அவர் நெருப்பால் எரிக்காதது பற்றி விச னித்தனர். அவருடைய நேச மக்களான ஏழைகளைத் திட்டினர். நம்பிக்கையுடன் அவரைத் தொட்ட பாவி யான பெண்ணைக் கடிந்து கொண்டார்கள். தங்க சிம்மாசனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் அவர் பிறகே சென்றார்கள். இவை யாவும் இரட்சகருக்கு விசனத்தைக் கொடுத்தன. மனிதரது பாவச் சுமையால் வளைந்து, மானிடரின் நேசத்தைப் பசி தாகத்துடன் தேடி அலுத்த யேசு வுக்கு எங்கும் எதிர்ப்பு. ஆதலின் அவர் ஆசையுடன் பெத்தானியாவை நோக்கி நடக்கிறார். அங்குள்ள நண்பர்கள் அவரை ஆசையுடன் வரவேற்பார்கள் என அவர் அறிவார். அவரது நம்பிக்கை வீணாக வில்லை .

லாசர் வீட்டின் கதவுகளை அகலத் திறந்து போத கரை வரவேற்றார். மரியம்மாள் அவரது பாதத்தடி யில் அமர்ந்து அவரது இனிய மொழிகளுக்குச் செவி கொடுத்தாள். மார்த்தா அவருக்கான சகல வசதி களையும் கவனித்தாள்.

நாமும் திவ்விய நற்கருணை உட்கொள்கையில் இவ்விதம் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் நம் முன் நின்று, "நான் உள்ளே நுழையலாமா?'' என்று கேட்கும் யேசுவுக்கு நம் ஆத்துமங்களைத் திறந்து விடலாம். நம் தெய்வீக விருந்தாளியின் பாதத்தரு கில் நேசத்துடன் அமர்ந்து அவரை ஆராதித்து, நம் நன்மைக்காகவும் மானிட சந்ததியின் நலனுக்காக வும் அவர் சொல்ல உத்தேசித்திருக்கிறவற்றிற்குச் செவி கொடுத்து, அவரது விருப்பங்கள் நிறை வேறும்படி நாம் உதவி புரியப் போவதாக வாக்களிக் கலாம். நம் இதய வீட்டில் அவர் வசதிகளுடன் அமர்ந்திருக்கச் செய்யலாம். அவர் வருமுன்னரே நம் வீட்டைத் தயாரித்து, வந்த பின் அவரை உப சரித்து, அவரது இனிய மொழிகளுக்குச் செவி கொடுப்போமாக.

நான் சத்திரக்காரன், மாமரியையும் அவள் தன் னுடன் கொண்டுவரும் யேசுவையும் வரவேற்கிறேன்.

துரத்தப்படும் யேசுவுக்கு எஜிப்தியர்களைப் போல் உறைவிடம் தருகிறேன்.

எஜிப்திலிருந்து திரும்பும் திருக்குடும்பம் தங்க நான் இடம் கொடுக்கிறேன். வெறும் தரையில் திறந்த வெளியில் யேசு படுத்திருக்க அவசியமில்லை.

பகிரங்க வாழ்க்கையின் போது வீடின்றி நிற்கும் யேசுவைச் சந்தித்து என் வீட்டில் அவரை ஏற்றுக் கொன்கிறேன்.

நம்முடையவும் அவருடையவும் எதிரிகளால் துரத்தப்பட்டு நம்மிடம் பாதுகாப்பிடம் கேட்கும் யேசுவை மகிழ்ச்சியுடன் என் இல்லத்துக்குள் இட்டுச் செல்கிறேன்.

நான் காணும் திவ்விய பூசையை உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுத்த பின், நன்மை உட்கொண்டபின் நான் ஜெபிக்க விரும்பும் ஆத்து மங்களுக்காக அவரிடம் பரிந்து பேசுகிறேன்.

பாவங்களுக்காகத் துயரத்துடன் திவ்விய பூசை யைக் கண்டு, பாவத்தை எவ்விதம் விலக்குவது என் பது பற்றி, நன்மை வாங்கிய பின் கிறிஸ்துநாதருடன் கலந்து பேசுவேன்.

உலகம் மனந்திரும்புவதற்காக பூசையை ஒப்புக் கொடுத்து, குறிப்பிட்ட சிலர், சில குடும்பங்கள், சில ஊர்கள், நாடுகள் இவற்றை மனந்திருப்பும்படி என் இதயத்தில் வரும் யேசுவை மன்றாடு வேன்.

கடவுள் எனக்குச் செய்துள்ள உபகாரங்களுக்கு நன்றியாக பூசையை ஒப்புக் கொடுத்து நன்மை வாங் கிய பின் அவற்றை ஒவ்வொன்றாய் யேசுவிடம் எடுத் துக் கூறி நன்றி செலுத்துவேன்.

என் வாழ்வுக்கு அவசியமான வரப்பிரசாதங் களையும் திடனையும் திவ்விய நற்கருணையிலிருந்து பெற முயற்சிப்பேன்.

கடைசி இராஉணவை அருந்த கிறிஸ்துநாதரு டன் அமர்ந்திருந்த அப்போஸ்தலர்களுடனும், ரோமைச் சுரங்கங்களில் யேசுவை உட்கொண்ட ஆதிக் கிறிஸ்தவர்களுடனும், அருளப்பர் கையினால் மிகுந்த பக்தியுடன் திவ்விய நற்கருணை உட்கொண்ட தேவ தாயுடனும், தேவ நற்கருணை மேல் விசேஷ பக்தி கொண்டிருந்த என்ாதுகாவலரான அர்ச்சிய சிஷ்ட ருடனும் நானும் ஒன்றிப்பேன்.

கடைசித் தடவையாக நான் நன்மை வாங்குவ தாக நினைத்து பக்தி பற்றுதலுடன் அதை உட் கொள்வேன்.