இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா கூறுகிறார்கள்

8 மார்ச் 1944.

என் மகிழ்ச்சியிலே நான் கீழ்ப்படிந்தேன்.  ஏனென்றால் கடவுள் என்னை அழைத்த அலுவலை நான் கண்டுபிடித்தபோது நான் மகிழ்ச்சியால் நிரம்பினேன்.    லீலி மொட்டு விரிவதுபோல் என் இருதயம் திறந்து ஆண்டவரின் விதைக்குரிய நிலமாக ஆகவிருந்த இரத்தத்தைக் கொடுத்தது. ஒரு தாயாயிருப்பதின் மகிழ்ச்சி!

என் குழந்தைப் பருவ முதலே நான் கடவுளுக்கு என்னை அர்ப்பணித்திருந்தேன்.  ஏனென்றால்,உலகத்தின் தீமைக்குக் காரணம் என்னவென்று உந்நதரின் ஒளி எனக்குக் காண்பித்திருந்தது.  என்னிடமிருந்து, என் சக்திக்கு முடிந்த வரையிலும் சாத்தானின் ஒரு சுவடு முதலாய் என்னிடம் இல்லாதிருக்கும்படி அகற்றிவிட விரும்பினேன்.

நான் மாசில்லாமல் இருந்ததை நான் அறியவில்லை.  அப்படி இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.  அப்படிப்பட்ட எண்ணமே என்னிடம் தகாத துணிவும் அகங்காரமுமாகியிருக்கும்.  காரணம், நான் மானிடப் பெற்றோரிடமிருந்து பிறந்ததினால், நான் தெரிந்து கொள்ளப்பட்டவள், மாசற்றவள் என்று எண்ணுவது சரியாகாது.  ஏவாள் வரப்பிரசாதத்தின் சிருஷ்டியாயிருந்தும், தாழ்ந்த சிருஷ்டிகளின் மட்டத்திற்கு தன்னைத் தாழ்த்திய கெடுதியினால், பரம பிதா அடைந்த வேதனையை தேவ ஆவியானவர் எனக்கு அறிவித்திருந்தார்.  நான், மனித எண்ணங்களாலும் விருப்பங்களாலும் தொடர்புகளாலும் கறைப்படாமல் இருந்து, அதனால் என் சரீரத்தில் சம்மனசுக்களுக்குரிய பரிசுத்ததனத்தை ஏற்படுத்துவதால் அவருடைய அவ்வேதனையை ஆற்ற வேண்டும் என்று எண்ணினேன்.  என் இருதயத் துடிப்புகள் அவர் ஒருவருக்காகவே;  என்னுடைய முழுமையும் அவருக்கே என்று நான் இருந்தேன்.

என்னிடத்தில் மாம்ச ஆசை இல்லை.  ஆனால் தாயாக இல்லாதிருப்பதின் பரித்தியாகம் இருந்தது.  சிருஷ்டிகரான தந்தை, ஏவாளுக்கு தாய்மை என்னும் வரம் அளித்திருந்தார்.  அந்தத் தாய்மையில், இப்பொழுது அதை இழிவாக்குகிறது எதுவும் இல்லாதிருந்தது.  அது மாம்ச உணர்வின் சுமை இல்லாத இனிமையான பரிசுத்தமான தாய்மை.  அதை நான் அனுபவத்தில் கண்டேன்.  ஓ! அத்தகைய செல்வத்தை ஏவாள் விட்டதினால் அவள் எவ்வளவு இழந்து போனாள்!  அது சாகாமையை விட அதிகம்.  நான் இதை மிகைப்படுத்துவதாக எண்ணாதே.  என் சேசுவும் அவருடைய தாயாகிய நானும் மரணத்தின் தளர்வை அனுபவித்திருக்கிறோம்.  களைப்படைந்து உறக்கத்தில் ஆழ்ந்து போகிற மனிதனின் இனிய தளர்வை நானும், மரணத் தீர்ப்புப் பெற்று மரிக்கிற மனிதனின் கூரிய தளர்வை சேசுவும் அனுபவித்தோம்.  ஆகவே நாங்களும் மரணத்தை அனுபவித்திருக்கிறோம்.  ஆனால் புதிய ஏவாளாகிய நான் மாத்திரமே தாய்மையை எந்தவிதமான அவசங்கையும் இல்லாமல் அனுபவத்தில் கண்டேன்.  சரீர வேதனை இல்லாமல் ஸ்திரீகள் தாய்மை அடைய வேண்டுமென்கிற நியதி எவ்வளவு இனிமையானது என்று உலகிற்கு நான் கூறும்படியாக அப்படிக் கண்டேன்.  அவ்வகையான பரிசுத்த தாய்மையை விரும்புவது சாத்தியமே.  முழுவதும் கடவுளுக்கென இருந்த கன்னிகை யிடத்தில் அது இருந்தது.  ஏனென்றால் அந்தத் தாய்மையே பெண்ணின் மகிமையாயிருக்கிறது.

