இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கன்னிகை பாடிய தாலாட்டு.

28 நவம்பர்  1944.

இன்று காலையில் நான் மிக அமைதியாகக் கண்விழித்தேன்.  நான் இதுவரை கேட்டிருக்கிற எல்லாக் குரல்களிலும் தெளிவான குரலை நான் கேட்டபோது இன்னும் அரைத் தூக்கத்தில்தான் இருந்தேன். அந்தக் குரல் ஒரு தாலாட்டைப் பாடிக் கொண்டிருந்தது - மெதுவாக, மிக இனிமையாக.  அது எவ்வளவு மெதுவாகவும், புராதனமாகவும் இருந்ததென்றால் அது ஒரு கிறிஸ்மஸ் கோவில் பாடல் போலிருந்தது.  அந்த இராகத்தையும் குரலையும் மேலும் மேலும் அனுபவித்தபடியே முழு விழிப்படைந்தேன்.   அப்போதுதான் என்ன நடக்கிறது என்பதை முழுதும் கண்டுபிடித்தேன்.  “அருள் நிறைந்த மரியாயே வாழ்க!” என்று  நான் கூறினேன்.  ஏனென்றால் மாதா தான் பாடிக் கொண்டிருந்தார்கள்.  “நானும் உன்னை வாழ்த்துகிறேன்.  வா!  வந்து மகிழ்ச்சியோடிரு” என்று கூறியபின் அவர்கள் குரலை எழுப்பிப் பாடினார்கள்.

நான் மாதாவைப் பார்த்தேன்... பெத்லகேமில் அவர்கள் இருந்த அறையில், சேசுவை உறங்க வைப்பதில் கவனமாயிருந்தார்கள்.  அந்த அறையில் மாதாவின் நெசவுத்தறியும் தையல் வேலைப் பொருள்களும் இருந்தன.  சேசுவுக்கு உணவூட்டவும் துணி மாற்றவும் வேலையை நிறுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன்.  சேசுவுக்கு வயது ஆறு மாதம் அல்லது கூடினால் எட்டு மாதங்கள்தான் இருக்கும்.  பாலனைத் தூங்க வைத்து விட்டு தன் வேலையைத் தொடரலாம் என்று மாதா நினைத்திருக்கக் கூடும்.

அது மாலை வேளை.  சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது.  தெளிந்த வானத்தில் பல சிறு தங்க நிற மேகங்கள் காணப்பட்டன.  

சில ஆட்டு மந்தைகள் பூக்கள் நிரம்பிய மேட்டு நிலத்தில் கடைசிப் புல்லை மேய்ந்து கொண்டும் தலையை நிமிர்த்திக் கத்திக் கொண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தன.  சேசு பாலன் உறங்க ஆரம்பித்தார்.  சில சிறு அசெளகரியங்கள் அவருக்கு இருப்பதாகத் தோன்றியது - பல் முளைக்கிற வலி அல்லது வேறு குழந்தைப் பருவ சிறு வேதனைகளாயிருக்கலாம்.  தெளிந்த அதிகாலையின்  மங்கலான வெளிச்சத்தில் அத்தாலாட்டுப் பாடலை ஒரு காகிதத்தில் நான் என்னால் எழுத முடிந்த அளவிற்கு எழுதினேன்.  அது வருமாறு:

1.
சின்னப் பொன்னிற மேகங்கள்
கடவுளின் மந்தைகளாம்.
இன்னொரு மந்தை காக்கிறது
மென் மலர் சமவெளியில்.
எனதே எல்லா மந்தைகளும்
என்றிருந்தாலும் என்ன?
என் சிறு ஆட்டுக்குட்டி!
நீயன்றோ எனக்கருமை!
அழாதே கண்ணே கண்ணுறங்கு -
இனிமேல் நீயழக் கூடாது!


2.
மின்னும் தாரகைக் கூட்டங்கள்
விண்ணில் கண்சிமிட்டும்
உந்தன் இனிய திருவிழியின்
கண்ணீர் நிற்கட்டும்
உன்னிரு கண்மணி நீலங்கள்
எனக்கவை விண்மீன்கள்
நீயழுதால் நானும் அழுவேன்
அழாதே கண்மணியே.
அழாதே கண்ணே கண்ணுறங்கு -
இனிமேல் நீயழக் கூடாது!


3.
உந்தன் இன்முகம் கண்டதனால்
மோட்ச சம்மனசோர்
ஒன்றாய்க் கூடி உனைச் சுற்றி
பூமலர் ஆரமென 
நிற்பினும் உன்னைத் தாலாட்ட
என்னைத் தேடுகிறாய்!
என்னரசே என் பாலகனே!
இது உன் தாயன்றோ!
அழாதே கண்ணே கண்ணுறங்கு -
இனிமேல் நீயழக் கூடாது!


4.
செவ்வானம் இனி வந்துவிடும்
சீக்கிரம் விடிந்து விடும்
என் மகன் நீ அழாதிருக்க
யானும் உறங்கவில்லை.
விழித்ததும் “அம்மா” என்பாய் நீ.
“என்ன!” என்பேன் நான்
எடுத்து முத்தம் தருவேனே
எந்தன் இருதயத்தால்.
அழாதே கண்ணே கண்ணுறங்கு -
இனிமேல் நீயழக் கூடாது!