இஸ்ராயேல் மக்கள் எவ்வளவு உயர்வாக ஒரு தாயை மதித்தார்கள் என நீ கருதிப் பார்ப்பாயானால், நான் கன்னிமைக்கு என்னை அர்ப்பணித்த போது செய்த தியாகத்தை நீ இன்னும் கூடுதல் கண்டுபிடிப்பாய்.  நித்தியரான நல்ல தந்தை, தனது அடிமையாகிய நான் அவருடைய பத்திராசனத்தின் ஓர் மலராக இருக்கும்படி நான் உடுத்தியிருந்த பரிசுத்ததனத்தை அகற்றாமலே இந்த வரத்தை எனக்குத் தந்தார்.  நானும் ஒரு மனிதனுக்குத் தாய், கடவுளுக்குத் தாய் என்னும் இரட்டை மகிழ்ச்சியால் களிப்புற்றேன்.

மோட்சத்திற்கும், பூமிக்கும் நடுவே மறுபடியும் சமாதானம் ஏற்பட வழியாயிருந்த ஸ்திரீயாக இருப்பதின் ஆனந்தம்:

ஓ!  இந்த சமாதானத்தை கடவுளுக்காகவும், மனிதருக்காகவும் ஆசித்தது எப்படிப்பட்ட ஆனந்தம்!  அந்த சமாதானம், எல்லாம் வல்லவரின் அடியாளாகிய என் வழியாக உலகத்திற்கு வருகிறது என்று அறிந்தது எப்படிப்பட்ட மகிழ்ச்சி! “மனிதர்களே!  இனிமேல் அழுது கூப்பிட வேண்டாம்.  உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் இரகசியத்தை என்னில் நான் கொண்டிருக்கிறேன்.  அது என்ன என்பதை நான் சொல்லக் கூடாதிருக்கிறேன்.  ஏனெனில் அது என்னில், என் இருதயத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறது - தேவகுமாரன் என் கன்னி சுத்தங் கெடாத உதரத்தில் அடைபட்டிருப்பதுபோல!  ஆனால் இதோ ஏற்கெனவே அதை உங்களுக்குக் கொண்டு வருகிறேன்.  அவரை நீங்கள் காணும் நேரமும் அவருடைய புனித நாமத்தைக் கேட்கும் தருணமும் சமீபமாய், மேலும் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்வது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி!

கடவுளை மகிழ்ச்சிப்படுத்தியதால் ஏற்படும் ஆனந்தம்:  விசுவசிக்கிறவன் தன் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதனால் ஏற்படும் சந்தோஷம்:

ஆ!  ஏவாளின் கீழ்ப்படியாமையினாலும், ஆங்காரத்தினாலும் விசுவசியாமையினாலும் கடவுளின் இருதயத்தில் ஏற்பட்ட கசப்பை நீக்கும் மகிழ்ச்சி எத்தகையது!

முதல் பெற்றோர் என்ன கறைப்பட்டார்கள் என்பதை என் சேசு உனக்கு விளக்கினார்.  அவர்கள் கீழே இறங்கிய அதே கட்டங்களில் நான் மேலேறிச் சென்று அந்தப் பாவத்தை மீட்டேன்.

கீழ்ப்படியாமையே வீழ்ச்சியின் ஆரம்பமாயிற்று:  “அந்த மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம், தொடவும் வேண்டாம்” என்று தேவன் கூறினார்.  மனிதனும், மனுஷியும் சிருஷ்டிப்பின் அரசர்கள் என்ற முறையில் அந்த மரத்தைத் தவிர வேறு எல்லாவற்றையும் தொடவும், புசிக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அந்த விலக்கத்தை மதிக்கவில்லை.  அதுவும் எதற்கென்றால் அவர்கள் சம்மனசுக்களுக்கு மட்டுமே தாழ்ந்தவர்களாயிருக்க கடவுள் விரும்பியதாலேயே.

அந்த மரம்: அவர்களுடைய கீழ்ப்படிதலைப் பரிசோதிக்கும் கருவி.  கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்பதன் தாற்பரியம் என்ன?  அது எல்லா நன்மைகளையும் உள்ளடக்கியது.  ஏனென்றால் நல்லதைத் தவிர வேறு எதையும் கடவுள் கட்டளையிடுவதில்லை.  கீழ்ப்படியாமை என்பதென்ன?  அது தீமை.  ஏனென்றால் சாத்தான் செயல்படக்கூடிய ஒரு எதிர்க்கும் மனநிலையை அது ஏற்படுத்துகிறது.

ஏவாள் மரத்தை நோக்கிச் செல்கிறாள்.  அதை அவள் தவிர்த்திருந்தால், அது அவளுக்கு நலமாயிருந்திருக்கும்.  அதை அணுகினால் அவளை அது நாசமாக்கிவிடும்.  அம்மரத்தில் அப்படி என்ன விசேடம் என்று பார்க்கவேணுமென்ற சிறுபிள்ளைத்தனமான வினோதப் பிரியத்தால் அவள் அங்கே செல்கிறாள்.  அவள் வலிமையும் தூய்மையும் உடையவளாய் ஏதேனின் அரசியாயிருந்து, எல்லாம் அவளுக்குக் கீழ்ப்பட்டிருந்து அவளுக்கு எதுவும் தீங்கு செய்யக் கூடாதிருந்ததால் அவள் கடவுளின் கட்டளை உபயோகமற்றது என்று கருதக் கூடிய தகாத தெம்பு அவளுக்கு ஏற்பட்டது.  அவளுடைய தகாத் துணிவே அவளுடைய அழிவாகி விட்டது.  ஆகாத துணிவு ஆங்காரத்தின் புளிக்காரம்.

மரத்திலே அவள் ஏய்ப்போனைக் காண்கிறாள்.  அவளுடைய அனுபவமின்மைக்கு, அவளுடைய அழகிய கன்னிமையான அனுபவமின்மைக்கு, அவளுடைய பாதுகாப்பற்ற அனுபவமின்மைக்கு தன் பொய்ப் பாடலை அவன் பாடுகிறான்: “இதிலே தீமை உள்ளதென நினைக்கிறாயா?  இல்லை!  இதில் தீமை கிடையாது.  கடவுள் உங்களைத் தம் வல்லமையின் கீழ் அடிமைகளாய் வைத்துக் கொள்ள வேண்டுமென்றே அப்படிக் கூறினார்.  நீங்கள் அரசனும் அரசியும் என்று எண்ணுகிறீர்களோ?  காட்டு மிருகங்களுக்குள்ள சுதந்திரம் கூட உங்களுக்கு இல்லை.  மிருகங்கள் ஒன்றையயான்று உண்மையான அன்போடு நேசிக்க முடிகிறது.  உங்களால் அது முடியாது.  கடவுளைப் போல் சிருஷ்டிகராயிருக்கும் வரம் அவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.  மிருகங்கள் குட்டிகளை ஈனுகின்றன; தாங்கள் விரும்பும் அளவிற்கு தங்கள் குடும்பம் பெருகுவதைக் காண்கின்றன.  உங்களுக்கு அது இல்லை.  இந்த மகிழ்ச்சி உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.  இப்படி நீங்கள் வாழ வேண்டுமென்றால் உங்களை மனிதனும் மனுஷியுமாய்ப் படைப்பானேன்?  கடவுள்களாயிருங்கள்!  ஒரு மாம்சத்தில் இருவராயிருந்து அது மூன்றாவதொன்றைப் படைக்க, மற்ற அநேகரையும் படைக்கும் ஆனந்தம் உங்களுக்குத் தெரியாது.  சந்ததியின் மகிழ்ச்சியையும், உங்கள் பிள்ளைகள் தங்கள் குடும்பங்களுக்காக தங்கள் தந்தையையும், தாயையும் விட்டு, புதுக் குடும்பங்களை அமைத்துக் கொள்வதைக் காணும் மகிழ்ச்சியையும் கடவுள் உங்களுக்கு வாக்களித்திருப்பதை நம்பாதீர்கள்.  அவர் உங்களுக்கு அளித்திருப்பது ஒரு போலியான வாழ்க்கை.  உண்மையான வாழ்க்கை என்பது வாழ்க்கையின் விதிகளை அறிந்திருப்பதாகும்.  அப்போது நீங்கள் கடவுள்களைப் போலிருப்பீர்கள்.  கடவுளைப் பார்த்து: “நாங்கள் உமக்கு சமமாக இருக்கிறோம்” என்று சொல்லக் கூடியவர்களாயிருப்பீர்கள்.” 