5.
மோட்ச கனவு கண்டாயோ?
மாதா நான் வரவோ?
நீதான் என் மடி வரவேண்டும்
இனிதே உறங்க வைப்பேன்.
என் கரம் உன் தொட்டில், எந்தன்
நெஞ்சே தலையணையாம்
அஞ்சாதே என் கண்மணியே
அன்னை அருகிலுள்ளேன்.
அழாதே கண்ணே கண்ணுறங்கு -
இனிமேல் நீயழக் கூடாது!


6.
எப்போதும் உன் அருகிருப்பேன்
என்னிருதய உயிரே!
எந்தன் நெஞ்சில் மலர்போலே
இதமாய் உறங்குகிறாய்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிதாவைப் பார்த்தாயோ?
அதனால் கண்ணீர் வற்றியதோ
அருமைக் குழந்தாய் நீ
அழவில்லை, இனி அழ வேண்டாம்
இனிமேல் நீயழக் கூடாது!

இந்தக் காட்சியின் லாவண்யத்தையும் மனோகரத்தையும் வர்ணிக்க முடியாது.  இது ஒரு தாய் பாடும் தாலாட்டுக் காட்சிதான்.  ஆயினும் அதைப் பாடுவது அந்தத் தாய் என்பதாலும் கேட்பது அந்தப் பாலன் என்பதாலும் அது தனிச் சிறந்ததாகிறது.  ஆதலால் இக்காட்சியிலே எவ்வளவு லாவகம், எத்தனை அன்பு, எத்தகைய தூய்மை!  இச்சிறிய, மகா பெரிய, இனிய காட்சியில் எப்படிப்பட்ட மோட்சம் இருக்கிறது!  அதன் நினைவு என்னை மிக்க மகிழ்ச்சிப்படுத்துகிறது. நான் இடைறொமல் பாடும் அந்த இசை அதை உறுதிப்படுத்துகிறது.  நீங்களும் அதைக் கேட்கலாம்.  ஆனால் மரியாயின் மிகவும் புனித வெள்ளிக் குரல், பரிசுத்த கன்னிகையின் கன்னிக் குரல் எனக்கு இல்லையே!... நான் பாடினால் உடைந்த ஆர்மோனியம் போலிருக்கும்.  பரவாயில்லை.  முடிந்ததைச் செய்கிறேன்.  அதை கிறீஸ்மஸ் சமயத்தில் பாடினால் எப்பேர்ப்பட்ட அழகிய குடில் பாடலாயிருக்கும்!

மரியா முதலில் அம்மரத் தொட்டிலை மிக மெதுவாக அசைத்தார்கள்.  சேசு அமைதியடையவில்லையென்று  கண்டபோது அவரைத் தன் கரங்களில் எடுத்து தொட்டிலருகில் திறந்த ஜன்னல் பக்கமாக அமர்ந்து, தாலாட்டின் தாளத்திற்கேற்ப மெல்ல அசைத்தபடி இரண்டு தடவை பாடினார்கள்.  அதன்பின் சேசு பாலன் கண்ணயர்கிறார்.  தாயின் மார்பில்  சாய்ந்து, ஒரு கை தன் கன்னத்திலும் மறு கை தாய் மடியிலும் படிய மாதாவின் முக்காடு அவரை மறைக்க, அப்படியே உறங்குகிறார்.

பின் மாதா வெகு கவனமாய் எழுந்து அவரை தொட்டிலில் கிடத்தி சிறு சணல் துகில்களால் மூடி, பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாகவும் காற்று மோதாதபடியும் ஒரு திரையால் தொட்டிலை மூடி, அப்படியே உறங்கும் தன் பொக்கிஷத்தைத் தியானித்தபடியே நிற்கிறார்கள்.  மாதாவின் ஒரு கரம் தொட்டிலில் உள்ளது.  தேவைப்பட்ட உடன் ஆட்டுவதற்கு.  மறுகரம் நெஞ்சில் பதிந்துள்ளது.  மெல்ல அரும்புகிறது ஒரு புன்னகை.  வெளியில் படரும் இருட்டும் அமைதியும் அந்தச் சிறு கன்னி இல்லத்திற்குள்ளும் பரவுகின்றன.

என்னே சமாதானம்!  என்ன அழகு!  நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இது அப்படியயாரு பெரிய காட்சியல்ல.  ஒருவேளை இதில் எதுவும் விசேஷமாக வெளிப்படுத்தப்படாததால், மற்றக் காட்சிகளின் திரளில் இது பயனற்ற ஒன்றாகவே கருதப்படலாம்.  எனக்குத் தெரிகிறது. ஆனால் இது எனக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதம்.  காரணம், இதனால் என் உள்ளம் மாதாவின் கரங்களால் மறுபடியும் சிருஷ்டிக்கப்பட்டது போல் அதை தெளிவுள்ளதாகவும் தூயதாகவும் அன்புடையதாகவும் ஆக்குகிறது.  இந்தக் கருத்தில் நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன்.  நாம் “சிறு குழந்தைகள்” தான்.  அதுவே நல்லது.  சேசு நம்மை விரும்புகிறார்.  கற்றறிந்து பின்ன பேதங்களோடிருப்பவர்கள் தாங்கள் விரும்புகிறபடி எண்ணிக் கொள்ளட்டும்.  நாம் “சிறுபிள்ளைத்தனமாக” இருப்பதாகக் கூறட்டும்.  நமக்கது ஒன்றுமில்லை. இல்லைதானே?