இந்த ஆசைக் கவர்ச்சி தொடர்ந்தது.  ஏனென்றால் அதை முறிக்க அங்கு மனம் இல்லை.  மாறாக அதைத் தொடரவும் மனிதனுக்குச் சொந்தமல்லாததைக் கற்றுக் கொள்ளவுமே மனம் இருந்தது.  அதனால் விலக்கப்பட்ட மரம் மனுக்குலத்துக்கு உண்மையிலேயே மரணத்திற்குரியதாகிறது.  ஏனென்றால் அதன் கிளைகளில், சாத்தானிடமிருந்து வருகிற கசந்த அறிவின் கனி தொங்குகிறது.   அப்போது மனுஷி பெண் ஆகின்றாள்.  சாத்தானுக்குரிய அறிவின் புளிக்காரம் அவள் இருதயத்தில் இருக்க, அவள் ஆதாமைக் கெடுக்கப் போகிறாள்.  அவர்களுடைய சரீரங்களும், ஆத்துமங்களும் அவசங்கைப்பட்டு, ஒழுக்கம் கெட்ட அவர்கள், துயரத்தை அறிய வருகின்றனர்.  அவர்கள் இருவரின் ஆத்துமங்களும் வரப்பிரசாதத்தை இழந்து இறக்க, அவர்களுடைய சரீரங்கள் சாகாமையை இழந்தன.  ஏவாளின் புண், வேதனையைப் பிறப்பித்தது.  அது பூமியில் இருக்கப் போகும் கடைசித் தம்பதிகள் சாகும் வரையிலும் தணியப் போவதில்லை.

பாவஞ் செய்த அவ்விருவரின் பாதையிலே, ஆனால் எதிர்த்திசையிலே நான் சென்றேன்;  நான் கீழ்ப்படிந்தேன்.  எல்லா வகையிலும் கீழ்ப்படிந்தேன். சர்வேசுரன் என்னைக் கன்னிகையாயிருக்கும்படி தூண்டினார்.  நான் கீழ்ப்படிந்தேன்.  முதல் ஸ்திரீ சாத்தானை சந்திக்குமுன் எவ்வளவு பரிசுத்தமா யிருந்தாளோ அப்படியே என்னை ஆக்கியிருந்த என் கன்னிமையை நான் நேசித்த சமயம், அவர் என்னை விவாகம் செய்யும்படி கூறினார்.  நான் கீழ்ப்படிந்தேன்.  அதனால் கடவுள் முதல் பெற்றோரை சிருஷ்டித்த போது அவர் சித்தங்கொண்டிருந்த அளவான பரிசுத்ததனத்திற்கு விவாகத்தை உயர்த்தினேன்.  மெய்விவாகத்தில் எனக்குக் குறிக்கப்பட்டது தனிமையும், மகப்பேறில்லாத காரணத்திற்காக மக்களின் வெறுப்பும்தான் என அப்போது நிச்சயித்துக் கொண்டேன்.  அப்போது நான் தாயாகும்படி கடவுள் கூறினார்.  நான் கீழ்படிந்தேன். அது சாத்தியம் என்றும் அந்த வார்த்தை எனக்குக் கடவுளிடமிருந்து வந்ததென்றும் நான் விசுவசித்தேன்.  ஏனென்றால் அதைக் கேட்டதும் நான் சமாதானத்தால் நிரப்பப்பட்டேன்.  நான் அதற்குத் தகுதி என நினைக்கவில்லை.  “நான் இப்போது கடவுளின் சரீரத்தைப்     படைத்து கடவுளைப் போலிருக்கிறதினால் உலகம் என்னைப் பாராட்டும்” எனக் கூறவில்லை.  நான் அப்படிச் செய்யவில்லை.             என் தாழ்ச்சியில் என்னைத் தாழ்த்தினேன்.

ரோஜாவின் காம்பைப் போல், மகிழ்ச்சியானது என் இருதயத்தினின்று வெளிப் புறப்பட்டது.  ஆனால் விரைவிலேயே அது கூரிய முட்களால் அலங்கரிக்கப்பட்டு, கொன்வோல்வுலி என்னும் படர்கொடியால் இறுக்கிக் கொள்ளப்பட்ட கிளைகளைப் போல துயரத்தின் பிடியால் இறுக்கப்பட்டது.  என் பத்தாவின் வேதனையைப் பற்றிய துயரம்:  அது என் மகிழ்ச்சியை மூச்சுத் திணற வைத்தது.  என் குமாரனின் வேதனையைப் பற்றிய துயரம்:  என் மகிழ்ச்சியை ஊடுருவக் குத்தியது.

ஏவாள் சுகத்தையும் வெற்றியையும் விடுதலையையும் விரும்பினாள்.  நான் துயரத்தையும் தாழ்ச்சியையும் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டேன்.   என் அமைதியான வாழ்க்கையையும் என் பத்தாவின் மதிப்பையும் என் சொந்த சுயாதீனத்தையும் விட்டுக்கொடுத்தேன்.  எனக்கென நான் எதையும் வைத்திருக்கவில்லை.  என் சரீரத்திலும், என் ஒழுக்க நியதிகளிலும் என் உள்ளத்திலும் நான் கடவுளின் ஊழியக்காரியானேன்.  என்னுடைய கன்னிமைக் கர்ப்பத்திற்கு மட்டுமல்ல, என் நற்பெயரைக் காப்பாற்றுவதற்கும், என் பத்தாவின் ஆறுதலுக்கும், மெய்விவாகத்தை ஞான நிலைக்குக் கொண்டுவர அவரையும் உயர்த்த உதவுவதற்கும் நான் ஆண்டவரையே நம்பியிருந்தேன்.  நாங்கள் மனிதனையும் மனுஷியையும் அவர்கள் இழந்து போன தகுதிக்கு மீண்டும் கொண்டு வரும்படியாக அவ்வாறு செய்தேன்.  என் சார்பிலும் என் பத்தாவின் சார்பிலும் என் மகவின் சார்பிலும் நான் ஆண்டவரின் சித்தத்தை அரவணைத்துக் கொண்டேன்.

எங்கள் மூவர் சார்பிலும் நான்  “ஆகட்டும்” என்று கூறினேன். ஏனென்றால், குற்றமுள்ளவள் என்று கருதப்படுவதாக உணருகிற ஒரு பத்தினியின் துயரத்திலும், துயரத்திற்குக் கையளிப்பதற்காக ஒரு மகனை ஜெனிப்பிக்கிறேன் என்று உணரும் தாயின் துயரத்திலும், உதவுவதாக கடவுள் அளித்த உறுதி மொழியை அவர் மீறமாட்டாரென்று எனக்கு நிச்சயமாய்த் தெரிந்திருந்தது.  நான் “ஆகட்டும்” என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை.  அந்த “ஆகட்டும்” என்ற பதில், ஏவாள் சர்வேசுரனின் கட்டளைக்கு “மாட்டேன்” என்று மறுத்துச் சொன்ன பதிலை ரத்துச் செய்து விட்டது.  -  ஆகட்டும் ஆண்டவரே, உமது விருப்பப்படியே.  நான் எதை அறிய வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அதை நான் அறிந்து கொள்கிறேன்.  நான் எப்படி வாழ வேண்டுமென்று நீர் விரும்புவீரோ, அப்படி நான் வாழ்கிறேன்.    நீர் விரும்பினால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.  நான் எதற்கெல்லாம் வேதனைப்பட வேண்டுமென்று நீர் விரும்புவீரோ அதற்கெல்லாம் நான் வேதனைப்படுவேன்.  ஆகட்டும் ஆண்டவரே, நித்தியத்திற்கும், உமது கதிர் என்னை ஒரு தாயாக ஆக்கியபொழுதிலிருந்து நீர் என்னைத் திரும்ப அழைத்த வரையிலும்:  “ஆகட்டும்” என்றென்றும் “ஆகட்டும்.”  மாமிசத்தின் எல்லா நல்ல குரல்களும் உள்ளத்தின் எல்லா நல்லாசைகளும் என் நிரந்தரமான “ஆகட்டும்” என்பதன் பாரத்திற்குட்பட்டிருந்தன.  என் உள்ளமோ மேலே ஒரு வைரப்படியிலே உம்மிடம் பறந்து வர இறக்கைகள் இல்லாமல் இருந்தது.  ஆனால் அதுவே கீழ்ப்படுத்தப்பட்டு உமது ஊழினொக்கப்பட்டிருந்த “நான்” என்ற என் முழுமைக்கும் தலைவனாயிருந்தது.  மகிழ்ச்சியிலும் ஊழியன், துயரத்திலும் ஊழியன்.  ஓ என் சர்வேசுரா!  புன்னகை பூத்து மகிழ்ச்சி கொள்வீராக!  குற்றம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.  அது அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது.  அது என் குதிங்காலின் கீழே கிடக்கிறது.  அது என் கண்ணீர்களால் கழுவப்பட்டு என் கீழ்ப்படிதலினால் சிதைக்கப்பட்டது.  என் நெஞ்சிலிருந்து புதிய தரு தளிர்க்கும்.  அது தீமையெல்லாவற்றையும் அறிகிற கனியைப் பிறப்பிக்கும்.  ஏனென்றால் அவையெல்லாவற்றையும் அது தன்னிடத்திலேயே அனுபவித்து நன்மை யாவற்றையும் கொடுக்கும்.  எல்லா மாந்தரும் அதனிடம் வரக்கூடுமாயிருக்கும்.  அவர்கள் அக்கனி என்னிடத்திலிருந்து பிறந்ததென்பதை நினைக்கா விட்டாலும் கூட அதில் அவர்கள் பங்கு பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.  மனிதர் இரட்சிக்கப்பட்டு கடவுள் நேசிக்கப்படுவாரானால் மட்டும் போதும்.  ஒரு மரம் நடப்படுகிற மண்ணுக்கு என்ன நேரிடுமோ அது அவருடைய அடிமையானவளுக்கும் நேரிடட்டும்.  மேலே செல்ல ஒரு படி.

மேரி, மற்றவர்கள் கடவுளிடம் ஏறிச் செல்கிற படியாக நாம் எப்போதும் இருக்க வேண்டும்.  அவர்கள் நம்மை மிதித்தாலும் பரவாயில்லை.  சிலுவையை அடைவதில் அவர்கள் வெற்றி பெற்றால் போதும், நன்மை தீமை பற்றிய அறிவைத் தரும் புதிய மரம் இதுவே.  ஏனென்றால் எது நல்லது எது தீயது என்று அது மனிதனுக்குக் கூறுகிறது.  அதனால் அவன் தெரிந்தெடுத்து வாழ முடியும்.  அதே சமயம் தாங்கள் சுவைக்க விரும்பிய தீமையால் போதையடைந் துள்ளவர்களுக்கு அது மருந்தாகவும் இருக்கிறது.  இரட்சிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடும்படியாகவும், என் சேசுவின் இரத்தம் பலனின்றி சிந்தப்படாதபடிக்கும் நம் இருதயங்கள் மனிதர்களின் காலடியின்கீழ் கிடக்கட்டும்.  கடவுளின் ஊழியக்காரிகளின் இலட்சியம் அதுவே.  ஆனால் பரிசுத்த அப்பத்தை நம் இருதயங்களில் பெற்றுக் கொள்ள நாம் தகுதி பெற்றவர்களாகிறோம்.  அவருடைய இரத்தத்தாலும் நம் கண்ணீராலும் நனைந்திருக்கிற சிலுவையினடியில் இவ்வாறு சொல்லவும் தகுதி பெறுகிறோம்:  பரம பிதாவே! உலகத்தின் இரட்சிப்பிற்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கிற பழுதற்ற அப்பம் இதோ!  அதோடு உருகி நிற்கிற எங்களை நோக்கிப் பார்த்து அதன் அளவற்ற பேறுபலன்களை முன்னிட்டு எங்களுக்கு உமது ஆசீரைத் தாரும்... என் மகளே உனக்கு என் சீராட்டுதல்கள்.  இப்பொழுது நீ ஓய்வெடுத்துக் கொள்.  ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.